பகுத்தறிவுக் கொள்கைகளை நகைச்சுவையோடும், செறிவான சொற்களின் வீர்யத்தோடும் பேசும் கவிதைகள் நிறைந்த தொகுப்பு "கவிதை வாங்கப் போனேன்". மனிதநேயத்தை கவிதைகளின் வழியே தரிசிக்க நினைப்பவர்களுக்கு பொருத்தமான தொகுப்பாகவும், அன்பை உணர நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் தொகுப்பு முழுக்க கவிதைகள் வலம் வருகின்றன. கவிஞருக்கு இது முதல் வருகை.

எல்லோர்க்கும் புரியும்படியாக வாழ்வின் அனுபவங்களைச் சொல்லும் லாவகம் கவிருக்கு வாய்த்திருக்கிறது. முதல் தடவை, மதமாற்றம், பொருத்தம் கவிதைகள் எள்ளல் சுவையுடன் கூடிய சமூக சாடல்.

தொகுப்பு முழுக்க சிறந்த கவிதை வரிகள் வாசகனுக்கு விருந்து வைப்பதற்கு காத்திருக்கும் வேளையில் தேவையில்லாமல் பாட்டி வடை சுட்ட கதை பலகுரல் கவிதையாக பதிவு செய்திருப்பது கவிதைத் தொகுப்பை ஒரு படி கீழிறக்குகிறது என்றே சொல்லலாம்!

கவிதைகளின் பக்க அளவுகளைக் குறைத்து, கவிதைத் தேர்வில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கூட சிறப்பாக வந்திருக்கும்.

கவிதை வாங்கப் போனேன், ஒண்டிப்புதூர் தேவமணி, வெளியீடு : கனகமணி பதிப்பகம், 39/2, கிருஷ்ணம்மை நாயுடு வீதி, ஏண்டம்மாள் கல்யாண மண்டபம் எதிரில், ஒண்டிப்புதூர், கோவை - 641 016, 99406 37125

Pin It