ஓரளவு நடுநிலைத் தன்மையுடன் செய்திகளை வழங்கக் கூடியது என்றும் ஒரு தரமான நாளிதழ் என்றும் கருதப்படும் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் 'தி ஹிந்து' நாளிதழ் சமீபகாலங்களில் அது பெற்றிருந்த பெயருக்கு பொருந்தாத விதத்தில் பல செய்திகளை வெளியிட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு அது சமீபத்தில் செய்தி வெளியிடத் தொடங்கியது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் திட்டமிட்ட விதத்தில் வழக்கறிஞர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட தாக்குதலின் போதாகும். அதற்கு அடுத்து தற்போது வங்கத்தில் லால்கர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆதிவாசிகள் போராட்டம் குறித்து அது வெளியிட்டு வரக்கூடிய தலையங்கங்களும் செய்தி குறிப்புகளும் அதன் பாரபட்சப் போக்கினை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகின்றன.

தலையங்கமா? கட்சித் தலைவரின் அறிக்கையா?

அதன் ஒரு தலையங்கத்தில் மேற்கு வங்க அரசின் மிகவும் மனச் சோர்வு தரத்தக்க 'லால்கர்' பகுதி மக்களின் பிரச்னைகளின் மீதான தாமதச் செயல்பாடு என்று ஒரு வாசகம் உள்ளது. அந்த ஒரு வாசகத்தை மட்டும் எடுத்துவிட்டு அதனை வாசித்தால் தற்போது அம்மக்கள் மீது காட்டுத்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கும் மேற்கு வங்கத்தை ஆளும் சி.பி.ஐ(எம்) கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் திருமதி.பிருந்தா கரத் மின்னணு ஊடகங்களுக்கு அளித்துவரும் பேட்டிகளின் போது கூறி வரும் கருத்துக்களும் அந்தத் தலையங்கமும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்க்கலாம். ஒரு பிரச்னையை மேலோட்டமான நடுநிலைத்தன்மையுடன் முன் வைக்கும் எந்தவொரு பத்திரிக்கையும் கூட அப்பிரச்னை எவ்வாறு உருவானது என்பது குறித்து சிறிதளவேனும் அக்கறையுடன் அதனை விவரிக்க வேண்டும். அதன் பின்னரே அதன் கோளாறுகளை விமர்சிக்கத் தொடங்க வேண்டும் ஹிந்து நாளிதழின் தலையங்கத்தை படிப்பவர்களுக்கு அப்பிரச்னை எவ்வாறு தோன்றியது என்பது மருந்துக்குக்கூட தெரிய வாய்ப்பில்லை.

மக்கள் ஆதரவு மனநிலை மருந்துக்குக் கூட இல்லாத காவல்துறை

அதற்கு அடுத்து ஆயுதபாணியாக விளங்கும் காவல்துறை பல்வேறு சமயங்களில் ஒரு மக்கள் ஆதரவு மனநிலையுடன் செயல்படுவதில்லை அதற்கு தலைவலி கொடுக்கும் பிரச்னை எதுவும் வந்துவிட்டால் அதற்கான காரணத்தை வெகு விரைவில் கண்டுபிடித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து காவலில் வைத்துவிட்டோம் என்று காட்டுவதற்காக எதையும் செ ய்கிறது. கருணை, இரக்கம், மனிதாபிமானம் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு பல அப்பாவிகளை பிடித்து அடித்துத் துன்புறுத்தி குற்றவாளிகளுடன் பழகி பழகியே குருரமாகிப் போன அத் துறையினரின் மன விவகாரங்களை பிரதிபலிக்கும், தரங்கெட்ட, அநாகரீக செயல்களில் நமது நாட்டின் காவல்துறை ஈடுபடுகிறது. இதை பார்வையற்றவர்களும் காதுகேளாதவர்களும் கூட தெரிந்திருக்கத் தவறமாட்டார்கள்.

ஒரு நடுநிலையான, சமூகப் பொறுப்புள்ள, ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனக் கருதப்படும் பத்திரிக்கை ஒரு போதும் காவல்துறையின் இந்தப் போக்குகளை அலட்சியப்படுத்தக் கூடாது. எந்தவொரு பிரச்னையிலும் காவல்துறையின் தவறான நடவடிக்கைகள் அப்பிரச்னை உக்கிரம் அடைவதற்கு எந்த வகையிலாவது காரணமாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்து அதன் கோளாறுகளை வெளிக்கொணரத் தவறும் எந்தவொரு பத்திரிக்கைக்கும் நடுநிலைப் பத்திரிக்கை என்றும், ஜனநாயகத்தைக் காக்கும் தூண் என்றும் தன்னைக் கூறிக்கொள்ளும் அருகதை கிடையாது.

அந்த அடிப்படையில் ஹிந்து -வின் தலையங்கம் காவல்துறையின் மக்கள் விரோதப் போக்குகளும் அடாவடித்தனங்களும் எந்த வகையிலாவது பிரச்னை இத்தனை உக்கிரமான கட்டத்தை அடைவதற்குக் காரணமாக இருந்திருக்கிறதா என்று காட்டவும் இல்லை; அது குறித்து கவலைப்படவும் இல்லை. அதாவது மிக எளிமையாகக் கூறினால் இந்த இரண்டு விசயங்களிலும் பாரபட்சமான, அரசின் அடக்குமுறைக் கருவிகளுக்கு வெட்கமின்றி துணைபோகும் ஒரு அவலட்சணமான காரியத்தையே அது செய்துள்ளது.

