பொ.செந்திலரசு  சிறப்பிதழ்

பொ. செந்திலரசு (28.12.1974) - இளம் சட்டமும், வரலாறு முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவரது முதல் கவிதை ‘கணையாழி’யில் 1994-ம் வருடம் வெளியானது. முதல் தொகுப்பு ‘உணர்வு நதி’ 2004ல் வெளியானது. 2007ல் ‘வடுவேட்டை’ இவரது இரண்டாம் தொகுப்பு. ‘நவீன அகம் புறம்’ சிற்றிதழின் ஆசிரியர். அவ்விதழுக்கு 2006ம் ஆண்டுக்கான ‘நல்லிதழ் விருது’ம், 2008ம் ஆண்டுக்கான ‘படைப்பாளர் பேரவை விருது’ம் பெற்றுள்ளார். சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதிவரும் இவரின் மூன்றாவது தொகுப்பு விரைவில் வரவுள்ளது.

தொடர்பு முகவரி :

பொ. செந்திலரசு
5/311, ராசிபுரம் முதன்மைச் சாலை,
சே.பாப்பாரப்பட்டி (அஞ்),
சேலம் மாவட்டம் - 637 501,
அலைப்பேசி - 99425 76296

1

பச்சையென்பது நிறப்பிழை

நெருஞ்சி நினைவுகளின் மஞ்சள் வனத்தில்
உலாவும் நிறங்களின் சீமாட்டி
பச்சை குத்தி பழுப்பேறிய தன் புஜத்தில்
வளர்த்த கருநிறக் கிளி யொன்று
செவ்விள அலகில்
 மலர்ந்த பதுமத்தை
காதலுடன் கொய்து கொள்ளவும்,
விலாவிலொடுங்கியும் முதுகில் படர்ந்தும்
கால்களைச் சுற்றியும் கொழுத்த பதுமக்கொடி
தளர்ந்து மலர்ந்த  கொங்கை மேல்
தாவிப் படர்தலையும்
ஒரு தவத்தின் வரங்களெனப் பெற்றவள்
அனிச்ச மனதினையும்
மிச்சமிருக்கு மவள் மாமன் கதைகளையும்
தும்பை பூத்த யெவனத்திடம் ஒப்பித்துக்
களிதுயர் கொள்ள கூசி
வன இலவம் பொந்துகளில் அவளொளித்த
பருவம் தொட்டெழுதிய
‘அரிவை’யின் பெயரிலூறும்
கரும் பச்சை விடம் வற்றி
‘சிகரெட்’ தீத் தழும்பவிழ்ந்ததோர் கரம்
அவளிடம்
யாசித்து நீண்ட தருணத்தில் தான்
ஒளித்த தன் கதைகளைத் திருடிப் பறந்த
தன் கிளி பற்றி முறையிட்டுக் கொண்டிருந்தாள்
அங்கயற்கண்ணி.

யாரிடமென்று யார் யூகிக்க கூடும் -

பச்சையென்பது நிறப்பிழையென்று
யாரவளுக்கு உணர்த்துதல் கூடும் -

2
நதியை வரைபவள்

என்னை உன்னிடம் தோற்றவனை
யாருக்குச் சுடர்த்துகிறாய்
சிற்றகல் நுனியில்
ஒரு தீத்துளி கொண்டு...?

*

பகலை உன்னிடம் தோற்கிறேன்
இரவில்
கையோடழைத்து வருகிறாய் ஒரு கடலை.

பகலை இரவெனவும்
இரவைப் பகலெனவும்
மலர்த்தும் மாயமறிந்த
உன்னிதழ் சுழிப்பு
வாரியிறைக்கிற தென்னை கிளிஞ்சல்களென.

உன் திசை விழுந்த
தொடுவானத்துக்கப்பால்
வாய்த்த முத்தத்தில்
உயிர்த்துக் களைத்து
உப்புக் கம்பளம் விரித்தொரு
மந்திரவாதியைப் பிரதியிக்கும்
மரகதத் தீவிலொதுங்குகிறேன்

விருட்சத்தின் கரங்களில்
சிறை கொண்ட நிலாத்துண்டு
பசியாற போதுமானதாயிருக்கிறது

இவ்விரவைத் தின்று செரிக்கும்
தனிமையில்
யேதுமறியா பாய்மரக் கடலை
கோப்பையெனக் கவிழ்த்து
சிந்தும் ரசத்துளியில்
பென்சில்முனைப் பார்வையைக் கூர் தீட்டி
நீயொரு கோட்டோவியக்காரனின்
நதியை வரைந்து முடிக்கிறாய்

கடலின் நினைவில்
இவ்விரவை நனைத்துக் கொண்டிருக்கிறது
துளி ஒளி.

