சில வளைகுடா நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக, அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கி இருக்கிறார்கள். அடக்கு முறைகளை மக்கள் எப்போதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு கட்டத்தில் மக்கள்புரட்சி வெடிக்கத்தான் செய்யும். இப்பொழுது இம்மக்கள் புரட்சியை வளைகுடா நாடுகள் கையிலெடுத்துள்ளன.

எகிப்துக்கு அருகில் இருக்கும் டுனிசியா நாட்டின் அதிபராக இருந்தவர் சைனுல் ஆப்தீன். இவரது ஆட்சியில் மக்கள் அல்லல் பட்டார்கள். விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட் டம், வறுமையை நோக்கி நாடு செல்லும் நிலைமை அங்கு இருந்தது.

kadafi_340பொறுத்துப்பார்த்த மக்கள் ஒரு கட்டத்தில் அதிபர் சைனுல் ஆப்தீனுக்கு எதிராகக் கிளம்பி னார்கள். கிளர்ந்தெழுந்த மக்கள்புரட்சியை அடக்குமுறையால் நசுக்க நினைத்தார் அதிபர்.

மக்கள் சக்தி அதிபரைத் தோற்கடித்தது. நாட்டை விட்டே வெளியேறினார் அதிபர் சைனுல் ஆப்தீன். டுனிசிய மக்கள்புரட்சி வெற்றி பெற்றது.

டுனிசிய மக்களின் போராட்ட வெற்றி எகிப்தையும் தாக்கியது. வரலாற்றில் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற எகிப்தின் அதிபர் நாசர் அந்நாட்டின் சிறப்பையும், புகழையும் மேம்படுத்தினார்.

அடுத்து அதிபர் அன்வர் சதாத், அமெரிக்கத் துணையுடன் இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் எகிப்திய மக்களை முகம் சுளிக்க வைத்தது. அன்வர் சதாத், கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஓஸ்னி முபாரக் எகிப்திய அதிபரானார். இவரின் 32 ஆண்டு ஆட்சியில் மக்கள் சொல்லொணாத் துயரை அடைந்தார்கள். ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

அண்டை நாடான டுனிசிய மக்கள் ஆட்சியாளருக்கு எதிராக நடத்திய மக்கள் போராட்டம் வெற்றி பெற்ற தாக்கம் எகிப்தில் ஏற்பட்டது.

ஓஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் திரண்டார்கள். தலைநகர் கெய்ரோ, அலெக் சாண்டிரியா, சூயஸ், தண்டா போன்ற நகரங்களில் மக்கள் வீதிக்கு வந்தார்கள். கெய்ரோ தாகிர் சதுக்கத்தில் இலட்சக்கணக்கானோர் கூடினார்கள். ஏறத்தாழ 10 இலட்சம் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்தால், தாக்குப் பிடிக்க முடியாமல் ஓஸ்னி முபாரக் ஆட்சியை விட்டு ஓடிவிட்டார் ‡ எகிப்தில் மக்கள் போராட்டம் வென்றது.

இதன் தாக்கம் இப்பொழுது லிபியாவிலும், ஏமனிலும் தொற்றிக்கொண்டது.

கடந்த 42 ஆண்டுகளாக லிபியாவின் அதிபராகச் சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர் மம்மர் கடாபி. தன் குடும்ப நலனைத் தவிர மக்கள் நலனைக் காலில் போட்டு மிதித்துவரும் கடாபியின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுகட்ட,  அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

சர்வாதிகாரி கடாபி மக்களுக்கு எதிராக இராணுவத்தை முன்னிறுத்தினார். அவ்வளவு தான், லிபியாவின் தலைநகர் திரிபோலி, அல்பைதா, பெங்கசி, பைதா, டெர்ணா, தோப்ரூக், மஸ்ரதா போன்ற முக்கிய நகரங்கள் உட்பட மக்கள் போராட்டம், கடாபிக்கு எதிராக வலிமை பெறத் தொடங்கிவிட்டது.

கடாபியின் இராணுவம் வீதியில் ரோந்து வருவதுடன் கண் மூடித்தனமாக மக்களைச் சுடத்தொடங்கியிருக்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினரை யஹலி காப்டர் மூலம் இறக்கி விட்டு, இராணுவ உடையில்லாமலும், மக்களின் முன் வராமலும், மறைந்திருந்து மக்களைச்  சுட்டுத்தள்ள வகை செய்துள்ளார் கடாபி.

