இந்தியாவின் இரு பெருநாளிதழ்களான தினத்தந்தி, தினமலர் ஆகிய இரண்டுமே எழுத்துக்கெதிரான பேச்சின் வேறுபட்ட வகைமையை உரிமை கோருகின்ற, பல்வேறுபட்ட வகுப்பினர், பாலினரின் உணர்வு நிலையை ஈர்ப்பனவாக இருந்து வருகின்றன.

       - விளக்கமானதொரு மறுசொல்லாடலை இதழியல் மொழியில் ஏற்படுத்தியமை

- பல தர நிலைகளில் அமையும் வாசிப்புப் பயிற்சி

- செய்தி ஆக்கத்திறனில் நாளிதழ்களுக்கான முறைசார் பண்புகள் இவற்றிடையேயான உறவை வளர்த்துள்ள முறைமையினைக் கவனப்படுத்த வேண்டியுள்ளது. எனது ஒப்பீட்டில் இவ்விரு இதழ்களின் முக்கிய வேறுபாடுகளாக இவற்றின் பரவல் எல்லை / வெளி - உயிர்ப்புத்தன்மையுடன் ஊடகப்பிரதிப் பழக்கத்தை உருவாக்குதல், முன்முடிவு செய்யவியல்கின்ற சமூகநகர்வினூடாகச் சொல்லாடல் இயக்கத்தைத் தகுதிப்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கின்றேன்.

நாளிதழ்கள் உரிமை கோரும் பேச்சுமொழிப் பயன்பாடு இரு வேறுபட்ட முக்கிய நிகழ்வுகளாக உள்ளது. எழுத்து வடிவத் தமிழ் வாசிக்கும் பொழுது உரக்கப்பேசப்படுதலை ஒரு நாளிதழிலும் அதே பேச்சுத்தமிழ் மௌனமாக வாசிக்கப்படுதலை இன்னொன்றிலும் காண்கிறோம். (ஊடகம், பொதுமக்கள், வாசிப்பு, மொழிநடை, விற்பனை / பரவல், இந்தியா)

தமிழகக் கிராமங்களில் முதியோர் எழுத்தறிவியக்கப் பாடங்கள் தொடர்பாக நான் மேற்கொண்டிருந்த களப்பணிகளின் போது சந்தித்த எழுத, வாசிக்கத் தெரிந்த கிராமத்து முதியவர்களிடம் அவர்களின் ஆரம்பக்கல்வி பற்றி அடிக்கடி விசாரித்தேன். அவர்களில் வேலன், ஒரு தலித் (முன்பு “தீண்டத்தகாதவர்”) அறுபதைக் கடந்த வயதுடன் பணிவும் எளிமையும் உடையவர், எனது இப்பணிகளின் போது மிக்க ஆர்வத்துடன் உரையாடலில் பங்குகொண்டார். கிராமப்பள்ளியில் இரண்டாண்டுகள் மட்டுமே கல்வி கற்றிருந்த, அனா ஆவன்னா சொல்லத் தெரிந்திருந்த அவர், “என்னுடைய உண்மையான வாத்தியார், தினத்தந்தி என்றுதான் நான் சொல்லவேணும்''1 என்பதை என்னிடம் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார். வேலன் இங்கு “வாத்தியார்” எனக் குறிப்பிடுகின்ற நாளிதழ் இரண்டாயிரத்தில் இந்தியா அளவில் பரவலாக அதிகமாக வாசிக்கப்படும் நாளேடாகக் கணக்கிடப்பெற்றது.2 இந்தச் சாதனை இந்தியர்களில் 6.3ரூ மக்கள் மட்டுமே தமிழ் பேசுவோர் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. 1976 -1996 ஆண்டுக்கால இடைவெளியில் இந்திய நாளேடுகளின் எண்ணிக்கை ஆயிரம் நபருக்கு ஒரு பத்திரிகை என நான்கு மடங்கு அதிகரித்தது. இதைத்தான் வரலாற்றாசிரியர் ரோபின் ஜெஃப்ரி (2000) “இந்தியாவின் நாளிதழ் புரட்சி” என அழைக்கின்றார். இப்புரட்சிக்குத் தலைமை வகித்த பத்திரிகைகளில் ஒன்று தினத்தந்தி. ஜெஃப்ரியின் இம்முக்கிய ஆய்வுக்குப் பின்னரும்கூட இந்தியாவில் நாளிதழ் வாசிப்போரின் எண்ணிக்கை அதிசயிக்குமளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஊரக எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கைப் பெருக்கமும் கேபிள் டிவிக்களின் பெருக்கமும் இவ்வதிகரிப்பிற்கு3 ஒத்துழைப்புச் செய்துள்ளன.

இக்கட்டுரை தமிழகச்சூழலில் நாளிதழ் / அச்சுப் புரட்சியின் உருவம் எவ்வாறானதென்பதை விற்பனை / பரவல் கொள்கைகளின் அடிப்படையில் புரிந்துகொள்ள முயல்கின்றது. இரண்டாவதாக, வேலன் போன்ற தமிழ் வாசகத் தலைமுறையினரிடம் தினத்தந்தி போன்ற நாளிதழ்கள் “வாத்தியார்” எனும் எண்ணத்தை எவ்வாறு கட்டமைக்கின்றன என்பதை விளக்குகின்றேன். வேறுபட்ட நாளேடுகளின் பரவலும் அவை எவ்வாறு தனித்துவமான வழிகளில் கல்வி புகட்டுகின்றன என்பதை விளக்கிடத் தினத்தந்தியின் சமூக வெளிப் பயணத்தை ஆரம்பம் முதல் இரண்டாயிரத்தின் நடுப்பகுதி வரை அதன் முதன்மைப் போட்டி இதழாகக் கருதப்படுகின்ற தினமலருடன் ஒப்பிடுகின்றேன். வட்டார நாளிதழ் ஊடகச் சந்தை பெருமளவு வளர்ச்சியடைந்திருப்பது மட்டுமல்ல சமூகஒழுங்குகளையும் பன்மைத்துவப்படுத்தியுள்ளது. தினத்தந்தி உழைப்பாளர் / தொழிலாளர் நாளேடாக, ஆடவர் வெளிகளில் டீக்கடை, தெருவோரக் கூடுமிடங்களில் புழங்குகின்றது. அதே வேளையில், தினமலர் “குடும்பப் பத்திரிகை”யாக வீடுகளில் “தனியாக” வாசிக்கப்பட்டு விரிவடைந்து வரும் தமிழ் பேசும் நடுத்தரவர்க்க ஆண் பெண் இருபாலாரிடமும் புழங்குகின்றது.4 இவ்விரு இதழ் களும் பின்பு என்னால் விளக்கப்படுவது போல அதிகரித்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கேற்பத் தமது மீள்வரவைப் பதிவுசெய்யும் வகுப்பு மற்றும் பாலின வெளிகளின் உற்பத்தியுடன் ஆழ்ந்த தொடர்பினைக் கொண்டுள்ளன.

இரட்டை (Dioglossia) மொழிக் கருத்தியலைச் சார்ந்து பல்வேறு எழுத்து வடிவங்கள் கடை பிடிக்கப்படுகின்ற சூழலில் மாற்றாக இவ்விரு இதழ்களும் அதீதமொழியாகப் பேச்சுத்தமிழைப் பயன்படுத்துவதாகப் பொது உரிமை கோருகின்றன. இங்கு மொழி பொதுமக்கள்மொழி என்றும் கல்வியறிவுடையோர் மொழி என்றும் பிரிவு கொள்வது போல வழக்கமாக எழுதப்படுவது ‘உயர்’ந்தது, செந்தமிழின் வடிவங்கள் என்றும் பேசும் கொச்சைத் தமிழ் ‘தாழ்’ந்தது, என்பது போன்ற எழுதப்படாத விதிகளை நாளிதழ்கள் உடைக்கின்றன. வட்டாரச்சொற்கள் அவற்றின் ஒலியியல் மற்றும் சொல்லியல் வடிவங்கள் ஆடவர்த கொச்சைப் பேச்சின் வடிவம் அச்சிடப்பெற்றது.5 இரு இதழ்களின் இதழாளர்களும் ஆசிரியர்களும் எழுத்துத் தமிழின் கடுமை காரணமாக, கடந்தகாலத்தில் அவ்வளவொன்றும் அதிகமாக வாசித்திராத மக்கள், இன்று வாசிக்கத் தொடங்கியிருப்பதே இவ்வணிக வெற்றியின் பின்புலம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். தமிழகத்தில் வாசகர்களும் பெரும்பத்திரிகைகள் “பேச்சு”நடையை அச்சிடுவதாக ஒப்புக்கொள்கின்றனர். எவ்வாறாயினும் சரி, இவ்விரு இதழ்களும் வேறுபட்ட மொழி மற்றும் வடிவ முறைகளால் வெவ்வேறான வாசகர் வட்டத்தைக் கவர்ந்து, அவர்களுக்கான அழகுணர்வினை வளரச் செய்துள்ளன. 

