அனுபவங்கள் 2

கேட்டுக்கேட்டுச் சலித்துவிட்டது. நேருக்கு நேராகவும், மறைமுகமாகவும், வார்த்தைகளாலும், செய்கையாலும் கேட்டுக்கேட்டுச் சலித்துவிட்டது. இப்போதெல்லாம் மறுப்ப தில்லை. காரணம் சொல் வதில்லை. சப்பைக்கட்டு கட்டுவ தில்லை. விட்டுவிடுகிறேன், பெருந்தன்மையாக. சந்தோஷமாக. கதை யின் முடிவில் லக்கி லூக் ஜாலியாகப் பாடிக்கொண்டே போவதைப்போல்.

நீங்கள் புதிதாக ஏதாவது ஒரு சாப்பாட்டையோ, தின்பண் டத்தையோ சாப்பிட்டால் அதன் சுவைபற்றி மற்றவருக்கு எப்படித் தெரிவிப்பது? என்னதான் அதன் சுவைபற்றிச் சொன்னாலும், அதைப் பற்றிக் கேட்பவரால் அதனைச் சரியாக உணரமுடியாது. முடிந்தால் நீங்கள் சாப்பிட்ட உணவை அவருக்குக் கொஞ்சம் கொடுத்தால் வேண்டுமா னால் அவருக்கு அதன் சுவைபற்றித் தெரியலாம். அப்படியே கொடுத் தாலும் அவருக்குப் பிடிக்குமா என்று தெரியாதுதான். இது தான் என்னுடைய புதிய உத்தி இப்போது. அவர்கள் கையில் ஒன்று கொடுத்துவிடுவேன்.

எதைப்பற்றிச் சொல்கிறேன் என்று புரியவில்லையா? எல்லாம் படக்கதை அல்லது சித்திரக்கதை என்று தமிழில் அழைக்கப்படும் 'காமிக்ஸ்' பற்றித்தான்.

காமிக்ஸ் படிக்க ஆரம்பித்து ஏறக்குறைய முப்பத்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. இருந்தாலும் முதல் முதலாகப் படிக்கும்போது நான் உணர்ந்த அந்த த்ரில் இன்னும் இருக் கிறது. என்னுள் இருக்கும் காமிக்ஸ் பற்றிய ரசனை மட்டும் இன்னமும் அந்தப் பள்ளிச் சிறுவனின் வயதிலேயே இருக்கி றது. வளர விரும்பவில்லை நான். மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் என்னை இன்னும் உருப்படியாகக் காப்பாற்றி வருவது இந்த ரசனைதான். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

எழுபதுகளின் கடைசியில் படிக்க ஆரம்பித்தேன். அப்போ தெல்லாம் கதைப் புத்தகம் கொண்டு வருபவன்தான் வகுப்பில் ஹீரோ. எனக்கு அப்போதெல்லாம் தோன்றுவதுண்டு, இந்த வாத்தியார்களின் வேலையே மாணவர்கள் சந்தோஷமாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்வது என்பது மட்டும்தானா? படி, ஹோம்வொர்க் செய் என்றெல்லாம் சொன்னால் பரவாயில்லை, ஆனால் கதைப்புத்தகம் படிக்கவேண்டாம் என்று சொல்வதின் லாஜிக் இன்னும் எனக்குப் புரியவில்லை. என் மகளின் பள்ளியில் (இந்தியாவில் இல்லை) தினமும் ஒரு கதைப்புத்தகம் படிக்கச் சொல்கிறார்கள். மூன்று நாட்கள் ஆங்கில புத்தகம், இரண்டு நாட்கள் தமிழ் புத்தகம். இந்தப் புத்தகங்கள் எடுக்க நூலகம் போய்வருவது ஒரு முக்கிய வேலையாகிவிட்டது இப்போதெல்லாம். இந்தப் புத்தகம் படிக்கும் பழக்கத்தால் ஆசிரியர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது சுலபமாக இருக்கிறதாம். என் மகளின் ஆசிரியரைச் சந்தித்தபோது சொன்னார்.

