அனுபவங்கள் 3

நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எனக்குப் பத்து வயது. எனது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய காலகட்டம் அது.  நான், அம்மா, அப்பா, அண்ணன் ஆகிய நால்வரும் ஒரு சிறிய குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்தோம். மின்சாரம், வானொலி, தொலைக்காட்சி என எந்தவித வசதி வாய்ப்பும் இல்லாத நிலையில் வசித்து வந்தோம்.

தொலைக்காட்சிகளில் வாரந்தோறும் ஒளிபரப்பப்படும் ஒலியும் ஒளியும் ஸ்பைடர்மேன், ஈ மேன் போன்ற நிகழ்ச்சி களை அருகிலிருக்கும் வீடுகளுக்குச் சென்றுதான் பார்ப்பேன்.  சொல்லப்போனால் இவைதான் எனக்குப் பொழுதுபோக்கு களாக முதலில் இருந்தன (ஸ்பைடர்மேன், ஈ-மேன் போன்ற நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட தாக்கத்தினால் கூட காமிக்ஸ் மீது எனக்குத் தனி ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பலமுறை நான் நினைத்ததுண்டு).

1985ஆம் வருடத்தில் ஒருநாள், நான் வசித்துவந்த தெருவில் வசித்துவந்த நஸீர் என்கிற அண்ணன், பாக்கெட் சைஸில் வெளிவந்திருந்த, ஒரு சித்திரக்கதையை ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்தார். (குற்றச் சக்ரவர்த்தியான ஸ்பைடரின்- பாதாளப்போராட்டம்) அவர் படித்துக்கொண்டிருந்த சித்திரக்கதையையும் அதில் வரையப்பட்டிருந்த சித்திரங்களை யும் வியப்பாகப் (முதன் முறையாகப் பார்த்ததால்) பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அண்ணன் கதையைப் படித்து முடித்ததும், அவரிடம் இரவல் வாங்கிப் படிக்கத்தொடங் கினேன். கதையைப் படித்ததுமே, அந்தக் கதைக்குள் நானும் ஒன்றிய மாதிரியான உணர்வு அப்போது எனக்கு ஏற்பட்டது. இப்படித் தொடங்கிய காமிக்ஸ் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. காமிக்ஸ் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவது என்பது, எட்டாத கனியாக அப்போது இருந்தது.

அதனால் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துத்தான் படிப்பேன். (அந்தக் காலகட்டத்தில் லெண்டிங் லைப்ரரிகள் அதிகம் இல்லை. புத்தகங்களைச் சேமித்து வைத்திருப்பவர்கள் தங்களுடைய புத்தகங்களை 25 பைசா, 50 பைசாவுக்கு வாடகைக்கு விடுவார்கள்) ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ் எனப் பலவித காமிக்ஸ் புத்தகங்களைப் படித்திருந்தாலும், லயன் காமிக்ஸ் மூலமாக வெளிவந்திருந்த சித்திரக்கதைகளைப் படிப்பதில்தான் அதிக ஆர்வம் செலுத்தினேன். டெக்ஸ்வில்லர், ஸ்பைடர், ஆர்ச்சி, ஜான் மாஸ்டர், அதிரடி வீரர் ஹர்குலஸ், இரட்டை வேட்டை யர்கள், ஈகிள்மேன், இரும்புக்கை நார்மன் இன்னும் பல சித்திரக்கதை நாயகர்களின் கதைகளைப் படித்து அவர்களின் தீவிர ரசிகனாக மாறினேன். டெக்ஸ் வில்லரின் பளிங்குச்சிலை மர்மம் என்ற கௌபாய் சித்திரக்கதை எனக்கு மிகவும் பிடித்த கதையாக இருந்ததினால் இந்தக்கதையைப் பலமுறை நான் படித்ததுண்டு.

காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பதாக மட்டுமே இருந்த எனது ஆர்வம் 1987ஆம் வருடத்திற்குப் பிறகுதான் சேகரித்துப் படிக்கவேண்டும் என்ற ஆவலாக மாறியது.  புத்தகங்களை விலை கொடுத்து வாங்கமுடியாத நிலையில் இருந்ததால், பழைய வேஸ்ட்பேப்பர் கடைகளில் எனது கவனத்தைச் செலுத்தினேன். 25 பைசா, 50 பைசாக்களுக்கு அட்டைகள் இல்லாமலும், பக்கங்கள் இல்லாமலும் (சில நேரங்களில் நல்ல நிலையிலும் புத்தகங்கள் கிடைக்கும்) பலவித காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன. ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ், திகில் காமிக்ஸ் எனக் கிடைத்த அனைத்துப் புத்தகங்களையும், வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தேன். அந்தக் காலகட்டத்தில் வீதிக்கு வீதி ஏராளமான பழைய புத்தகக் கடைகள் இருந்தன. அதனால் காலையில் பள்ளிக்குச் செல்வதும், மாலையில் வாடகை சைக்கிளில் பழைய புத்தக வேட்டைக்குச் செல்வதுமாக அதிக பொழுதைக் கழித்தேன்.