இதழியல் மொழியில் தெளிவான மாறுபட்ட சொல்லாடல், (வேறுபட்ட வாசிப்பு முறைகள், நாளிதழ்களுக்கே உரிய எழுத்துருவாக்கத்திறன் என்னும் அடிப்படைத் தொடர்புகளைக் கருத்தில் கொண்டாலும் கூட நான், எனது ஒப்பீட்டில் முக்கிய வேறுபாடாக இவ்விரு இதழ்களும் பரவிப் புழங்கிவருகின்ற வாசகவெளியிடையேயான வேறுபாட்டையே முதன்மையாகக் கவனத்தில் கொண்டுள்ளேன். இப்பரவல் வெளி - படைக்கப்பட்ட ஊடகப்பிரதியின் உயிர்ப்புப் பழக்கத்தை வளர்ப்பதுடன் முன் தீர்வு செய்ய இயல்கின்ற சமூக நகர்வு இலக்கினை உருவாக்கும் சொல்லாடலின் இயக்கம் - இவையெல்லாம் உண்மையில் வேறுபட்ட புரிதல்கள் மற்றும் மக்கள் கூறுகின்ற “பேச்சுத்தமிழ்” எழுத்து வடிவத்தின் கட்டமைப்பே. (6) சுருக்கமாக, இவ்விரு நாளிதழ்களும் எனது ஒப்பீட்டில், செய்தி மற்றும் நாளிதழ்மொழி அடிப்படைகளில் வேறுபட்ட பேச்சுமுறையினைச் சார்ந்திருக்கின்றன. ஒரு இதழ், “பேச்சுத்தமிழை” வாசிப்பு எனும் நோக்கில் உரக்கப்பேசுவதற்கு எழுதுகிறது. மற்றொரு இதழ் “பேச்சுத்தமிழ்” வடிவத்தைத் தனிமையில் மௌனமாக வாசிப்பதற்காகப் பயன்படுத்துகிறது. இவ்விரு இதழ்களின் உற்பத்தியாளர்ளும் நுகர்வோர்களும் உரிமை கோருகின்ற அதீதமொழி, செய்தி உருவாக்கத்திறனுக்கும் செய்திக்குமான உறவைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் பலவகை மாதிரியான பேச்சுத் தமிழை, வெவ்வேறான பரவல்விளைவுகளுக்காக இவ்விதழ்கள் பயன்படுத்தி வருவதையும் எனது ஆய்வில் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இக்கட்டுரை நாளிதழ் வாசிக்கும் பொதுமக்களை உருவாக்கியவர்களுக்கும் நாளிதழுக்கும் இடையேயான திறந்த உரையாடலை முன்வைக்கும் நோக்கில் எழுதப்பாட்டுள்ளது. அதீத மொழிச் சொல்லாடல் வெளிப்படுகின்ற உற்பத்தியாளர்களின் மொழிக் கருத்தியல் மற்றும் செய்தி உருவாக்கமும் இனவியல் ரீதியாகச் சுட்டவியல்கின்ற நுகர்வுச் செயல்பாடுகளுடன் தொடர்புறுவதை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். பரவலாக்கத்தின் முக்கியக் கூறுகளாகத் தரவுகளையும் பகுப்பாய்வையும் கவனப்படுத்துகின்றது. (7) இவ்வாறு, இக்கட்டுரை இதழியலாளர்களின் கோணத்திலிருந்து வெகுசன ஊடாட்டம் மற்றும் பரவலாக்கத்தின் அரசியலைப் புரிந்துகொள்ள, வளர்ந்து வரும் செய்தியின் மானிடவியல் குறித்த அண்மைக்கால நிகழ்வு களுக்கு நிறைவு சேர்க்கின்றது. (eg., Boyarin 1993; Chartier 1992; Darnton 1982; Hoggart 1957; Radway 1984). குறிப்பிட்ட பரவல் முறைகள் மீதான எனது புலனாய்வு, அச்சிடப்பட்ட வெகுசன ஊடகங்களின் மொழிநடை, பலதரப்பட்ட வாசகர்களிடையே பால் மற்றும் வகுப்புசார் வேற்றுமைகள் ஊடுருவதை வாசிப்பின் இனவரைவியலினூடாக விளக்க முற்படுகிறது. இருப்பினும் இக்கட்டுரை சமூக மொழியியல் பிணைப்பின் பிரிவுகளை விடவும் வெளிப்படையான மொழி வேறுபாட்டின் மீதான வரையப்படுகின்ற சமூகவியல்பு மற்றும் நுகர்வின் பல்வேறுபட்ட முறைகளில் கவனத்தைச் செலுத்துகிறது. பல்லாண்டுகளாகப் பல்வேறுபட்ட வாசிப்புப் பழக்கங்கள் உருவாகியுள்ளதையும் தமிழகத்தின் நடைமுறைத் தருக்கத்தை, பிரதி நிறுவனத்தை, வகுப்பு மற்றும் பாலினப் பழக்கவழக்கங்களை வடிவமைத்தலில் நாளிதழ்கள் செலுத்தியுள்ள பங்கேற்பினை வெளிப்படுத்த முயன்றுள்ளேன்.

சந்தைகள், பரவல் உண்மை / நம்பகத்தன்மை

நாளிதழ்கள் திட்டவட்டமான மொழிச்சந்தைகளில் புழங்குகின்றன, அங்குச் சொற்கள் சரக்குகள்; விற்பனை நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை (cf. Anderson 1991; Bourdieu 1991; Irvine 1989). இப்போது நாளிதழ்களின் ஏமாற்றுத்தன்மை தீவிரமாகக் கவனப்படுத்தப்பட்டு வருகிறது. செய்தித்தாள்கள் அவற்றின் நம்பகத்தன்மையை இழந்து அரசியல் பொருளாதார அணுகுமுறையுடன் மொழியைப் பயன் கொள்வதை, அவற்றின் சந்தைப்புழக்கத்தைப் பரவல் எண்ணிக்கையில் காணலாம். அதேவேளையில் அவை வாசிப்புப்புழக்கம், மொழிப் பயன்பாடு, பிரதியின் சமூகவாழ்வு, எழுத்தின் நம்பகவடிவு போன்ற மொழியின் தனித்துவங்களைப் புறக்கணிக்கின்றன. இதழியல் சூழலில் பரவல் (Circulation) என்பதன் பொருள், கண்டிப்பாக வியாபாரம், சந்தைப்பங்குகள், அவற்றின் செய்தி உருவாக்கல், அதன் விநியோகம் அல்லது கருத்துப்பரவலாக்கம் என்றிவைதான்6. இருப்பினும், இம்மாதிரியான பரவல் சார்ந்து பொதுவாகக் குறிப்பிடப் பெறுகின்ற பரவல் எண்ணிக்கைக்கு அவசியமான சில சமூகவியல் அடிப்படைகளை மிகத்தூய, மொழியின் அரசியல் பொருளாதார ரீதியான பரவல்கொள்கை மூலமாக வகுத்துக் கொள்ளமுடியும்”7.

