கல்வியில் சமத்துவத்தைக் கொண்டுவரும் நோக்குடன் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு. இது தொடர்பான ஆய்வுக்காக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச. முத்துக்குமரன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தது. பல்வேறுகட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் அக்குழு அரசிடம் தனது அறிக்கையை அளித்துள்ளது. எதிர்வரும் கல்வியாண்டு முதல் (2010-2011) 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கும், அடுத்த கல்வியாண்டு முதல் (2011-2012) எஞ்சியுள்ள வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி நடைமுறைப் படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

சமச்சீர்க் கல்வி குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “சமச்சீர்க் கல்வித் திட்டம், தமிழகத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் வேறுபாடின்றி ஒரேவிதமான தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு உருவாக்கும் புதிய திட்டமாகும். இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் இப்போதுள்ள மாநிலக் கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன் கல்வி வாரியம், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம், ஓரியண்டல் கல்வி வாரியம் ஆகிய நான்கு கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்துப் பொதுக்கல்வி வாரியம் அமைக்கப்படும்.

அனைத்துப் பள்ளிகளுக்கும் பொதுப்பாடத்திட்டம், பொதுவான பாடநூல்கள், பொதுவான தேர்வுமுறை ஆகியவை நடைமுறைப் படுத்தப்படும். பொதுப் பாடத்திட்டத்தின் கீழ் பாடநூல்கள் எழுதப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல் 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புக்கும், அடுத்த கல்வியாண்டு முதல் மற்ற வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு அறிவித்துள்ளபடி, வரும் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. பாடத்திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு 95 சதவீதம் முடிவடைந்து விட்டதாகக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரைக் கொண்டு சமச்சீர்க் கல்வி குறித்த பல்வேறு கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. உலகில் 60 க்கும்மேற்பட்ட நாடுகளில் பொதுக்கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நம்முடைய இலக்கும் ‘அருகாமைப் பள்ளிகளுடன் கூடிய பொதுப்பள்ளி முறை’தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட எல்லாக் கல்விக்குழுக்களும் பொதுப்பள்ளி முறையையே பரிந்துரைத்துள்ளன.

கோத்தாரிக் குழு (1964-66), இராமமூர்த்தி குழு(1991) யஷ்பால் குழு(1993) ஆகியவையும் பொதுப்பள்ளி முறையை விரைந்து கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. பொதுப்பள்ளி முறையில் சாதி, மத, இன, இட வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரே சீரான கல்வி கிடைக்கும். ஆட்சியாளர்களின் பிள்ளைகளுக்கும், அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்கும் ஒரே தரமான கல்வி கிடைப்பதற்குப் பொதுப்பள்ளி முறையே வழிவகுக்கும்.

பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் பொதுப்பள்ளி முறையைச் சாத்தியமானதாக ஆக்க முடியும். அதற்கான நுழைவாயிலாகச் சமச்சீர்க் கல்வி முறையைக் கொள்ளலாம். இப்போது அரசு அறிவித்துள்ள சமச்சீர்க் கல்வித் திட்டம் முழுமையான சமச்சீர்க் கல்வித் திட்டமாக இல்லை என்றபோதும், இதனை ஒரு தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தைத் தனியார் பள்ளிகள் முதலில் எதிர்த்தன. எங்கே தங்களுடைய கடைக்கு ஆபத்து வந்தவிடுமோ என்ற அச்சத்தில் போர்க்கொடி உயர்த்தின. தனியார் பள்ளிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் வராது என்று அரசு உறுதியளித்த பிறகு எதிர்ப்பைக் கைவிட்டன.

இருந்தாலும், மக்களை விட்டில் பூச்சிளாக கவர்ந்திழுக்கின்ற தனியார் பள்ளிகள்தான் தரமானவை என்னும் மாயத் தோற்றத்தைக் கட்டிக்காக்கப் பற்பலவழிகளில் தொடர்ந்து முயன்றுவருகின்றன. பாடத்திட்ட தயாரிப்பில் மூக்கை நுழைத்தன. CBSE, NCERT, மெட்ரிக் பாடத்திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று இலவச ஆலோசனைகளையும் வழங்கின.

