தோழர் அன்பாதவனின் 'கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்களை' முன்னிறுத்தி...

எந்தவகையான கவிதை சமூகத்திற்குத் தேவை என்ற கேள்வியோடு, கவிதை என்ற இலக்கிய வகைமையே சமூகத்திற்குத் தேவைதானா என்ற கேள்வியும் காலங் காலமாக எழுப்பப்பட்டுவருகிறது. இரண்டிற்கும் அடிப்படை, ஒருவகையில், மனித மனங்களை, உணர்வுகளை, ரசனைகளை, விருப்பங்களை, அடையாளமழித்து, அடிமைப்படுத்தும் மேலாதிக்க மனப்போக்குதான் என்று சொல்லத் தோன்றுகிறது.

24 மணிநேரமும் மனிதனை முட்டாளாக்குவதே குறியாய், அபத்த நிகழ்ச்சிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி தேவைதானா என கேள்வி எழுவதில்லை. ஆனால் கவிதை தேவைதானா என்ற கேள்வி மட்டும் வெகு சுலபமாக தொடர்ந்த ரீதியில் கேட்கப்பட்டுவருகிறது. (அரசு நூலகத்துறை தற்காலத்தைய தமிழ் கவிதைத் தொகுப்புகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வதேயில்லையென்று கேள்வி) கவிதை எழுதுவதில், கவிதை வாசிப்பதில் என்ன கிடைக்கிறது என்பது போன்ற ஆழமான சுற்றாய்வுகளோ, கலந்துரையாடல்களோ மேற்கொள்ளப்பட வழிவகுக்கப்படாமலேயே இந்த கேள்வி வலம்வந்து கொண்டேயிருக்கிறது. எனில், கவிதை எழுதுதல் கையாலாகத்தனமோ, சோம்பேறித்தனமோ, கனவுலகார்த்தமோ அல்ல. 'எமக்குத் தொழில் கவிதை'  என்ற வரி கவிதையை ஒரு செயல்பாடாகவே புரியவைக்கிறது. கவிதை வயிற்றுப்பிழைப்புக்கு வழிவகுக்காமல் போனாலுங்கூட அது உடலும் மனமும் ஒருசேர மேற்கொள்ளும் ஒரு செயல்பாடுதான் என்பதில் சந்தேகமென்ன?

இந்தப் பணியை விரும்பி மேற்கொள்கிறவர்களில், இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துவருபவர்களில் ஒரு சிலர் தவிர்த்து மற்றவர்களுக்கு உரிய அடையாளமோ அங்கீகாரமோ, மதிப்போ, மரியாதையோ கிடைப்பதில்லை என்பதே இங்கு நடப்புண்மை. இன்னும் சொல்லப் போனால், கவிஞர்கள் கிண்டலடிக்கப்படுவதும், மதிப்பழிக்கப்படுவதுமே இங்கே அதிகம். இந்நிலையில் தொடர்ந்து கவிதைவெளியில் இயங்கிவர ஒரு படைப்பாளிக்கு உள்ளார்ந்த தெம்பும், பிடிப்பும், பற்றுறுதியும் கூடுதலாகவே அவசியமாக இருக்கிறது. இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ்க் கவிதைவெளியில் இயங்கி வருபவர் தோழர் அன்பாதவன் என்பது இந்தப் பின்புலத்தில் அடிக்கோடிட்டுச் சொல்லத்தக்கது.

கைப்பேசிக் கடவுளின் கோட்டோவியங்கள் என்ற தலைப்பே ஒற்றைவரிக் கவிதை! கைப்பேசிக் கடவுள் கவிதைசொல்லியா? தற்கால மனிதனா? கோட்டோவியங்களுக்கும், ஓவியங்களுக்கும் இடையேயான வேறுபாடு இந்த சொற்பிரயோகத்தில் குறிப்புணர்த்தப்படுகிறதா? நிறீவீனீஜீsமீs என்ற அர்த்தத்ததைத் தருகிறதா? அல்லது, கோட்டோவியங்களே நவீன உலகின் குறியீடாக அமைந்துள்ளதா?

ஒரு கவிதைக்கு “எழுத்தாளர் பிரதி”, “வாசகர் பிரதி” என்ற இரண்டு பிரதிகள் உண்டு. ஒவ்வொரு வாசகரும் அவரவர் மொழிப் பரிச்சயம், வாசிப்பின் வீச்சு வாழ்வனுபவங்கள் என பலவற்றின்தாக்கத்தில், பின்புலத்தில், ஒரே கவிதையை, கவிதையில் இடம்பெறும் வரியொன்றை, வரியில் இடம்பெறும் வார்த்தையொன்றை வெவ்வேறுவிதமாய் உள்வாங்கிக்கொள்ள வழியுண்டு. காலத்திற்குக் காலம் மொழிசார் பிரிதலும் பயன்பாடும் அதனோடு தொடர்புடைய வேறுபலவும் மாறிக்கொண்டேயிருக்கின்ற உண்மையைக் கணக்கிலெடுத்துக்கொண்டால் கவிதையின் புரிதல் சார் புரிதல் மேலும் விரிவடைகிறது. ஒரு வாசகராக எனக்கு இந்தப் 'பார்வை' அல்லது புரிதல் பெரிய அளவு சுயத்தையும், சுயமரியாதையையும், சுயசார்பையும் வரவாக்குகிறது.