செய்தி உருவாக்கங்களின் குறிக்கோள்தன்மைமிக்க சமூகத்தள நகர்வு மற்றும் பரவலின் வட்டாரம் சார் புரிதலைக் குறிப்பிட்ட பிரதியாக்கச் செயல்பாட்டின் விளைவாக, அதாவது சூழல் அழிப்பு மற்றும் நிகரான ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்குத் தாவிச் செல்கின்ற மறுசூழலாக்கம், பிரதித்தன்மையை உருவாக்குதல் இவற்றிடையேயான உறவினின்றும் அதற்கான கோட்பாட்டுச் சட்டகங்களின் தனித்த பகுப்பாய்வினை, இப்பொழுது புகழ்பெற்று விளங்கும் மானிடவியல் மொழியிலிருந்து தொடங்கலாம். (Bauman & Briggs 1990; Silverstein & Urban 1996). அடுத்தபடியாக, சமூகத்தில் கால இடவெளியில் ஊடாக நகரும் சொல்லாடல் அலகின் தோற்றம் (Munn 1986), அதே நிகழ்வுக்கு முன் உருவாக்கம் பெறுகின்ற பிரதியிடையூடு தொடர்பின் தொடர்ச்சி (Culler 1981, Silverstein 20 05) (8). ஒருவேளை Debra Spitulnik சாம்பியா வானொலியில் நிகழ்த்தியுள்ள ஆய்வுகள் (Spitulnik 1996, 1998, 2002) வழி வளர்த்தெடுத்த இன்வரைவியல் நோக்கில், வெகுசன ஊடகப்பிரதிகளின் பரவலைப் புரிந்துகொள்ள மிகச் சரியான முன்மாதிரி முறையியலாக அமையக்கூடும்.

ஸ்பூட்டுநிக் (Spitulnik 1996) தமது அண்மைக்கால ஆய்வுக் கட்டுரை ஒன்றில் வானொலிப் பேச்சு அன்றாடப் பேச்சில் மறுசுழற்சி பெறுவதன் எடுத்துக்காட்டுகளை, சமூகத்தளத்தில் பிரதியிடையூடு பரவலின் விளைவுகள் சமூகத்துடனான ஒருவரின் உறவுகளைக் கற்பனை செய்யவோ நேருக்குநேர் கலந்துரையாடலுக்கு அப்பாற்பட்ட கோட்பாட்டுரீதியான நீட்சியாகவோ புரிந்துகொள்வதற்காக வகுத்துக் காட்டுகின்றார்8. ஊடகச் செயல்பாடுகள் இத்தகைய உயிர்ப்பியக்கத்தின் ஊடாக நவீனப் “பொதுச் சமூகத்தை” உற்பத்தி செய்வதாக (மைக்கேல் வார்னகின் Michael Warner: 2002) பொருள்கோடலினின்று பிரதிகளின் அடையாள ஏற்பு, குறிப்பிட்ட மக்களை முன்னிறுத்துகின்ற பிரதிகளின் கொள்திறன்சார் மீள்தன்மை, புதியவர்களைக் குறைந்தபட்சமேனும் இணைந்து வரச்செய்தல் ஆகியவை குறித்துக் கவனம் கொள்வது அவசியம். இக்கட்டுரையில் Spitulnik அவர்களின் அணுகுமுறையிலிருந்து உந்துதல் பெற்ற முறையியலை, ஒருவேளை வார்னர் பதிவில் காணப்படுவதைவிடக் குறைந்த அளவே தலைமைச் செல்வாக்குடைய புது நடுத்தரவகுப்புச் சமூகவியல்பு, முதலாளிய நவீனத்துவச் சூழலின் கீழ் எவ்வாறு அப்பொதுச் சமூகம் பிரதியைச் சார்ந்தியங்குவதில் உள்ள மாறுதல்கள் பற்றிய மிகச் சிறு வேறுபாடு கொண்ட புரிதலை வாதாடுவதற்காக இக்கட்டுரையில் பயன்படுத்துகின்றேன்.

பிரதியாக்கம் மற்றும் பிரதித்தன்மை இவற்றிடையே நிலவும் வேற்றுமை, அவற்றின் பரவலின் விளைவு, பகுப்புரீதியாகப் பிரித்திட இயல்வனவற்றிடையே உறவுகளின் வகைமைகள் ஆகியவை இடம்பெறும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் நிலையில் இன்று ஆய்வாளர்கள் உள்ளனர்8. குறிப்பிட்ட பிரதியாக்க வெளிகளில் அவற்றின் தனிப்பட்ட பரவல்முறை மற்றும் பொதுத் தன்மைக்கேற்பப் பிரதி ஆக்கமும் பிரதி உற்பத்திப் பழக்கமும் சில குறியீட்டு வடிவங்களாகப் பிணைந்துள்ளமையைக் காணலாம். பின்வரும் பகுப்பாய்வில் நாம் காண்பது போல, ஏதேனும் சில மாதிரியான நாளிதழ் தலைப்புகள், உதாரணமாக, தம் தொடர்பினின்றும் நீங்கித் தம்மை தம் பரவல்வெளி உரையாடலில் தம் எதிர்வினைப் பிரதிகளை அனுமதிக்கின்றன. பரவலின் பொருட்பண்பாட்டின் குறியீட்டியல் பற்றிய ஆரம்பகால இனவரைவியல் ஆய்வுகளும் (eg. Munn 1986), மானிடவியலில் ஊடக ஆய்வுகளும் படைப்பாக்கப் பொருட்களின் வேற்றுமைப்பட்ட இயல்புகள், அவற்றின் ஏற்பில் முக்கியத்துவம் பெறுவது போலவே பொருளின் அகக்கட்டமைப்பு பற்றியும் அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன (Larkin 2008; Spitulnik 2002). எழுத்து மொழி பற்றிய அண்மைக்கால ஆய்வுகளில், உதாரணமாக, மேத்யூஹல் (Mathew Hall 2003) மற்றும் ஷன்ஷீகே நொஷவா (Shunsuke Nozawa; 2007) எழுத்து வகைமைகள் குறிப்பிட்ட வாசிப்பு முறைகளுக்குத் தோற்றம் அளித்திருக்கலாம் என்று கூற முயல்கின்றனர். இதுபோன்ற சில கோட்பாட்டு வளர்ச்சிகள் வரலாறு மற்றும் வாசிப்பின் இனவரைவியலில் பதிவாக்கம் பெற்றுள்ளன. (eg. Boyarin 1993; Chartier 1992; Darnton 1982; Hoggart 1957; Radway 1984). நான் இங்கு வரலாற்றாய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதியின் (1994,2002,2004) கண்டடைதல்களின் மீதாக எனது ஆய்வினை அமைக்கின்றேன்.9

புறவடிவம், அகக்கட்டமைப்பினூடாகத் தகவமைக்கப்பட்டுள்ள உள்வாங்கி ஏற்றலின் பயிற்சிகள், வகைமைகளின் ஊடுநிற்றல் பணி இவற்றிடையேயான சிக்கல்கள் யாவும் உடனுக்குடன் தெளிவு பற்றிய நவீனத்துவக் கருத்தியல்களின் கூர்மையான விமர்சனப் பகுப்பாய்வு முன்னிறுத்தப்படுகின்றது (Bauman & Brigg 2003; Hall 1980, Kunreuther 2006; Mazarella 2006). எனது விவாதத்திற்கு மிகப் பொருத்தமாக மையகோ இனோ (Miyako Inoue(2006) வின் “பெண்மொழியின்” புலனுணர்வின் வடிவங்களைப் புதுமையாகப் படைத்திட்ட ஜப்பானின் “பேசுவது போல எழுது” (Gembun Itchi) இயக்கத்தின் பணி பற்றிய பகுப்பாய்வு அமைந்துள்ளது. இக்கட்டுரையில் நான் விவாதிக்கும் ஒரு நாளிதழ்ப் பேச்சுக்கு நெருக்கமான எழுதல் எனும் நவீனத்துவ விருப்பத்தை உடையது, மொழியின் ஒலிகளுக்கு உரிய தெளிவும் தவறின்மையும் உடையது. “பேச்சுமொழி”யின் குறிப்பிட்ட வகைமைகளின் அடையாளப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவத்தை எழுத்துவடிவில் கொண்டு சேர்க்கும் தோற்றத்தை உடையது. இவ்வாறாக அது காட்சிப்படுத்தப்படுகிறது; மேற்கோள் காட்டப்படுகிறது; வாசகர்களுக்கு இன்பம் ஊட்டுகின்றது.