சென்னையில் உள்ள (கொடுங்கையூர்) பாட்டி வீட்டிற்குச் சென்றாலும், அங்கும் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு, மூலக்கடை, பெரம்பூர், ஓட்டேரி, அயனாவரம், அம்பத்தூர், புரசைவாக்கம், தங்கசாலை, கொத்தவால் சாவடி, சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, மாதவரம் போன்ற இடங்களில் உள்ள பழைய புத்தகக்கடைகளுக்குச் செல்வேன். அங்கெல்லாம் நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன. இதன் காரணமாக நிறைய புத்தகங்கள் என்னிடம் சேரத்தொடங்கின.

புத்தகங்கள் வாங்குவதற்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம் பள்ளி விடுமுறை நாட்களில் சிறுசிறு வேலை கள் (மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது, சுருட்டுக்கு லேபிள் ஒட்டுவது) செய்யத்தொடங்கினேன். இதன் மூலம் கிடைக்கும் பணத்தையும், சென்னையில் உள்ள பாட்டி வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அங்கு பாட்டி, மாமா, மாமி, பெரியம்மா, பெரியம்மா மகன்கள் என ஒவ்வொருவரும் தரும் பணத்தையும் (5 ரூபாய்) சேமித்து வைத்துக்கொண்டு தான் புத்தகங்கள் வாங்குவேன். நான் முதன்முதலாக விலை கொடுத்து வாங்கிய புத்தகம், ராணி காமிக்ஸில் வெளிவந் திருந்த “புரட்சிவீரன்” என்ற சித்திரக்கதை.

நிறைய புத்தகங்கள் என்னிடம் சேர்ந்திருந்த காரணத்தினா லும், புதிய புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு அண்ணனின் யோசனைப்படி என்னிடம் உள்ள புத்தகங் களை வாடகைக்கு விடுவதற்காக ஒரு மரத்தடியில் சிறிய கடை வைத்தேன்.  புத்தகங்களை 25 பைசா 30 பைசா, 50 பைசா (புத்தக விலைக்கு தகுந்தாற்போல் வாடகை கட்டணம் அமையும்) என வாடகைக்குக் கொடுத்தேன். அதில் சிறிய வருமானமும் வந்தது. ஆரம்பத்தில் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துச் சென்றவர்கள் மாதங்கள் ஆகியும் திருப்பித் தராத தைப் பிறகுதான் உணர்ந்தேன்.  இதனால் நிறைய புத்தகங்களை இழந்தேன். இருக்கின்ற புத்தகங்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று வாடகைக்குவிடும் எண்ணத்திற்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.

புத்தகங்களை வாடகைக்கு விட்டதினால், நிறைய புத்தகங் கள் குறைந்துவிட்டன. அதனால் மீண்டும் புத்தகங்களைச் சேகரிப்பதற்காக உள்ளூர், வெளியூர் பழைய புத்தகக் கடை களில் (சென்னை, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம்) எனது தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. நிறைய புத்தகங்களும் சேர்ந்தன. புத்தகங்களைப் பத்திரப்படுத்தி வைப்பதற்காக ஒரு மரப்பெட்டி தயார் செய்து அதில் புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்தேன்.

sankarlal_370சிறிய குடிசை வீட்டில் நாங்கள் நான்கு பேர் வசித்து வந்தோம். எங்களுடன் நான் புத்தகத்திற்காகத் தயார் செய்திருந்த மரப் பெட்டியும் சேர்ந்துகொண்டதால் இட நெருக்கடி ஏற்பட்டதின் விளை வால் அம்மாவிடம் தினந்தோறும் அடியும், திட்டும் வாங்கி வந்தேன்.  ஒருநாள் இந்தப் புத்தகங் களை எங்கேயாவது தூக்கிப் போட்டுவிட்டு அப்புறமா வீட்டுக்கு வா என்று கறாராகக் கூறிவிட் டார். இடம் பற்றாக் குறை காரணமாக, வேறு வழியில்லாமல் நான் அரும்பாடு பட்டு சேகரித்த அனைத்துப் புத்தகங்களையும் பாதி விலைக்கு வாங்கி விற்கும் கடைகளில் விற்றுவிட்டு எதையோ இழந்து விட்ட உணர்வுடன் வீட்டிற்கு வந்துசேர்ந்தேன்.

