திராவிட இயக்க வரலாற்றின் இரண்டாவது கட்டமான சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி மிக ஆழமான ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். ஏனெனில் நீதிக்கட்சி திராவிட இயக்கத்தின் முதல் கட்டம். அக்கட்சியின் வரலாற்றை ஏற்கனவே இரண்டு தொகுதிகள் எழுதி வெளியிட்டு இருக்கின்றோம். அதனால் இரண்டாம் கட்டமான சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கினோம். அப்படி எழுதத் தொடங்குகிறபோது பெரியார்க்கும் ‡ காந்திக்கும் உள்ள தொடர்பு, பெரியார்க்கும் ‡ காங்கிரசுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை அடிப்படையோடு நுட்பமாக, விளக்கமாக எழுத வேண்டும். அதற்கான காந்திய நூல்களைப் புரட்டினோம். ஏற்கனவே சில நூல்களைப் படித்து இருக்கின்றோம். அது எமக்கு நிறைவை அளிக்கவில்லை.

ka_thirunavukarasu_250பள்ளியில் ஆங்கில துணைப்பாட நூலாக சகுந்தலா மசானி எழுதிய ‘  The Story of Bapu ’ எனும் நூலைப் படித்தோம். பள்ளிக் கூடத்திலிருந்து வெளியேறிய பிறகு, காந்தியின் ‘My experiment with truth’ அதைத் தமிழில் தந்த ரா.கிருஷ்ணமூர்த்தியின் சத்திய சோதனை, The Moral and Political Writings of Mahatma Gandhi Vol.I & II ( 1986 ) ( by Raghavan Iyer), அவரது எழுத்தும் பேச்சுகளுமாக நவஜீவன் பிரசுரம் வெளியிட்டிருந்த புத்தகங்களைப் படித்து அவரது சித்திரத்தை ஒருவாறு அறிந்து வைத்து இருந்தோம். அவ்வப்போது குமரி மலரில் (மாத இதழ் ‡ உலகம் சுற்றிய தமிழன் ஏ.கே.செட்டியாரால் நடத்தப்பட்டு வந்தது) வெளிவரும் காந்தியைப் பற்றிய பிறர் எழுதிய கட்டுரைகளும், காந்தியின் கருத்துகளும் வெளிவந்துகொண்டு இருந்தன. அவற்றைப் படித்து வந்தோம், விடுதலையிலும், திராவிட நாட்டிலும் காந்தியைப் பற்றி இடம் பெற்றிருந்த கருத்துகள், அவரைப் பற்றிய சமூக, அரசியல், பொருளாதாரம் சார்ந்த கொள்கை விமர்சனங்கள் ஆகியவற்றைப் படித்துத் தெரிந்து வைத்து இருந்தோம். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இந்தியத் தூதராக இருந்த செஸ்டர் பெளல்ஸ்New Dimensions for Peace  எனும் புத்தகம் எழுதியிருந்தார். இப்புத்தகத்தைத் தினமணியில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய ஏ.ஜி.வேங்கடாச்சாரி ‘ சமாதானத்தின் புதிய பரிமாணங்கள் ’ எனத் தமிழில் மொழிபெயர்த்து அது புத்தகமாக வெளிவந்தது. அதில் காந்தியைப் பற்றிய அரிய கருத்துகள் இருந்தன. மகாத்மா காந்தியின் கடிதங்கள், வினோபாபாவே, கிருபளானி, ஜெயபிரகாஷ் நாராயணன், மகாதேவ் தேசாய், நேருவின் கடிதங்கள் என இவ்வரிசையில் கிடைத்த நூல்களையயல்லாம் படித்தோம்.

