ஊழலுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பு

பணம் கொடுத்துப் பெறும் தேர்தல் வெற்றி மூலம் அதைச் சந்திக்கத் தயாராகும் ஆளும் கட்சியும்; அதனை எதிர்கொள்ள வழி தெரியாது திணறும் எதிர்க் கட்சியும்

2010ம் ஆண்டு ஊழல், மோசடிகளின் ஆண்டு என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படுகிறது. அத்தனை ஊழல்கள் இந்த ஆண்டில் மட்டும் நிகழ்ந்துள்ளன. காமன் வெல்த் விளையாட்டு மைதானம் அமைப்பதில் ஊழல், இராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டி முறைகேடாக ஒதுக்கீடுகள் செய்ததில் ஊழல், தனது உறவினர்களுக்கு முறைகேடாக அரசுக்குச் சொந்தமான இடங்களை வழங்கியதில் கர்நாடகாவின் எடியூரப்பா செய்துள்ள ஊழல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வீடுகளை மந்திரிகளின் சொந்தக்காரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒதுக்கி தமிழக அரசின் வீட்டுவசதி வாரியம் செய்துள்ள ஊழல் என எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை நிதர்சனமாகிவிட்ட நிலை நிலவுவதால் இந்த ஆண்டையே ஊழல், மோசடிகள் நிறைந்த ஆண்டாக ஊடகங்கள் வர்ணிப்பதில் தவறேதுமில்லை.

இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ள இத்தனை ஊழல்கள் மற்றும் இதுவரை இந்தியாவில் நடந்துள்ள ஒட்டுமொத்த ஊழல்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் கூட அவையனைத்தையும் விஞ்சி நிற்கும் ஊழலே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள ஊழல். இது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்றுள்ளதால் தமிழகத்திற்கு இந்தியா முழுவதும் யாராலும் துடைத்தெறிய முடியாத களங்கமும் அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏதாவது ஒரு செய்தியினை நாள்தோறும் வெளியிடாத நமது செய்தி மற்றும் காட்சி ஊடகங்களே இல்லை என்றாகி விட்டது.

கல்லுளி மங்கத்தனம்

இந்த ஊழல்கள் குறித்து இதில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் கொடுக்கும் விளக்கங்களும் வினோதமானவைகளாக உள்ளன. இவ்வாறு தங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதே என்ற உறுத்தல் எள்ளளவு கூட இல்லாமல் இவற்றில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்கள் சிரித்த முகங்களுடன் காட்சி ஊடகங்களில் பேட்டி கொடுப்பதைப் பார்க்கும் போது ஒரு விச­யம் தவிர்க்க முடியாமல் மனதில் படுகிறது. அதாவது இன்று அரசியல்வாதிகளாக இருப்பதற்குச் சேவை மனப்பான்மையோ, அரசியல் ஞானமோ தேவையில்லை; அரசியலில் நுழைந்து பதவிகளைக் கைப்பற்றுவதற்குக் குருட்டுத் தனமான தலைமைத் துதியும் அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளில் பல முறைகேடுகளைச் செய்து கொண்டே சிறிதும் உறுத்தலின்றிப் பதவியில் தொடர்வதற்கு ஒரு கல்லுளிமங்கத் தனமுமே அவசியம் என்றேபடுகிறது.

காமன்வெல்த் விளையாட்டு மைதான ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் தான் கையாண்டது 5 சதவீதமே என்று கூறியுள்ளார். அதாவது அதில் ஊழலே நடக்கவில்லை என்று அவரே கூற வரவில்லை. மாறாகத் தான் கையாண்டது மிகக் குறைவான சதவீதத் தொகையேயாதலால் அதில் ஊழல் நடந்திருந்தாலும் கூட மிகப் பெரிய தொகையைத் தான் அடித்திருக்க வாய்ப்பில்லை என்றே கூற வருகிறார். கர்நாடகாவில் நடந்துள்ள வீட்டுமனை ஒதுக்கீட்டு ஊழல் குறித்து அதில் சம்பந்தப்பட்டுள்ள முதலமைச்சரின் கட்சியான பி.ஜே.பி. தலைவரின் வாதமோ இன்னும் நூதனமானது. கர்நாடகாவில் அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முதலமைச்சர் மீது ஊழல் குற்றம் சுமத்துபவர்களுக்குப் பதிலடியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஊழலை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஜாதி மற்றும் இன வாதங்கள்

