லோக்பால் குத்தகைக்காரர் அன்னா அசாரேயின் வீறுகொண்ட மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டே நாளில் முடிந்துவிட்டது. அவருக்கு உடல்நலக் குறைவு இருந்தது என்பது உண்மை என்றாலும், அதையும் மீறி உயிரே போனாலும் உண்ணா விரதத்தைக் கைவிட மாட்டேன் என்று அடம்பிடித்த அவர் இரண்டாம் நாளே உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டார்.

மும்பை எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கியபோது, முன்பு டில்லி ராம்லீலா மைதானத்தில் கூட்டப்பட்டது போல இலட்சக்கணக்கான ஆட்களைச் சேர்த்துவிடலாம் அல்லது மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த அன்னா அசாரேவுக்குப் பெரும் பின்னடைவு. மும்பை மட்டுமல்ல சென்னை, தில்லி, கொல்கத்தா என எல்லா உண்ணாவிரத இடங்களிலும் மக்கள் குறைவாக வந்தனர்.

ஆம் ! மக்கள் அசாரேவைப் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

உண்ணாவிரதத்துக்குப் பின் அவர் அளித்த நேர்காணலின் போது, ஒரு செய்தியாளர், மக்களவையில் அசாரேயின் போராட்டத்திற்கு எதிராக பா.ஜ.க.வினர் நடந்து கொண்டதைச் சுட்டிக்காட்டி, "பா.ஜ.க.வின் துரோகத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வீர்களா?" என்று கேட்டபோது, "காங்கிரஸ்தான் எங்களுக்கு மிக அதிக அளவில் துரோகம் செய்தது" என்று சம்பந்தம் இல்லாமல் பதில் கூறிய அசாரே, உடனே மேடையை விட்டு இறங்கிவிட்டார், சுற்றி இருந்தவர்கள் சிரித்து விட்டார்களாம். இது நாளேடு தரும் செய்தி.

அண்மையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த நானாஜி தேஷ்முக்கிடம், அன்னா அசாரே செயலாளராக இருந்தவர் என்றும், 1983ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசம் கோண்டாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துள்ளார் என்றும் அசாரே மீது குற்றம் சாட்டி இருந்தார். மேலே சுட்டிக்காட்டிய செய்தியாளரின் பா.ஜ.க. குறித்த கேள்விக்கு, தொடர்பில்லாமல் அசாரே அளித்த பதில் திக்விஜய் சிங்கின் குற்றச்சாட்டை உறுதி செய்வதாக அமைகிறது.

பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. இரண்டு கட்சிகளுக்கும் தெரியும், லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்று. ஆனாலும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது நடந்த கூத்துகளை நாடே பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

ஊழலை ஒழிக்கப்போவதாக மத்திய அரசு தயாரித்த ஒரு மசோதா, அசாரேயின் ஜன் லோக்பால் மசோதா இவைகளை, நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுசெய்து, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்து நள்ளிரவு வரை ஏறத்தாழ பதினோரு மணி நேரம் விவாதங்கள் நடந்தன.

56 திருத்தங்கள் செய்யவேண்டும் என்றனர் எதிர்க்கட்சியினர். திருத்தங்கள் செய்யவில்லையானால் மசோதாவை நிறைவேற்றவிட மாட்டோம் என்றது பா.ஜ.க. மீண்டும் மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அது சொன்னது. ஆனால் அரசு கொண்டுவந்த 10 திருத்தங்களோடு, குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியது. அப்போது சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கூடவே அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், பிஜு ஜனதாதளமும் வெளியே போய்விட்டது. அது மட்டுமில்லை. ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்றக் கொறடாக்கள் உத்தரவையும் மீறி கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் 31 பேர், வாக்களிக்க அவைக்கு வரவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

அடுத்து இம்மசோதாவுக்குச் சட்ட அந்தஸ்து வழங்க அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் மசோதா அதிகாரம் அற்றதாய்ப் போய்விடும். அது குறித்து வாக்கெடுப்பு நடத்தியதில், மக்களவை உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் அதாவது 273 வாக்குகள் கிடைக்காத காரணத்தால் இங்கு மசோதா தோல்வி அடைந்தது. இது குறித்து கபில்சிபல் கூறும்போது, பா.ஜ.க.வும், இடது சாரிகளும் தங்கள் சுயரூபத்தைக் காட்டிவிட்டனர் என்று கூறினார். பதிலுக்கு பா.ஜ.க. உறுப்பினர்கள், அது அரசு (காங்கிரஸ்) லோக்பால் மசோதா என்று கிண்டலடித்துள்ளார்கள்.