பெரியார் எப்படி, எவ்விதமாகக் காந்தியால் ஈர்க்கப்பட்டார்? சுயமரியாதை இயக்க வரலாற்றைக் கூறுகிறபோது எம் கணக்கின்படி சுமார் 10 ஆண்டுகள் காந்தியின் மீது நம்பிக்கை வைத்தவராகப் பெரியார் இருந்து இருக்கிறார். முதலில் 6 ஆண்டுகள் என்றே கணக்கிட்டு இருந்தோம். சரியாகப் பார்த்தால் 10 ஆண்டுகள் ஆகும். 1917 முதல் 1919 வரை சென்னை மாகாண சங்கத்தின் துணைத் தலைவராக 2 ஆண்டுகள்,  1919 முதல் 1925  வரை  6 ஆண்டுகள், 1925 முதல் 1927 வரை குடிஅரசு கட்டுரைகளில் காந்தியின் மீது தெரிவிக்கும் நம்பிக்கைகள் 2 ஆண்டுகள் என 10 ஆண்டுகள். பெரியாரை, காந்தி எப்படிக் கவர்ந்தார் என்பதைத் தீவிரமாக ஆய்ந்து எழுதி வருகிறபோதுதான், காந்திய ஆய்வாளர் தரம்பாலின் புத்தகம் எனக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகம் ‘காந்தியின் அனைத்துச் சாரமாக’ விளங்குகிறது. பெரியாருக்காக மீண்டும் காந்தியைப் பற்றிய புத்தகங்களை ஒரு புரட்டு புரட்டினோம். அப்போதுதான் எமது அருமை நண்பர், தேசிய முரசு ஏட்டின் ஆசிரியர் ஆ.கோபண்ணா, ஜெயமோகன் எழுதிய ‘இன்றைய காந்தி’ புத்தகத்தைப் படித்தீர்களா? என்று ஒரு நாள் எம்மைப் பார்த்துக் கேட்டார். அதன் விளைவாக அந்தப் புத்தகத்தை ‡ ‘ இன்றைய காந்தி ’யைப் படித்தோம்.

‘இன்றைய காந்தி’ எனும் தலைப்பைப் பார்த்தவுடன் ‡ அட்டையில் காந்தியின் படங்கள் இருபக்கமும் அழகு செய்வதைக் கண்டவுடன் ‡ காந்தியைப் பற்றி எழுதிவிட்டு, இன்றைய காந்தியையும் நமக்கு ஜெயமோகன் காட்டுவார் போலும் எனக் கருதினோம். நூலைப் படிக்கத் தொடங்கி முடித்த போது, ‘ தேசப் பிதா ’ காந்தியைத்தான் மீண்டும் நம்மைப் படிக்கச் செய்திருக்கிறார் ஜெயமோகன்! அதோடு ஆங்காங்கே கந்தகப் பொடிகளைத் தூவிச் செல்கிறார். ‘இன்றைய காந்தி’ எனும் நூல் எல்லா நூல்களையும் போல ஒரு முன்னுரையோடு தொடங்குகிறது. நூலின் மொத்த பக்கங்கள் 512. நூல் மூன்று பெரும் பகுதிகளாக ஆளுமை, அரசியல், தரிசனம் எனத் தலைப்பிடப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆளுமையில் ஐந்து அத்தியாயங்களும்,  அரசியல் பகுதியில் பதினோரு அத்தியாயங்களும்,  இறுதிப் பகுதியான தரிசனத்தில் நான்கு அத்தியாயங்களும்  இடம்பெற்று  இருக்கின்றன.

இவ்வளவு பெரிய நூலை எழுதியிருக்கிற ஜெயமோகனைப் பற்றியோ, அவரது எழுதுத்து களைப் பற்றியோ நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவரைப் பற்றிய சர்ச்சைகள் காதில் விழும். அவரது எழுத்துகளைப் படிக்கலாம் என்றாலோ வாய்ப்பு அமையாமல் இருந்தது. ஆனந்த விகடனில் தொடராகச் சங்க பாடல்களைப் பற்றி எழுதினார். சில வாரங்கள் படித்தோம். அவரோடு தொடர முடியவில்லை. அவ்வை துரைசாமியைப் போலவும் இல்லை, கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலை பாணியிலும் அவை இல்லை. இவற்றைத் தவிர்த்த புதிய பாணி என்றாலும், அவரில் நம் மனவோசையைக் கேட்க முடியவில்லை. எம்மை ஈர்க்கவில்லை. ஆனந்த விகடனைத் தொடர்ந்து வாசித்தோம். ஆனால் அந்தப் பகுதியைப் படிப்பதில்லை.