இதுபோன்ற வி­யங்களில் தமிழகத்தை ஆளும் தி.மு.க. தலைமையின் அணுகு முறையோ எப்போதும் போல் இப்போதும் மிகவும் வித்தியாசமாக உள்ளது. அதாவது அலைக்கற்றை மற்றும் வீட்டுவசதி வாரிய ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊடகங்களுக்குப் பேட்டிகள் அளிப்பதைத் தவிர்த்து வந்த தி.மு.க. தலைவர் இந்த ஊழல்கள் குறித்து ஒரு பத்திரிக்கைக்கு மட்டும் பேட்டியளித்துள்ளார். அதாவது 2ஜி ஊழல் குறித்த சி.பி.ஐ. சோதனைக்கு எந்த வார இதழின் ஒரு பிரமுகர் உட்படுத்தப் பட்டாரோ அந்த வார இதழின் நிருபரையே தன்னைப் பேட்டியெடுக்கச் செய்துள்ளார்.

அதன்மூலம் தானும் தனது கட்சியும் பேட்டிகள் கொடுக்குமளவிற்குச் சுத்தமாகவே உள்ளோம் என காட்டிக் கொண்டுள்ளார். அத்துடன் எந்தச் சூழ்நிலையிலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தயாராக வைத்திருக்கும் இன மற்றும் சாதி வெறிவாதப் போக்குகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி 2ஜி அலைக்கற்றைப் பூசணிக் காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.

அதாவது ஒருபுறம் இந்த வி­சயத்தைப் பெரிதாக்கிக் காட்டுபவை வடநாட்டு ஊடகங்கள் என அப்பத்திரிக்கையின் பேட்டியாளரைச் சுட்டிக்காட்டச் செய்து அவை தமிழ் இன விரோத மனநிலையுடனேயே அவ்வாறு செய்கின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்; மறுபுறம் இதில் தொடர்புடைய அமைச்சர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டி தாழ்த்தப்பட்டோர் சாதி உணர்வை முடுக்கிவிட்டுப் பிரச்னையைத் திசை திருப்ப முயல்கிறார்.

மேற்குறித்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்; தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மட்டும் பதவி விலக மாட்டேன் எனப் பலகாலம் உறுதியாக இருந்த பின்னர் இறுதியில் எதிர்க்கட்சியினரின் போராட்டம் நாடாளுமன்றத்தில் உக்கிரமடைந்து ஊடகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பல உண்மைகளை வெளிப்படுத்திய பின்னர் வேறு வழியே இல்லை என்ற நிலையில் பதவி விலகியுள்ளார்.

ஆனால் கர்நாடக முதல்வர் வீட்டு மனைகளைக் குறைந்த விலைக்கு தனது உறவினர்களுக்கு ஒதுக்கியதற்காகப் பதவி விலகமாட்டேன் எனத் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதன் பின்னர் அவரைப் பதவி விலகக் கோரப் போவதில்லை என பி.ஜே.பி. கட்சியும் கூறிவிட்டது. அத்துடன் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் நிரூபிக்கும் எனக் கூச்சநாச்சமின்றிக் கூறியதன்மூலம் அந்த ஊழல் குறித்த தீர்ப்பினை வழங்க வேண்டியவர்கள் வாக்காளர்களே என்ற எண்ணத்தை அக்கட்சி தோற்றுவித்துள்ளது.