இக்கட்டுரையில் தினத்தந்தி, தினமலர் என்றிரு நாளிதழ்களை ஒப்பிட்டு, இவை பேச்சிற்கும் எழுத்துக்கும் இடையேயான வேற்றுமைகளை மிக வேறுபட்ட முறைகளில் எவ்வாறு இணைவுபடுத்துகின்றன என்பது குறித்துக் கேட்கப்படும் வினாக்களையும் தீர்வையும் விவாதிக்க உள்ளேன். இந்நாளிதழ்களிடையேயான புறவேற்றுமை ஒருபக்கம், தனிப்பட்ட ஒலிஅமைப்பை உடையது என்ற பொருளில் மொழியியல் மற்றும் சமூக மொழியியல் முக்கியத்துவத்தை உடையது. இன்னொரு பக்கம் நாளிதழ் எவ்வாறு வாசிக்கப்படும் என்ற ஊகத்தின் அடிப்படையில் அமைகின்ற எழுத்து வடிவமைப்பையும் கொண்டுள்ளது. செய்திப் படைப்பாக்கத்தில் அவற்றிடையே பேணப்படுகின்ற முறைசார் வேற்றுமைகளால் பொருண்மை மற்றும் பிரதியின் பரவல் செயல்பாடு தகுதிப்படுத்தப்படுகிறது. இதினின்றும் இந்நாளிதழ்கள் தத்தமக்குரிய வேறுபட்ட பொதுமக்களை, முதன்மையாக வகுப்பு மற்றும் பாலின வழிகள் சார்ந்து உருவாக்கிக் கொள்கின்றன. பொருள் மற்றும் பண்பாட்டுச் சூழல்களே இவ் வேறுபட்ட வாசிப்புமுறைகளுக்கும் மொழி மீதான சொல்லாடல்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதைச் சொல்லிக்கொண்டு இவற்றின் படைப்பாக்க வடிவங்கள் நோக்கி விவாதத்தைத் திருப்புகின்றேன்.

தேநீர்க்கடைகளில் தினத்தந்தி வாசிப்பு

2003 - 2005 ஆண்டுகளில் புதுக்கோட்டைக் கிராமங்களில் களப்பணி செய்துவந்த போது, நான் அடிக்கடி சந்தித்த வேலன் என்பவர் சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்த தனது கிராமத்துத் தேநீர்க்கடையில் இன்றும் அன்றாடம் தினத்தந்தி வாசிப்பவர். அவரது அந்தத் தலித் கிராமத்தில் வேறு கடைகளே இல்லை. கிராம ஏழை மக்களுக்காக வரவிருக்கின்ற அரசாங்க வீட்டுமனைத் திட்டம் பற்றித் தேநீர்க்கடையில் நாளிதழ் வாசித்த வேலன் தனது முதுமை வயதிலும் உலகத்துடன் பெருமளவு தொடர்பு கொண்டிருப்பதை உணர்கின்றார். வேலனின் காலைவேளை வழக்கமாக இவ்வாறு தொடங்குகின்றது. தனது கிராமத்திலுள்ள கோவிலுக்கு நடந்துபோய், அம்மன் நாடியாம்பாளுக்குச் சிறு காணிக்கை செலுத்திவிட்டுத் தேநீர்க்கடைக்கு வருகிறார். தேநீர்க்கடை பெஞ்சில் உட்கார்ந்து ஒரு பீடியைப் பற்றவைத்துப் புகைக்கின்றார். ஒரு சிறு கிளாசில் தேநீர் குடித்துக் கொண்டே நாளிதழின் பக்கங்களைப் புரட்டி வழக்கம் போல் தனக்காகவே உரக்க வாசிக்கின்றார். அன்றாடம் நாளிதழ் வாசிக்கின்ற வேலனின் தவிர்க்கவியலாத காலை வழக்கம் உலகெங்குமுள்ள நாளிதழ் வாசகர்களின் ஒத்த பண்பாகக் காணப்படுகிறது.

குறிப்பிட்ட வழக்கமான காட்சிப்படுத்தல்கள் மற்றும் எண்ணற்ற கல்வி ஆய்வுகளை ஆட்சி செலுத்தக்கூடிய சான்று களில்லாத நம்பிக்கைகளிலிருந்து இவ்வகை மாதிரியான வாசிப்பை எது தனித்துவப்படுத்துகிறது என்றால் தினத்தந்தி பத்திரிகை குழு வாசிப்பை நோக்கமிட்டது. சலூன்கடை, தேநீர்க்கடை போன்ற ஒருமித்த கருத்துடையோர் கூடும் “பொது” இடங்களில் உரக்க வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுவது. பெர்னாட் பேட் (Bernar Bate 2002:324-5) முன்னரே பதிவுசெய்துள்ள இம்மாதிரியான தமிழ் நாளிதழ் வாசிப்பு பெனடிக் ஆண்டர்சனின் ஒரு குழு - சடங்கு போல வீடுகளில் “அமைதியான தனிமையில்,” மூளையின் ஆளுகைக்குள் நிகழ்கிறது எனும் வலிந்த காட்சிப்படுத்தலில் இருந்து மிகவும் வேறுபடுகின்றது (Anderson 1991:35). ஹெபர்மாஸின் (Habermas; 1989) அறிமுகமற்ற புதியோரிடையே அறிவார்த்தமான - விமர்சனபூர்வமான விவாதங்கள் நிகழும் அதிசய காபி கிளப் மற்றொரு வசீகரம்தான் எனினும் தமிழகத்தின் தேநீர்க்கடைகளில் நடக்கும் நாளிதழ் வாசிப்பையும் விவாத அரசியலையும் புரிந்துகொள்வதற்குத் தவறான மாதிரியும் தவறாக வழிநடத்துவதுமாகும். அரசியலை விவாதிப்பதற்காக நாளிதழைச் சுற்றிக் குழுமுகின்ற பொதுமக்கள், முக்கியமாக அறிமுகமற்றோர், சமூக மனத்தால் இணைக்கப்பட்டோ ஆண்டர்சன், ஹேபர்மாஸ் / வார்னர் போன்றோரால் கவனிக்கப்பட்ட நவீன பொதுச்சமூக உறுப்பினர்களோ அல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை யொருவர் அறிந்த, கிராமத்துத் தேநீர்க்கடையைச் சுற்றிய உள்ளூர் வாசிகள்.

தமிழகத் தேநீர்க்கடைகளில் செய்திக்கதைகளை ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குத் தாவி வளர்த்து வாய்மொழிவடிவில் உடல் மொழியுடன் பேசுபவர்கள் பெரிய சமூக அடையாளத்தைப் பெறுகின்றனர். தேநீர்க்கடைகள், ஆடவர்வெளிகளாக, உதாரணமாக, பெண்கள் வயலுக்குச்செல்லும் வழியில் ஒரு தேநீர் குடிப்பதற்காகவோ, ஏதேனும் தின்பண்டம் வாங்குவதற்காகவோ நின்றாலும் கூட எங்கேனும் ஓரமாக ஒதுங்கி நிற்பார்களே தவிர நாளிதழின் செய்திகளுடன் எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை; மேலும் கிராமத்துத் தேநீர்க்கடைகளின் இருக்கை அமைப்பு சாதி ஆதிக்க வரலாற்றின் தொடர்ச்சியைக் காட்டுவதை நான் கண்டிருக்கின்றேன். அங்கு தலித் முதியவர்கள் தேநீர்க்கடைக்கு வெளியே போடப்பட்ட பெஞ்சுகளில் அமர்ந்திருப்பதையோ அல்லது நின்றுகொண்டிருப்பதைப்யோ பார்த்திருக்கின்றேன். இருப்பினும் தேநீர்க்கடையில் செய்தித்தாள் வாசிப்பது வேலனுக்கும் அவரது கிராமத்தினருக்கும் இடையே ஒரு சமூக உறவை அளித்துள்ளது. தேநீர்க்கடைகளில் நாளிதழ் வாசிப்பு சாதிக்கலப்பு, கிராமங்களிடையேயான பேச்சுவார்த்தை, கலந்துரையாடலுக்குப் பெரிதும் வழிவகுத்துள்ளன. மேலும் நாளிதழ்கள் பொதுமுக்கியத்துவம் மிக்க நிகழ்வுகள் குறித்த ஒத்த கருத்தாடலைத் தூண்டவும் செயல்படுகின்றது. இவ்விடத்தில் நான் மற்றொரு தகவலைக் கூறிவிட்டுத் தொடர்கிறேன்.