3

கதிர் இறையோன்

தீ -க்கு  ஏங்கி
உடலைக் கிடத்துகிறது
வையம்.
பனியின் சொற்களுக்கு
உடன்பட்டு.

*

குளிர் திரித்த
தன்னுடலை
பனி தேவதை
உயர்த்துகிறாள்
நெடுவாளென
நிராயுதச் சூரியனைக்
கொளுத்தும்
காலத்தேவனுக் கெதிராக.

கருணை மிகும்
கதிர் இறையோன்
பனிக்குல்லாய் விற்பவன்
போல்
குளிர்ச்சமர் போற்றிச்
சபிக்கிறான்
நெடுவாளின்
முன்-
பின்-
கதகதப்பை.

இன்னுமோர் வீச்சில்
சிரமேறும்
காலதேவன்
போர்க்களத்தில்
பனிப்புல்தொட்டு
வெண்ணுதிரப் பாடலை
-3டிகிரி செல்சியஸுக்கும்
குறையா வெப்பத்தில்
பருவச்சுவை
யூற்றி
வரைந்து முடிக்கிறான்
மடலென
ஆயிரம் முத்தங்களோடு
வைகறைக்கு.

4

மரணத்தின் இரண்டாம் பாகம்

கரை மீண்ட அலையென
எம்பித் தாழ்ந்த பசிக்குப் பின்
என்னை அறுசுவைக்கிறாய்

ஒற்றை உரசுதலில்
பற்றிக் கொண்ட நிலா புகைகிறது
இரவின் சாம்பலை உதிர்த்து.

நதியின் திருப்பத்தில் சுழிக்கும்
நாவாயென
சொற்களை அர்த்தித்துத் தோற்கிறாய்

பார்வையின் உஷ்ணம்
மௌனப் பாலையில்
நெடுங்காமத்தைப் பீறிடுகிறது

உடற்சுவர் திறக்க
மனப் புள்ளிகளை கோடுகளாக்கி
நீர்விரல் தீட்டுகிறாய்

பசும் யாக்கை நுனியில்
பூத்த முத்துக்கள் கனிகிறது
மதர்த்த இரு சூரியனுக்காய்

ஸர்ப்பத்தின் சாயல் கொள்ளும்
உடலை ஆகிருதியாக்கி
தீச் சொறிகிறாய்

தனிமையில் தணிகிறது
இலவங்காடென
யெவனம்

நினைவுகளின் திரைச்சீலை
அவிழும் கணத்தில்
இப்படியொரு
அபத்த நாடகத்தினை
நிகழ்த்துகிறாய் பெண்ணே...

சின்னச் சிணுங்கலில்
காதலின் முதற் பாகத்தையும்.
ஒரேயொரு முத்தத்தில்
மரணத்தின் இரண்டாம் பாகத்தையும்
அவள் எழுதி முடித்ததை
காதலியல்லாத உனக்கு
எப்படி விளக்கிச் சொல்வேன்?

5
அந்தகக் கனவு

முன்பனிக்கால வல்லூறுகள்
 அருகிய ஏரி
கார்காலப் பொரிதலில்
மீன்குஞ்சுகளின்
செழிப்பு வனப்பில்
மிதக்கும்
ஆமலகமலத்தை ஒத்திருந்தது.

உயரே
வட்டமிட்டுப் பறந்து
செங்குத்தாய் கீழிறங்கிக்
கவ்விப் போகும்
மரணத்தைப் பற்றி
 அனுபவமற்றிருந்த குஞ்சுகளுக்கு
முதுவேனிலில் நிறையும் நீர்
பருவந்தள்ளி
சாயக் கழிவுகளைச்
சேர்த்துக் கொண்டதில்
நீலச்சாவு
ஆலகாலத்தில் திளைத்திருந்தது.