இந்நிலையில் உழைக்கும் மக்களின் நலம் கருதும் பத்திரிக்கை என்ற ரீதியில் இந்த லால்கர் பிரச்னைதான் என்ன என்று பார்ப்பதும் அதில் சம்பந்தப்பட்டுள்ள ஆதிவாசிகள், அவர்களை வழிநடத்துவதாகக் கூறும் மாவோயிஸ்டுகளின் இந்தப் பிரச்னை குறித்த அணுகுமுறை ஆகியவற்றை நமது விருப்பு வெறுப்பற்ற உழைக்கும் வர்க்க அணுகுமுறையைக் கொண்ட ஆய்விற்கு உட்படுத்தி அதன் விளைவாக உருவாகும் நமது கருத்தை முன்வைப்பது அவசியமாகிறது.

போராட்டத்தின் பின்னணி

முதற்கண் லால்கரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆதிவாசிகளின் போராட்டம் அடிப்படையில் ஆதிவாசிகள் நாடு முழுவதும் சந்தித்துக் கொண்டுள்ள பொதுவான பிரச்னைகள் சார்ந்த எந்த கோரிக்கையையும் முன்வைத்து நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் 2 -ம் நாள் லால்கரில் வனப்பகுதியில் இந்தியப் பெரும் முதலாளிகளில் ஒருவரான ஜின்டாலின் இரும்பு எஃகு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. மேற்கு வங்கத்தை தொழில் மயமாக்குவதற்காக புது அவதாரம் எடுத்தவர் போல் தன்னைக் காட்டிக்கொண்டு, தான் பேசி வந்த மார்க்சிய சித்தாந்தத்திற்கு ஒரு பொருத்தமும் இல்லாத வகையில் டாடா -போன்ற ஏகபோக முதலாளிகளின் தரகராக கூச்சநாச்சமின்றி செயல்படும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யாவும் அப்போதய மத்திய தொழில்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும் அத்தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக அங்கு வந்தனர்.

அப்போது அவர்களுடன் வந்த காவல்துறையினரின் கார் ஒன்று மாவோயிஸ்டுகள் வைத்த கன்னிவெடியில் சிக்கி அதில் பயணம் செய்த சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அது மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யா பயணம் செய்த காரைக் குறி வைத்து திட்டமிடப்பட்டது என்ற அடிப்படையில் லால்கர் காவல்துறை தனது வழக்கமான பாணியில் விசாரணையைத் தொடங்கியது. பல ஆதிவாசிக் குடும்பங்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களின் வீடுகளுக்கு விருந்தினராக வந்தவர்கள் உள்பட பலரையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் காட்டுத்தனமாக அடித்துத் துன்புறுத்தியது. அவ்வாறு துன்புறுத்தப்பட்டவர்களில் பள்ளி மாணவர்கள், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோரும் அடங்குவர்.

விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் போன்றவை எவ்வளவோ வளர்ச்சியடைந்த நிலையிலும் கூட காவல்துறை மட்டும் அத்தகைய வளர்ச்சிகளை முறையாகப் பயன்படுத்தி தனது விசாரணையை விஞ்ஞானபூர்வ நாகரீகமான மனிதாபிமான வழிமுறையில் ஒரு போதும் நடத்துவது இல்லை. உலகம் முழுவதும் நீதிகுறித்து உயர்த்திப் பிடிக்கப்படும் கண்ணோட்டமான நூறு குற்றவாளிகள் தப்பினாலும் பரவாயில்லை ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற கண்ணோட்டம் எந்தவொரு துறையினரால் மருந்துக்குகூட கடைபிடிக்கப்படுவதில்லை என்று பார்த்தால் அது சட்டத்தை அமுலாக்கும் பொறுப்பினைக் கொண்டுள்ள இந்தியாவின் காவல்துறையாகத்தான் இருக்கும். அதிலும் நகர்ப் புறங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு காவல்துறையில் சேர்ந்து செயல்படும் இவர்களுக்கு ஆதிவாசிகள் துச்சமானவர்களாகவே தென்பட்டனர்.

எனவே சிக்கியவர் அனைவரையும் பிடித்து வரைமுறையின்றி அடித்துத் துன்புறுத்தினால் அதன்மூலம் ஏதாவது ஒரு தடயத்தை கண்டு பிடித்துவிடலாம் என்ற அடிப்படையிலேயே அத்தகைய தாக்குதலை லால்கர் காவல்நிலையத்தின் காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் நடத்தினர். அவர்கள் எந்த அளவிற்கு உரிய சிரத்தையும் அக்கறையும் இன்றி இவ்விசயத்தில் செயல்பட்டார்கள் என்றால் வெடித்த கன்னிவெடியினை வெடிக்கச் செய்த மின்கம்பிகள் எந்த வயல்களின் வழியாக வந்ததோ அந்த வயல்களின் சொந்தக்காரர்களைக் கூட விசாரணைக்கு அழைக்காமல் இஷ்டப்படி சிக்கும் ஆதிவாசிகளை அடித்துத் துன்புறுத்தினர்.

ஆனால் இப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் 'சந்தால்' எனப்படும் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வெள்ளையர் ஆட்சி காலத்திலேயே வெள்ளையர்களை எதிர்த்து தீரம்மிக்க பல சண்டைகளை நடத்தியவர்கள். இதனால் நாட்டின் பலதரப்பட்ட மக்களை சகிக்க முடியாத விதத்தில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் உணர்வற்ற எதையும் சகித்துக் கொள்ளும் தன்மை இவர்களை அத்தனை உறுதியாக பற்றிக்கொண்டிருக்கவில்லை. இதனைக் கண்டிக்க அணிதிரண்டனர். எனவே இவர்களின் இந்தப் போராட்டத்தில் காவல்துறையின் அத்துமீறல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த கோரிக்கையும் பிரதானமாக முன்நிறுத்தப்படவில்லை.