இரண்டு மூன்று வருடங்கள் புத்தகங்களைச் சேர்க்கும் எண்ணம் இல்லாமலே இருந்தேன். இதற்கிடையே பள்ளிப் படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு நானும், என் அண்ணனும் வேலைக்குச் சென்றோம். இதனால் குடும்பக் கஷ்டங்களும் ஓரளவுக்கு நீங்கின. 1992ம் வருடத்தில் ஒருநாள் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கருணாமூர்த்தி என்பவர் தான் படித்துச் சேகரித்து வைத்திருந்த அனைத்து காமிக்ஸ் புத்தகங்க ளையும், புத்தக விலைக்கே விற்பனை செய்துகொண் டிருந்தார். அட்டைப்படத்துடன், நல்ல நிலையில் அழகாய் அடுக்கி வைத் திருந்த புத்தகங்களைப் பார்த்ததும், சில நிமிஷங்கள் என்னையே மறந்து புத்தகங்களையே பார்த்துக் கொண்டி ருந்தேன். இயல்பு நிலைக்குத் திரும்பியதும். உடனே அவரிடமி ருந்து சில புத்தகங்களை வாங்கி அப்போதிலிருந்தே புத்தகங்க ளைச் சேகரிக்கவும் ஆரம்பித்தேன். (இன்று தமிழ், இங்கிலீஷ், பிரெஞ்ச், இத்தாலியன், ஜெர்மன் எனப் பலமொழி களில் புத்தகங்களைச் சேகரிக்க அன்று நடந்ததுதான் ஒரு தொடக்க மாக அமைந்தது)

1993ம் வருடத்திற்குப் பிறகு மாதாமாதம் வெளிவரும் புதிய காமிக்ஸ் புத்தகங்களையும் வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தேன். வேங்கை வேட்டை (லயன் காமிக்ஸ்) என்னும் புதிய புத்தகம் வாங்கிய போது, அதில் சென்னையைச் சேர்ந்த T.R.D. தாஸ் என்பவர் தான் சேகரித்து வைத்திருந்த அனைத்து காமிக்ஸ் புத்தகங்களையும் விற்பனை செய்ய புத்தகத்தில் விளம்பரம் செய்திருந்தார். விளம்பரத்தைப் பார்த்த மறுநாளே அவரைத் தேடி சென்னைக்குப் புறப்பட்டுவிட்டேன். பஸ் பயணம் முழுவதும் புத்தகங்களைப் பற்றிய நினைப்பாகவே இருந்தது. மிகுந்த சிரமப்பட்டு, அவரது இல்லத்தைக் கண்டுபிடித்தேன். எனக்கு முன்பாகவே அவருடைய விளம்பரத்தைப் பார்த்து, அவரிடமிருந்து நிறையபேர் புத்தகங்களை வாங்கிச் சென்று விட்டதாக அவர் கூறினார். இருந்தும் அவரிடமிருந்து நிறைய புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன. அனைத்துப் புத்தகங்களை யும் புத்தக விலைக்கே எனக்குக் கொடுத்தார்.

ஒரே புத்தகங்கள் என்னிடம் இரண்டு, மூன்று என இருந்தன. அதன் காரணமாக எதிரிக்கு எதிரி (லயன் காமிக்ஸ்) என்னும் புத்தகத்தில், நானும் விளம்பரம் செய்திருந்தேன்.  விளம்பரத்தைப் பார்த்த நிறைய நண்பர்கள் கடிதம் மூலமாக (அப்போது செல்போன் வசதியெல்லாம் இல்லாமல் இருந்தது.) தொடர்பு கொண்டு, புத்தகங்களை விலைக்கு (நானும் புத்தக விலைக்கே விற்பனை செய்தேன்) வாங்கிக் கொண்டனர். இந்த காலகட்டத்தில் நிறைய வாடகை நூலகங்கள் இருந்தன. நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் அங்கு கிடைத்தன.  ஆனால் அவர்கள் வாடகைக்கு மட்டும்தான் தருவார்கள். விலைக்குத் தரமாட்டார்கள். 100 ரூபாய் கட்டணம் செலுத்தினால், அவர் களுடைய வாடிக்கையாளர்களாக நாம் ஆகிவிடலாம்.  நானும் ஒவ்வொரு வாடகை நூலகத்திலும் மெம்பராகச் சேர்ந்து அவர்கள் தரும் மூன்று நான்கு புத்தகங்களுடன் திருப்தி பட்டுக்கொண்டு அத்துடன் அந்த வாடகை நூலகம் பக்கமே செல்லாமல் இருந்துவிடுவேன். புத்தகங்கள் சேர்க்கப் பல வழிகள் உண்டு.  எனக்கு அப்போது இதுவும் ஒரு வழியாகத் தெரிந்தது.