எனக்கு இந்த வருத்தம் எப்போதுமே உண்டு, இந்தியச் சூழ்நிலையைப் பற்றி. பள்ளிகூடத்தில்தான் இது ஒரு பிரச்சினை என்றால், புத்தகக் கடைகளிலும் பிரச்சினைதான். புத்தகங்களை ஒருநிமிடத்திற்கு மேல் பார்த்தால் கடைக்கார ரின் பார்வை தாங்க முடியாது. பார்வையாலேயே சுட்டெரித்து விடுவார். அந்தப் புத்தகத்தை வாங்காமல் போனால், திரும்ப அந்தக் கடைக்குப் போனால் நம் கைக்குப் புத்தகம் வரவே வராது. ஆனால் நான் இங்கே புத்தகக்கடைக்குப் போனால் ஏறக்குறைய நான் வாங்க விரும்பும் புத்தகத்தை அங்கேயே படித்து முடித்துவிடுவேன். ஒரே புத்தகத்தில் பல பிரதிகள் இருந்தால் ஒரு பிரதி மட்டும் பிரித்துப் படிப்பதற்காகவே வைத்திருப்பார்கள். படித்துவிட்டு பிடித்திருந்தால் நீங்கள் வாங்கலாம், இல்லையென்றால் பரவாயில்லை. இதுகூட ஒரு நல்ல வியாபார உத்திதான். நான் இதுபோலப் படித்துவிட்டுப் பல புதிய புத்தகங்களை வாங்க ஆரம்பித்து இருக்கிறேன்.

நான் தமிழ்க் காமிக்ஸ் புத்தகங்களைப் பற்றி இங்கே எழுதப் போவதில்லை. அதைப்பற்றி எழுதுவதென்றால் ஒரு மாமாங்கம் தேவை. இந்தக் கட்டுரை தமிழ்க் காமிக்ஸ் சேகரிப்பில் எனது அனுபவங்கள் பற்றியது.

எல்லா புத்தகங்களும் சேகரிப்புக்கு உகந்தவை அல்ல. புத்தகங்களின் தரம், அதாவது புத்தகங்களின் தற்போதைய நிலைமை, அட்டை, உட்பக்கங்கள், ஓரங்கள் மற்றும் நிறம், இவற்றைப் பொறுத்தே ஒரு புத்தகம் சேகரிப்புக்கு உகந்ததா என்று முடிவு செய்யமுடியும். சுருக்கமாகச் சொல்வதென் றால் சேகரிப்புக்கு உகந்த புத்தகம் என்பது புத்தகப் பதிப்பாளர் எந்தத் தரத்தில் வெளியிட்டாரோ அதே தரத்தில் இருக்க வேண்டும், அவ்வளவுதான். இதைப் பற்றி என்னுடைய சக காமிக்ஸ் நண்பர்களின் கருத்து வேறுவிதமாக இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் நான் உலகளாவிய காமிக்ஸ் சேகரிப்பாளர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறேன். தமிழகத்தில் இன்னும் இந்த விழிப்புணர்வு வரவில்லை.

இருந்தாலும் நான் பேசுபவர்களிடம் இதைப்பற்றித் தெளிவாக விளக்கிவிடுவேன். ஏறக்குறைய தமிழகத்தில் உள்ள பெரிய சேகரிப்பாளர்கள் எல்லோருக்கும் இந்தத் தரம்பற்றி ஓரளவுக்கு இப்போது தெரியும். நான் எல்லோரிடமும் என்னுடைய சேகரிப்பில் உள்ள இதழ்களின் பட்டியலைக் கொடுத்து இருக்கிறேன், சேகரிப்பிற்கு வேண்டிய பட்டியலையும் கொடுத் திருக்கிறேன். எனவே அவர்களுக்கு என்னுடைய வேண்டிய பட்டியலில் உள்ள புத்தகங்கள் கிடைத்தால் உடனே சொல் வார்கள். இப்போதெல்லாம் அவ்வளவாகப் புத்தகங்கள் கிடைப்பதில்லை. ஏனென்று கேட்டால், புத்தகங் கள் இருக் கிறது, ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இல்லை என்று சொல்வார்கள். இந்த அளவிற்கு அவர்கள் யோசிப்பதே ஒரு பெரிய மாற்றம்தான்.