நாரைகளும், கொக்குகளும்
வரவேற்றறியா
மரணத்தின்விருந்தாளிகளென
வந்தமரும் காகங்கள்
நீர் மூகிழ்த்த
பாறை மேல் மிதந்த
மீன் துண்டங்களின்
கண்களைப்
பறித்துப் பசியாற
அந்தகத் துண்டங்களில்
நிரம்பிக் கிடக்கிறது.

ஒரு கண்ணில்
சாய நினைவுகளும்
மறுகண்ணில்
ஏரி பற்றிய 21 கிராம் கனவுகளும்.

6
வனக்கடல்

மறந்து வைத்த
என் ஐப்பசி விதைகளை
கண்டெடுத்த மழைக்கு
நன்றியைத் தளிர்
புன்னகையாய்
மலர்த்திக் காட்டுவதில் தினம்
மும்முரமாயிருந்த
அக்கொடியை
பச்சை அலையென
ஒருமாதத்தில் உற்பத்திக்கத்
தொடங்கிய தென்
வனக் கடல்.


இலைக்கோணத்தில்
துளிரிய
மஞ்சள் பூத்த செப்டம்பர்களோடு
கார்த்திகைகளாய்
சுருளும் பற்றுக் கம்பிகள்
வேலியிட்ட முட்கம்பிகள்
பற்றிப் பிரியங்களைத்
தொட்டிச் செடியில் வளர்க்கும்
அண்டை வீட்டுக்காரன்
உரிமைகள் மீதூர,
பூக்களோடும் பிஞ்சுகளோடும்
நேற்று
நான் நீங்கிய பொழுதில்
கைகளில் அள்ளிக்
கவிழ்த்திருந்தான்


இப்பால்.

இக்கடலை.

மனிதத்தின் உப்படர்த்தித்த
என் வனக்கடல் மேல்
இன்று காலூன்றிப் பயணிக்கிறது
மனிதச் சுயம்.

7

அந்தியை இயற்றுபவள்

அந்தி மின்சாரம் சற்று தணிந்த நேரத்திற்கெல்லாம்
வந்து
சேரும் குளிர் கதப்பில் பருவத்தை யொத்த
தண்
தீயொன்றை அகலிடுகிறாள் சுழல் பால் வெளித்
தூண்டித்
தன் தீ விரல் சுடர்த்தும் அந் நடம்புரித்
தீ
யௌவனத் துணையுடன் இரவின் பாவனைகளை
அபிநயிக்கச்
சுடும் சுயம் பொங்கி பெண்மைத் துளிர
வந்து
சேரும் பளீரொளியில் அகலணைத்துத் திரும்பு
மவள்
காதலிக்கும் முன், காதலியின் காதல்
போல்
பிரகாசித்தகன்ற இருளின் ஒற்றைக்கல் மூக்குத்திப்
பள
பளப்பை எரி நட்சத்திரங்களாக்கி என்னுள் வீசிச்
செல்கிறாள்.
*

ஒளிப்பிழம்புகளோடு அவள் கடலில் விழுந்த
என்னிரவு பிரகாசமாயிருக்கிறது.

8

இனாவோ (அ) இயற்கை உபாசகன்

சர்க்கரை வியாதியர்கள்
காலை நடைப்பயிற்சியின் மூச்சிறைப்பில்
தவறவிட்ட சாலையோர
ஏரியின் மரகத யௌவனத்தை,
டி.என். 28 : எச். 2818ல் கடந்த போது
‘இனாவோ’வின் சாளரப் புறத்தே
கண்டெடுத்த
மனைவியின் இளநகை முன்புலமாகத்
தன் கையடக்கப் புகைப்படக் கருவியில்
ஏரியின் இறுமார்ந்த யௌவனத்தை
வாரிச் சுருட்டி
பாடம் செய்கிறான் இயற்கை உபாசகன்
வரவேற்பறையில்
பருவங்கள் தோறும்
வண்ணக்கோப்பைத் ததும்ப
பேரழகைச் சொட்டும்
அச் செவ்வகத்துளி காரெனவும்,
கூதிரெனவும்,
வேனிலெனவும்
தன் மனைவியின் யௌவன உணியில்
சாரலிட்டுக் களிக்க
நீர் கவிழ்த்த பரிசல் மேலொற்றைக்
குருகெனவே தபசித்து.

