ரோஜா முத்தையா நூலக அறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள்கள் / அம்சங்கள்:

தமிழியல் ஆய்வுகளுக்கான ஆராய்ச்சி நூலகமாகவும் ஆவணக் காப்பகமாகவும், ஆய்வாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தும், ஆய்வுக்கானத் தரவுகளைப் பாதுகாப்பதாக இந்நூலகத்தின் செயல்பாடுகள் உள்ளன. நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்களுக்கான செய்திகளைத் திரட்டவும், அவ்வாறு திரட்டும் செய்திகளைப் பரவலாக்குதலும், நூலகர்களுக் கும் ஆவணக்காப்பாளர்களுக்கும் பயிற்சி அளிப்பதும், நூலகத்தின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளில் கலந்துகொள்ளுதல், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல் என்பன. நூலகத்தின் பிற செயல்பாடுகள் ஆகும்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தலையாய சேவை குறிப்புதவி சேவையாகும். ஆய்வாளர்களுக்குச் சீரான குறிப்புதவி சேவை 1997 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. முதலில் இது பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆய்வாளர்கட்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. பின் 2000ஆம் ஆண்டில் ஆய்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களும் பயன்படுத்த அது விரிவாக்கப் பட்டது. ஒரு பொது நூலகத்தின் தன்மைகளுடன் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டது.

இதுவரை இந்நூலகத்தைப் பல ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்நூலகத்திற்கு முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆய்வியல் நிறைஞர்கள், முதுகலை மாணவர்கள், இளங்கலை மாணவர்கள், ஆவணப்படத் தயாரிப்பவர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் எனப் பல தரப்பினரும் வருகை புரிகின்றனர். ஆய்வாளர்களின் தேடுதல் நேரத்தைக் குறைத்து, எளிதில் நூல்களின் விவரம் அளிக்கப்படுகிறது. இங்கு சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம், புராணம், நவீன இலக்கியம், நாட்டுப்புறவியல், சினிமா, தலித் வரலாறு, திராவிட இயக்க வரலாறு, தமிழ் நாட்டு வரலாறு, கல்வி, பெண்ணியம், சங்கீதம், மானுடவியல், தொல்லியல், சித்த மருத்துவம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த பழம்பதிப்புகளைக் கொண்ட நூல்கள் உள்ளன.

பத்தொன்பது -இருபதாம் நூற்றாண்டில் வெளியான பத்திரிகை களான செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, ஒரு பைசாத் தமிழன், உதயதாரகை, தமிழ்ப்பொழில், மஞ்சரி, கலைமகள், கல்கி, மாதர் மனோரஞ்சனி மற்றும் திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களான குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, திராவிடநாடு, காஞ்சி, போர்வாள், புதுவை முரசு போன்ற பல பத்திரிகைகளைப் படிப்பதற்காகவும் ஆய்வாளர்கள் வருகை புரிகின்றனர்.

சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், சங்க இலக்கியப் பதிப்பு ஒப்பீட்டிற்காகவும், சங்க இலக்கியத்திலுள்ள விருந்தோம்பல், சங்கப் பரத்தமை மரபும் நீட்சியும், சங்க இலக்கி யத்தில் வானவியல் மற்றும் சோதிடவியல், சங்க இலக்கியத்தில் நாடகக் கூறுகள் போன்ற தலைப்புகளில் ஆய்வு செய்துவருகின்ற னர். தொல்காப்பிய எழுத்ததிகார ஆராய்ச்சி, சிறுபாணாற்றுப் படையில் வாழ்வியல் விழுமியங்கள், அசோகமித்திரன் நாவல்களில் மகளிர் நிலை, நா. பார்த்தசாரதி நாவல்களில் கல்வித்துறைச் சிக்கல்கள், சிவப்பிரகாசரின் இலக்கியம் காட்டும் சமூகம், இக்கால இலக்கியங்களின் போக்கு, பூரணலிங்கம் பிள்ளை குறித்த ஆய்வு, புதுமைப்பித்தன் ஆவணங்கள் ஆய்வு, சு. சமுத்திரம் நாவல்களில் தொழிலாளர், தமிழ் ஓலைச்சுவடி பதிப்பு வரலாறு, இலக்கணப் பதிப்பு வரலாறு, ஆனந்த போதினி இதழ்கள், விடுதலைப் போராட்டத்தில் தமிழ் இதழ்களின் பங்கு, கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள், தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆதிதிராவிடர்களின் பங்கு, புதுக்கவிதையில் யாப்பு, பாரதியார் பாடல்களில் பதிப்பு வேறுபாடு போன்ற பல தலைப்புகளில் ஆய்வு செய்வதற்காகவும் ஆய்வாளர்கள் வருகின்றனர்.