ஒரு கட்டத்தில் விசாரணைகளின் முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஊழலில் தொடர்புடையவராகக் கருதப்படும் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஊழல் செய்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டால் அவரைத் தூக்கியெறியத் தயங்க மாட்டோம் என்று கூறிய தி.மு.க. தலைமை தற்போது அவரைப் பாதுகாக்கும் வகையிலான பிரச்சாரத்தை மாநிலமெங்கும் நடத்திக் கொண்டுள்ளது. அவரை மகாபலிச் சக்கரவர்த்தியோடு ஒப்பிட்டுத் தமிழ் நாட்டில் தான் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; அதைக் கேட்டுத் தொலைக்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து என்பதை அக்கட்சியின் தலைவர் மீண்டும்ஒருமுறை நிலைநாட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் முடங்கியது யாரால்?

இந்த 2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டை மையமாக வைத்து கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதுமே முடக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க் கட்சியினரின் கோரிக்கை இவ்விச­யத்தை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். (தற்போது கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.) ஆனால் அதற்காக பொதுக் கணக்குக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டத் தயார் என்று அறிவிக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சித் தலைமை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை மட்டும் நடத்த மாட்டோம் எனக் கூறி அதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்குவதற்கு ஒரு வகையில் உதவிவிட்டு நாடாளுமன்றம் முடங்கியதற்கான முழுப் பலியையும் எதிர்க்கட்சிகள் மீது சுமத்தியுள்ளது.

மிகநீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சரும் அவர்களது கூட்டாளிகளும் ஆட்படுத்தப் பட்டுள்ளனர். 2ஜி அலைக்கற்றை குறித்து சி.பி.ஐ.யின் விசாரணையை உச்ச நீதி மன்றம் கண்காணிக்கும் என்ற நிலையும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. தற்போது அதன் தொடர்ச்சியாக ராசா கைதாகியும் உள்ளார்.

கேலிக்கூத்தாகும் ஜனநாயகம்

நடந்துள்ள இந்த ஊழல் மோசடிகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பெரிதும் கேலிக்குரியதாக்கி உள்ளன. இத்தகைய மெகா ஊழல்கள் நடப்பதைத் தடுக்கவியலாத நிலை, ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களின் அரசியல் தரம் தரை மட்டத்திற்குத் தாழ்ந்துள்ள போக்கு, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளும் கூட ஆட்சியிலிருப்பவர்களின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டு செயல்படாதிருக்கும் போக்கு, ஊழல் அமைச்சர்கள் உறுத்தல் ஏதுமின்றி ஊழல் புகார்கள் மிகப் பெருமளவு அடிப்படை உள்ளவை என்பது ஊடகங்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட நிலையிலும் அவற்றைச் சிரித்துக் கொண்டே எதிர் கொள்ளும் கல்லுளி மங்கத்தனம், ஆகியவற்றால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த கவலை மக்களிடையே பெருமளவு தோன்றியுள்ளது.

அதாவது ஊழல் புகார் எழுந்தால் அது குறித்த விசாரணையை உறுதியுடன் நடத்திச் சம்பந்தப்பட்டவரை உடனடியாகத் தண்டிக்கும் நேர்மையான முறையைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக விசாரணை என்ற பெயரில் ஒரு துறை மாற்றி மற்றொரு துறையினை அதில் ஈடுபடுத்தி எத்தனை காலதாமதம் செய்ய முடியுமோ அத்தனை கால தாமதம் செய்து, அது குறித்த நினைவு மக்கள் மனதிலிருந்து அகலும் வரை அத்தகைய காலதாமதத்தை நீடித்து சம்பந்தப்பட்ட ஊழல் அரசியல் வாதிகளைக் காப்பாற்றுவது என்ற நடைமுறையைக் கடைப்பிடிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாக ஆட்சியாளர்கள் உள்ளனர். இப்போக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை முற்றிலுமாக நிலை குலையச் செய்துள்ளது.

