‘முக்தியடைந்தார் ஸ்ரீசத்ய சாய்பாபா’ என்றும், ‘ஸித்தி அடைந்தார்’ என்றும், ‘ஜீவ சமாதி அடைந்து, பருவுடல் நீத்தார்’ என்றும் இன்னும் பலவாறாகவும் தமிழ் நாள், வார ஏடுகள் அறிவித்தன. சாய்பாபா மரணமடைந்தார் என்பதே செய்தி. இப்படி நேரடியாக உண்மையைச் சொல்வது, அவர் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் என்று நம் ஏடுகள் கருதியிருக்கக் கூடும்.

சாய்பாபாவிற்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று ஆன்மீகம், இன்னொன்று மக்கள் தொண்டு. இரண்டாவது முகமே, அவருடைய பெரும்புக ழுக்குக் காரணம் என்பதை அனைவரும் அறிவர்.

sai_baba_330எவ்வாறாயினும், இறந்துபோன ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்வது நம் மரபன்று. நரகாசுரன் என்று ஒருவன் இருந்தான், அவன் கொல்லப் படடான் என்று கதை புனைந்ததோடு நில்லாமல், அவன் சாவைக் கொண்டாடும் ‡ அடுத்தவன் சாவில் பூரிப்படையும்  ‘தீபாவளி’ மரபு அவாளுடையது.

எனவேதான், பெரியவர் சாய்பாபா மறைவு குறித்து, நம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், தன் இரங்கல் அறிக்கையில்,  “நான் ஒரு நாத்திகவாதி என்றபோதிலும், சிறந்த ஆத்திகவாதியான பாபா அவர்கள் என்பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்” என்றும்,  “தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கிடச் சில மாநில அரசுகளே மறுத்த நிலையிலே கூட ‡ நான் கேட்காமலே, தானாகவே என் இல்லத்துக்கே வருகை தந்து ‡ சென்னைக்குக் குடிநீர் கிடைக்க 200 கோடி ரூபாய்க்கு மேல் உதவி செய்து, தமிழ் மக்களின்  உள்ளங்களில் எல்லாம் தக்கதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் புட்டபர்த்தி சாய்பாபா அவர்கள்  ” என்றும், மிகுந்த கண்ணியத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

கலைஞரின் அறிக்கை, நட்பிற்கு எடுத்துக் காட்டாகவும் நன்றியு ணர்ச்சியின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது.

ஆனால், அதே நாளில் வெளியாகியுள்ள, தினமணித் தலையங்கம், ஆத்திக ‡ நாத்திகச் சண்டையைத் தூண்டி விடுவதாகவும், பாபாவின் பெயரால் விவாதங்களை எழுப்புவதாகவும் அமைந்துள்ளது.

“பகுத்தறிவு பேசுபவர்கள் தங்கள் அறக்கட்டளையிலிருந்து, பொது நன்மைக்குச் செலவிட்ட தைவிட, தனியார் கல்லூரிகளை நிறுவி அறக்கட்டளையின் சொத்துகளை விரிவுபடுத்த முற்படும் நேரத்தில், இந்த ஆன்மிக ஞானியின்  செயல், நம்மை அவரைத் தலைவணங்கச் செய்கிறது என்பது தானே நிஜம்? ” என்று தன் போட்டி, பொறாமை உணர்வை முன்வைக்கிறது தினமணி. பகுத்தறிவு அறக்கட்டளைகளின் பணிகளை எல்லாம் பட்டிய லிட்டுக் கொண்டிருக்க, இது உரிய நேரமன்று. துக்க வீட்டில் கூட, வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடும் அநாகரிகம் நமக்குப் பழக்கமில்லை.

பிறகு,  “அவர் லிங்கம் எடுத்ததும், மாலைகள் வரவழைத்ததும் மாயவித்தைகளா அல்லது அருள் வலியா என்பதெல்லாம் வீண் விவாதங்களில் போய் முடியும்” என்கிறது தினமணி. இந்த விவாதததிற்குள் நாம் இறங்கினால், டாக்டர் கோவூரிலிருந்து பலரையும் அழைத்து வர வேண்டியிருக்கும். மாய வித்தைகள் பற்றிய ஒளிநாடாக்களை ஒளிபரப்ப வேண்டியிருக்கும்.