அவர்களின் இப்போராட்டத்தை தங்களுக்குச் சாதகமாக மாவோயிஸ்டுகள் பயன்படுத்திக் கொண்டனர். மற்றபடி சிங்கூர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் மேற்குவங்க அரசாங்கம் செய்தது போல் இங்கு விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அரசே அதன் கைவசமுள்ள சட்டங்களைப் பயன்படுத்தி கையகப்படுத்தி முதலாளிகளுக்கு வழங்கவில்லை. இந்த இரும்பு எஃகு ஆலைக்கு பயன்படும் 5000 ஏக்கர் நிலத்தில் 4500 ஏக்கர் நிலம் அரசால் வனப்பகுதியில் இருந்து வழங்கப்பட்டது. மீதியுள்ள 500 ஏக்கர் நிலம் உருக்காலை முதலாளியால் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பேரம்பேசி பெறப்பட்டது. எனவே குறிப்பாக இப்பிரச்னை குறித்த விசயத்தில் ஆதிவாசி மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு பெரிய அளவில் அரசின் மீது அதிருப்தி இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் போலீஸ் அடக்குமுறைப் பிரச்னை தோன்றிய பின் மாவோயிஸ்டுகளின் கருத்துக்கள் மக்களிடையே கொண்டு செல்லப்பட்டு அந்த மக்களின் கமிட்டிகள் அக்கருத்துக்களை உள்ளடக்கிய தீர்மானங்கள் பலவற்றை இயற்றத் தொடங்கின. அவ்வாறு ஆதிவாசிகளிடம் செல்வாக்கு செலுத்திய மாவோயிஸ்டுகளின் கருத்துக்கள் இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டவையாக இருந்தன. ஒன்று அரசால் எஃகு ஆலை தொடங்குவதற்காக வழங்கப்பட்ட நிலம் ஆதிவாசிகளுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிலசீர்திருத்தச் சட்ட அடிப்படையில் பிரித்துக் கொடுக்க உகந்த நிலம் என்பது; அவ்வாறு அதனை ஆதிவாசிகளுக்கு பிரித்துக் கொடுக்காமல் அதனை ஒரு பெருமுதலாளிக்கு அவர் தொழில் வளத்தைக் கொண்டுவருகிறார் என்ற அடிப்படையில் மேற்குவங்க அரசு கொடுத்துள்ளது என்பது மாவோயிஸ்டுகளின் குற்றச்சாட்டு. இரண்டாவதாக அவர்கள் முன்வைக்கும் கருத்து இந்த உருக்காலையில் உற்பத்தி செய்யப்பட போகும் இரும்பு எஃகு உலகச் சந்தையின் சரக்காக விற்பனை செய்யப்படப் போகிறது. அதாவது இந்தியாவின் இயற்கை வளங்கள் இந்திய மக்களுக்கு குறிப்பாக ஆதிவாசிகளுக்கு பயன்படாமல் வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்காக சூறையாடப்படுகின்றன என்பது.

அதாவது இது ஆதிவாசி மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படவேண்டிய நிலம் என்பதில் உறுதியாக இவர்கள் இருந்திருந்தால் அதற்காக பிரதானமாக மக்கள் இயக்கத்தை முதலில் இருந்தே இவர்கள் தட்டி எழுப்பியிருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் காவல்துறையின் அத்துமீறல்களுக்கு எதிராக சந்தால் இன மக்கள் அணிதிரண்டுள்ள வேளையில் இந்தக் கருத்தை மக்கள் முன் வைத்து அவர்களைத் தங்கள் ஆதரவாளர்களாக மாற்ற மாவோயிஸ்டுகள் முயன்றனர். ஒரு ஜனநாயகக் கோரிக்கை என்ற ரீதியில் நிலச்சீர்திருத்த அடிப்படையில் ஜிண்டாலுக்குக் கொடுக்கப்படும் நிலங்களை பிரித்துக் கொடுக்க கோருவது சரியானதே. ஆனால் மாவோயிஸ்டுகள் அதனை சமூகப் பிரச்னைக்கே ஒரு தீர்வாக முன்வைக்கின்றனர்.

மேற்கு வங்க சி.பி.ஐ.(எம்) அரசாங்கம் 1967-ல் ஏற்பட்ட போது அக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த பிற இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து கமிட்டிகள் அமைத்து நிலச்சீர்திருத்தத்தை அமுல்படுத்திய பின்னர் தனிப்பெரும்பான்மை பெற்று என்று ஆட்சிக்கு வந்ததோ அன்று முதல் 1967-லிருந்த ஐக்கிய முன்னணி கலாச்சாரத்தையே கைவிட்டுவிட்டது. தொழிலாளர் போராட்டங்களில் போலீஸ் தலையீடு இருக்கக்கூடாது, என்றிருந்த நடைமுறை, கெரோ போராட்டம் அத்துடன் நிலச்சீர்திருத்தம் போன்ற அனைத்து மக்கள் ஆதரவு நடவடிக்கைகளும் ஒன்றன்பின் ஒன்றாக அதனால் கைவிடப்பட்டுவிட்டன. 1967-ல் நடந்த நிலச்சீர்திருத்தமும் பெரும்பாலும் உச்சவரம்பிற்கு மேல் நிலம் வைத்தவர்களிடமிருந்து பிரித்துக் கொடுக்கப்பட்டதே.எனவே லால்கர் பழங்குடி மக்களுக்கே அந்த 4500 ஏக்கர் நிலத்தை நமக்கு பிரித்து தரலாமே என்ற எண்ணம் ஏற்படவில்லை. ஆனால் அதனை தருணம் பார்த்து மாவோயிஸ்டுகள் கிளப்பிவிட்டுள்ளனர். ஆனால் இந்த நிலச்சீர்திருத்தம் இன்று நிலவும் சமூகப் பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வல்ல.