பொதுவாக இதுபோன்ற ஊழல் புகார்கள் ஒரு கட்சியினரின் ஆட்சியின் போது எழுந்தால் அது குறித்து எதிர்க்கட்சிகள் பெருமளவு பிரச்சாரம் செய்து மக்கள் கருத்தினை அதனை மையமாக வைத்துத் தங்கள் பக்கம் திருப்புவது வழக்கம். ஆளும் கட்சியினர் அவற்றின் மீதான தங்கள் எதிர்வாதத்தை முன்வைத்து அவற்றை எதிர் கொள்வதும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை. ஆனால் சமீப காலங்களில் ஆளுங்கட்சியினர் அத்தகைய நடைமுறையைப் பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை. மாறாக அதனைத் திசை திருப்புவதற்கு ஜாதி, இன உணர்வுகளைத் தட்டி எழுப்பி மக்களை ஏமாற்றுவதில் தங்களுக்குள்ள திறமையையே முழுக்க முழுக்க நம்பியுள்ளனர்.

அதையும் கூட எதிர்க்கட்சியினர் ஓரளவு தங்களது பிரச்சார பலத்தின் மூலம் சமாளித்து ஊழல் மலிந்த ஆளும் கட்சி அரசியலை எதிர் கொள்ளலாம் என்றால் தற்போது வேறொரு விச யம் அதாவது எதிர்க்கட்சியினரும் வெளிப்படையாக கூறத் தயங்கும் ஆனால் அனைவரின் மனதையும் உலுக்கி எடுத்து ஊழல் அரசியலை ஒழிக்கவே முடியாதோ என்ற எண்ணத்தை உருவாக்கும் விச­யம் பூதாகரமாக முன்னெழுந்து நிற்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நடந்துள்ள ஊழல் அதனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு ஆகியவை நிச்சயமாக ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கக் கூடியவை என்பதே அகில இந்திய ஊடகங்கள் மற்றும் அரசியல் நோக்கர்களின் கருத்தாகத் தற்போது கூட இருக்கிறது. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியும் அந்த அடிப்படையிலேயே வெளிப்படையாக ஆட்சி மாற்றம் உறுதி எனப் பேசி வருகிறது.

அதே சமயத்தில் தங்களது வெற்றி குறித்த ஒரு நம்பிக்கையற்ற போக்கும் அக்கட்சியினரிடம் உள்ளீடாக இருந்து கொண்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த இடைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அக்கட்சி சந்தித்த தோல்விகள் அதற்கான அடிப்படைக் காரணங்களாக உள்ளன. அதாவது ஆளும் கட்சியினர் உருவாக்கி நடைமுறைப்படுத்தி அதன் விளைவாக உறுதியான தேர்தல் வெற்றியைச் சாதித்த திருமங்கலம் தேர்தல் பார்முலா திரும்பவும் பரந்த அளவில் பயன்படுத்தப் படலாம் என்ற பலமான சந்தேகம் அக்கட்சியை உள்ளார்ந்து ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.

முக்கிய எதிர்க்கட்சிக்கு இப்போது இருக்கக் கூடிய பிரச்னையே இந்த அலைக்கற்றை ஊழலைத் தொடர்ச்சியாக மக்கள் முன்நிறுத்தி மக்கள் மனதை விட்டு அகலாமல் தேர்தல் வரை வைத்திருக்க முடியுமா என்பதே. ஏனெனில் ஒரு பத்திரிக்கை எழுதியது போல் ஒளிக்கற்றை ஊழலில் அதில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் கட்சியினருக்கும் கிடைத்த தொகை அரசின் தணிக்கைக் குழு அறிவித்த அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகையை ஒத்ததாக இருக்கும் பட்சத்தில் அதைக் கொண்டு ஒரு வாக்காளருக்கு 42000 ரூபாய் வரைக் கூட ஆளும் கட்சியினரால் தேர்தல்களின் போது கொடுக்க முடியும். இது ஊழலின் பரிமாணத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காக அப்பத்திரிக்கை முன்வைத்த ஒரு கற்பனைக் கணிப்பு.