எம் நண்பர் மறைந்த சோதிப் பிரகாசத்தின் வாழ்க்கையின் கேள்விகளுக்கு ஜெயமோகன் அணிந்துரை வழங்கி இருந்தார். எமக்கு வியப்பாக இருந்தது. அதே நூலில் செல்வத்துரையின் பாயிரத்தில் எம்மைப் பற்றியும் ஒரே ஒரு குறிப்பு உண்டு. ஜெயமோகன் மார்க்சீயர் அல்லர். அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். என்றே அறியப்பட்டு இருந்தார். சோதிப்பிரகாசத்தோடு தொடர்பு கொண்டு கேட்டோம். ‘ அதைப் பற்றி எனக்குத் தெரியாது. நம் கருத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதற்கு ஒரு கருத்துரையை வழங்கச் சொல்லி அதை அணிந்துரையாக இணைத்து இருக்கிறோம் ’ ‡ என்றார் சோதிப்பிரகாசம். அவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்வதையும் எமக்குத் தெரிவித்தார். கருத்து மோதலில் எவரையும் சந்திப்பது, மோதுவது என்கிற மனோதிடம் நிரம்ப உள்ளவர். எதையும் புதிய கோணத்தில் சிந்திப்பவர். மக்களுக்காக, வறியவர்களுக்காக, தொழிலாளர்களுக்காகப் போராடிய மார்க்சீயர். இப்படிப்பட்டவர் ஜெயமோகனோடு கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டு இணைந்து போவது எப்படி என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

க.ப.அறவாணனோடு அவர் தொடர்பு வைத்து இருந்ததை அறிவோம். ஜெயமோகனோடு சோதிப்பிரகாசம் தொடர்பு என்பது, அறிவுத்தளத்தின் கூர்மையைத் தெரிந்தே கல் மீது அடித்துச் சோதிப்பது போன்றதாய் இருக்குமோ என்று கருதினோம். ஜெயமோகன் வாழ்க்கையின் கேள்விக்கு எழுதிய அணிந்துரையைப் படித்தோம். 24 பக்கங்கள் இருந்தது ‡ அந்த அணிந்துரை ! மூன்று அங்கங்களாகப் பிரித்து எழுதி ‡ இருந்தார். மிக வெளிப்படையாகவே நன்றாக எழுதியிருந்தார். அந்த அணிந்துரையின் ஓர் இடத்தில்,

‘அய்ரோப்பிய தத்துவ எழுச்சியின் உச்சம் மார்க்சியமே ஆகும். புறவயமான மெய்காண் முறை என்ற அளவிலும், ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கான அறிவார்ந்த ஆயுதம் என்ற அளவிலும், மார்க்சியம் இன்றும் முதன்மையான தத்துவம் என்பதே என் எண்ணம். தனி வாழ்வில் கடந்த 16 ஆண்டுகளாக நாம் மார்க்சிய அடிப்படை கொண்ட தொழிற் சங்கத்தின் ஊழியனே’

என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த அணிந்துரை ஏப்ரல், 2002 இல் எழுதப்பட்டது. இந்த அணிந்துரையைப் படித்துப் பார்த்து ‘மானிட சமுத்திரம் நானென்று’ கூவியிருக்கிற ஜெயமோகன் மீது நமக்கு ஒருபால் மதிப்பு ஏற்பட்ட அதே நேரத்தில், அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். என்றே நமக்குச் செய்திகள் மிகுதியாகக் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. சமூக, பொருளாதார, அரசியல் சிக்கல்களுள் தோன்றுகின்ற எண்ண அலைகள் ‘ மறப்பெனும் கள்வனால்’ ஜெயமோகனின் நினைப்பு கொஞ்ச காலம் இல்லாமல் போயிற்று. ‘இன்றைய காந்தி’ நூலின் வழி அவரின் எண்ணங்களை, கருத்துகளை நூலினுள் படித்த பிறகு அவரைப் பற்றிய நினைப்பு எம்முள் எழுந்தது. இந்நூலைப் பற்றிய நமது கருத்தை எழுத வேண்டும் எனக் கருதி மற்றொரு முறையும் ‘ இன்றைய காந்தி ’ எனும் நூலைப் படித்தோம்.