இரண்டு அம்சங்கள்

இன்று முதலாளித்துவச் சந்தைக்காக என்ற அடிப்படையில் விவசாய விளைபொருட்கள் உட்பட அனைத்து விளைபொருட்களும் உற்பத்தி செய்யப்படும் நிலையில் விவசாய விளைபொருட்கள் உரிய விலையைப் பெறமுடியாத நிலை நிலவுவதால் சிறுசிறு நில உடமையாளர்கள் தங்கள் வாழ்க்கைச் செலவினங்கள் அனைத்தையும் தங்கள் கைவசமுள்ள துண்டு துக்கானி நிலங்களில் இருந்து பெறும் விளைச்சலை வைத்து சந்திக்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே நாடு முழுவதிலும் உள்ள பல விவசாயிகள் நாளடைவில் தங்கள் கைவசமுள்ள நிலங்களை நல்ல விலை கிடைக்கும் போது விற்றுவிட்டு ஒன்று விவசாய தொழிலாளராகவோ அல்லது நகர்புறங்களுக்குச் சென்று உடல் உழைப்பில் ஈடுபட்டு வாழ்க்கையை ஓட்டுபவர்களாகவோ ஆகிவிடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் ஜிண்டால் இரும்பு எஃகு ஆலைக்கு தேவைப்பட்டட 500 ஏக்கர் நிலங்களையும் இந்த அடிப்படையிலேயே லால்கர் பகுதியில் உள்ள விவசாயிகள் விற்றிருப்பர்.

சிங்கூர்-ல் தோன்றிய நெருக்கடியும் அடிப்படையில் அரசு அதன் கைவசமுள்ள சட்டத்தை பயன்படுத்திக் கட்டாயமாக நிலத்தை கையகப்படுத்தியதால் தோன்றியதேயன்றி டாடா-வும் சிங்கூர் விவசாயிகளும் அவர்களுக்கிடையில் பேரம்பேசி நிலத்தை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் நிச்சயமாக ஒரு நல்ல விலையைப் பெற்றுக் கொண்டு சிங்கூர் விவசாயிகளும் டாடா-விற்கு அந்நிலத்தை விற்றேயிருப்பர். எனவே விலைதான் பொருட்டாய் இருந்ததே தவிர எந்த சூழ்நிலையிலும் அந்நிலத்தை யாருக்கும் விற்க மாட்டோம் என்பது சிங்கூர் விவசாயிகளின் நிலையாக இருக்கவில்லை.

இதே நிலைதான் இன்றில்லாவிடில் நாளை ஜின்டாலுக்கு கொடுக்கப்பட்ட 4500 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டாலும் நிகழும். அதாவது பெருகிவரும் மக்கட்தொகையின் வளர்ந்துவரும் தேவைகளை நிறைவேற்ற அதற்குகந்த விதத்தில் பெருகும் தன்மையில்லாத நிலத்தை நில சீர்திருத்தங்களின் மூலம் பிரித்துக் கொடுப்பதால் மட்டும் நிறைவேற்ற முடியாது. இதுவே நிதர்சனமான உண்மை.

நிலச்சீர்திருத்தம்: சி.பி.ஐ.(எம்) -ன் இரட்டை நிலை

ஆனால் மாவோயிஸ்டுகள் உள்பட சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) போன்ற அனைத்துக் கட்சிகளும் மக்களின் அடிப்படையான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஒரு முக்கிய வழியாக இந்த நிலச்சீர்திருத்தத்தையே வலியுறுத்துகின்றனர். இந்த வலியுறுத்தலையும் சி.பி.ஐ(எம்) கட்சியினர் தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் செய்கின்றனரே அன்றி தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலமான மேற்கு வங்கத்தில் அதனை இப்போது வலியுறுத்துவதில்லை. மாறாக படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற விதத்தில் அங்கு தற்போது அவர்கள் கையிலெடுத்துள்ள முழக்கமான முதலாளித்துவத் தொழில் வளர்ச்சி என்ற முழக்கத்திற்கு உகந்த வகையில் விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி பெரிய முதலாளிகளுக்கு கொடுப்பதிலேயே அக்கறையாக உள்ளனர்.

சொத்துடைமை உணர்வை உருவாக்கும் போக்கு

ஆனால் மாவோயிஸ்டுகள் இந்தக் கருத்தை முதலாளித்துவ இந்தியாவின் முக்கியப் பகுதியில் இருந்து விலகி பின்தங்கியவையாக விளங்கும் ஆதிவாசிப் பகுதிகளில் வலியுறுத்திக் கொண்டுள்ளனர். அவர்களது நிலச்சீர்திருத்த வலியுறுத்தலும், நிலம் இந்தியாவில் இன்றும் வாங்கவும் விற்கவும் முடியாத ஒரு பொருளாகவே விளங்குகிறது என்ற கருத்தும் எந்த பின்தங்கிய பகுதியில் இவர்களால் ஓரளவு பொருத்தமுள்ளதாகக் காட்டப்பட முடியுமோ அந்த 10 சதவீத மலைவாழ் மக்கள் பகுதியிடமே இவர்களால் இது வலிந்து காட்டப்படுகிறது.