ஒருவேளை அரசிற்கு ஏற்பட்ட இழப்பு முழுவதும் கூட ஊழலில் ஈடுபட்ட அமைச்சருக்கும் அவரது கட்சிக்கும் சென்றிருந்தாலும் அதை முழுமையாக வாக்குகளைப் பெறுவதற்குக் கையூட்டாக மக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தரமாட்டார்கள். ஆனால் அதில் ஒரு சிறு பகுதி ஒதுங்கினால் கூட அது ஊடகங்களின் தேர்தல் வெற்றி குறித்த கணிப்பினைப் பொய்யாக்கி எதிர்க் கட்சியினரின் வாய்ப்பினை பெரிதும் குறைத்துவிடும். கோட்பாடு ரீதியான நிலை எடுக்க முடியாத நிலையிலுள்ள எதிர்க்கட்சி

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியும் கூட வாக்கிற்குப் பணம் கொடுக்க ஆளும் கட்சியினர் தயாராக உள்ளனர்; மக்களின் மனநிலையை அந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் திருப்ப வேண்டும் என்ற வகையில் தனது கட்சியினரை முடுக்கி விட்டிருக்கவில்லை; ஏனெனில் அதைச் செய்வது அத்தனை சுலபமல்ல என்பது அவர்களுக்குத் தெரியும்.

மேலும் அதையொத்த அளவிலும் பரிமாணத்திலும் இல்லை என்றாலும் அதைவிடச் சற்றே குறைந்த தேர்தல் முறைகேடுகளை அக்கட்சியும் தனது வெற்றிக்காகக் கடந்த காலங்களில் செய்துள்ளது. அதனாலும் அக்கட்சி அத்தகைய கோட்பாடு ரீதியான நிலையினை எடுக்க முடியாத நிலையில் உள்ளது. அதனடிப்படையில் தனது தொண்டர்களைப் பணம் கொடுப்பதை எதிர்த்துச் செயல்படச் செய்ய முடியாது என்பது அக்கட்சியின் தலைமைக்கும் தெரியும்.

எனவேதான் வாக்கிற்கு ஆளும் கட்சி பணம் கொடுக்கும் முறையை மீண்டும் ஒருமுறை செய்யப் போகிறது என்ற கருத்தை எவ்வளவு தூரம் வெளிப்படுத்தாமல் இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள இப்போது வரை வெளிப்படுத்தாமல் இருந்து கொண்டுள்ளது. ஏனெனில் இதுபோன்ற முதலாளித்துவக் கட்சிகளைப் பொறுத்தவரை அதாவது முதலாளித்துவம் இன்றுள்ள கேவலமான நிலையில் அதன் நலன்களை உயர்த்திப் பிடிப்பவையாக இருக்கும் கட்சிகளைப் பொறுத்தவரை உறுதியான ஜனநாயகத் தன்மை பொருந்திய ஊழலுக்கு எதிரான தேர்தல் நடைமுறைகள் எவற்றையுமே கடைப்பிடிக்க முடியாது. தற்போது நிலவும் நிலை இதுவே. நடைமுறை ரீதியாக அவை வெற்றிபெற வேண்டுமென்றால் ஆளும் கட்சி கொடுக்கும் அளவிற்கோ அல்லது அதற்கு அதிகமாகவோ வாக்கிற்குப் பணம் கொடுக்க அக்கட்சியினர் தயாராக வேண்டும் என்பதே நடைமுறை ரீதியாகப் பலனளிக்கக் கூடியது என்ற அளவிற்குச் சூழ்நிலை சீரழிந்து விட்டது.