இதுதான் உச்சகட்ட நாடகம்.

லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்பது காங்கிரசுக்குத் தெரியும். அதைச் செய்து முடிப்பது என்பது பா.ஜ.க.வின் தீர்மானம்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதை  லோக்பால் சட்டத்தின் மூலம் மட்டுதான் ஒழிக்க முடியும் என்று நினைப்பது அறியாமை மட்டுமல்ல ஏமாற்றும்கூட.

பிரதமரையும், நீதிபதிகளையும், மத்திய புலனாய்வையும் லோக்பாலுக்குள் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் லோக்பால் காரர்கள் ஊழல் செய்தால் அவர்களை யார் விசாரிப்பது, தண்டிப்பது?

கிளார்க் ‡ பியூன் போன்றவர்களையும் லோக்பாலுக்குள் கொண்டுவர வேண்டும் என்பவர்கள், கார்ப்பரேட்  எனப்படும் கூட்டுக் குழும நிறுவனங்களை இந்த லோக்பாலுக்குள் கொண்டுவர முயற்சி செய்தாதது ஏன்?

லோக்பால் சட்டத்தில், தங்களிடமுள்ள கருப்புப்பணத்தைத் தாங்களாகவே முன்வந்து அறிவிப்பவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. பத்தாண்டு களுக்கு முன்பு, வருமான வரி கட்டாமல்,  வரி ஏய்ப்புச் செய்பவர்கள், தாங்களாகவே முன்வந்து கட்டிவிட்டால், அவர்களுக்கு சலுகையும், பொது மன்னிப்பும் வழங்கப்படும் என்று ப. சிதம்பரம் அறிவித்தார். அப்போது, சில நூறு கோடிகள் மட்டுமே வரியாகக் கட்டப்பட்டன. பல்லாயிரம் கோடி வரிப்பணம் கட்டப்படாமலே நின்றுபோய்விட்டது. இதுபோன்ற சலுகைகளும், பொதுமன்னிப்பும் பெருமுதலாளிகளுக்கு அரசு செய்யும் மறைமுக உதவி, அவ்வளவுதான். சாதாரண குடிமகன் 35 ரூபாய் மின்கட்டணம் கட்டச் சிறிது கால தாமதம் ஆனாலே, இணைப்பைத் துண்டித்து, அக்குடும்பத்தை இருட்டில் தவிக்க விடுகிறது அரசு. அதே நேரத்தில் அரசுக்குக் கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தும் பெருமுதலாளிகளுக்கு பொதுமன்னிப்பும், சலுகைகளும் வழங்குவதற்காக லோக்பால் போன்ற சட்டங்களைக் கொண்டுவரத் துடிக்கின்றனர். கேட்டால், இது ஜனநாயக நாடாம் !

இப்போதும் பொதுமன்னிப்பு ‡ லோக்பால் என்றால், இது உண்மையில் ஊழலை ஒழிக்கப் பிறந்ததா? அல்லது ஊழலை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு மக்களை மயங்க வைப்பதா! இதில் லோக் ஆயுக்தா என்று ஒன்றும் வருகிறது. மத்திய அரசில் லோக்பால் போல, மாநிலங்களில் லோக் அயுக்தா.

இதை லோக்பால் கட்டாயப்படுத்துகிறது. அதாவது மாநில உரிமையின் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதாகவே அமைகிறது. இவை எல்லாம் தெரிந்திருந்தும், நவீன காந்தியாகத் தன்னை சித்தரித்துக் கொண்டு ஊழலை ஒழிப்பதாகப் புறப்பட்டு இருக்கும் அன்னா அசாரேயின் உண்ணாவிரத்திற்குச் செலவாகும் இலட்சக்கணக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்று ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தால் காந்தியவாதி அன்னா அசாரே அம்பலமாவார் ! அவரின் போலிப் போராட்ட ஊழலும் அம்பலமாகும்!

அன்னா அசாரே ஒரு "போலி லோக்பால்"
Pin It