இன்று வளர்ந்துவரும் மக்கட் தேவைகளையும் வேலையின்மையையும் போக்க வளரும் தன்மையற்ற நிலம் என்ற உற்பத்தி சாதனம் மட்டுமே போதாது; தொழில் மயம் அவசியம். அது தங்கு தடையின்றி நடைபெறத் தேவையான சூழலை இன்றைய நெருக்கடி சூழ்ந்த முதலாளித்துவத்தால் உருவாக்க முடியாது. அதனை உருவாக்க சோசலிச உற்பத்தி முறை மிகவும் அவசியம். சோசலிச உற்பத்தி முறை தனிச் சொத்துடைமைக்கு விரோதமானது. ஆனால் இந்திய மாவோயிஸ்டுகள் கம்யூனிஸம் பேசிக் கொண்டே ஆதிவாசி மக்களிடம் ஒருவகை சொத்துடமை மனப்பான்மையை உருவாக்கி சமூக வளர்ச்சி குறித்த விஞ்ஞானபூர்வ கண்ணோட்டத்தை தலை தூக்கவிடாமல் செய்கின்றனர்.

இவர்கள் ஆதிவாசி மக்களிடம் பொதுவாகவும் லால்கர் ஆதிவாசிகளிடம் குறிப்பாகவும் முன்வைக்கும் கருத்து மார்க்சிசத்தோடு தொடர்பேதும் இல்லாதிருப்பதோடு காந்தியவாத, சீர்திருத்தக் கண்ணோட்டத்தை கொண்டிருப்பதாகவும் உள்ளது. ஜிண்டாலின் இரும்பு எஃகு தொழிற்சாலை சுற்றுச் சூழலை மாசுபடுத்தும், என்ற கூற்றை முன்வைத்து இந்த நிலச்சீர்திருத்த முழக்கத்தின் மூலம் சுற்றுச் சூழல் பிரச்னையையும் இத்துடன் இணைக்கின்றனர். முதலாளித்துவ லாபநோக்க உற்பத்தி முறை நிலைகொண்டுள்ளவரை அது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை தவிர்க்க முடியாமல் செய்து கொண்டேயிருக்கும். சுற்றுச் சூழல் மாசுபடுவதை எதிர்த்து மார் தட்டுபவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் இவர்கள் உண்மையிலேயே சுற்றுச் சூழல் ஆர்வலர்களாக இருந்தாலும் இவர்கள் எதிர்க்க வேண்டியது முதலாளித்துவத்தையே ஆகும். ஆனால் இந்த முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு எதிராக மக்களின் கவனத்தை இவர்கள் திருப்புவதில்லை.

இவர்கள் கூறும்விதத்தில் ஆதிவாசிகளிடம் நிலச்சீர்திருத்த சட்டப்படி நிலங்களை பிரித்துக் கொடுத்தால் கூட சிறிது காலத்தில் அவர்களில் வசதிபடைத்த சில ஆதிவாசிகளே அந்த நிலங்களின் சட்டபூர்வமாக இல்லாவிடினும் யதார்த்தபூர்வமான அதிபர்களாக ஆவார்கள். இத்தன்மைவாய்ந்த முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்து மூச்சுக்கூடவிடாமல் மாவோயிஸ்டுகள் ஒருவகையான சுய தேவைப் பூர்த்தி பொருளாதாரத்தை ஆதிவாசிகள் வாழும் பகுதிகளில் நிரந்தரமாக நிலைநாட்டி அவர்கள் பிரச்னையை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கிறார்கள்.

கோட்பாடற்ற சமரச போக்குகள்

இதனை செய்வதற்காக அவர்கள் பல சமரசங்களை, அதாவது ஆதிவாசிகளின் கலாச்சாரம், பண்பாடு, மொழி போன்றவற்றை உன்னதப்படுத்தும் வேலையையும் செய்கின்றனர். அதாவது லால்கர் ஆதிவாசிகள் அவர்களது ஒரு தீர்மானத்தில் அவர்கள் வாழும் பகுதியில் கல்விநிலையங்கள் பல திறக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். அத்துடன் பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். நிச்சயமாக ஆதிவாசிகளை மேம்படுத்தவும் அவர்களின் பல மூட நம்பிக்கைகளைப் போக்கவும் ஒரு விஞ்ஞானபூர்வ சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்கவும் நிச்சயம் இது உதவும். ஆனால் இவ்விசயத்தில் அவர்கள் முன் வைக்கும் மற்றொரு கருத்து ஆதிவாசிகளின் கல்வி முறையில் கீழ்மட்டம் முதல் உயர் மட்டம் வரை சந்தால் மொழியிலேயே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

சந்தால் மொழியில் உயர்கல்வி சாத்தியமா?

இன்று நமது நாட்டில் நன்கு வளர்ச்சியடைந்த மொழிகள் பலவும் கூட இன்றைய விஞ்ஞான, தொழில்நுட்பம் சார்ந்த உயர்கல்வியை எளிதில் கற்க வழிவகை செய்யும் சொல்வளத்தைக் கொண்டிராத நிலையில் அவற்றை நாம் ஆங்கிலத்தின் துணை கொண்டு கற்கவேண்டிய நிலையிலேயே உள்ளோம். இந்த நிலையில் நிச்சயமாக பிற இந்திய மொழிகளின் அளவிற்குக் கூட வளர்ச்சியடைந்திருக்க வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் சந்தால் மொழியில் உயர் மட்டம் வரை கல்வியை கற்பிப்பதன் மூலம் எவ்வாறு இன்றைய சமூக வாழ்க்கைக்கு தேவைப்படக் கூடிய உயர்ந்த விஞ்ஞான, தொழில்நுட்ப கருத்துக்களை பெற்றவர்களாக அவர்களை ஆக்க முடியும்? இத்தகைய உயர் விஞ்ஞான, தொழில் நுட்ப கருத்துக்களை வழங்காத கல்வியைப் பெற்றவர்களாக அந்த மக்களை ஆக்குவது எந்தவகையில் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும்?