புத்தகத்தின் தரத்தைப் பொறுத்து Grading (தர வரிசை) உண்டு. புத்தம் புதிய புத்தகம் என்றால் அது Mint (புதியது), அதற்கு அடுத்த தரம் Very good (ஏறக்குறைய புதியது, ஆனால் அட்டை ஓரம் கொஞ்சமாக மடங்கி இருப்பதுபோல மிகச் சிறிய குறைகள்). இதற்கு அடுத்த தரம் Good (அட்டையில் கிறுக்கல், அட்டை லேசாக மடங்கி இருத்தல், உள்ளே ஒரு பக்கம் கொஞ்சம் கிழிந்து இருத்தல் போன்ற இரண்டு அல்லது மூன்று குறைகள் இருப்பது). இதற்கு அடுத்தது Reading copy என்று பெயர், அதாவது படிப்பதற்கு மட்டும் அல்லது வேறு நல்ல தரத்தில் கிடைக்கும்வரை வைத்துக்கொள்வதற்கு மட்டும். இந்தபுத்தகத்தில் முன்னட்டையோ, பின்னட்டையோ இருக்காது, சில பக்கங்களும் இருக்காது. துரதிஷ்டவசமாகத் தமிழகத்தில் கிடைக்கும் காமிக்ஸ்களில் அதிகபட்சம் இந்தத் தரத்தில்தான் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் விழிப்புணர்வு இல்லாததும், வியாபார காரணங்களும். ஒரு முறை ஒரு புத்தகத்தைப் படித்தால் போதும் என்ற மனநிலை இருப்பதே தரமற்ற புத்தகங்கள் தயாரிப்பதற்கான முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

ஒரு புத்தகம் பல வருடங்கள் இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் தயாரிப்பாளர்களுக்கு இல்லை. இது காமிக்ஸ் பதிப்பகத்தாருக்கு மட்டுமல்ல, மற்ற தமிழ்ப் புத்தகத் தயாரிப்பாளர்களுக்கும் பொருந்தும். ஆனால் அவர்கள் காரணம் சொல்வது புத்தகம் படிப்பவரின் மனஓட்டம் மற்றும் புத்தகம் வாங்குபவரின் நிதி நிலைமை. புத்தகம் வாங்குபவர் பத்து ரூபாய்தான் கொடுக்கத் தயார் என்றால் அவருக்கு அந்தத் தரத்தில்தான் புத்தகம் கிடைக்கும். அதைவிட அதிகம் எதிர்பார்க்க முடியாது. வெவ்வேறு தரத்தில் புத்தகம் தயாரிப்பது என்றால், அதுவும் பிரச்சினை தான். ஏனென்றால் பதிப்புரிமை பெறுவதற்கு புத்தக விலை ஒரு முக்கிய அங்கம். இருவித விலையில் புத்தகம் பதிப்பிப்பது இதனால் சாத்தியமில்லை. இப்போதைக்கு இதற்கு என்ன தீர்வென்று தெரியவில்லை.

மற்றுமொரு வியாபாரக்காரணம், நடைபாதை வியாபாரி களின் கைங்கர்யம். ஒரு புத்தகம் அவர்கள் கையில் கிடைத் தால் முதலில் அவர்கள் செய்வது அதிலுள்ள விலையைக் கிழிப்பதுதான். சேகரிப்பாளர்களுக்கு இது ஒரு பெரிய சாபக் கேடு. சமீபத்தில் நண்பர் ஒருவர் நூறு புத்தகங்களை அருமை யான தரத்தில் வாங்கினார், எல்லாவற்றிலும் விலை மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. அதுமட்டும் இல்லையென்றால் எல்லா புத்தகங்களும் மின்ட் அல்லது வெரி குட் தரத்தில் வந்திருக்கும். ஆனால் இப்போது என் கணிப்பின்படி இந்தப் புத்தகங் கள் எல்லாம் ரீடிங் காப்பி மட்டுமே. கடைவியாபாரிகளிடம் விலையைக் கிழிக்க வேண்டாம் என்று சொன்னால் அவர்களோ, புத்தகம் வாங்க வரும் வாசகர்கள் அட்டையில் உள்ள விலையில் இருந்து குறைத்துத்தான் கேட்கிறார்கள், அதனால்தான் விலையைக் கிழிக்கிறோம் என்று சொல்கிறார் கள். இதனைப் பொறுத்தவரை இப்போதெல்லாம் சேலத்தில் உள்ள நடைபாதை வியாபாரிகள் காமிக்ஸ்களின் அட்டை விலையை கிழிப்பதில்லை என்பது ஒரு சந்தோஷமான விஷயம். ஆனால் சேலத்தில் காமிக்ஸ் விலையும் யானை விலை, குதிரை விலைதான்.