சென்ற ஆண்டு மட்டும் நூலகத்தைப் பயன்படுத்தி 7 முனைவர் பட்ட ஆய்வுகளும், 10 ஆய்வியல் நிறைஞர் ஆய்வுகளும், 35 நூல்களும் மற்றும் பல கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

நகலகச் சேவை

ஆய்வாளர்களுக்குத் தேவையான நூல்களுக்கான நகல்களை நூலகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் நூலகக் கள ஆய்வு

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆய்வாளர்களுக்காகத் தமிழில் வெளியான நூல்களின் பட்டியலை ஒரே இடத்தில் பார்ப்பதற்காகவும், ஆய்வாளர்களின் தேடுதல் நேரத்தைக் குறைப்ப தற்காகவும் தமிழ்நாட்டில் பல இடங்களிலுள்ள நூலகங்களை 1998 முதல் கள ஆய்வு செய்து அந்நூலகங்களில் உள்ள நூல்களுக் கானப் பட்டியல் தயாரித்து வருகிறது. இதன் மூலம் தமிழ் ஆய் வாளர்கள் ஒரே இடத்தில் இந்நூல் பட்டியலைப் பார்க்க முடியும் (நூற்பட்டியல் தயாரித்தல் பற்றி இவ்விதழில் உள்ள பிரகாஷின் கட்டுரையைப் பார்க்க லாம்). குறிப்பாக உ.வே.சாமிநாதையரின் நூலகம், கலாஷேத்ரா நூலகம், மியூசிக் அகாதமி நூலகம் என பல நூலகங்களுக்கான நூற்பட்டியலைத் தயாரித்துள்ளது. பல நூலகங்கள் இச்சேவையை அறிந்து ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தை அவர்களது நூலகத்திலுள்ள நூல்களைப் பட்டியலிட அழைக்கின்றன.

1556 ஆம் ஆண்டு முதல் தமிழில் இதுவரை வெளியான தரவு களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்வியை மனதில் கொண்டு ஒருங்கிணைந்த நூல்விவரணப் பட்டியலைத் தயாரித்து வருகிறது. இப் பட்டியலை வைத்து ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத் தில் இல்லாத புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அம்முயற்சியில் தமிழ்நாட்டிலுள்ள நூலகங்களைக் கள ஆய்வு செய்வதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவானது நாகர்கோவில், காரைக் குடி, மதுரை, ராஜபாளையம், தஞ்சாவூர், மன்னார்குடி, கூத்தா நல்லூர், கும்பகோணம், திருப்பனந்தாள், காரைக்கால், சிதம்பரம், புதுக்கோட்டை, பாண்டிச்சேரி, நீலகிரி போன்ற பல இடங் களிலுள்ள நூலகங்களான கிறித்துவ நூலகம், இந்துமதா பிமான சங்கம், காந்தி கலைமன்றம், பென்னிங்டன் நூலகம், சாயபு மரைக்காயர் நூலகம், ஞானாலயா நூலகம், அஞ்சுமன் நுஸ்ரத்துல் பொது நூலகம், சாஹிப் இல்ல நூலகம், ஸ்ரீவித்யா ராஜகோபால் நூலகம், பாரதியார் அருங்காட்சியகம், சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம் போன்ற பல நூலகங்களைப் பார்வையிட்டு, அழிந்து போகும் நிலையிலிருந்த அரிய ஆவணங்களை மட்டும் எவ்வித கட்டணமும் இன்றி நுண்படம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட் டுள்ளது. பல நூலகங்கள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகப் பணிகளை அறிந்து இவ்வாறு நூல்களைப் பாதுகாக்க முன் வருகின்றனர்.

