அடைமழைக்குள்ளாக
மின்னல் தெறிப்பில்
திறந்து கொண்டது
எங்களுக்கான வீடு.

எதிரில் நின்ற செந்தூரப்பூ மரம்
ஆயிரம் சூரியன்களைச் சொரிந்திட
இலைத்தம்பூராக்களில்
புன்னகையை மீட்டியிசைத்தன.

இரவு பகலுக்கு
தேவதையாக
ஒரு தங்க அரளி மரத்தை நட்டோம்.

தங்க விளக்குகளை
அது
கிளைகளெங்கும்
கிளர்ச்சியுடன் ஏந்தியது.

அதன் நிழலில்
ரோஜாப் பதியன்கள்
சிலிர்த்து
சின்னஞ்சிறு குழந்தைகளாய்
குதூகலித்தன.

நிகழ்காலத்தின் வெறுமையிலிருந்து
பாலை நில மணற்புயல் பிரசவிக்க
எல்லாக் கனவுகளும்
கண்ணீர் தளும்பிட
கரிந்தெரியத் தொடங்கின.

குச்சிகளைப் பொறுக்கி
கட்டின எங்களது கூட்டின்
ஒவ்வொரு துகளும்
அந்நியமாகிப் போயின.

வழிப்பறி போல
தட்டிப் பறிக்கப்பட்டது
பாதுகாப்பான
எங்கள் அடைக்கலம்.

Pin It