sindhubath_370காமிக்ஸ் விற்பனை இப்போது ஒரு அதீத லாபம் தரும் வணிகமாகிவிட்டது. யாரோ எப்போதோ எந்த புத்தகத்தையோ அதிக விலை கொடுத்து வாங்கியதில் இப்போது எல்லா புத்தகங்களும் விலை உயர்ந்துவிட்டன. ஆனால் இது ஒரு சமீபத்திய நிகழ்வுதான், முன்பெல் லாம் இப்படி இல்லை. எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர், இருக் கின்றனர். இவர் களில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். இவர்களின் தொழிலும் டாக்டர், டிரைவர், விற்பனைப்பிரதிநிதி என பலவிதம். இவர் களெல்லாம் அறிமுகமானது காமிக்ஸ் புத்தகப் பண்டமாற்று வியாபாரத் தில்தான். ஆனால் நிறைய பேர் புத்தகங்களை விற்றுவிட்டதால் இப்போ தெல்லாம் பண்ட மாற்றுக்கு புத்தகம் கிடைப்பதில்லை.

யோசித்துப்பார்க்கிறேன் இந்தப் புத்தகம் சேமிக்கும் பழக்கம் எப்போது ஆரம்பமானது என்று.

நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது 1979இல். நான் முதன் முதலில் படித்தது முத்து காமிக்ஸின் 100வது இதழ். இது என்னுடைய நண்பனின் அண்ணன் வாங்கிய புத்தகம். என் நண்பன் இந்தப் புத்தகத்தை ஒரு நாள் பள்ளிக்குக் கொண்டு வந்திருந்தான். அன்று அவனிடமிருந்து வாங்கிப்படித்தேன். கண்டதும் காதல். இன்றுவரைத் தொடர்கிறது. அடுத்த சிலமாதங்களுக்கு நான் சில புத்தகங்களைப் புத்தகக் கடைக ளிலும் நண்பர்கள் வீட்டிலும் பார்த்தேன். ஆனால் படிக்க முடியவில்லை. ஏறக்குறைய ஒரு ஆண்டு கழித்தே மீண்டும் படிக்க, வாங்க வாய்ப்பு கிடைத்தது. “கடலில் தூங்கிய பூதம்”, “பனிமலை பூதம்” ஆகிய முத்து காமிக்ஸ் புத்தகங்களை நடை பாதைக் கடைகளில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. கோடை விடுமுறையில் தாத்தா வீட்டிற்குப் போகும்போது, மாமா மகன் ஒரு சில புத்தகங்களை வைத்திருந்தான்.

அவன் என்னை விடக் கொஞ்சம் ஆர்வக்கோளாறு உடையவன். சாம, பேத, தான, தண்டம் என எல்லா முறைகளையும் தாராளமாக உபயோகிப்பான். லவட்டிக்கொண்டு வருவதும் உண்டு. அந்த ஊர் நூலக அதிகாரி அவனை நூலகத்தில் அனுமதிப்பதில்லை, அந்த அளவிற்கு “புகழ்” பெற்றவன். அப்போதெல்லாம் புத்தகம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர, அவற்றைச் சேர்க்கவேண்டும் எனத் தோன்றியதில்லை. கோடை விடுமுறையில் சேர்த்த புத்தகங்களும், பள்ளி திறந்த பின்னர் பெற்றோர் புண்ணியத்தில் பழைய புத்தகக்கடை சென்று சேர்ந்துவிடும். அந்த சமயத்தில் “இரும்புக்கை மாயா மாயவன்” என்ற ஒரு புத்தகத்தை என் தந்தையிடம் அடம் பிடித்து வாங்கியது நன்றாக ஞாபகம் இருக்கிறது.