உலகின் மிகப் பெரிய நூற்பட்டியல் தளம் OCLC (Online Computer Library Center) என்று அழைக்கப்படும் கணினித் தளமாகும். இத்தளத்தில் இந்திய மொழிகளில் இந்தியும் சமஸ்கிருதமும் தான் அதிக அளவில் பட்டியலிடப்பட்டிருந்தன. தமிழ் நூற்பட்டியல் 4ஆம் இடத்தில் இருந்தது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் முயற்சியால் இப்போது தமிழ் இரண்டாமிடத்திற்கு நகர்த்தப் பட்டிருக்கிறது. இந்தத் தளத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் நூலகம், சிங்கப்பூர் தேசிய நூலகம் மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகங்கள் நூற்பட்டியலை இணைக்கின்றன. அவ்வாறு இணைப்பதற்குப் பயிற்சியும் பெற்றிருக்கின்றன. இதனால் உலகிலுள்ள அனைவரும் தரவுகள் இருக்குமிடத்தை எளிதில் கண்டுகொள்ளமுடியும்.

பயிற்சிப் பட்டறைகள்

இந்நூலகத்தில் பணிபுரியும் 26 நபர்களில் 20 பேர் முதுகலை நூலக அறிவியல் மற்றும் ஆய்வியல் நிறைஞர் (தமிழ், வரலாறு) படித்தவர்கள், மேலும் முனைவர் பட்டத்திற்காக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நூலகத்தில் பணிபுரியும் வல்லுநர்கள் ஆவணப்படுத்தல், நூற்பட்டியலிடுதல், நுண்படமெடுத்தல், மின்னணுவாக்கம் செய்தல், நூல் பாதுகாத்தல் போன்றவற்றில் பிரிட்டிஷ் நூலகம், அமெரிக்க காங்கிரஸ் நூலகம், வெல்கம் அறக்கட்டளை போன்ற சர்வதேச நூலகங்களில் பயிற்சிப் பெற்றுள்ளனர். அவ்வாறு பயின்ற அத்தொழில்நுட்பத்தையும் பயிற்சியினையும் இந்நூலகம் மற்ற நூலகங்களுக்கு வழங்கி வருகிறது. இந்நூலகத்தில் பயிற்சிப் பெற்ற சில நூலகங்கள் மற்றும் ஆவணப் பாதுகாப்பு நிறுவனங்களின் பெயர்கள் பின்வருமாறு:

·     தமிழ்நாடு ஆவணக் காப்பகம், சென்னை

·     மதன் பரஸ்கார் புஸ்தகாலயம், நேபாளம்

·       Centre for Studies in Social Sciences, Calcutta (CSSSC),

·     இந்திய தொழில் நுட்பக் கழகம் (மிமிஜி)- கான்பூர்,

·     பிரஞ்சு இன்ஸ்டிட்யூட், புதுச்சேரி

·     சுந்தரய்யா விஞ்ஞான கேந்திரம், ஹைதராபாத்

·     உருது ஆராய்ச்சி மையம், ஹைதராபாத்

·     Center for the Study of Marathi Culture (CSMC), புனே

·     கோத்ரேஜ் ஆவணக் காப்பகம், மும்பை

·     Tata Institute of Fundamental Research (TIFR) Archive, மும்பை

·     கலா«க்ஷத்ரா பவுண்டேஷன், சென்னை

·     மியூசிக் அகாதமி, சென்னை

ஆலோசனை வழங்கும் சேவை

நூலகப் பட்டியல், மென்பொருள், மின்னணுவாக்கம், நுண்படமெடுத்தல், ஆவணங்களைப் பாதுகாத்தல் போன்றவற் றிற்கு பிற நூலகங்களுக்குத் தேவைப்படும் ஆலோசனையை இந்நூலகம் வழங்கி வருகிறது. மேலே பட்டியலிட்டுள்ள பல நிறு வனங்களுக்கு மட்டுமல்லாமல் இச்சேவையை UNESCOவிற்காகவும், சத்யஜித் ரே பவுண்டேஷன், IISc., பெங்களூர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை ஆகிய நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது.

சொற்பொழிவுகள்

பல்வேறு அறிஞர்களைக் கொண்டும் ஆய்வாளர்களைக் கொண்டும், பல்வேறு தலைப்புகளில் இதுவரை 60 சொற்பொழிவு கள் நடந்துள்ளன. இச்சொற்பொழிவுகளின் மூலம் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் செயல்பாட்டை இந்நூலகம் செய்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள், ஆய்வாளர்கள் இச்சொற் பொழிவுகளில் கலந்துகொள்கிறார்கள். சில சொற்பொழிவுகளின் சுருக்கத்தைக் கீழ்வருமாறு காணலாம்.