கவிதை குறித்த, வாழ்க்கை குறித்த கவிஞரின் இலக்குகள், வரையறைகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், வாசகரின் இலக்குகள், வரையறைகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், இவை இரண்டிற்கு மிடையேயான ஒத்திசைவுகளும் முரண்பாடுகளும் முன்முடிவுகளும் முடிந்த முடிவுகளும் தனியொரு கவிதையை அல்லது ஒரு தொகுப்பை அணுகுவதில், உள்வாங்கிக்கொள்வதில், ஏற்றுக்கொள்வதில் கணிசமான தாக்கம் செலுத்துகின்றன என்பதை பல தருணங்களில் அனுபவபூர்வமாக உணர்ந்ததுண்டு.

தோழர் அன்பாதவனின் இந்தக் கவிதைத்தொகுப்பு குறித்து என் மனப்பதிவுகள் சிலவற்றை எழுதியனுப்பித் தரும்படி அவர் கேட்டுக்கொண்டு இந்தத் தொகுதியில் இடம்பெறப்போகும் கவிதைகளை அனுப்பித்தந்தபோது, அவற்றை ஒரு வாசகராக முழுமையாக ஒருமுறைக்கு இருமுறை வாசித்தபோது மேற்கண்ட சிந்தனைகள் தவிர்க்கமுடியாமல் மனதில் ஓடின.

தோழர் அன்பாதவனின் கவிதைகள் ஒரேவிதமான நடையில், மொழிப்பயன்பாட்டில் அல்லது உள்ளடக்கத்தில் நிலைகொண்டுவிடவில்லை என்பது வரவேற்கத்தக்கது. அகமும் புறமும் சேர்ந்ததே வாழ்க்கை என்ற நிலையில் கவிதைக்கான தூண்டுகாரணிகளாகவும், பின்புலங்களாகவும், உள்ளடக்கங்களாகவும் இவையிரண்டுமே அமைய முடியும். தோழர் அன்பாதவனின் கவிதைகளில் நுண்ணுணர்வு மிக்க மனிதனின் நொறுங்கும் மனம். அகம் உணரும் தனிமை, அந்நியமாதல், நகர வாழ்க்கையின் நெரிசல் ஏற்படுத்தும் அக புற பாதிப்புகள், மனித உறவுகள், அவை சார்ந்த ஆனந்தங்கள், அவசங்கள், தன்னைச் சுற்றி சாதி, மதம், பணம், அதிகாரம் நடத்தும் குரூரங்களைக் கண்டு கொந்தளித்துப் பொங்கியெழும் கோபமும் தவிப்பும், சகமனிதன் மதிப்பழிக்கப்படுவதைக் கண்டு குமுறும் மனித நேயம், சமூகப் பிரக்ஞை, சகோதரத்துவம் என மனித வாழ்வின் உயிர்ப்புமிக்க பல்வகைப் பரிமாணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

முழுக்கவிதையைப் படித்துமுடிப்பதற்கு முன்பாகவே செறிவான குறுங்கவிதையாய் நம் மனதிற்குள் இறங்கிவிடும் வரிகள் பல கவிதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணத்திற்கு-

சுவர்களில் சுன்னம் உதிர்கிறதென்
நம்பிக்கையைப் போல
சீனப் பெருஞ்சுவர் அதிசயம் : ஜெர்மனியில் தகர்ந்ததோ சரித்திரம்
சாதீயம் காக்கிற உத்தபுரச் சுவர்களின் உச்சியில் சுதந்திரக்கொடி
நீள் செவ்வக அறையொன்றில்
என்னுடன் வசித்துவந்தது
தனிமை.
பரஸ்பர நம்பிக்கையின்றிப் பழகுகிறோம்
நானும்
மாநகரக் காக்கைகளும்
மாநகரத்தின் இதயப் பகுதிகளில்
இன்னமும் தேங்கியிருக்கிறது
துர்நாற்றம்.
நிவாரண உதவிகளின் தோட்டத்தில்
எளிதாகப் புகுந்துவிட்டன கறுப்புஆடுகள்.
மாஞ்சா நூலில் மாட்டி
செத்துக்கொண்டிருக்கும்
புறாவொன்று போராடுகிறது வாழ!