இரண்டு ஆண்டுகள் கழித்து என் தந்தைக்கு வேலை மாற்றம் ஆகியது. சேலம் அருகில் ஒரு ஊர். இங்கே வந்த பின்னர்தான் பள்ளியில் புத்தகப் பண்டமாற்று ஆரம்பம் ஆனது. என்னுடைய நண்பர்கள் சிலருக்கு ஆங்கிலம் அவ்வள வாக வராது. அதனால் பள்ளிப்பாடம் கேட்க என்னிடம் வருவார்கள். அதற்குக் கைமாறாக அவ்வப்போது சில காமிக்ஸ் கள் கிடைக்கும். ஒன்பதாம் வகுப்பிற்கு வந்த பின்னர் என்னு டைய பள்ளி நண்பன் ஒருவன், கொஞ்சம் வசதியானவன், கடையில் வாங்கும் பழக்கம் கொண்டவன், அறிமுகம் ஆனான். அவன் வாங்கும் புத்தகங்கள் எப்போதும் என்னிடம் தான் இருக்கும். வாங்க காசு உள்ளவன் அதை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவனுடைய புத்தகப் பாதுகாவலன் ஆனேன் நான். ஒரு வருடம் கழித்து அவனுடன் ஒரு சண்டை. சில மாதங்கள் பேசவில்லை. ஆனால் அவனுடைய புத்தகங் கள் என்னிடமே தங்கிவிட்டன. அவனுக்கு அந்தப் புத்தகங்க ளைத் திருப்பித் தருவதா, இல்லையா என்ற குழப்பம் கொஞ்ச நாள் நீடித்தது. இந்தப் புத்தகங்களைத் திருப்பிக்கேட்டால் என்ன செய்வது என்பதாலேயே அவற்றையெல்லாம் ஜாக்கிர தையாக வைத்திருந்தேன். இதுதான் என்னுடைய முதல் கலெக் சன். பின்னர் அந்தப் புத்தகங்களை அவனிடம் கொடுத்துவிட்ட போதிலும், நிறைய புத்தகங்கள் இருந்தால் நன்றாக இருக்கிறது என்பது மனதில் பதிந்துவிட்டது. இப்படித்தான் என்னுடைய புத்தகம் சேகரிக்கும் பழக்கம் ஆரம்பமானது.

புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பலர் அதனைச் சேகரித்து வைப்பதில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் இரவல் தருவதுதான். பணமோ, பொருளோ கடன் வாங்கி னால் திருப்பித்தரும் அளவிற்கு யாரும் புத்தகங்களைத் திருப்பித் தருவதில்லை. எனக்கு இது ஒரு பெரிய பிரச்சினை யாக இருந்ததில்லை. நான் தீவிரமாகப் புத்தகம் வாங்க ஆரம் பித்தது கல்லூரி சேர்ந்த பிறகுதான். அது ஒரு பொறியியல் கல்லூரி என்பதால் காமிக்ஸ் படிப்பவர்கள் மிகவும் குறைவு. அதிலும் தமிழ்க் காமிக்ஸ் என்றால் இரண்டாம் தரம்தான் (ஆங்கில காமிக்ஸ் படிப்பது பற்றி பெருமையாக சொல்வார் கள்). கல்லூரி முடிந்தபின்னர் தமிழ் நாட்டைவிட்டு வெளியே வந்துவிட்டேன். நான் வேலை பார்த்த இடத்தில் தமிழ் பேசுப வர்களே குறைவு. தமிழ்க் காமிக்ஸ் படிப்பவர்கள் இல்லவே யில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இந்தியாவில் பதிப்பிக்கப்பட்ட இந்திரஜால் காமிக்ஸ் நான் செல்லுமிடங்க ளில் எல்லாம் நடைபாதைக் கடைகளில் தாராளமாகக் கிடைத்தது. 1998இல் ஏறக்குறைய இருநூறு இந்திரஜால் காமிக்ஸ் நூறு ரூபாய்க்கு வாங்கியது ஞாபகம் இருக்கிறது. (தற்போது இதன்மதிப்பு ஏறக்குறைய இருபதாயிரம் ரூபாய்). தமிழ்க் காமிக்ஸ் ஓரளவிற்கு வருவது குறைந்துகொண்டிருந்த நேரம் இது. அதனால் ஆங்கில, மற்றும் இந்தியாவில் பதிப்பிக் கப்பட்ட காமிக்ஸ் புத்தகங்களை வாங்க ஆரம்பித்தேன். அப்போது என்னுடைய நண்பர்கள் யாருக்கும் காமிக்ஸ் படிக்கும் பழக்கம் இல்லை. அதனால் இரவல் கொடுப்பது மில்லை. எல்லா புத்தகங்களும் சேர ஆரம்பித்தன.