மாநில பாடத்திட்டம் நமது பிள்ளைகளுக்கு வயதிற்கு மீறிய சுமையாக உள்ளது, எனவே NCERT பாடத்திட்டத்தை வைக்க வேண்டும் என்பது இவர்களுடைய ‘அறிவார்ந்த’ ஆலோசனை. மாநில அரசின் பாடத்திட்டமே சுமை என்னும் போது, தேசிய அளவிலான பாடத்திட்டம் எப்படி எளிதானதாக இருக்க முடியும்.

ஆனால் தமிழக அரசு எந்த ‘மாதிரியையும்’ எடுத்துக் கொள்ளாமல், சமச்சீர் கல்விக்கான பொதுவான பாடத்திட்டத்தை தயாரிக்கத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. ‘பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் உருவாக்குவதில் வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களையே ஈடுபடுத்த வேண்டும்’ என்று பேரா. யஷ்பால் மற்றும் சிவஞானம் குழுக்கள் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளன. பாடநூல்கள் தயாரிப்பில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் பாடத்திட்டம் தயாரிக்கும் பணிகளில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவிலான ஆசிரியர்களே ஈடுபடுத்தப்பட்டதால், மாணவர்களின் திறனுக்கு ஏற்றவாறு அமையாமல், அதிக சுமையுடன் கூடியதாகவே பாடத்திட்டங்களும், பாடநூல்களும் அமைந்திருந்தன.

இதிலும் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. சமச்சீர்க் கல்விக்கான பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில், வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபடுகின்ற ஒரு சில ஆசிரியர்களை பங்கெடுக்கச் செய்துள்ளது. இது தொடர வேண்டும். இதோடு நின்றுவிடாமல், பயிற்று மொழி, நிர்வாகம், பாடநூல்கள் உள்ளிட்ட எஞ்சியிருக்கின்ற பரிந்துரைகளைச் செயல்படுத்துவதிலும் இதே உறுதியை அரசு கடைப் பிடிக்க வேண்டும்.

பயிற்று மொழி குறித்த அரசின் அறிவிப்புச் சமச்சீர்க் கல்விக்குச் சிறப்புச் சேர்ப்பதாக இல்லை. ‘பயிற்று மொழியாகத் தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடரும்’ என்ற முதல்வரின் அறிவிப்பு சமச்சீர்க் கல்வியின் நோக்கத்திற்கு வலுசேர்ப்பதாக அமையாது.

ஆங்கில வழிக் கல்வியே தரமானது, வேலை வாய்ப்புகளைத் தரக்கூடியது என்னும் கற்பிதத்தை சமச்சீர்க் கல்வியின் மூலம் மாற்றியமைத்துவிட முடியும் என்பது தமிழ் அறிஞர்களின், கல்வியாளர்களின், சமூக ஆர்வலர்களின் கருத்து. எனவே பயிற்று மொழி தொடர்பான கருத்தில், கொள்கையில் அரசு ஆக்கப்பூர்வமான உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். தாய்மொழி வழிக் கல்விதான் குழந்தைகளின் சிந்தனைகளைச் செழிப்பாக்கும் என்பது உலகளாவிய வல்லுனர்களின் கருத்து. அதன்படி, செழிப்பான தலைமுறைகளை உருவாக்க, தமிழ்வழிக்கல்வி என்னும் கொள்கையில் கலைஞர் தலைமையிலான அரசு உறுதியான கொள்கை முடிவினைச் சட்டவடிவமாகவே கொண்டுவரவேண்டும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் சிறப்புத் தேர்ச்சி பெற்று வருகின்றனர். தரப்பட்டியலிலும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றனர். இருந்தும், பொதுமக்கள் தனியார் பள்ளிகளை நோக்கிப் படையயடுப்பதற்குக் காரணங்கள் பலவுண்டு.