ஆட்சிப் பொறுப்பில் இல்லாத நிலையில் அத்தொகையினைத் திரட்டுவது எதிர்க்கட்சியைப் பொறுத்தவரையில் முடியாத காரியம். எனவே தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் போன்ற ஒரு பிரமாண்டமான அரசியல் ரீதியிலான சாதக அம்சம் அதன் கைவசமிருந்தும் அதனை முழுமையாகப் பயன்படுத்தி தனது தேர்தல் வெற்றியை உறுதி செய்ய முடியுமா என்று கூற முடியாத நிலையில் அக்கட்சி உள்ளது.

ஒழுக்க, நீதி, நெறிகளின் மீதான தாக்குதல்

இத்தகைய இழிவான ஒரு நடைமுறையைத் திருமங்கலத்தில் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் வரை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய ஆளும் கட்சி தமிழக மக்கள் மத்தியில் ஒரு மகத்தான சீரழிவுப் போக்கை அப்பட்டமாகக் கொண்டு வந்துள்ளது. மக்களின் ஒழுக்க, நீதி, நெறி மதிப்புகளையும் அவர்களின் தார்மீக சிந்தனைகளையும் உடைத்துத் தரை மட்டமாக்கியுள்ளது. பரந்த அளவிலான தமிழக உழைக்கும் மக்களை இலவசத் திட்டங்களுக்கு ஏங்குபவர்களாக ஆக்கியுள்ளது.

ஆனால் மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலையின் கடுமை இலவசத் திட்டங்களின் பலன்களை ஒன்றுமில்லாததாக ஆக்கி அதனால் ஆளும் கட்சியின் மீதான அவர்களது அதிருப்தி பெருகி அது தேர்தலில் பிரதிபலிக்கும் சூழ்நிலை தோன்றும் போது வாக்கிற்குப் பணம் கொடுக்கும் வலுவினையும் யுக்தியையும் பயன்படுத்தி அந்த அதிருப்தியையும் ஒன்றுமில்லாததாக்கிவிட முடியும் என்று கருதுகிறது.

ஏழை எளிய மக்கள் இதற்கு இரையாகிப் போயுள்ள நிலையில் இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு முடிவெடுக்கும் தன்மையினைக் கொண்டிருக்க முடிந்தவர்கள் மத்தியதர வர்க்கத்தினராகவே உள்ளனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரும் மக்கள் இயக்கம் இதனையொட்டித் தட்டியெழுப்பப்பட்டுள்ள சூழ்நிலை தோன்றினால் தவிர ஆளும் கட்சிக்கு எதிரான தங்கள் மனநிலையைத் துணிவுடன் வெளிப்படுத்த முன்வரமாட்டார்கள்.

அத்தகைய மக்கள் இயக்கம் உருவானால் அது வேறு எந்தப் பகுதியினரை ஈர்ப்பதைக் காட்டிலும் ஓரளவிற்குச் சமூகத்தின் மாணவர், இளைஞர் பகுதியினரை நிச்சயம் ஈர்க்கும். ஏனெனில் அவர்கள் மத்தியிலும் சமூக உணர்வற்ற தன்மை ஆளும் வர்க்கத்தினால் ஊட்டி வளர்க்கப்பட்டிருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரை வாக்கிற்காக வழங்கப்படும் பணம் அவர்கள் முன்நிற்கும் வாழ்க்கை முழுவதையும் எதிர் கொள்வதற்குப் போதாதது. அது மட்டுமல்ல நியாயத்திற்காக நிமிர்ந்து நிற்கும் மனோதிடம் மற்றெந்த மக்கட் பகுதியினரைக் காட்டிலும் மாணவர் இளைஞரிடமே அதிகம் இருக்கும்.