இரண்டாவது முக்கிய காரணம் வீட்டில் உள்ளவர்கள். முக்கியமாகப் பெற்றோர்கள். நாம் கொஞ்சநாள் வீட்டில் இல்லை என்றால் நம்முடைய பொருட்கள் எல்லாம் வெளியே போய்விடும். இந்தப் பட்டியலில் முதலிடம் பிடிப்பது புத்தகங்கள்தான். ஏனென்றால் புத்தகம் வாங்குபவர் தினமும் வீதியில் வருவார். கைமேல் காசு நிச்சயம், அதுவும் உடனடி யாக. இதனாலேயே நிறையபேர் அவர்களுடைய புத்தகச் சேகரிப்புகளை இழந்ததுண்டு. இந்த விஷயத்திலும் நான் அதிர்ஷ்டசாலி. என் அப்பா நிறைய புத்தகம் படிப்பவர். அதனால் வீடுமுழுக்க புத்தகங்கள் இருக்கும். அவற்றைக் கடை யில் போடவேமாட்டார். அதனால் என்னுடைய புத்தகங்க ளும் தப்பித்தன. என் தந்தையார் வேலைகாரணமாக இடம் மாறிச் செல்லும்போது அவருடைய புத்தகங்களுடன் என்னு டைய காமிக்ஸ் புத்தகங்களும் பிரயாணம் செய்யும். இப்போது கூட என் பெற்றோர் வீட்டில் எனக்கென்று ஒரு இடம் உண்டு, புத்தகம் வைப்பதற்காகவே.

புத்தகங்களை வாங்கினால் மட்டும் போதாது, சேமித்து வைத்தால் மட்டும் போதாது, அவற்றைப் பாதுகாப்பாகவும் வைக்கவேண்டும் என்பது இந்தியாவை விட்டு வெளியே வந்தபின்னர்தான் தெரிந்தது. நான் புத்தகம் வாங்கும் கடை களில் அவற்றை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, அதன் பின்னால் ஒரு அட்டையும் வைத்திருப்பார்கள். மேலும் அவற்றை நேராக (vertical) வைத்திருப்பார்கள். இல்லையெனில் ஓரங்கள் மடங்கிவிடும். இது எனக்கு முதலில் வித்தியாசமாகத் தெரிந்தாலும், விலை அதிகமாக இருந்தாலும் அதன் முக்கியத் துவம் தெரிந்தது. இப்போது நானும் என்னுடைய காமிக்ஸ் நண்பர்களும் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறோம். எனக்கு இப்போது புதிதாக அறிமுகமாகும் காமிக்ஸ் நண்பர்களுக்கு நான் இப்போது முதலில் கொடுப்பது பிளாஸ்டிக் கவர்தான்.

புத்தகங்கள் சேமிப்பதால் ஒரு சில விஷயங் களைச் சரிபார்ப் பது சுலபம். காமிக்ஸ் பற்றிய பதிவுகள் ஆரம்பித்த போது நிறைய நண்பர்கள் என்னிடம் தகவல் கேட்பதுண்டு.  என்னி டம் இல்லாத விபரங்களை நானும் மற்றவரிடம் காமிக்ஸ் சேகரிப்பாளர்களிடம் கேட்டுப் பெறுவதுண்டு.

ஒரு சிலருக்குக் காமிக்ஸ் சேர்ப்பது என்றால் கதைகளைச் சேர்ப்பது. அதாவது ஒரு கதை ஒரு புத்தகத்தில் இருந்தால் போதும். அது முதல்பதிப்பாகவோ, மறுபதிப்பா கவோ இருந்தால் போதும். ஆனால் நான் எல்லா புத்தகங் களையும் சேர்க்கிறேன், வரிசைக்கிரமமாக. இதற்கு முக்கிய காரணம் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம். ஒரு புத்தகத்தில் கதை தவிர பல விஷயங்கள் பதிப்பிக்கப்படுகின்றன. விளம் பரங்கள், புதிர்கள், இலவச இணைப்புகள், அந்த காலகட்டத் திய நிகழ்வுகள் எனப் பல விஷயங்கள் உண்டு. அவையெல்லாம் எனக்கு முக்கியம், கதைகளையும் சேர்த்து.