வ. கீதா “காந்தி மறுவாசிப்பு - பாலினம், மதம் மற்றும் நம்பிக்கை” என்ற தலைப்பில் இந்திய விடுதலைக்கு முன்பும், விடுதலைக்குப் பின்பும் மக்களின் பார்வையில் காந்தி எவ்வாறு திகழ்ந்தார் என்பதின் மூலம் காந்தியை மறுவாசிப்பிற்கு உட்படுத்தினார்.

கவிஞர் கனிமொழி, (மாநிலங்களவை உறுப்பினர்) “சென்னை சங்கமம், ஒரு கலாச்சார நிகழ்வு” என்ற தலைப்பில் சங்கமத்தில் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நகர்ப்புறத்தில் பொங்கல் விழாவையும் நாட்டுப்புறக் கலைகளையும் உயிர்ப்பிப்ப தற்கு சென்னைச் சங்கமம் ஒரு பாலமாக அமைந்திருக்கிறது என்பதைத் தெரிவித்தார்.

முனைவர் அஸ்கோ பர்போலா, (சிந்துவெளி எழுத்துக்களின் வல்லுநர், ஹெல்சின்கி பல்கலைக் கழகம்), ““Is the Indus Script indeed is not a writing system”” என்ற தலைப்பில், சிந்துவெளி எழுத்துகள் ஒரு மொழியை உள்ளடக்கியவை என்பதையும், அதே சமயம் ஸ்டீவ் பார்மர், ரிச்சர்ட் ஸ்ப்ரோட் மற்றும் மைக்கேல் விட்சல் போன்ற அறிஞர்கள் சிந்துவெளி எழுத்துக்கள் ஒரு மொழியை உள்ளடக்கியவை அல்ல என்ற கருத்தை ஆதாரங்களுடன் மறுத்துப் பேசினார்.

பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன் (வரலாற்றுத்துறை, மிட்சிக்கன் பல்கலைக்கழகம், USA), எப்.டபிள்யூ.ல்லிஸூம் திராவிடச் சான்றும் என்ற தலைப்பில் எல்லிஸ்துரை தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டினைப் பற்றியும், அவர் ‘திராவிட மொழிகள் வடநாட்டு மொழிகளிலிருந்து வேறுபட்டவை’ என்ற கருத்தை கி.பி.1816லேயே கால்டுவெல் காலத்திற்கு முன்பே வலியுறுத்தியவர் என்று கூறினார்.

இச்சொற்பொழிவுகளைத் தொடர்ந்து நடத்துவதற்கான செலவுகளை நூலகமே ஏற்றுவருகிறது. இவ்வாண்டு, முதல் முதலாக ரா. ராகவையங்காரின் பெயரில் முனைவர் பத்மாசினி கண்ணன் அவர்கள் அறக்கட்டளை சொற்பொழிவுகளை நிகழ்த்த பொருளுதவி கொடுத்துள்ளார்.

கண்காட்சிகள்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. இக்கண்காட்சிகள் பல்வேறு துறைசார்ந்தும் பல பொருண்மை களின் மூலம் வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தி மாணவர் கள், ஆய்வாளர்கள், அறிஞர் பெருமக்கள், மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினர்க்கும் பயன்படும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், நூலகச் செயல்பாட்டில் கண்காட்சி நடத்தி வருவதை முக்கியப் பணியாகக் கொண்டு பொதுமக்களும் மாணவர்களும் காணமுடியாத பல அரிய செய்தி களை இலவசமாகக் காண, சேவை மனப்பான்மையுடன் செயல் பட்டு வருகிறது. மேலும் இக்கண்காட்சிகளுக்கு அத்துறை சார்ந்த அறிஞர் பெருமக்களின் ஆலோசனையைப் பெற்றும், இலவசமாகக் கையேடுகளை அச்சிட்டு வழங்கியும் கண்காட்சி களை நடத்தி வருகிறது. குறிப்பாக இக்கண்காட்சிகளைச் சென்னையிலுள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்களுக்கு பயன்படும் விதம் அனுப்பி வைக்கிறது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இதுவரை நடைபெற்ற கண்காட்சிகளின் விவரம் பின்வருமாறு காணலாம்.

முதல் கண்காட்சியாக ஐரோப்பிய அறிஞர் சீகன்பால்கு அவர்கள் தரங்கம்பாடிக்கு வருகைபுரிந்த 300வது நினைவு ஆண்டை யட்டி 2005இல், அவரின் தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் பல அரிய தகவல்களைக் கொண்டு இக்கண்காட்சி அமைக்கப் பட்டது.