தினத்தந்தி நாளிதழ் பெரும்பாலான நாட்களிலும் காலை 8.30 மணிக்குக் கிராமங்களுக்கு வந்துசேர்ந்து விடுகிறது. இரண்டு மூன்று மணிநேரத்திற்கு முன்னரே எழுந்துவிடுகின்ற பெரும்பாலான மக்களும் அவ்வேளை தங்கள் வயல்களுக்கோ நகரங்களுக்கோ வேலைக்குப் புறப்பட்டிருப்பார்கள். நாளிதழ் வந்தவுடனே அதன் அகலமான இருபத்திரண்டு பக்கங்களும் பிரிக்கப்பட்டு ஆர்வமுடைய வாசிக்கத் தெரிந்த நபர்களால் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது. தினத்தந்தியின் பக்கவடிவமைப்பு இம்முறையில் பிரிக்கப்பட்ட பின்னும் இலகுவாக வாசிக்க முடிவதுபோல் அமைந்துள்ளது. நாளிதழ் வரவில்லையானால் - ஒரு வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் அப்படி நேர்வதுண்டு- ஏமாற்றமடைந்த மக்கள் உடனே கலைந்து விடுகின்றனர். அந்த நாட்களில் தேநீரும் அவ்வளவாக விற்பனையாவதில்லை. நாளிதழ் வந்துவிடுகின்ற நாட்களில் மீண்டும் மாலை ஐந்து மணியளவில் சிறுகூட்டம் சேர்ந்துவிடுகின்றது. அந்நேரம் பிரிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட நாளிதழின் பக்கங்கள் பெஞ்சுகளிலோ காய்கறிக் கூடையிலோ கிடப்பதைக் காணலாம். யாரேனும் ஒருவர் அதில் வெளியாகியுள்ள வரலாற்றுத்தொடர் பகுதியை மட்டுமோ வீடுகளில் குழந்தைகள், பெண்களுக்காகச் சிறப்பு இணைப்பிதழை எடுத்துச் சென்றிருப்பார்கள்; அல்லது வீடுகளில் பெண்கள் வாசிப்பதற்காகவும் எவரேனும் கொண்டு சென்றிருப்பார்கள். இப்படித் தேநீர்க்கடைகளில் ஒருநாளில் ஒரு தினத்தந்தி நாளிதழ் நூற்றுக்கணக்கான கைகளுக்குச் செல்வதுடன் பக்கத்து ஊர்களுக்கு எடுத்துப் போவதும் சாதாரண நிகழ்வு. ஒருசில நாட்களுக்குப் பின் அவ்விதழ் கடைக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டு எண்ணெய்ப் பலகாரங்கள் சுற்றித் தருவதற்கோ பயிறு, தானியங்கள் பொட்டலம் கட்டவோ பயன்படுத்தப்படுகிறது.

சமனற்ற எழுத்தறிவு பெற்றோரிடையே புழங்கும் நிலையில் மிக எளிமையாகத் தினத்தந்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் “வெகுசன வாசிப்புமுறை.... எழுத்தறிவின்மையின் தடையேது மின்றி, பெரும்பாலும் குழுவாக” எனத் தினத்தந்தியின் பண்புகளாக வேங்கடாசலபதி குறிப்பிடுகின்றார் (1994:290). தினத்தந்தி, தமிழகத்தின் உழைப்பாளி மக்கள் பத்திரிகை என்றே பரவலாக அறியப்படுவதுடன் கல்வியறிவு படைத்த நகர நடுத்தர வகுப்பினர் தவிர அதிகமான வாசக எல்லையை விரிவுபடுத்திய முதல் இந்திய நாளிதழ். “ரிக்ஷாக்காரர்களின் நாளேடு” என்றும் சிலவேளைகளில் கேலி செய்யப்பட்டுள்ளது. வாசிக்கத் தெரியாதவர்கள் தேநீர்க்கடைகளில் வாசிக்கத் தெரிந்த நண்பருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் தலைப்புகள் வாசிப்பதைக் கேட்கின்றனர். யாரோ ஒருவர் தலைப்பை உரக்க வாசிக்க, அத் தலைப்பின்கீழ் அளிக்கப்பட்டுள்ள கதைத்தகவல் பற்றியோ அத்தகவல்கள் எவ்வாறு பதிவு பெற்றுள்ளன என்பதையோ அறிந்துகொள்ளும் அவசியம் ஏதுமின்றி அச்செய்தியின் கதைமீது விவாதம் நிகழ்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.10

நாளிதழின் செய்திகள் ஆராய்ந்தறியப்படாமல் நேரடியாகவே உள்வாங்கப்படுகின்றது. இப்படி ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குத் தாவி விரித்துச் செல்லும் முறைக்கு இடமளிக்கும் நிலையிலேயே நாளிதழின் எழுத்தும் நடையும் வடிவமைக்கப்படுகின்றது. உதாரணமாக, வேலனின் பக்கத்து ஊரில், எனது ஆய்வின்போது, திராவிட தேசீயக்கட்சிகளின் அரசியல் போட்டிகள், மோதல்கள் குறித்த ஒரு தலைப்புச் செய்தி; ஆங்கிலேயரிடமிருந்து பின் தொடரப்பட்ட இந்தியப் பாராளுமன்ற அமைப்பின் சிக்கல்கள் பற்றிய விவாதத்தைக் கிளப்பியதுடன், மக்களாட்சி அமைப்புடன் ஒப்பிட்டுப் பேச வைப்பதை நான் காண நேரிட்டது. அதுபோலவே உள்ளூர் செய்திப்பக்கத்தில் இடம்பெற்றிருந்த திருமணத்திற்குப் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளாததால் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள் பற்றிய செய்தி அவ்வட்டாரத்தில் இருந்துவரும் சாதிகளிடையேயான உறவையும் பக்கத்து ஊர்களில் நிகழ்ந்த காதல்மணத் தோல்வி மரணங்கள் பற்றியும் ஒரு விவாதத்தை எழுப்பியது.

நாளிதழ் செய்தியின் நிகழ்வுக்கு இப்படியொரு சமூகவாழ்வு உண்டு; அவ்வாழ்வு வாசிப்புச் செயல்பாட்டிற்கும் அப்பாற்பட்டது. இதுபோலப் பல சந்தர்ப்பங்களில் நேர்ந்துள்ளது, இப்படி ஒரு தனித்துவமான முறையில்தான் தினத்தந்தி வாசிக்கப்படுகின்றது. இங்கு இந்நாளிதழ், செய்திகளின் விளக்கமான குறிப்புகளின் உதவியின்றியே அது பற்றிய உரையாடலை நிகழ்த்தச் செய்கின்றது. செய்தி எவ்வாறாகப் பதிவுபெற்றுள்ளது என மக்கள் கருத்துரைப்பது அரிது. உதாரணமாக ஒரு செய்தித்தலைப்பு பற்றி நேரடியாக விவாதிப்பவர்களில் பலரும் அச்செய்தியின் எழுத்து வடிவத்தை வாசிப்பதேயில்லை அவர்கள் பெரும்பாலும் ஒருவர் வாசிப்பதற்கு ‘உம்’ கொட்டிக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அல்லது நாளிதழ் செய்தியை வாசிப்பவரல்லாத அச்செய்தியின் நேரடிக் கேட்பாளர்களாக உள்ளனர்.11 செய்திகளைப் பற்றிப் பேசுவதற்காகவே செய்தித்தாள் வாசிக்கப்படுகிறது.