கடவுள்களை, கடவுள் சார் நம்பிக்கைகளைச் சாடும் கவிதைகள் இத்தொகுப்பில் ஐந்தாறு முக்கியக் கருப்பொருள்களில் ஒன்றாக விளங்குகிறது. கைப்பேசிக் கடவுளின் கோட்டோவியங்கள் என்ற தலைப்பில்

கடவுள் குறித்த கோட்டோவியங்களை
வரைந்து நீட்டினேன்
பெருங்குரலில் சிரித்துப் பகர்ந்தது தெய்வம்
"ஆனையைப் பார்த்த அந்தகர்"

இந்த வரிகளைப் படித்தபோது "ஆனையைப் பார்த்த அந்தகர்'' கதையைப் பார்வையற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று பார்வைக் குறையுடைய நண்பர்கள் கூறுவது தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது. நவீன கவிதைகளின் மொழி நடை, பூடகத்தன்மை, அயல்மண் சார், படைப்புகள் சார் குறிப்புகள் கவிதையில் இடம்பெறுதல் போன்றவற்றை அவர் சாடியும் கிண்டலடித்தும் சக-கவிஞர்களின் கவிதா முயற்சிகளை ஒட்டுமொத்தமாகப் பழிப்பதாய் அவர் எழுதியுள்ள கவிதைகள் - அவற்றில் சில ஒரு செயலுக்கான எதிர்வினையாக அமைந்திருப்பதை உணரமுடிந்தாலும், வருத்தமளித்தன.

-பின் தொடரும் நிழலோடோர் உரையாடல் என்ற பின் தொடரும் நிழல் யார்? பெண்ணா? ஆணா? பின் தொடரப்படுபவர் ஆணா? பெண்ணா? தன் நிழலா? பிற நிழலா? தூல நிழலா? சூக்கும் நிழலா? நவீன கவிதையின் இருண்மையை, பூடகத்தன்மையை கவிஞர் அன்பாதவன் சாடியிருக்கும், எள்ளியிருக்கும் கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. என்றாலும், இருண்மை பூடகத்தன்மையோடு எழுதப்பட்டுள்ள கவிதைகளையும் இத்தொகுப்பில் காண முடிகிறது.

சமூகத்தில் பெண்ணின் நிலையை, பெண்ணுக்குக் கிடைக்கவேண்டிய சுதந்திரக்காற்றைப் பேசும் கவிதைகளையும் இத்தொகுப்பில் காண முடிகிறது.

பெண்ணியக் கவிதை என்று சொல்லமுடியாவிட்டாலும் கீதாவுக்குப் பதிலாக எந்தத் தோழியின் பெயரையும் உபயோகித்துக்கொள்ளலாம் என்ற நெகிழ்வூட்டும் கவிதையைக் குறிப்பிட்டுச் சொல்லத்தோன்றுகிறது.

வரவேற்பு வாசகம் போன்று தன்னைச் சுற்றிலும் நடக்கும் அலங்கோலங்களைப் பட்டியலிடும் கவிதைகள் சில தேவைக்கு அதிகமாக உரைநடைத் தன்மையோடும், விளக்கவுரைகளோடும் இருப்பதால் கவித்துவம் குறைந்தவையாகத் தோன்றுகின்றன. அதே சமயம், தோழர் கிருஷ்ணவேணியும் இட ஒதுக்கீடும் என்ற கவிதை - இட ஒதுக்கீடு குறித்த எதிர்ப்பைச் சாடுவது - உரைநடைத்தன்மை சற்றே தூக்கலாக இருந்தாலும்,

கிருஷ்ணவேணியின்
வெட்டியாள் தொழிலுக்கு
போட்டியே வருவதில்லை
தகுதி திறமைகளின் ஓரக்கண்ணும்
திரும்பவில்லை

என்ற வரிகளில் கவிதைக்கேயுரிய தனி முத்திரையைப் பெற்றுவிடுகிறது!

நெடுஞ்சாலை நெகிழித்தாள் கவிதையும் அப்படியே.

மஹா மசானம் என்ற நீள் கவிதையும் மும்பையைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் அதைத் தாண்டி பல காதம் விரிந்து செல்கிறது என்பதே அதன் சிறப்பு.

வறிய மூதாட்டியைப் போல
ஞெகிழிக் கழிவுகளால் நீர் முகம் மறைந்து
காத்திருக்கிறாய் மரணம் பார்த்து
பயனற்ற குவியல்களின் சாக்கடையாய் இன்று (மித்தி : மும்பையின் துயரம்)

மித்தி : மும்பையின் துயரம் என்ற கவிதையில் மித்தி நதி மற்றெல்லா நதிகளுக்கும், சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கைச்சூழல் மாசு எல்லாவற்றிற்கும் குறியீடாகி நிற்கிறது.

ஒரு கவிஞர் எழுதும் விஷயங்கள், முன்வைக்கும் கேள்விகள் பெரும்பாலும் அவருடையதாகவே இருக்குமென்றாலும் அப்படியாக மட்டுமே இருக்குமென்று சொல்ல முடியாது. அதற்கான தேவையுமில்லை. ஆனாலும், ஒரு கவிஞருடைய கவிதையில் கவிதைசொல்லியும் தொடர்புடைய மனிதர்களும் நாமாகவும், நம்மோடு தொடர்புடை யவர்களாகவும் மாறிவிடுகிறேதே, அந்த "பரிவதிர்வே'' ஒரு கவிதையை நமக்கு நெருங்கியதாக்குகிறது என்று தோன்றுகிறது. அத்தகைய பல கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்காக தோழர் அன்பாதவனுக்கு என் வாழ்த்தும் நன்றியும் உரித்தாகின்றன.

Pin It