1993ம் வருடத்திற்குப் பிறகுதான் எங்கள் ஊரில் (புதுச்சேரி) சு.ராஜா, ராஜகணேஷ், ஜோசப் மணி, கோகுல், சென்னையில் உள்ள ஸி.ஜி.முருகன், சேலத்தில் பு.ஆனந்த், அருண், திருவண்ணா மலையில் உள்ள ஷி.ஜெய்சங்கர், விழுப்புரம் சி. சங்கர், காட்டு மன்னார் கோயில் அருள் எனப் பல பேனா நண்பர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது. பல ஊர்களில் உள்ள காமிக்ஸ் நண்பர்களை ஒருவரை ஒருவர் பார்க்காமலே கடிதம் மூலமாக வும், தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டு புத்தகங் களை வாங்குவதும், விற்பதும் மற்றும் புத்தகப் பண்டமாற்று (Exchange) முறையிலும் புத்தகங்களை மாற்றிக்கொள்வது எனப் பல வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். ஆரம்பத்தில் என்னுடைய முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ், மினி லயன், போன்ற காமிக்ஸ் புத்தகங்களைக் கொடுத்து லயன் காமிக்ஸில் வெளிவந்திருந்த அனைத்து புத்தகங்களையும் சேர்த்தேன். இதற்குப் பிறகுதான் முத்து, திகில், மினிலயன், மேத்தா, ராணி, இந்திரஜால், சக்தி, முத்து மினி, வித்யார்த்தி மித்ரம், பார்வதி சித்திரக்கதை, மேகலா, மதி எனப் பல்வேறு காமிக்ஸ் புத்தகங்களையும் சேர்க்க ஆரம்பித்தேன்.

இண்டர்நெட், செல்போன் வசதிகள் தற்போது அதிகம் இருப்பதினால் நிறைய நண்பர்கள் தற்போது காமிக்ஸ் புத்தகங்களைச் சேகரித்து வருகின்றனர். 1000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும் குறிப்பிட்ட சில புத்தகங் களை மட்டும்தான் அதிகமாகத் தேடி வருகின்றனர். அவர்கள் தேடும் சில புத்தகங்களின் விவரங்கள்.

மாலைமதி காமிக்ஸ்                                              நாயகன்                      வருடம்

மொராக்கோ மர்மம்   -                                            காரிகன்                        1975

குகையில் ஒரு பெண் -                                          சிஸ்கோ                      1975 

நம்பிக்கைத் துரோகி

டாக்டர் செவன்  -                                                     காரிகன்                       1975

அப்பாவித்திருடன்     -                                           சிஸ்கோ                      1975

வேலைக்காரி   -                                                      ரிப்கெர்பி                     1975

மோசடி விடாதே      -                                             சிஸ்கோ                      1975

ராக்கெட் ராட்ஸசன்   -                                           காரிகன்                       1975

கருப்பு முத்து    -                                                     ரிப் கெர்பி                     1975

ஒற்றைக்கண்ணாடி   -                                          சிஸ்கோ                      1975

இரட்டை முகம்  -                                                      ஜானி                        1975

கொலைகாரக் கோமாளி    -                               சிஸ்கோ                        1975

தோற்பதற்காகவே

சூதாடிய  மோசக்காரி -                                        ரிப் கெர்பி                      1975

கடத்தல் மன்னர்கள்   -                                        காரிகன்                        1976 

பெண் வெறியன் உஷார்-                                   சிஸ்கோ                       1976

மரண வலை    -                                                     காரிகன்                        1976

காணாமல் போன

கவர்ச்சி நட்சத்திரம்   -                                        ரிப் கெர்பி                      1976

மர்மப் புதையல் -                                                சிஸ்கோ                        1976

கொள்ளைக்காரன் தீவு                                      காரிகன்                         1976

பாதி நோட்டு    -                                                  ரிப் கெர்பி                       1976

நடிகர் கடத்தப்பட்டார் -                                       ஜானி                            1976

மூழ்கிய கப்பலில்     -                                        காரிகன்                         1976

ரத்தப் பூ பூத்த சிகரத்தில்   -                             ஜானி                             1976

இரண்டாவது தாடி    -                                     ரிப் கெர்பி                         1976

நாலுகால் போக்கிரி   -                                   ரிப் கெர்பி                         1976

