stalin and sekarbabu"பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்" என்றார் பாரதி! ஆனால் இன்றைய நம் தமிழக அரசு, "கோயில் தலமனைத்தும் பள்ளி செய்குவோம்" என்னும் முழக்கத்தை முன்னெடுத்துச் செயலிலும் இறங்கிவிட்டது.

கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டலின்படி, அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு, அறநிலையத் துறையின் சார்பில் பத்து கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதோ... முதல் நான்கு கல்லூரிகளுக்கான தொடக்க அறிவிப்பு வந்துவிட்டது!

சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு, திண்டுக்கல் அருகே உள்ள தொப்பம்பட்டி, விளாத்திகுளம் ஆகிய நான்கு ஊர்களில் இவ்வாண்டு கல்லூரிகள் உதயமாகின்றன. வரும் 26ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

அர்த்தநாரீஸ்வரர் கலைக்கல்லூரி, ஸ்ரீ சுப்ரமணியசாமி கலைக்கல்லூரி என்று அந்தந்த ஊரில் உள்ள கடவுளர்களின் பெயர்களிலேயே அக்கல்லூரிகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. நல்ல தமிழ்ப் பெயர்களில் அல்லது அந்தக் கடவுளர்களின் பெயர்களையே தமிழில் மாற்றிப் பெயர் சூட்டியிருக்கலாமே என்று நண்பர்கள் சிலர் கூறினர். இல்லை, இதுதான் சரியென்று தோன்றுகிறது. பெயரை மாற்றினால், உடனே அதனைப் பிடித்துக்கொண்டு, 50 காவித் துண்டுகள் கூடி நின்று ஆர்ப்பாட்டம் என்பார்கள். கல்வியைப் பரப்பும் நம் நோக்கம் திசை திருப்பப்படும்.

எந்தப் பெயரில் இருந்தால் என்ன, ஏழை, எளிய பிள்ளைகளுக்குக் கல்வி கிடைக்கிறதே! அதைத்தான் நாம் கொண்டாட வேண்டும். "காரியம் பெரிதா, வீரியம் பெரிதா?" என்று கேட்பார் அய்யா பெரியார். காரியம்தான் பெரிது!

ராஜாஜி தன் ஆட்சிக் காலத்தில் மூடிய பள்ளிகளை எல்லாம் பெருந்தலைவர் காமராஜர் திறந்தார். பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் மேலும் பல பள்ளிகளை உருவாக்கினார்கள். அனைவரும் அய்யாவின் கனவை நினைவாக்கினார்கள். இன்று அய்யாவின் பேரன், தமிழக முதல்வர் தளபதி அதே பாதையில் அடுத்த அடி எடுத்து வைத்திருக்கிறார். இன்றைய அறநிலையத் துறை அமைச்சரோ, முதல்வரின் சொல்லை எல்லாம் செயலாக்கிக் கொண்டுள்ளார்.

அதனால்தான் சிலர், 'கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர்' என்று கதறிக் கொண்டுள்ளார்கள். ஆம், எல்லோருக்கும் கல்வி என்பது அவர்களுக்கு ஆபத்தானதுதானே!

- சுப.வீரபாண்டியன்

Pin It