ஜே.பி. போன்ற தலைவர்கள் இல்லை

இப்போது நம்முன் உள்ள கேள்வி அத்தகைய இயக்கத்தைத் தட்டி எழுப்பப் போவது யார்? இதுபோன்ற ஊழல் மலிந்த சூழல் நிலவிய போது பீஹார் மாநிலத்தின் மாணவரையும் இளைஞரையும் கட்சிப் பாகுபாடுகள் கடந்து தட்டி எழுப்ப அங்கு ஜே.பி. இருந்தார். ஆனால் இன்று அவரது இயக்கத்தில் முன்னணியில் நின்றவர்களே அரசியல் வாதிகளாகி ஆட்சிக்கும் வந்து மற்ற அரசியல் வாதிகளைப் போல் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் தாங்களும் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அப்படிப்பட்ட தலைமையைக் கொடுக்கும் தலைவரை தமிழகத்தில் எங்கு காண முடியும்? இதுபோன்ற கவலையும் மனச் சோர்வும் உணர்வு பெற்ற தமிழ் மக்களின் ஆன்மாவையே உலுக்கி எடுக்கும் சுனாமிப் பேரலைகளாக உயர்ந்தெழுந்து நிற்கின்றன.

தேர்தல் அரசியலில் எந்தக் கட்சியுடன் சேர்ந்தால் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்பதே கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் செயல்படும் பெரும்பாலான கட்சிகளையும் சேர்த்து அனைத்துக் கட்சிகளின் இப்போதைய நிலைகளாக ஆகிவிட்டன; இந்த நிலையில் அவர்கள் இப்பிரச்னையை எவ்வாறு எடுப்பர்? இதன் பொருள் எதுவும் செய்ய முடியாதவையாக தமிழகத்தின் ஜனநாயக சக்திகள் ஆகிவிட்டன என்பதல்ல.

பெருகிவரும் நிஜமான எதிர்ப்பும் பயன்படுத்தத் தயங்கும் எதிர்க் கட்சிகளும்

தமிழக அரசு கடைப்பிடித்து வரும் மோசடித் தனமான செயல்பாடுகள் குறித்த எதிர்ப்புணர்வு மக்கள் மனதில் நிஜமாகவே தோன்றியுள்ளது. ஆனால் அதை தேர்தல் அரசியலே ஒரே அரசியல் என்று கருதும் முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றன. காரணம் அவர்களின் கவலையயல்லாம் வாக்கிற்குப் பணம் கொடுப்பதைத் தடுத்தாலோ எதிர்த்தாலோ பணம் வாங்கும் வாய்ப்பைத் தடுத்து விட்டனர் என்ற வெறுப்பில் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் போய் விடுவார்கள் என்பதே.

இதற்கு எடுத்துக்காட்டாகக் கடந்த திருமங்கலம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சிகள் எடுத்த நிலைபாடுகளையே காட்ட முடியும். அப்போது அவர்கள்: ஆளுங்கட்சியினர் வழங்கும் பணம் உங்கள் பணம்; அதனை வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்ற அடிப்படையிலேயே நிலையெடுத்தனர். இதனைக் கூறும்போதே இக்கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும் வாக்காளர்களில் மிகப் பெரும்பாலோர் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பது. இருந்தும் வேறு வழியின்றியே இந்த நிலைபாட்டினை எடுத்தனர். அது மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளும் கூடத் தங்களால் முடிந்த அளவு சில இடங்களில் பணம் கொடுக்கவும் முயன்றன. ஆனால் அரசு இயந்திரம் அதன் கைவசமிருந்ததால் ஆளும் கட்சி காவல்துறை மூலம் அதைத் தடுத்து விட்டது.