ஆங்கிலக்கல்வி கற்ற வழக்கறிஞர் சி.பா. ஆதித்தன் ஏற்கனவே மனதால் கண்டிருந்த காட்சிகளுக்கேற்ப 1942 இல் “தந்தி”யைத் தொடங்கினார். அன்று அப்படித்தான் அப்பத்திரிகை அழைக்கப்பட்டது.12 சிங்கப்பூரின் மீது சப்பானியப் படைகள் தாக்குதலைத் தொடங்கிய அந்த ஆண்டில் எட்டாண்டுகளாக அங்குச் செய்துவந்த பணியைவிட்டுத் தமிழகம் திரும்பியிருந்தார் ஆதித்தன். அன்று வெளியாகிக் கொண்டிருந்த தமிழ் நாளிதழ்களின் இயல்பினின்றும் மாறுபட்ட, மதுரை வட்டாரத்தை மையமிட்ட, ஒரு பெரும் நாளிதழைத் திட்டமிட்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் மட்டுமே பெருநகரமாகிய சென்னையில் அலுவலகம் ஏற்பட்டது. சென்னையில் வெளியாகிக் கொண்டிருந்த நாளிதழ்கள் ஒன்றிரண்டு நாட்களின் பின்னர் மட்டுமே பிற தமிழ்பேசும் பகுதிகளில் கிடைத்தன. செய்திகளை அது நிகழ்ந்து பல நாட்களின் பின்னரே மக்கள் வாசித்தனர்.

மிக முக்கியமாகப் போர்க்காலச் சூழலில் விதிக்கப்பட்டிருந்த தடையால் காகிதம் போன்ற கச்சாப்பொருட்களும் கிடைப்பதற்கு அரிதான அச் சூழலில் தந்தி மட்டுமே வெளியான அதே நாளில் தமிழகம் முழுமைக்கும் கிடைத்தது. மிகக் குறைந்த அளவு மட்டுமே தொடக்கக்கல்வி பெற்ற, எழுத்துக்களின் உருவத்தை மட்டும் அடையாளம் காணும் தகுதியுடைய, ஆனால் இலக்கணம், அகராதி, தமிழின் உயர் எழுத்து வகைமைகளில் பயிற்சியற்ற சாமானிய மக்கள் வாசித்தறிய ஒண்ணாத தமிழ் எழுத்துவகைகளே அன்று தமிழ் நாளிதழ்களில் அச்சிடப்பட்டு வந்திருந்ததைத் தந்தியின் ஆரம்ப நாட்களிலேயே ஆதித்தன் கவனத்தில் கொண்டிருந்தார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட வெகுசனக் கல்வியால் கல்வியறிவுடையோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. அதில் பெரும் இலாபகரமான புதியதோர் சந்தைக்கான வாய்ப்பைக் கண்ட ஆதித்தன், மிகக் குறைந்த அளவே கல்வியறிவுடைய பொதுமக்களுக்கு, அவர்களின் நண்பர்களுக்கு, உறவினர்களுக்காக ஒரு நாளிதழை அளித்தார்.

1942 இல் “தந்தி” இதழின் தொடக்கவிழாவின் போது ஆற்றிய உரையில் ஆதித்தன் தமிழகத்தில் இருந்து வருகின்ற பிரதி/ வாசிப்புப் பழக்கத்தையும் தமிழகக் கிராமங்களில் எண்ணிக்கையில் அதிகரித்திருக்கின்ற வாசிக்கும் உழைப்பாளர் பிரிவுகளையும் தொடர்புபடுத்தித் தனது திட்டத்தை விளக்குகின்றார்.

இன்று கூட இதை நீங்கள் கிராமங்களில் காணலாம். பெற்றோர் படித்திருக்க மாட்டார்கள். ஆனால் கல்விகற்ற தங்கள் பிள்ளைகளை இராமாயண, மகாபாரதக் கதைகளை வாசிக்கச் சொல்லிக் கேட்பார்கள். இன்று, அதுபோல அவர்கள் செய்தித்தாள்களை உரக்கப்படிக்கக் கேட்டுக்கொண்டிருக்கின்ற நாள் வந்து விட்டது.

வேங்கடாசலபதியின் வார்த்தைகளில் கூறினால் “ஆதித்தனின் தீர்க்கதரிசனம் பலித்தது” (1994:290). இவ்வாறாகத் தினத்தந்தி, கனமான புராணப் புத்தகங்கள் உரக்க வாசிக்கப்படுவதை அருகருகே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த நகர, கிராமத்து உழைப்பாளர்களிடையே பொதுப்புத்திக்கும் அற உரையாடலுக்கும் புதிய அடித்தளமிட்டது.13 ஆரம்பத்திலிருந்தே இந்நாளிதழ் கல்விபுகட்டும் நோக்கத்தை மனதிற்கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தது.

வேலன், தனது கல்வியறிவு தினத்தந்தியைச் சார்ந்திருப்பதாகக் கூறுவதுகூட விவாதத்திற்கான பொருண்மையை வடிவமைப்பதில் நாளிதழ் பங்காற்றுகிறது என்பதால் மட்டுமல்ல. அவர், அடிக்கடி இந்நாளிதழில் காணப்படுகின்ற மொழிவடிவம் பிற எழுத்து வடிவங்களை விடவும் பெரும்பாலானவர்களால் புரிந்து உள்வாங்கப்படுகின்ற தமிழ்வடிவமாக உள்ளது எனக் குறிப்பிடுகின்றார். தினத்தந்தியின் மொழி “பேச்சுத்தமிழின்” எழுத்துவடிவம் எனப் பெரும்பான்மை மக்களும் கண்டிப்பாக உடன்படுகின்றனர். திராவிட இயக்கத்தின் தமிழ்த்தூய்மையாக்க முனைப்பு தீவிரமடைந்து, உடன்நிகழ்வாகத் தமிழில் கலந்திருந்த வடமொழிச் சொற்கள் ஒழிக்கப்பட்டு, பழமையான இலக்கண வடிவங்கள் எழுத்துத்தமிழில் புத்துயிர்ப்பிக்கப்பட்டபோது, தினத்தந்தி உழைக்கும் வர்க்கப் படிப்போரையும் கேட்போரையும் கவரும் ஆற்றல்மிக்க, அவர்களால் புரிந்துகொள்ள முடிகின்ற தரத்தையுடைய புதிய எழுத்துத் தமிழுக்குப் பாதைவகுத்தது.14 தினத்தந்தியின், எழுத்துமொழியின் எளிமையாக்கப்பணி தமிழில் கலந்து விட்டிருந்த வடமொழி மற்றும் பாரசீக மொழிச் சொற்களின் அடையாளங்களைத் தூய்மைப்படுத்தி உள்ளிணைத்தது. செந்தமிழ் நூற்கள் அல்லது கல்விப்புலமையுடையோரின் உரையாடலாக அல்ல, பாமரமக்கள் பேசுவதற்காகவே என இம்மாற்றங்கள் குறித்து வாதாடினார் ஆதித்தன். இக்கொள்கை, தமிழ் இலக்கணத்தின் விதிமுறைகளை மீறுவதால் தினத்தந்தி தமிழ்மொழியின் சீரழிவு எனத் தமிழ்ப் பண்டிதர்களால் அடிக்கடி கண்டிக்கப்பட்டதுண்டு. (சாமி 1990:113).