உள்நோக்குடன் உன்னதப்படுத்தப்படும் பழங்குடியினர் கலாச்சாரம்

அத்துடன் அந்த மக்களைத் தங்கள் பக்கம் வைத்திருப்பதற்காக இவர்கள் முன்வைக்கும் மற்றொரு கருத்து ஆதிவாசிகளின் கலாச்சாரம் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும். ஒன்று ஆதிவாசிகளின் கலாச்சாரம் அத்தனை உன்னதமானதென்றால் அதன் உன்னத அம்சங்களை வெளிப்படையாக எடுத்துரைத்து அதனை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வழிவகுக்க வேண்டும்; இல்லை; அது அவர்களால் மட்டுமே கடைபிடிக்க முடிந்தது என்றால் என்றென்றும் பொருளாதார சமூக மாற்றங்களுக்கு ஆட்படாமல் அவர்கள் மலைவாழ் மக்களாகவே நீடித்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டும்.

ஏனெனில் ஒரு அமைப்பின் பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாறுதல்கள் அதன் கலாச்சார மேல் கட்டுமானத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருக்கவே இருக்காது. அந்த அடிப்படையில் அவர்களின் கலாச்சாரமும் எத்தனை பேணிப் பேணிப் பாதுகாத்தாலும் மாறியே தீரும். சமூக முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் என்ற ரீதியில் எந்த முற்போக்கான மாற்றத்தையும் கம்யூனிஸ்டுகள் வரவேற்கவே வேண்டும். அதை விடுத்து அதற்கு முட்டுக்கட்டைப் போல முயலக் கூடாது. இது தவிர அவர்களின் மதம் அங்கீகரிக்கப்படவேண்டும்; அந்த மத திருவிழாக்கள் நடைபெறும் வேளைகளில் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்பது போன்ற தீர்மானங்களும் லால்கர் ஆதிவாசிகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தப் போக்கு எதைக் காட்டுகிறது என்றால் மாவோயிஸ்டுகளின் செயல்பாடு ஒட்டுமொத்தமாக இந்திய உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கு வழிவகுப்பதாக இல்லை என்பதையும் ஆதிவாசி மக்களைப் பிறபகுதி இந்திய மக்களின் வாழ்க்கைப் போக்கின் பொது நீரோட்டத்துடன் கலக்கவிடாது தனியாக அப்படியே வைத்திருக்கும் ஒரு கற்பனாவாத கண்ணோட்டத்துடன் அவர்கள் செயல்படுவதையுமே காட்டுகிறது.

மாவோ விடுதலை பெறுவதற்கு முன்பு இருந்த சீனாவின் நிலையை கணக்கிலெடுத்துக் கொண்டு அந்நாட்டின் விடுதலைப் பாதையை வகுத்தார். இன்றுள்ள இந்திய நிலைக்கும் அன்றிருந்த சீன நிலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இவ்விரு நாடுகளும் ஆசியக்கண்டத்தை சேர்ந்தவை என்ற ஒரு ஒற்றுமையைத் தவிர வேறு எந்தவகையான ஒற்றுமையும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் கிடையாது.

இந்திய நிலைக்கு பொருந்தி வராத விடுதலைமையக் கண்ணோட்டம்

மாவோ அன்று சீனா இருந்த பின்தங்கிய, போக்குவரத்து வசதிகள் குன்றிய நிலையில் கிராமப் புறங்களில் விடுதலை மையங்களை ஏற்படுத்தி நகர்ப்புறங்களை தாக்கிக் கைப்பற்ற வேண்டும் என்ற போர்த்தந்திரத்தை வகுத்தெடுத்துக் கடைப்பிடித்தார். இன்று அந்த மாவோ-வின் வழியை இந்திய யதார்த்த சூழ்நிலையை புறக்கணித்து இங்கு நடைமுறைப்படுத்த முயலும் மாவோயிஸ்டுகளுக்கு அவற்றை நடைமுறைப்படுத்த ஓரளவு ஏற்ற பகுதிகளாக விளங்குபவை இந்த ஆதிவாசிகள் வாழும் வனப்பகுதிகளே ஆகும். இந்தியாவின் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகள் தவிர்த்த ஏறக்குறைய 90% பகுதிகள் இந்த வழிமுறையை எள்ளளவு கூட நடைமுறைப் படுத்த முடியாதவை யாகும். அதையும் கூட தற்போது ஆதிவாசிகளின் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் லால்கர் பகுதியில் செய்வது மிகவும் கடினம். ஏனெனில் அங்கு நன்கு அமைக்கப்பட்ட சாலை வசதிகள் உள்ளன. எனவே லால்கரை விடுதலைப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவித்துப் பராமரிக்க மாவோயிஸ்டுகளால் முடியாது.