மாறி வாக்களிப்பதும், வாக்களிக்காதிருப்பதும் தடுக்கப்பட்ட முறை

மேலும் ஆளும் கட்சியினரிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க ஒரு சில வாக்காளர்கள் முயன்றாலோ அல்லது வாக்களிக்காதிருக்க எத்தனித்தாலோ அதையும் தடுக்க உரிய முன்னேற்பாடுகளை ஆளுங்கட்சி திருமங்கலம் இடைத் தேர்தலில் மிகவும் துல்லியமாகச் செய்தது . அதாவது பணம் கொடுக்கும் போதே பணம் வாங்கும் வாக்காளரின் செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டு அவரது வாக்குப் பதிவாகி விட்டதா என்பதைத் தனது வாக்குச் சாவடி ஏஜெண்ட் மூலம் தெரிந்து கொண்டு அது பதிவாகவில்லையயனில் போனில் தொடர்பு கொண்டு பணம் வாங்கிவிட்டு வாக்களிக்காதிருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தி அவரை வாக்களிக்கச் செய்யும் முறையைக் கடைப்பிடித்தது. ஆளும் கட்சி வேட்பாளரும் அரசு எந்திரமும் கைகோர்த்துச் செயல்பட்ட இந்தக் கொடுமையை ஒரு பார்வையாளரைப் போல் தேர்தல் ஆணையம் வேறு வழியின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. எனவே ஓரளவு முறையான வகையில் தேர்தல் நடக்க வேண்டுமென்றால் கூடத் தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியினர் கைவசம் அரசு இயந்திரம் இல்லாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

மேலும் ஆளுங்கட்சிக் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகப் போவது போல் 2ஜி ஊழல் வெளிப்பட்ட போது தோன்றிய நிலை இப்போது மாறி விட்டது. அந்த முறைகேட்டை நியாயப்படுத்த மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களிலேயே மிகத் திறமையான ஒருவர் தற்போது அத்துறைக்கு அமைச்சராக்கப் பட்டு அவர் அவரது வாதத் திறமை அனைத்தையும் முன்வைத்து ஊழலை நியாயமென நிலைநாட்டத் தொடங்கியிருக்கிறார். எனவே அரசு எந்திரத்தின் ஒரு தலைப்பட்சச் செயல்பாடு முடக்கப் படுவதற்கான சூழ்நிலை இப்போது இல்லை.

தேர்தல் ஆதாயத்தை மட்டும் கருதாத கம்யூனிஸ்ட் கட்சியே தேவை

இந்நிலையில் தேர்தல் ஆதாயத்தைப் பெரிதாகக் கருதாமல் ஏதாவது ஒரு அமைப்பு வாக்கிற்குப் பணம் கொடுக்கும் இந்த உலகில் வேறெந்த ஜனநாயக நாட்டிலும் நடக்காத கேவலத்தை அம்பலப் படுத்தி மனப்புழுக்கத்துடன் இதனைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஜனநாயக சக்திகளை நம்பிக்கையூட்டி ஒருமுகப் படுத்தினால் இந்தத் தேர்தலில் அது இந்தக் கேவலச் செயலில் ஈடுபடும் கட்சிக்கு நிச்சயமாகத் தோல்வியைத் தேடித்தர முடியாவிட்டாலும், உண்மை அரசியலையாவது அதன் மூலம் நிலை நிறுத்தும். அதனைக் கோட்பாடு ரீதியாகச் செயல்படும் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியே செய்ய முடியும். அத்தகைய கட்சியாக இன்று கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ(எம்). கட்சிகள் இல்லை என்பதை கூட்டுச் சேர்ந்திருந்தன என்பதற்காக மதுரை மேற்கு மற்றும் மத்தியத் தொகுதி இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியினர் செய்த அராஜகங்கள் அனைத்தையும் மெளனமாக இக்கட்சிகள் பார்த்துக் கொண்டிருந்ததிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். எனவே கம்யூனிஸக் கோட்பாடுகளால் புடம் போடப்பட்ட ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி இக்கடமையை ஆற்ற முன்வந்தால் அதற்குத் தயக்கமின்றி ஆதரவளிக்க வேண்டியது ஜனநாயக மனநிலை கொண்ட மக்களின் முழுமுதற் கடமையாகும்.

Pin It