2006ஆம் ஆண்டில் சென்னையும் பதிப்பும் என்ற தலைப்பில் சென்னை மாகாணத்தில் உருவான அச்சு உருவாக்க வரலாற்றை யும் துண்டுப்பிரசுரங்கள் அச்சிடுதல், நூல்கள் பதிப்பு, போன்று சென்னையில் உருவான அச்சுப் பண்பாட்டை இக்கண்காட்சி விளக்கியது.

டிசம்பர் 2007இல் இசை பரப்பிய ஆரம்பகால ஊடகங்கள் என்ற பொருண்மையில் கி.பி.1850களுக்குப் பிறகான தமிழில் இசைக் கருவிகள், இசை நூல்கள், இசைக் கலைஞர்கள் ஆகியவை தொடர்பான அரிய செய்திகளை இக்கண்காட்சியின் மூலம் பலரும் அறிந்தனர். குறிப்பாக ஆரம்ப காலத்தில் அச்சிடப்பட்ட இசை நூல்கள், ஒலித்தட்டுகள் ஆகியவற்றைக் கொண்டு இக்கண்காட்சி வடிவமைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை மாகாணத்தில் அச்சிடப்பட்ட பல்வேறு நூல்களைக் கொண்டும் அவற்றின் மூலம் சென்னையில் அல்லது தமிழகத்தில் எவ்வாறான போராட்ட நிகழ்வுகள் நடைப்பெற்றன என்பதைப் பின்வரும் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டது.

சிந்துவெளி நாகரிகம் தொடர்பான கண்காட்சி ஜனவரி 2009ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் சிந்துவெளி நாகரிகத்தின் மையமான ஹரப்பா, மொகஞ்ச தாரோ, லோத்தல், தோலவிரா, தைமபாத் போன்ற இடங் களிலும் மற்றும் தமிழகத் தில் உள்ள அதன் கூறு களைப் பற்றியும் ஆய்வு செய்த அறிஞர்களைப் பற்றியும், அந்நாகரிகத்தில் வாழ்ந்த மக்களின் பண் பாட்டு எச்சங்கள் குறித்தும் இக்கண்காட்சி விளக்கியது. இதனை மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார்.

ஆகஸ்ட் 2009ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் காந்தி என்ற தலைப்பில் மகாத்மா காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு எப்பொழுது, எங்கு, எதற்காக வந்தார் என்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டு காந்தி வந்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று களஆய்வு செய்து, இக்கண்காட்சி நடத்தப்பட்டது.

ஜனவரி 2010ஆம் ஆண்டு நகரத்தாரும் தமிழ்ப்பதிப்பும் என்ற தலைப்பில், நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தமிழ்ப்பதிப்புல கில் செய்த பங்களிப்பை மையமாகக் கொண்டு பல அரிய செய்திகளைத் திரட்டி இக்கண்காட்சி அமைக்கப்பட்டது. தமிழில் சங்க இலக்கியம் முதல் நாவல்இலக்கியம் வரை பல அரிய நூல்களைப் பதிப்பித்தும் புரவலர்களாக இருந்தும் நகரத்தார் சமூகம் திகழ்ந்தது என்பதை இக்கண்காட்சி சித்திரித்தது.

மேலே குறிப்பிட்ட கண்காட்சிகளை ஜெர்மனியிலுள்ள ஹலே நிறுவனம், இந்து நாளேடு, சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம், சென்னை வில்லிங்டன் கார்ப்ரேட் நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், எம்.ஆர் உமையாள் ஆச்சி எம்.ஆர் அருணாசலம் அறக்கட்டளை போன்ற பல்வேறு நிறுவனங்களின் உதவியுடன் நடத்தப்பட்டது. இக்கண்காட்சிகள் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் தமிழ்நாட்டில் கல்வெட்டுகள், நாணயங்கள், பானையோடுகளில் எழுத்துக்கள், நடுகற்கள், சிறுபாணர் சென்ற பெருவழி, தமிழ்க் கணிதம், சினிமா, விளம்பரம் என்னும் பல்வேறு தலைப்புகளில் கண்காட்சிகளை நடத்தவுள்ளது.

முகவரி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், மூன்றாவது குறுக்குச் சாலை, சிபிடி வளாகம், தரமணி, சென்னை- 600113 தொலைபேசி: 044-22542551/2 மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- க.சுந்தர்

Pin It