அனுபவங்களிலிருந்தும் படிப்பினை எடுக்காத போக்கு

தேசிய முதலாளிகளின் கையில் ஆட்சியதிகாரம் வராத சூழ்நிலையாகிய விடுதலைக்கு முன்பிருந்த சூழ்நிலைக்கு மட்டுமே பொருந்தி வரக்கூடியதாக இருந்த இவர்களின் மக்கள் ஜனநாயகப் புரட்சிக் கண்ணோட்டத்தை மாறிவிட்ட சூழ்நிலைக்குப் பின் அதாவது விடுதலைக்குப்பின் இவர்கள் மாற்றியிருக்க வேண்டும். சித்தாந்த ரீதியாக அதனை உணர்த்த வழி இருந்தாலும் யதார்த்த சூழ்நிலையிலிருந்து படிப்பினைகளை எடுத்தாவது அடிப்படை அரசியல் வழியைச் சரிசெய்து கொண்டிருக்க வேண்டும். இவ்விரண்டினையும் செய்யாது குறிப்பாக லால்கர் பிரச்னையில் இவர்கள் முன் வைக்கும் விடுதலை பெற்ற மையங்கள் என்ற இவர்களின் தவறான அடிப்படை அரசியல் வழி சார்ந்த கண்ணோட்டம் லால்கரில் ஆதிவாசி மக்களை அரசின் கொடூரத் தாக்குதலுக்கு அறிந்தோ, அறியாமலோ இரையாக்குவதிலேயே சென்று முடியும். அதன் விளைவாக ஆங்காங்கே தோன்றியிருக்கும் மக்கள் இயக்கங்களிலும் ஒரு சோர்வு நிலை ஏற்படும்.

இப்பிரச்னையில் உண்மையான மார்க்சியவாதிகள் செய்திருக்க வேண்டியது லால்கர் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை நாடுமுழுவதிலும் உள்ள மக்களிடையே கொண்டு சென்று அம்பலப்படுத்தி அதற்கு எதிரான மக்களின் கிளர்ச்சிக்கான ஆதரவினை திரட்டுவதேயாகும். அவ்வாறு திரட்ட வேண்டுமானால் 90 சதவீத இந்திய மக்களை அவர்களை வாட்டிவதைத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக அணிதிரட்ட எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து அதனை ஒட்டிய தொழிற்சங்க அமைப்புகள் போன்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும். இருக்கும் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி உழைப்பாளர் இயக்கங்களை தட்டியயழுப்பியிருக்க வேண்டும். தங்கள் உயிரையும் துச்சமென மதித்து செயல்படுவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் மாவோயிஸ்டுகளுக்கு இதனை செய்வது அத்தனை சிரமமான காரியம் இல்லையல்லவா?

ஆனால் இதனை செய்வதற்கு பொறுமையும், விடாமுயற்சியும், நெளிவுசுழிவான செயல்களும் அனைத்திற்கும் மேலாக சரியான மார்க்சியப் புரிதலும் வேண்டும். தங்கள் செயலுக்கு கைமேல் பலன் வேண்டும் என்ற குட்டி முதலாளித்துவ சாகசவாத அவசரப் போக்கிற்கு இத்தகைய பொறுமை, விடாமுயற்சி, நெளிவுசுழிவான போக்கு ஆகியவை ஒத்துவராதவை. அதனால்தான் பரந்துபட்ட மக்கள் பகுதியில் இவர்களால் லால்கர் காவல்துறையின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்தி அவர்களின் ஆதரவினை போராடும் லால்கர் ஆதிவாசி மக்களுக்குச் சாதகமாக திருப்பமுடியவில்லை.

மேற்கு வங்க அரசின் சட்டத்தின் ஆட்சிக் கூக்குரல்

இவர்களின் இந்த பலவீனத்தை கணக்கில் எடுத்துக் கொண்டே சட்டத்தின் ஆட்சியை அனுமதிக்காத லால்கர் ஆதிவாசிப்பகுதியில் அதனை நிலைநாட்டியே தீருவோம் என்று வெளிப்படையாக ஜனநாயகத் தன்மை பொருந்தியது போல காட்சியளிக்கும் ஒரு கண்ணோட்டத்தை முன்வைத்து சி.பி.ஐ(எம்), கட்சியும், மேற்கு வங்க அரசும் மத்திய, மாநில காவல்துறையினரையும், ஆயுதப் படையினரையும் அங்கு அனுப்பி லால்கர் ஆதிவாசிகளின் நியாயமான, போலிஸ் அடக்குமறை கூடாது என்ற கோரிக்கைக்கான போராட்டத்தை ஒடுக்கப்பார்க்கின்றன. உண்மையாகப் பார்த்தால் மேற்குவங்கம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. லட்சோபலட்சம் தொழிலாளரின் சட்டபூர்வ ஓய்வுகாலப் பலன்கள் முதலாளிகளால் வழங்கப்படாமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மாண்டுமடிந்து கொண்டுள்ளனர். அதாவது தொழிலாளர் நலச் சட்டங்கள் இருக்கின்றன ஆனால் அச்சட்டத்தின் ஆட்சியில்லை.

தொழிலாளர் துறையின் முதலாளித்துவ ஆதரவு மற்றும் மெத்தனப் போக்குகள், தொழிலாளர் நீதிமன்றங்களில் நடைபெறும் கொடூரமான காலதாமதப் போக்கு ஆகியவை மிகப் பரந்துபட்ட மக்களைப் பொறுத்தவரையில் சட்டத்தின் ஆட்சி இங்கு இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகப் பறைசாற்றுகிறது. முதலாளித்துவச் சுரண்டலில் தங்ளது வாழும் அடிப்படை உரிமையே கோடானகோடி மக்களுக்கு பறிபோய்க்கொண்டுள்ளது. வேலைப் பாதுகாப்பு போன்ற சட்டபூர்வ உரிமைகள் முதலாளித்துவ நிறுவனங்களால் அப்பட்டமாக பறிக்கப்படுகின்றன.