தனியார் பள்ளிகளின் தரமான உள்கட்டமைப்பு வசதிகள் பெற்றோர்களைக் கவர்கின்றன. காற்றோட்டமான வகுப்பறைகள், சுகாதாரமான கழிவறைகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், 1:25 க்கு மிகாத ஆசிரியர் மாணவர் விகிதம் போன்றவற்றில் அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் உள்ள இடைவெளியையும், மக்களின் ஆங்கில மோகத்தையும் கல்வி வியாபாரிகள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலை சமச்சீர்க் கல்வித் திட்டத்தினால் மாறவேண்டுமெனில் பள்ளி உள்கட்டமைப்பு, ஆசிரியர் மாணவர் விகிதம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும். ‘ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30க்கு மேல் இருப்பது விரும்பத்தக்கது அல்ல. அதிக மாணவர்கள் அடங்கிய வகுப்புகள் கற்பிக்கும் தரத்திற்கு மிக அதிகமாகத் தீங்கு விளைவிக்கும்; அத்தகைய வகுப்புகளில் சிறப்பான கற்பித்தலும் பயனற்றுப் போகும்’ என்று கோத்தாரி குழு அறிக்கை கூறுகிறது. இதைத் தான் முத்துக் குமரன் குழுவும் வலியுறுத்துகிறது.

விரைவில் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை நீங்குவதற்கு வாய்ப்பு உருவாகிச் சரியான ஆசிரியர் மாணவர் விகிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாணவர்களின் வாழ்வியல் முறைகளை ஒட்டிய விதத்தில் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்கிறது முத்துக்குமரன் குழுவின் அறிக்கை. மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பொருந்தாது, வட்டாரம் சார்ந்த பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும், அதுதான் வாழ்வியல் சார்ந்த கல்வியையும், சமூக அக்கறையுள்ள மனிதர்களையும் உருவாக்கும் என்ற அடிப்படையில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்ற நிலையில், தேசீயக் கல்வி பேசும் வல்லுனர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவான பாடத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டாலும், அந்தந்த வட்டாரத்திற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டத்தை மாறுதலுக்கு உட்படுத்திக் கொள்கின்ற சுதந்திரம் (தன்னாட்சி) பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் நிலம் சார்ந்த, வாழ்வியல் சார்ந்த கல்வியறிவை மாணவர்கள் பெறமுடியும். அதுதான் நாட்டின் மீது பற்றுதலை ஏற்படுத்தும்.

தனியார் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் இடையில் உள்ள பெரும்பள்ளத்தை நிரப்புவதற்கு அரசு முன்வரவேண்டும். இப்படி அனைத்திலும் சமத்துவம் கொண்டு வரப்படும்போதுதான் அது முழுமையான சமச்சீர்க் கல்வியாக உருப்பெறும்.

அதே நேரத்தில் அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் கண்ணைமூடிக் கொண்டு எதிர்க்கின்ற எதிர்க்கட்சி அரசியல் இலக்கணத்தைத் தள்ளிவைத்துவிட்டு, திட்டத்தின் நிறைகளைப் பாராட்டியும், குறைகளைச் சுட்டிக்காட்டியும் திட்டத்தைச் செழுமைப்படுத்த உதவவேண்டும். பாடத்திட்டத் தயாரிப்பில் கல்வியாளர்களின், பொதுமக்களின், ஆசிரியர்களின் கருத்துக்களை வரவேற்பதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வி இணையதளத்தில் (www.pallikalvi.in) வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. நமது கருத்துகளையும், ஆலோசனைகளையும் அதில் பதிவு செய்யலாம். இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு கல்வித் தரத்தினை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க முன்வரவேண்டும்.

ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்றால் முதலில் தொடங்கவேண்டும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட தொடக்கமாக அரசின் சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கொள்ள வேண்டும். இந்தத் தொடக்கத்திலிருந்து பொதுப்பள்ளி முறையை நோக்கிப் பயணிக்க கல்வியாளர்களும், அறிஞர்களும் அரசிற்கு வழிகாட்டுதல்களைத் தரவேண்டும். சமச்சீர்க் கல்வி சமத்துவ சமூகத்திற்கு அடித்தளமாகும்-ஆகவேண்டும்!

- இரா.உமா

Pin It