திருடர்களுக்குள்

திடீர் ரகளை                                                       ஜானி                              1976

சுட்டவன் யார்?  -                                          ரிப் கெர்பி                         1976

முத்து காமிக்ஸ்                                             நாயகன்                      வருடம்

இரும்புக்கை மாயாவி -                               மாயாவி                           1972

பாம்புத்தீவு -                                                   மாயாவி                            1972

கொரில்லா சாம்ராஜ்யம்                            மாயாவி                           1974

கடத்தல் ரகசியம்      -                                 சார்லி                                1974

குரங்கு தேடிய

கொள்ளையர் புதையல்                           சார்லி                                  1975

நெப்போலியன் பொக்கிஷம் -                 ஜார்ஜ்                                 1975

மைக்ரோ அலைவரிசை 848 -               ஜானிநீரோ                         1975

கொள்ளைக்காரப் பிசாசு    -                    மாயாவி                             1975

மடாலய மர்மம்             -                          காரிகன்                               1975

வைரஸ் -X-                                                காரிகன்                               1976

கல் நெஞ்சன்                   -                        கில்டேர்                              1976

ரயில் கொள்ளை                                      சிஸ்கோ                             1976

ஜீம்போ                                                       வேதாளர்                            1977

முகமூடி வேதாளன்                               வேதாளர்                          1977

இரத்த வெறியர்கள்   -                           சிஸ்கோ                             1977

விசித்திர கடற்கொள்ளையர்            வேதாளர்                             1977

பேய்க்குதிரை வீரன்   -                         சிஸ்கோ                             1977

ஆவியன் கீதம்                                     சிஸ்கோ                              1978

யார் குற்றவாளி -                                சிஸ்கோ                              1978

சூனியக்காரியின் சாம்ராஜ்யம்      வேதாளர்                             1979

முத்து மினி காமிக்ஸ்                     நாயகன்                            வருடம்

வாயு வேக வாசு      -                         வாசு                                       1974

புதையல் தீவு மர்மம்  -                     பிரபு                                       1975

படகு வீடு மர்மம்      -                       வாசு                                       1975

சூரப்புலி சுந்தர்  -                               சுந்தர்                                      1975

காந்த மலை மர்மம்   -                       பிரபு                                     1975

இன்ஸ்பெக்டர் விக்ரம் -                 விக்ரம்                                   1976

தபால் தலை மர்மம்  -                      பிரபு                                       1976

முதல் வேதாளனின் கதை  -      வேதாளர்                               1977

லயன் காமிக்ஸ்                             நாயகன்                               வருடம்

இரும்பு மனிதன் -                           ஆர்ச்சி                                  1984

கொலைப்படை  -                         ஸ்பைடர்                                1984

லயன் சூப்பர் ஸ்பெஷல்    -      ஸ்பெஷல்                               1987

டேஞ்சர் டயபாலிக்    -                டயபாலிக்                              1987

வைகிங் தீவு மர்மம்  -                  டெக்ஸ்                                  1989

லயன் செஞ்சுவரி ஸ்பெஷல்    ஸ்பெஷல்                          1994

மினி லயன்                                      நாயகன்                               வருடம்

பயங்கரப் பொடியன்  -                   லக்கிலூக்                              1990

கொள்ளைக்கார கார்-                     சுட்டி, நட்டி                             1990

இதுபோன்ற புத்தகங்களைத்தான், புத்தகங்களைச் சேகரிக் கும் அனைவரும் ஆவலாகத் தேடிக்கொண்டும், 300, 500, 1000 என விலைகொடுத்து வாங்கிக்கொண்டும் இருக்கின்றனர்.  குறிப்பாக டேஞ்சர் டயபாலிக் (லயன் காமிக்ஸ்) என்னும் புத்தகம் மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றது. புத்தகங்களைச் சேகரிப்பது என்பது தற்போது எளிதான காரியமாக இல்லை. ஆரம்பத்தில் புத்தகங்களைச் சேமித்து வைத்திருப்பவர்கள் விற்பனை செய்வதாலும் அல்லது புத்தகப் பண்டமாற்று முறையில் புத்தகங்களை மாற்ற முன் வந்தாலும் தான் பழைய புத்தகங் களைச் சேகரிக்க முடிகிறது. பழைய புத்தகக் கடைகளிலும் வாடகை நூலகங்களிலும் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயமாகத் தற்போது மாறிவிட்டது.

காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி 25 வருடங் கள் கடந்துவிட்ட பின்னரும், காமிக்ஸ் மீது உள்ள ஆர்வமும் தேடலும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

Pin It