திராவிட இயக்க வரலாற்றின் இரண்டாம் கட்டமான சுயமரியாதை இயக்கங் குறித்து எழுதுவதை இது குந்தகப்படுத்திவிட்டது. இடையூறை ஏற்படுத்தி விட்டது. ஆனாலும் நமது எதிரிகள் எந்த வடிவத்தில் வந்தாலும், அவர்களை ஒடுக்கும் வழியை நம்மவர்கள் அறிந்திருக்க வேண்டும். அரசியல் அதிகாரம் ஜனநாயகத்தில் எல்லா வலிமைகளையும் தந்துவிடாது. ஆகவேதான் பெரியார் நமது கட்சி(கள்)இரண்டு பிரிவாகச் செயல்பட வேண்டும் என்று எழுதினார். இந்த எண்ணங்கள் எல்லாம் எம்முள் பெருங்கிளர்ச்சியைத் தோற்றுவித்த வண்ணம் இருந்தன.

‘உண்மை’ மாதமிருமுறை ஏட்டில் ( 2010 டிச. 15 ‡ 31 ) ‘ தமிழ் இலக்கியப் போர்வையில் மனு தர்ம நரிகள் ’ எனும் கட்டுரை வெளியாயிற்று. இதை இடதுசாரி சிறுகதை எழுத்தாளரான மேலாண்மை பொன்னுசாமி எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் ஜெயமோகனைத் தோலுரித்துக் காட்டி இருந்தார். அவரது எழுத்துகள் எந்த நலனைச் சார்ந்து நிற்கிறது என்பதை வெகு ஆழமாகவும், நேர்த்தியாகவும் எழுதி இருந்தார். அக்கட்டுரையில் மேலாண்மை பொன்னுசாமி ஜெயமோகனைப் பற்றி இரண்டு குறிப்புகளைத்  தந்து இருக்கிறார்.

1. “எங்கள் அண்ணன் நாகர்கோவிலில் சி.ஐ.டி.யூ என்கிற தொழிற் சங்க ஊழியர் என்றும், நான் சி.பி.எம்.முக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்றும், நான் தொலைபேசித் துறையில் இடதுசாரித் தொழிற்சங்கத்தில்தான் உறுப்பினர் என்றும் அவர் சொல்லி வந்த பசப்பு வார்த்தைகளில் வசீகரிக்கப்பட்டு மினுக்குகளில் மோசக்காரனின் சாகசம் ஒளிந்திருப்பதைக் கவனிக்காமல் விட்டுவிட்டதை உணர்ந்தேன் ”

2. “ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ்.சின் மாநில அலுவலகத்தில் அலுவலகச் செயலாளராகப் பணியாற்றி, முழு நேர ஊழியராக இருந்தவர்தாம் என்ற இரகசியமெல்லாம் பின்னாளில்தாம் அறிய முடிகிறது”

இவ்விரண்டு செய்திகளில் இருந்து, ஜெயமோகன் யார்  என்பது நமக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஆனாலும் திராவிட இயக்க எதிரிகள், இடதுசாரிகளின் எதிரிகள் சமயத்தில் முற்போக்குச் சீலை கட்டிக் கொள்வார்கள். புரட்சிகர சிந்தனையை அவிழ்த்து விடுவார்கள். நமது எண்ணச் சிறகுகளை ‘எவரெஸ்ட்’ உயரத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, நயமாக எழுதுவார்கள். சுய விமர்சனம் செய்து கொள்வதுபோல் தமது குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள். மாபெரும் நுதல் பொருளை (Subject Matter ) எடுத்துக் கொண்டு, பொருளையயாட்டி கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு, அதே நேரத்தில் காந்தியக் கொள்கையைத் தூக்கிப் பிடிப்பதே தனது தர்மம் என்று விதந்து ஓதுவார்கள். உண்மையில் அவர்களுடைய ‘புருஷோத்தம ரூப’ மென்பது வேறு என்பதைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். நாம் சில அடையாளங்களைக் கொண்டு அவற்றை அறிந்து கொள்ளலாம். அப்படி அறிந்து கொள்ளப்பட வேண்டியவரே இந்த ஜெயமோகன்!

மேலும் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’யில் வைக்கம் போராட்டத்தைப் பற்றிக் கூறப்பட்டு இருக்கிறது. அதில் ஜெயமோகனின் முழு உருவம் நன்றாகத் தெரிகிறது. அதைப் பற்றியும் நாம் இவ்விமர்சனப் போக்கில் உரிய இடத்தில் விரிவாகப் பார்க்கப் போகின்றோம். இனி, ஜெயமோகன் காட்டும் அல்லது அறிமுகப்படுத்தும் ‘ இன்றைய காந்தி’யை ஆராய்வோம்.

‡ தொடரும்

Pin It