கடாபியின் அடக்கு முறைக்கு எதிராகப் போராடும் மக்கள், அரசுக்குச் சொந்தமான அல் ஜமாலியா தொலைக்காட்சி நிலையக் கட்டடம், அல் ஷாபாபி வானொலி நிலையக் கட்டடங்களை அடித்து நொறுக்கியிருக்கி றார்கள். மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது.

லிபியாவின் அல்´யா பழங்குடியின மக்கள், கடாபியின் அடக்குமுறைத் தாக்குதலை நிறுத்தாவிட்டால், எண்ணெய் ஏற்றுமதியைத் தடைசெய்வதாக அறிவித்துள்ளார்கள். மற்றொரு பழங்குடி இனமான வார் பாலாவும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளது. லிபியாவின் நீதித்துறை அமைச்சர், மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதவி விலகிவிட்டார்.

அதிபர்  கடாபியும் தன் பங்குக்கு லிபியாவின் தகவல் தொடர்புகள் அனைத் தையும் துண்டித்தார். கைபேசிகூட செயல் இழக்கச் செய்யப்பட்டுவிட்டன. காரணம், பிறநாடுகளுடன் பேசி உதவி வேண்டவோ, அல்லது அந்நாட்டின் மோசமான நிலையையோ சொல்லிவிடக் கூடாது என்பதற்காக.

லிபியாவின் நகரங்கள், தெருக்கள் எல்லாம் கடாபியின் இராணுவம். அறிவிக்கப்படாத ஊரடங்கு நிலை. லிபிய வீதிகளில் பிணங்கள்.

இப்படி  காட்டு விலங்காண்டித்தனமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரி கடாபி, லிபியாவின் நலனை விரும்பாத இத்தாலி, துருக்கியர்கள் இப்போராட்டத்தைத் தூண்டி விடுவதாக தொலைக்காட்சியில் பேசி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் மேற்கத்திய நாடுகளின் தவறான வழிகாட்டுதலாலும், அவர்களின் தூண்டுதலாலும், லிபிய இளைஞர்கள் வழிதவறித் தன் ஆட்சிக்கு எதிராகப் போராடுவதாகக் கூறியதோடு, லிபிய நாட்டு மக்களுக்கும், கலாச்சாரத்திற்கும், மொழிக்கும், இனத்திற்கும் தான் மட்டுமே பாதுகாவலன் என்றும் சொல்லிக்கொண்டு, மக்கள் மீதான அடக்கு முறைகளைக் கடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்.

லிபிய மக்கள் போராட்டச் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை நாய்கள் என்றும், தன்னிடம் கடைசி குண்டு இருக்கும் வரை லிபியப் புரட்சியாளர்களைச் சுட்டு த்தள்ளுவோம் என்றும், போராட்டத்தைப் பற்றிப் பயப்படமாட்டோம் என்றும் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம கடாபி சொல்லியிருக்கிறார்.

நிராயுதபாணியான லிபிய மக்கள் மீது யஹலிகாப்டர், இராணுவ விமானங்கள் மூலம் சிறிய குண்டுகள் வீசுவதும், துப்பாக்கியால் மக்களைச் சுட்டுத் தள்ளுவதும் மோசமான மனித உரிமை மீறல் என்ற கவலையை ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கிமூனும் தன்பங்குக்கு கடாபியுடன் 40 நிமிடங்கள் பேசிவிட்டுத் தன் கவலையைத் தெரிவித்துக்கொண்டார்.

இப்படிப்பட்டக் கவலைகளை ஈழப் போராட்டத்தில், ஈழமக்கள் குவியல் குவியலாகக் கொன்றழிக்கப்பட்டபோதும், ஐ.நாவும், அதன் பொதுச்செயலாளரும் தெரிவித்துக் கொண்டு தான் இருந்தார்கள். என்ன பயன்? இன்று லிபியாவிற்கும் தெரிவித்துக் கொண்டிருக்கி றார்கள்.

ஆனால் லிபிப மக்களின் திரண்டெழுந்த கிளர்ச்சி, புரட்சி , மக்கள்போராட்டம் கடாபியை விடுவதாகத் தெரியவில்லை.

வெற்றிக்கு மட்டும்தான் தெரியும் மக்கள் போராட்டத்தின் வலிமை. கடாபிக்கு அது தெரியாது. கடாபி நாட்டைவிட்டு ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை ‡ ஓடத்தான் போகிறார்.

லிபிய மக்கள் புரட்சியை ஆதரிப்போம் !

அதோ ‡ ஏமனிலும் புகைகிறது ‡ பார்ப்போம் !

Pin It