இந்த வகைகளில் சட்டத்தின் ஆட்சி ஒட்டு மொத்தமாக நாடுமுழுவதும் உழைப்பாளிகளைப் பொறுத்தவரை நடக்காதிருப்பதைக் கண்டு கொள்ளாமல் இன்னும் வெட்கமின்றி தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும், மார்க்சிஸ்டுகள் என்றும் கூறிக்கொள்ளும் மேற்கு வங்க ஆட்சியாளர்கள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது என்பது அரசு நிர்வாகத்தை அதாவது காவல்துறையின் அதிகாரத்தை நிலை நாட்டுவதேயாகும். அதாவது தொழில்நுட்ப ரீதியில், காவல்துறையின் அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட்டு தங்களது அதிகாரத்தை நிலைநாட்டப் பார்க்கின்றனர். உண்மையில் தங்களது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இன்று யதார்த்தத்தில் நாட்டில் நிலவும் அனைத்து மாநில ஆட்சிகளிலும் அப்பட்டமான பாசிச ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது மேற்கு வங்க அரசே என்பதை பறைசாற்றிக் கொண்டுள்ளனர்.

ஆதிவாசிகளை அடக்கு முறைக்கு இரையாக்கும் விடுதலைபெற்ற பகுதி என்ற செல்லக் கண்ணோட்டம்

அந்த அடக்குமுறைக்கு எதிராக தங்களது அடிப்படை அரசியல் வழிக்கோளாறின் காரணமாக பிற பகுதி மக்களின் ஆதரவினை திரட்ட முடியாதவர்களாகி தங்களது விடுதலை பெற்ற பகுதி என்ற செல்லக் கண்ணோட்டத்தின் மூலம் மாவோயிஸ்டுகளும் லால்கர் ஆதிவாசி மக்களை அரசின் அடக்குமுறைக் கருவிகளின் கோரத்தாக்குதலுக்கு இரையாக்கிக் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட செயல்பாடுகளின் மூலமாக தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்து பெருமளவு விலகி விஞ்ஞானபூர்வ வர்க்க ரீதியான பார்வையை கைவிட்டு உள்ளனர். மார்க்சிய வழிக்குப் பதிலாக பல சமயங்களில் மார்க்சிஸத்திற்கு முரணாக நிற்கவல்ல பல சென்டிமெண்டுகளைப் பயன்படுத்தியே தங்களது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

எவ்வளவு தான் ஆதிவாதிகள் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் அதிலும் வசதி படைத்தவர் - வசதியில்லாதவர் என்ற சூழ்நிலை ஓரளவேனும் நிச்சயம் இருக்கவே செய்யும். அதனை மூடி மறைத்து ஆதிவாசிகள் அனைவருமே சமமான பொருளாதார நிலையில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த ஆதிவாசிகளின் நலன் என்ற கண்ணோட்டத்தைக் கையிலெடுத்துச் செயல்படுகின்றனர். அதைப் போலவே தலித் சென்டிமெண்டையும் ஆதிவாசிகள் இல்லாத வேறு பகுதிகளில் இவர்கள் கையாளுகின்றனர். மேலும் பிராந்தியவாதப் போக்குகளும் இவர்களது ஆதரவினைப் பெறுகின்றன.

சென்டிமெண்டுகளைப் பயன்படுத்தி அரசியல் நடத்தும் போக்கு

நாடு முழுவதும் ஈவிரக்கமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்துத் தொழிலாளர் இயக்கம் நடத்தாமல் இது போன்ற ஆதிவாசி, தலித் மற்றும் பிராந்திய சென்டிமெண்டுகளை முன் நிறுத்திச் செயல்படும் இவர்களின் போக்கு ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் முக்கியப் பிரச்னைகளே ஆதிவாசி, தலித் மற்றும் பிராந்திய மக்களின் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்படும் நிலையே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதன் மூலம் நாட்டில் நிலவும் பல அடிப்படைப் பிரச்னையான முதலாளித்துவச் சுரண்டலை மூடி மறைக்கும் வேலையையே செய்கிறது. ஒரு சரியான கம்யூனிஸ்ட் அமைப்பு முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்த வர்க்கப் போராட்டங்களை நாடு முழுவதும் மிகுந்த அளவில் நடத்தும் அதே வேளையில் தனது ஜனநாயகக் கடமைகளை முழுமையாக ஆற்றத் திராணியற்றுப் போன இந்திய முதலாளித்துவத்தின் வீச்சில்லாத, பிற்போக்கான போக்கே ஆதிவாசிகள், தலித் பிரச்னைகளுக்கும் காரணம் என்பதை உணர்ந்து அதனைக் கையிலெடுக்க வேண்டுமே தவிர அது தான் அடிப்படையான பிரச்னை என்ற கருத்தை உருவாக்கக் கூடாது.

இத்தகைய திசைமாறிய போக்கைக் கொண்டிருப்பதன் காரணமாக உயிரைக் கொடுக்கும் மனவலிமை கொண்ட தொண்டர்களை கொண்டிருப்பதாக அந்த இயக்கம் தன்னை காட்டிக் கொண்டபோதிலும் அது ஒரு சரியான சமூக மாற்றத்திற்கு அறிந்தோ, அறியாமலோ குந்தகமே விளைவித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட பல போக்குகள் போலீஸின் அடாவடித்தனத்தை எதிர்க்கும் லால்கர் ஆதிவாசி மக்களின் போராட்டத்தில் இருந்தாலும் நிச்சயமாக அது மக்களின் ஜனநாயக இயக்கமே. எனவே அத்துமீறி ஆதிவாசி மக்களைத் துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அப்பகுதியின் வளர்ச்சிக்காக உரிய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஜனநாயக இயக்கங்கள் அவ்வியக்கத்திற்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக சக்திகளாலும் அவசியம் நடத்தப்பட வேண்டும்.

Pin It