தற்போது காமிக்ஸ் சேகரிப்பது என்பது ஒரு அதிக செலவு டைய பழக்கம் என்று ஆகிவிட்டது. முன்பு காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பலர் இப்போது பொருளாதார ரீதியில் நல்ல நிலைமையில் இருப்பதால், அவர்கள் என்ன விலை கொடுத்தாவது காமிக்ஸ் வாங்கத் தயாராக இருக்கிறார் கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்து ரூபாய்க்குக் கிடைத்த புத்தகம் இப்போது முன்னூறு ரூபாய் விலை போகிறது. அவ்வளவு விலை கொடுத்தாலும் இப்போதெல்லாம் புத்தகங் கள் கிடைப்பதில்லை. யாரவது நல்ல மனிதர்கள் கொடுத்தால் தான் உண்டு. அப்படிக் கிடைத்ததுதான் பால்கன் காமிக்ஸ். சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் ஒருவரிடம் இருந்து வாங்கினேன். இருபத்தி இரண்டு புத்தகங்களும் ஒன்றாக வைத்துத் தைத்து இருந்தது. இந்த காமிக்ஸ் 68ம் ஆண்டு வந்தது. இது இங்கிலாத்தில் வந்து கொண்டிருந்த ஈகிள் காமிக்ஸின் தமிழ்ப் பதிப்பு. இந்திரஜால் காமிக்ஸ்களுக்குப் பிறகு தமிழில் ஒரு சிறந்த முயற்சி என்று சொல்லலாம்.

வண்ணப் பக்கங்களும், கருப்பு வெள்ளை பக்கங்களும் மாறி மாறி இருக்கும். மொத்தம் இருபது பக்கங்கள். பத்து பக்கங்கள் வண்ணத்தில், மற்றவை கருப்பு வெள்ளையில். எண்பதுகளில் வந்த முத்து காமிக்ஸ் வாரமலருக்கு இது முன்னோடி. பலதரப்பட்ட கதைகள், புதிர்கள், விஞ்ஞான விஷயங்கள் எனப் பல விஷயங்கள் இதில் வந்தன. விலையோ எழுபத்தைந்து காசுகள்தான். வரவேற்போ பிரமாதமாக இருந்தது. இருந்தபோதிலும், இருபத்தி இரண்டு இதழ்கள்தான் வந்தன. விலையும், வாசகர்களின் சந்தா எண்ணிக்கையும் குறைந்தது தான் முக்கிய காரணம் என்று பதிப்பகத்தார் சொன்னார்கள். தமிழ்க் காமிக்ஸ் வரலாற்றிலேயே இதுதான் கடைசி இதழ் என்று சொல்லி வெளியிட்டவர்கள் இவர்கள் தான். இந்த மாதம் இருமுறை பத்திரிக்கை 15 ஜனவரி 68இல் ஆரம்பித்து 25 நவம்பர் 68இல் நின்றுவிட்டது. சென்னையிலி ருந்து இதனைப் பதிப்பித்தவர்கள் டால்டன் பதிப்பகத்தார்.

பலநாடுகளில் இருந்து இப்போது காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குகிறேன். இவற்றிற்கு மூலகாரணம் தமிழில் நான் படித்த புத்தகங்கள்தான். தமிழில் வந்த அப்புத்தகங்கள் பல நாடுகளில் இருந்து வந்தவை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா (முக்கியமாக இங்கிலாந்து) இவற்றில் முக்கியமானவை. தமிழில் வந்த புத்த கங்களின் ஆங்கில மற்றும் பிறமொழி மூலங்களைச் சேகரிப்ப தில் இப்போது நான் ஆர்வம் காட்டுகிறேன். காமிக்ஸ் புத்தகங் களைச் சேர்ப்பதற்காகவே நான் இரண்டு ஆண்டுகள் இங்கி லாந்தில் வேலைசெய்தேன் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

சமீப காலங்களில் என்னுடைய சேமிப்பில் அதிக புத்தகங்கள் சேரவில்லை, என்னுடைய தர எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாலா, அல்லது தேவையான இதழ்கள் குறைவாக இருப்பதாலா என்று தெரியவில்லை. ஒரு பத்து புத்தகங்கள் தான் கிடைத்திருக்கும், கடந்த ஓராண்டு காலத்தில். காத்திருக் கிறேன், காமிக்ஸ் சேகரிப்பில் மீண்டும் ஒரு பொற்காலம் வருமென்று நம்பிக்கையுடன்!.

Pin It