“அந்த மகான் தொட்டதால், ஒரு பக்தர் குணமானார் என்பது வெறும் கதைகள் அல்ல என்று இன்றைய பாரா சைகாலஜி ஆய்வுகள் சொல்கின்றன” என்று போலி அறிவியல் பேசுகிறது தினமணி. அப்படியானால், உடல் நலமில்லாத நேரத்தில், ஏன் அவர் தன்னைத்தானே தொட்டுக் குணப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றும், 96 ஆவது வயதில்தான் நான் ஜீவசமாதி அடைவேன் எனச் சொன்னவர், அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே போய்ச் சேர்ந்தது ஏன் என்னும் வினாக்கள் எழுகின்றன.

இன்று அவர் இறந்தபிறகு, அங்கு ஆன்மீக அருளின் ஒளிக்குப் பதிலாக, சொத்துச் சண்டைக்கான இரைச்சல்தானே ஓங்கி ஒலிக்கிறது. அது எதனால் என்பதற்குத் தினமணியிடம் விடை கேட்க வேண்டியிருக்கும்.

இவ்வாறெல்லாம், ஒருவர் இறந்து போயிருக் கும் நேரத்தில், அவர் பற்றிய விவாதங்களைத் தினமணி எழுப்புவதற்கு ஓர் உள்நோக்கம் இருக்குமோ என்று ஐயம் எழுகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்த சாய்பாபா, இவ்வளவு புகழ்பெற்று உயர்ந்திருப்பதை ‘அவாளால்’ பொறுத்துக் கொள்ள முடியாதுதானே! எனவே, இறந்துபோன நேரத்திலும், அவரைப் பாராட்டுவது போலப் பாசாங்கு செய்து, அவர் பற்றிய விவாதங்களை வீதிக்குக் கொண்டு வருவதே, வைத்தியநாத அய்யர்களின் எண்ணமாக இருக்கலாம்.

பார்ப்பனரல்லாத ஒருவர், ஆன்மீகம் உள்ளிட்ட எந்தத் துறையில் புகழ் பெற்றாலும், அவரை விமர்சனத்திற்குள்ளாக்குவதும், இயலாத வேளையில், அவர்களைத் தம்மவர்களாக உள்வாங்கிக் கொள்ள முயல்வதும் அவர்களின் இயல்பு. இசைத் துறையில் புகழ்பெற்ற நம் எம்.எஸ்.சுப்புலட்சுமியை, ஒரு பார்ப்பனப் பெண் என்றே உலகினரை நம்ப வைத்தவர்கள் அல்லவா அவர்கள்!

இப்போதும் அந்த முயற்சியில்தான் தினமணி இறங்கியுள்ளது. விவாதங்களைத் தாண்டியும், தன் மக்கள் தொண்டினால், சாய்பாபா புகழ்பெற்று விட்டதை உணரும் அவர்கள், இறுதியாக அவரைத் தங்களவர் போலக் காட்ட முயல் கின்றனர். அதன் காரண மாகத்தான்,  “கடந்த 50 ஆண்டுகளில் (தவத்தின் வடிவம்) இருவர்தான். ஒன்று, காஞ்சி சங்கர மடத்தின் பரமாச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அடுத்ததாக சத்ய சாய் பாபா ” என்று தன் தலையங்கத்தை நிறைவு செய்கிறது தினமணி.

‘பரமாச்சாரியாள்’ மக்களுக்குச் செய்த தொண்டு என்ன? வருணாசிரமத்தை உயர்ததிப் பிடித்ததில் அவருக்கு இணை யார்? தீண்டாமையை எதிர்க்க வேண்டாம் என்று காந்தியாரைக் கேட்டுக் கொண்டவரல்லவா அவர்!

அவரை முதல் இடத்தில் நிறுத்தி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடிநீர் வசதி போன்ற பொதுநலப் பணிகள் முதலானவற்றைச் செய்த சாய்பாபாவை இரண்டாம் இடத்தில் நிறுத்துகின்றது தினமணி! இந்தப் ‘பார்ப்பனத் தந்திரத்தை’ நம் மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றனரோ!

Pin It