படைப்பாளிகள் தங்களின் படைப்புகளுக்கான வேர்களைப் பெரும்பாலும் தாம் வாழும் சமூகத்திலிருந்தே கண்டெடுக்கின்றனர். ஒரு சமூகத்தில் வாழும் கலைஞனின் சமூகத் தொடர்புகளும் புரிதல்களும் படைப்பாக உருவெடுக்கிறது. அந்த வகையில் தான் வாழும் இஸ்லாமிய சமூகத்தினைக் களனாகக் கொண்டு தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் தான் கண்ட சம்பவங்களையும் எழுத்துக்களில் வடித்தவராக களந்தை பீர்முகமதுவை அடையாளப் படுத்தலாம். தாமரை இதழில் “ தயவு செய்து” என்ற சிறுகதையின் மூலம் சிறுகதைத் தளத்தில் அறிமுகமான களந்தை பீர்முகமது இன்றையக் கண்ணாடியும் நாளைய முகங்களும்(1994), சுழல் (2000), சிலுக்கு ஸ்மிதாவும் சுலமான் ஹாஜியாரும்(2000),களந்தை பீர்முகமது கதைகள்(2002), பிறைக்கூத்து(2008) என்ற ஐந்து தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். பீர்முகமதுவின் படைப்பின் வெளியை ஆராயும் பின்வரும் குறிப்புகள் களந்தை பீர்முகமது கதைகள் என்னும் தொகுப்பினை மையமிட்டு மட்டுமே அமைகிறது.

பீர்முகமதுவின் படைப்புகளில் காணப்படும் தன்மைகளை கொடிய வறுமையின் பாதிப்புகள், தாயின் அன்பு,இஸ்லாமிய சமூகத்தின் கலாச்சாரத் தன்மைகளை வெளிப்படுத்தல், குழந்தைக ளிடம் காணப்படும் மாறாத அன்பு,இஸ்லாமிய சமூக அமைப்புகளின் (ஜமாஅத்) சில நுணுக்கமான அரசியல்களை விமர்சித்தல், இஸ்லாத் தில் நிலவும் சாதியப் பிரச்சனைகள்,இஸ்லாத்தில் பெண்களுக்கான நிலை என்று வகைப்படுத்தலாம்.மொழியானது திருநெல்வேலி மாவட்டத்திற்கு அண்மையில் உள்ள களக்காடு பகுதியில் வாழும் மக்களின் மொழியாகவும் இஸ்லாமிய சமூகத்தவருக்கான சிறப்புச் சொற்களை உள்ளடக்கிய மொழியாகவும் இருப்பதை உணரமுடி கிறது.கதைகள் கதையில் தொடர்பில்லாத வெளிநபர் கூறுவதாக வும்,சில இடங்களில் கதைமாந்தர்களின் கூற்றாகவும் உள்ளது. கதைக்கூறும் தன்மையில் சிக்கலின்றி கதைகள் நகர்கின்றன.

எதார்த்த வாழ்வின் இயங்குத்தளத்தில் வறுமையானது மனிதர் களை எவ்வெவ்விதங்களில் ஆட்கொள்கிறது என்பதை பீர்முகமது வின் பலகதைகளில் காணமுடிகிறது.தன் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க இயலாமல் தவிக்கும் தாய், கணவனின் அன்றைய உழைப் பின் வருமானத்தில் குடும்பத்தை இயக்கும் மனைவி, வெளியூர்களில் இருந்து பணவரவின்மையால் பணத்திற்காக உறவுகளை நாடிச் செல்கையில் ஏற்படும் அவமானங்களுக்குட்பட்டவர்கள், சில அத்தியாவசியப் பொருட்களை விற்று பொழுதைக் கழிக்கும் பெண்கள் என பல நிலைகளில் பதிவுகள் விரவிக்கிடக்கின்றன.