9

நிறங்களின் புன்னகை

வீட்டு அலங்காரப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சியில் உள்
அலங்காரப் பிரிவில் ரசித்து உடுத்திய சேலையில் மலர்ந்திருந்த
விற்பனைப் பெண்ணிடம் வண்ணங்களுக்குச் சட்டகமிட்ட
புயலில் பயணிக்கும் பாய்மரக் கப்பலொன்றை வாங்கி வந்தேன்
அறைச் சுவரில் மாட்டிய இரவில் அறையின் கனவு கருநிறக்
கொண்டல்களை அழைத்துக் கொண்டது. மெல்லிய உறக்கத்தி
லிருந்த கனவலை மெல்ல மெல்ல அதி பயங்கரமாய் கரை மீறி
எம்பித்தாழ ஆரம்பித்தது. உறக்கத்தில் விழித்து ஒரு மிடறு
நீரருந்தி பாய்மரப் பதாகைகளை காற்றி னெதிர் திசையில்
விரித்தும் திசை மீறிப் பயணிக்க ஆரம்பித்தது கப்பல். விடி
விளக்கென ஜொலித்த கலங்கரை விளக்கும் புள்ளியாகி மறைய
இரவின் போர்வைக்குள் விழிப்பின் நங்கூரமிட்டும் பயனில்லாது
பெருங்காற்றுச் சூறாவளியை அறைக்கு வெளியே தள்ளி
தாழிட்டேன்.

நிசப்தம்

தணிந்த சூறாவளியில் கொட்டியது பெருமழை. மழை பெருத்த
வெள்ளம் விற்பனைப் பெண்ணின் நினைவுகளெனப் புரள
ஓய்ந்து புலர்ந்த காலையை அப் பேயிரவிடமிருந்து பிடுங்கி என்
திசையில் கப்பலைப் பாய்ச்சிக் கொண்டிருந்தேன்.

இப்போதும்

அறை யெனப்படுவது நிறங்களின் புன்னகை

யென வசீகரித்துக் கொண்டிருக்கிறாள் அவள்.

10

இரவுக் கார்த்திகை

1
பகலை வழியனுப்பித் திரும்பும்
பறவையின் கூட்டில்
பசி நிரம்பிய கார்த்திகை, அந்திச்
சூரியனைப் பொறுக்கிப் பசியாறுகிறாள்.
7.12க்கு உறக்கம் கலைந்த
அடர்வனத்து நிலவு
இரவினைக் கூட்டி
குளிர்த் தீ கொளுத்துகிறது.

2
நொடிகளை மிடற்றிப்
பருகத் துவங்கிய ஆட்டத்தில்
தாயம் விழுந்த நேரம் 9.38.
இரவினையும், நிலவினையும்
இச் சூதில் தோற்றும்
நம்பிக்கையிழக்காத கார்த்திகை
இறுதியாட்டத்தில் இப்படி
குளிரைப் பணயம் வைத்து
மீட்டுக் கொள்கிறாள் பருவத்தினிடம்
இவ்விரவினையும் இன்னுமிழந்ததையும்.

3
மழை துவட்டிய ஐப்பசி வனப்பையும்
கால்வரை போர்த்திய
கார்த்திகையின் பேரழகினையும்
1.44க்கு ரசித்தவன்
விரைத்த வனப் பேரேட்டில்
பனிச்சுவைப் பாடலொன்றைப் புனைகிறான்.
சிறந்த சொல்லொன்று
திரள்கிறது புல்நுனியில்.


4
நிசப்த கொம்புகள் நீள
குளிர் சுமக்கும் கார்த்திகை
நத்தையுறுவில் எழுதி முடிக்கிறாள்
இரவின் ஹைக்கூக்களை.
சன்னமானதொரு
அய்யப்ப பாடலின் பின்னணியில்
3.25க்கு கணவனின் தீண்டலுக்கிணங்கி
மென் சிணுங்களுடன் புரள்கிறாள் மார்கழி
இதமாய்த் தணிக்கிறது பனித்தாகம்.

5
நீர் நாரைகளின் கிழக்குப் பயணம்
மொட்டை மாடி தேநீர் சுவைக்கு ருசி கூட்ட
5.58யை துலக்கியபடி
கார்த்திகை மீது கிடக்கிறது காலம்.
பூமியின் கரங்களில்
உதிர்ந்த கருநிற இறகொன்றினை
தன் முகவரி அட்டையென
பொதித்துப் போகிறது இரவு.

Pin It