இம்மொழிப் பயன்படுத்தலின் மீது தொடுக்கப்பட்ட தொடர்ச்சியான கண்டனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக 1971 இல் எழுதப்பட்ட “பத்திரிகை எழுத்தாளர்கள் கையேடு” நூலில் ஆதித்தன், அக்கண்டனங்களுக்கான தனது வாதங்களை முன் வைத்தார். பத்திரிகை எழுத்தின் “பொன் விதிகள்” என அவரால் அழைத்துக்கொள்ளப்பட்ட விதிகளிலிருந்து அந்நூல் தொடங்குகின்றது. பேச்சுமொழியின் பயன்பாடே வாழும் தமிழ். ஒருவர் அம்மொழியின் கொச்சையை நீக்கிவிட்டு அதே வடிவில் எழுத வேண்டும் (1971:9). இம்முதல் பொன்விதியைத் தொடர்ந்து மொழியின் இரண்டு பொதுவிதிகளும் விளக்கப் பெறுகின்றன. “கடினமான நடையில் எழுதலாகாது” மற்றும் “புரிந்து கொள்ளப்படும் தமிழில் எழுதினால் மட்டும் போதாது, தமிழ் மக்கள் பேசுவது போல எழுதுதல் வேண்டும்.” அதேவேளை கையேடு பேச்சுத்தமிழில் உள்ள கொச்சை என்னவென்பதைத் தெளிவுபடுத்துவதில்லை. மொழியில் வெளிப்படுகின்ற எத்தகைய ஆபாசத்தை இதழாளர்கள் கைவிடவேண்டும் என்பதைத்தவிர மொழியில் வெளிப்படும் ஆபாசமாக எவற்றை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றும் விளக்குவதில்லை. தொடர்ந்து திராவிடப்படுத்தல் திட்டத்தின் பகுதியாகத் தமிழ்நடை பிழைநீக்கி எழுதுவதற்கான வழிகாட்டல் மற்றும் மாற்றுச்சொற்களின் நீண்டபட்டியலும் கையேட்டில் இடம்பெற்றன. பத்திரிகை எழுத்தாளர் கையேட்டில் பாமரமக்களின் பேச்சுவழக்கையே மையப்படுத்தி வாதாடியிருந்தார் ஆதித்தன்.

தினத்தந்தி எங்கிருந்தும் கருத்துகளைப் பெறாமல் தனது சுயமான குரலில் செய்தியை அதே வடிவில் எளிய மொழியில் தந்தி என அந்நாளேடு அழைக்கப்பட்டது போலவே அளித்தது. உரக்க வாசிக்கும் பழக்கத்தையே முன்னிறுத்தி உலகளாவிய தகவல்களைச் செய்தியின் வடிவில் அளித்தது; பரப்பியது. ஆதித்தனார் கூட எழுத்துவடிவில் ஆதிக்கம் செலுத்துகின்ற கருத்தியல்களைப் புரிதல் தன்மையுடன் எழுதுதல் எனும் கோணத்தில் “பேச்சுமொழி”யின் கற்பனை செய்யப்பட்ட பொதுவியல்பில் எழுதுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். உண்மையில் அவரது தமிழ், உரக்க வாசிப்பதற்கான எழுத்துமொழியின் வடிவம்தான். இந்தியப் பேரிதிகாசங்களின் ஒப்புவித்தல், மனப்பாடம் செய்தல் பண்புபோல அவர் கற்பனை செய்திருந்த குறிப்பிட்ட பரவல் மாதிரி. உதாரணமாக, ஒரு தலைப்பு எவ்வாறு அமைய வேண்டுமென அவர் கூறுவதைப் பாருங்கள். “குறிப்பிட்ட செய்தியைப் பற்றி ஒருவர் இன்னொரு வரிடம் முதலில் எதைக் “கூறு”வாரோ அதை வெளியிடுவதாக இருக்கவேண்டும் தலைப்பு” (ஆதித்தன் 1971:101), ஆதித்தனார் முதன்மைப்படுத்தி நாளேட்டில் பயன்படுத்திய “பேச்சுநடை” தமிழ் நாளிதழ் மொழியில் பெரும் புரட்சியாக அமைந்தது. விரிந்த இந்தியத் தளத்தில் எழுத்து மொழியை, குறைந்த அளவே கல்வியறிவுடைய உழைக்கும் வர்க்க மக்களின் வாசிப்பு, பேச்சுப் பயிற்சியை வடிவமைத்து வளர்ப்பதற்குப் பொருத்தமுற அமைத்த நிகழ்வே தினத்தந்தியின் “நவீன இதழியல்” என்றும் அழைக்கப்பட்டது.15

ஆதித்தனார், பத்திரிகையாளர் கையேட்டில் முன்வைத்த வாதங்கள், இன்று சமகாலத் தமிழகத் தினத்தந்தி நிருபர்களிடம் நேர்காணல் மேற்கொண்டபோதும் எதிரொலிப்பதைக் கேட்க முடிந்தது. உதாரணமாக 2004இல் தினத்தந்தி நாளிதழின் புதுகோட்டை வட்டாரத் தலைமைப் பத்திரிகையாளரிடம் அவரது நாளிதழில் பயன்படுத்தப்படுகின்ற மொழியின் பண்புகளைக் கூறக் கேட்டபோது அவர் கூறினார்,

"தினத்தந்தியை அனைத்துத் தரப்பினரும் வாசிக்கின்றனர், நடுத்தர வகுப்பினரும் (சிறு தயக்கத்தின் பின்) தாழ்த்தப்பட்ட வகுப்பினரும். ஏன் இப்படி என்று கேட்டால் ரீடபிலிட்டி தான் காரணம் (ஆங்கில சொல்லையே பயன்படுத்துகிறார்). இதனால்தான் தந்தி (தினத்தந்தி) இந்திய அளவில் பெருமளவு வாசிக்கப்படுகிறது, ஆங்கில, இந்தி நாளிதழ்களை விடவும் அதிகமாக வாசிக்கப்படுகிறது."

உழைக்கும் வர்க்க மக்களிடம் தினத்தந்தியின் பொதுமதிப்பு பற்றி அதிகம் பேசவில்லை எனினும் அவர் அதை மொழியின் ஆற்றலாகவே பாராட்டுகின்றார். பள்ளியில் மாணவர்கள் கற்கின்ற தரப்படுத்தப்பட்ட எழுத்துத்தமிழ்ச் சொல்வடிவங்கள் செய்தித்தாள் மொழியிலிருந்து முரண்படுவதைக் காட்டுவதுடன் அச்சொற்களின் முழுநீளப் பட்டியலையும் தருகின்றார். தமிழின் தரமற்ற, கீழ்த்தரமான வகைமையைத் தினத்தந்தி பயன்படுத்துகின்றது எனும் பல்வேறு அறிஞர்களின் குற்றச்சாட்டிற்கே அவர் திறமையாகப் பதிலளிப்பது காண்கிறோம். ஒருவினாடி இடைவேளைக்குப்பின் மீண்டும் தொடர்ந்து பேசும்போது “ஆனால் நாங்கள் தலைப்புக்களில் தினமலர் போல் ஆபாசமான மொழியைப் பயன்படுத்துவதில்லை!” என்றார். இங்கு அவர் குறிப்பிடுகின்ற பத்திரிகை நான் தினத்தந்தியுடன் ஒப்பிடக் கருதிய பத்திரிகை, தினத்தந்தியின் முக்கிய போட்டிப் பத்திரிகையாகத் தினமலர் பேச்சுத்தமிழைப் பயன்படுத்தும் பெருமைக்கு உரிமை கோருகின்ற மற்றுமொரு நாளிதழ்.

மாற்றுப்பாதையில் தினமலர்

வளர்ந்துவரும் நகரநடுத்தர வகுப்பைச் சார்ந்த தமிழ்பேசும் மக்களின் நாளிதழாக, தினத்தந்தியிலிருந்து மாறுபட்ட தனித்துவம் மிக்க தனதாகிய பொதுமதிப்பை வளர்த்துக் கொண்டுள்ளது தினமலர். ஒரு தினமலர் நிருபர் என்னிடம் வெளிப்படையாகக் கூறினார் “தினத்தந்தி கீழ்த்தட்டு மக்களிடம் மட்டுமே சென்றடைகின்றது, நாங்கள் கீழ்த்தட்டு, நடுத்தர, உயர்மட்ட வகுப்பு மக்களிடமும் சென்றடைகிறோம். நாகரீகமான, மரியாதைக்குரியவர்களின் கைகளில் தினமலர் இருப்பதை நீங்கள் காணாமுடியும். அது ஒரு குடும்ப நாளிதழ்.” 1990களின் இறுதியில் இதழ்ப் பரவல் கணக்கீட்டு நிறுவனத்தின் கணக்குப்படி தினமலர் சென்னைக்கு வெளியே நகரங்களை மையமிட்ட உயர் - வருவாய் ஈட்டும் குழுவினரிடையே தனது முக்கியப் போட்டிப் பத்திரிகையை விடவும் வேகமாகப் பரவிவரும் கணக்குக் காட்டப்பட்டது (Jeffrey 2000:213). தினத்தந்தியின் வாசகர்கள் போலல்லாமல் தினமலர் வாசகர்கள் டி.வி, கார்களும் சொந்தமாக வேண்டுமென்ற விருப்பம் உடையவர்களாக இருந்ததும் தினமலர் தொடர்ந்து அவ்விளம்பரங்கள் செய்து வந்ததும் உண்மையில் அந்நாளிதழ் மற்ற நாளிதழ்களை விடவும் அதிகமாகப் பெண்களிடம் பரவக் காரணமாக அமைந்தது. தினத்தந்தி அடைந்திருந்த உழைப்பாளி வர்க்கத்தின் மதிப்பிற்கும் அறிவாளிகளிடையே ஆதிக்கம் செலுத்துகின்ற, ஆனால் அவ்வளவாகப் பெரிய எல்லைகளுக்குப் பரவாத தினமணி பெற்றிருந்த இலக்கியத்தர மதிப்பிற்கும் இடையே எங்கோ ஓரிடத்தில் தினமலர் தனது விற்பனைக்கான சந்தையை, முத்திரை மதிப்பை வெற்றிகரமாகத் தக்கவைத்துள்ளது.