சாதியம் இஸ்லாத்தில் நிலவுகிறதா? என்று கேட்கும் பலரின் வினாக்களுக்கான விடயமாகவும்,பின்தங்கிய நிலையில் இருக்கும் சமூகத்தை பெரும்பான்மை நிலை வகிக்கும் மக்கள் நிந்திக்கும் செயலையும் பிறகு தங்களின் வேர் அச்சமூகத்தை சார்ந்தது எனும் போது அதற்கான செயலையும் ‘சொல்லிலும் செயலிலும்’ கதை சித்திரித்துள்ளது. பெரும்பான்மை நிலை வகிக்கும் மக்களின் சாதிய வெறியை மிக வெளிப்படையாக “ இன்னைக்கு நாசுவனுக்குக் கடை கட்டிக் குடுத்தா நாளைக்கி நம்ம தெருவப்பாத்து எல்லோரும் என்ன சொல்லுவானுவோ தெரியுமா?அப்படின்னா உன் புள்ள நாசுவன். நீ நாசுவத்தி. நான் நாசுவன். உன் பேரன்,பேத்தி மக்க எல்லோரும் நாசுவங்கஞ் சீச்சீ நாசுவன் தெருக்காரன்னு நம்மள பட்டம் கட்டி விடுறதும் காணாதுன்னு எல்லாரையும் அப்படியே ஆக்கியும் வச்சிருவானுவோ.”(பக்-54-55) என்ற பதிவின் மூலம் அறியலாம்.

பீர்முகமதுவின் படைப்புகளில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமின்றி பிறசமூகத்துப் பெண்களும் உலவுகின்றனர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிலகதைகளின் தலைப்பு களும் அதில் பெண்களுக்கான ஆளுமையும் இடம்பெற்றுள்ளன. (ப-94,ப-130) இஸ்லாமிய சமூகத்தில் பெண்களுக்கான வறையறுக் கப்பட்ட வெளியையும்,அதனை காக்க எத்தனிக்கும் மனிதர்களை யும் காணமுடிகிறது.(பக்-195,211)இஸ்லாமிய சமூகத்தில் ‘பெண்’ என்பவளே மிகமுக்கியத்தன்மை உடையவளாக இருப்பதையும் (கண்காணிப்புப் பொருள்) சமூகத்தின் வெளி புழக்கத்தில் முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டவளாய் இருப்பதையும் ‘சிறையிலிருந்த நிலா’ கதை பதிவுசெய்துள்ளது.

பீர்முகமதுவின் படைப்புகள் பெரும்பாலும் இஸ்லாமிய மதத்தின் அடிப்படைச் செயல்களில் இருந்து மாறாத வண்ணமிருந் தாலும் இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்களின் மீதான தவறான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டி சாடும் விதத்திலும் அமைந் துள்ளது(ப-223). “தீயின் விளிம்புகள்” என்னும் படைப்பு இஸ்லாமிய சட்டங்களின் வாரிசுகளாக அடையாளமிட்டு தங்களின் வசதிக்கேற்ப சட்டங்களைத் திரித்து வைத்திருக்கும் ஆதிக்க சக்திகளின் போக்கினை எதிர்த்து வெளிகிளம்பும் இளம்பருவத்தினரின் சிறிய தீப்பொறியாக அனுமானிக்கலாம்.பல இடங்களில் இஸ்லாமிய சமூகத்தின் சுயத்தன்மை தெளிவாக பீர்முகமதுவின் படைப்புகளில் பதிவாகியுள்ளதையும் வாசிக்கையில் உணரமுடிகிறது.

பொதுவாக பீர்முகமதுவின் கதைகளை இஸ்லாமிய சமூக மணத்துடன் எளிய மொழியில் எதார்த்த வாழ்வின் சிக்கல்களைப் புனவுகளின்றி சித்திரித்த கதைகளாக கூறலாம்.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர். தமிழ்ச் சிறுகதைகைளைப் பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It