நூல் அறிமுகம் - லட்சுமிக்குட்டி (கவிதை நூல்)
ஆசிரியர் : கண்மணிராசா, நியூ செஞ்சுரி புத்தக நிலையம், 41 - பி, சிட்கோ தொழிற்பேட்டை
அம்பத்தூர், சென்னை - 98.
விலை : ரூ.40

kanamanirasa_450நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ள ஒரு சிறு கவிதை நூல் லட்சுமிக்குட்டி. நூலின் தலைப்புக்கு ஏற்ப, கையடக்க அளவில், ஆனால் 100 பக்கங்களுக்கு மேல் கொண்ட குட்டியான நூலாக இருக்கிறது. ஆனால் கவிதைகள் ஒவ்வொன்றும் நூறாண்டுகளின் வரலாறுகளைப் பேசுகின்றன. இந்நூலின் ஆசிரியர் கண்மணிராசா, ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் உழைப்பாளி. பாட்டாளி வர்கத்தின் பாடுகள், ஏக்கங்கள், குழந்தையின் உலகம், இடஒதுக்கீடு, பெண்ணியம், ஈழத்து துயரம், காதல் என பல்வேறு பொருள்களில் அழகான கவிதைகளை எளிமையான சொற்களில் எழுதியிருக்கிறார்.

குழந்தைகளின் உலகம் அதிசயங்களாலும், கற்பனைகளாலும் ஆனது. அவர்கள் உலகத்தில், பறவைகளும், விலங்குகளும் பேசும். அங்கே மனிதர்கள் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். அதிலும் பெரியவர்களைக் கண்டிப்பாக அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். குழந்தைகள், பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடி ஆகியனவற்றால் ஆகிய அழகான உலகம் அவர்களுடையது. இந்நூலில் சில கவிதைகள் அவ்வுலகத்தைக் கொஞ்சம் நமக்கும் காட்டுகின்றன.

எல்லாவற்றையும்
ஏற்றிக்கொண்டு
புதுவீடு நோக்கிப்
புறப்பட்டது வண்டி
சுவரில்
அவள் வரைந்திருந்த
வாத்தையும்
சுமையுந்தில்
ஏற்றச் சொல்லி
அழத் தொடங்கினாள்
லட்சுமிக்குட்டி

அம்மாவின் அன்பைச் சொல்லச் சொற்கள் தேவையில்லை என்பதை ஒரு குழந்தையின் குரலில் சொல்லும் கவிதை நம்மை நெகிழவைக்கிறது.

கடுதாசி எழுத
ஆட்கள்
கிடைக்காவிட்டால்
பரவாயில்லை
வெறும்
காகிதங்களை
மட்டுமாவது
அனுப்பு அம்மா...!
எனக்குப் புரியும்
ஏதுமற்ற காகிதத்தில்
எல்லாமுமாய்
நிறைந்திருக்கும்
உன் அன்பு

இப்ப யாருங்க சாதியயல்லாம் பார்க்குறா என்று கேட்பவர்களைக் காணும்போது, முகத்தில் காறித்துப்பிவிடத் தோன்றும். திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இருவரைப் பள்ளியில் சேர்த்ததால், உயர்சாதிப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். தாழ்த்தப்பட்ட பெண்கள் சமைத்த உணவைத் தங்கள் பிள்ளைகளைச் சாப்பிடவிட மாட்டோம் என்று பல அங்கன்வாடிகளில் சாதித்தீ பற்ற வைத்த தீண்டாமை எரிகிறது. தீண்டாமையும் சாதியமும் புதுப்புது வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஊருக்குள் செருப்பணிந்து நடந்த பாட்டனைக் கட்டிவைத்து அடித்த வலியை, பேரனுக்குச் சொல்கிறது இந்தக் கவிதை,

புழுக்கமாய் இருந்தாலும்
பரவாயில்லை
பூட்ஸ் - ஐ
அணிந்துகொள்...!
எவ்வளவு நேரமானாலும்
பரவாயில்லை,
மேலத்தெரு வழியாகவே
பள்ளிக்குப் போ...!
அங்குதான்
காலணி அணிந்ததற்காய்க்
கட்டி வைத்து அடித்தார்கள்...
உன் பாட்டனை.

கவிஞர் என்றால் காதலைப் பாடாமலா... உழைக்கும் மக்களின் காதலைச் சொல்லும் கவிதை,

விதவிதமாய்
மலர்களைச் சூடிக்கொள்கிறாய்...!
என்னை வீழ்த்த
உன் வியர்வை வாசம் போதும்
என்பதறியாமல்!

தந்தை பெரியார் அன்றே திராவிடர் கழகத்தின் கல்வி நிலையங்களில் பார்ப்பனர்களுக்கு மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு தந்தார் எனக் கூறுவார்கள். கண்மணி ராசாவும் அவர்களுக்கு மிக நியாயமாக இடஒதுக்கீடு வழங்குகிறார்,
69ம் 27ம்

தர
உங்களுக்குக் கசக்கிறது.
நாங்களாவது தருகிறோம்
வாருங்கள்...!
மயிர் திருத்த
மலம் அள்ள
வீதி கூட்ட
அழுக்கை வெளுக்க
காலணி தைக்க - எங்கள்
காலனியில் வசிக்க !

இப்படி ஏராளமான கவிதைகள் இந்நூலில் பூத்துக் குலுங்கி வெடித்துக் கிடக்கின்றன கரிசல்காட்டின் பருத்திச் செடிகளைப் போல. ஒரு கவிஞனுக்கே உரிய அறச்சீற்றமும், சமூக அக்கறையும், மனிதநேயமும் கண்மணிராசாவின் கவிதைகளில் தெறிக்கின்றன.

செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்
நல்ல கவிதை

என்கிறார் கவிஞர்.

செவியிலும், செவிட்டிலும் மட்டுமல்ல, சிந்தனையிலும் விழுகின்றன.

Pin It