1951 இல் டி.வி. இராமசுப்பையரால் (டி.வி.ஆர்.) இன்று கேரள மாவட்டமான திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது தினமலர். மலையாளம் மாநிலத்தின் பெரும்பான்மை மொழியாக இருந்தாலும்கூட, டி.வி.ஆர். இன் குடும்பத்திற்குச் சொந்தமான உப்புத் தொழிற்சாலை திருவிதாங்கூர் - கொச்சி அரசாளுகைக்கு உட்பட்ட - இன்று தமிழகத்திற்கு உட்பட்டது - நாகர்கோவிலுக்கு அருகிலிருந்தது16 (Jeffrey 2000:113). தினமலர் நிறுவனர் பிராமணச் சாதியைச் சார்ந்தவராக இருந்ததால் அன்று அடிக்கடி அந்நாளிதழ் ஒரு “பிராமணப் பத்திரிகை”யாகவே அடையாளம் காணப்பட்டது. அச்சொல் அன்று தமிழ் இந்தியாவில் மிகுந்த கேலிக்குரிய சொல்லாக இருந்தது. பெயர் குறிப்பிடுவது போலவே டி.வி. இராமசுப்பையர் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர், தினமலர் தலையங்கங்களில் அவர் எழுதிய தமிழில், அன்று பிராமணரல்லாதோர் வழங்கிவந்த தமிழில் ஒருபோதும் பயன்படுத்தாத அல்லது திராவிட தேசீய இயக்கத்தின் பணியாக அழித்தொழிக்கப்பட்ட வடமொழிச்சொற்கள் அளவுக்கதிகமாகக் கலந்திருந்தன. இருப்பினும் நான் அறிந்த வரையில் ஒரு பிராமண நாளிதழாகத் தினமலர் அடையாளமிடப் படக் காரணம் அதன் நிறுவனரின் சாதி மட்டுமல்ல. அந்நாளிதழ் இந்துத்துவ தேசீய பாரதீய ஜனதாகட்சிக்கு ஆதரவளிப்பதான கூற்றுக்களும் என்னிடம் அடிக்கடி கூறப்பட்டுள்ளன.17 டி. வி. ஆர் தமது பண்பாட்டுப் பழக்கவழக்கங்களில் ஒரு பிராமண அடிப்படைவாதியாக இருந்தாரே தவிரச் சமய தேசீய அரசியலைச் சார்ந்திருக்கவில்லை.

இந்தியாவில் நான் இருந்த நாட்களில் குமார் என்ற தினமலர் வாசகரைச் சந்தித்திருந்தேன். அவர் மதுரை சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்துக்கொண்ட இருபது வயதுகளின் ஆரம்பத்திலிருந்தார். வேலன் போலவே அவரும் ஒரு தலித். தந்தை ஒரு இராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்த காரணத்தால் குமாரின் குடும்பம் கிராமத்து வறுமையிலிருந்து மேலெழுந்திருந்தது. குமாரின் குடும்பத்தில் மேல்நோக்கி நகர்ந்துவரும் “நடுத்தரவர்க்க” த்தின் பண்புகள் இடம்பெறுவது காணலாம். அவரது குடும்பம் மதுரைப் புறநகர்ப் பகுதியில் உயர்ந்த விலையில் வீட்டுமனைகள் விற்கப்படுகின்ற பகுதியில் சொந்த வீட்டில் வசித்துவருகிறது. அம்மா, தங்கை, மனைவியுடன் வசிக்கிறார் குமார். வீட்டில் கேபிள் இணைப்பு மற்றும் ஸ்டீரியோ அமைப்புடன் கூடிய வண்ணத் தொலைக்காட்சி இருக்கின்றது. அவரும் அவரது குடும்பமும் கேபிள் தொலைக்காட்சி, வானொலி போன்ற பல்வேறு சாதனங்களிலிருந்து செய்திகளை அறிகின்றனர். இருப்பினும் வீட்டில் அன்றாடம் காலை காஃபி குடித்துக்கொண்டே மௌனமாக நாளிதழும் வாசிக்கின்றனர். வழக்கமாக இதுபோன்ற சாதிப் பின்னணியிலிருந்து எழுந்து வருவோர் நடுத்தரவகுப்பு அடையாளங்களைப் பின்பற்றுவதில்லை. ஆனால் குமாரின் குடும்பம் பல நிலைகளில் எழுச்சிபெற்று வருகின்ற ஒரு நடுத்தர வகுப்புக் குடும்பத்தின் அடையாளங்களைக் கொண்டிருப்பதுடன் கிராமத்தோடும் அதன் உறவுகளோடும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளது. குமாரின் அப்பா கிராமத்தை விட்டு வெளியேறி, கிடைத்த அரசுப்பணியால் முன்னுக்கு வந்தவர். ஆனால் குமார் இவ்வகுப்பு முன்னேற்றத்தால் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பெருகி வரும் தனியார் முதலீட்டுப் பகுதிகளில் நுழைவதோடு தன் தந்தையை விடவும் அதிகமாக, திறம்படப் பொருளீட்டும் நிலையை அடைகிறார்.

ஒருமுறை நான் குமாரிடம், “எத்தனையோ நாளிதழ்களிருக்க ஏன் தினமலரை வாசிக்கிறீர்கள்” என்று கேட்டேன். அவர் சொன்னார், அவருடைய அப்பா வழக்கமாக அந்தப் பத்திரிகை தான் வாசிப்பார். “அவர் இறந்துபோனபின் நான் அதற்குத் தொடர்ந்து சந்தா கட்டி வருகிறேன். நான் வீட்டுக்குள்ள தினமலர் படிக்கிறேன். வெளியிலே தினத்தந்தி, தினமணி எது கிடைக்குதோ அதைப் பார்க்கிறேன். தினமணீல நல்ல கட்டுரைகள் வருது. தினமலர்ல நல்ல இணைப்பிதழ்கள், நல்ல செய்திகள் இருக்கின்றன”.

இங்கு இனவியலாளர்கள் கேட்க விரும்புகின்ற கேள்விகளின் மீதான எதிர்வினைகள் போன்ற சில கருத்துகளைக் குறிப்பிட வேண்டும்.18 முதலாவதாக, தினமலர் ஒரு குடும்பப் பத்திரிகையின் பண்புகளைக் கொண்டிருக்கப் பிற நாளிதழ்கள் வெளியே, தெரு வீதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. “உள்ளே” மற்றும் “வெளியே” எனக் குமார் குறிப்பிடுகின்ற வேற்றுமைகள் இந்தியாவின் சமூகச் சிந்தனை மற்றும் அண்மைக்கால இனவரைவியலில் அதிகமான கவனிப்பைப் பெற்றுள்ளது (Chakrabarty 1991; Chatterjee 1993; Dickey 2000; Kaviraj 1997; MInes 2005; Seizer 2005). Dipesh Chakrabarty (1991), Sudipta Kaviraj சுதிபா மற்றும் கவிராஜ் ஆகியா இருவரும் இந்த உள் - வெளி (Inside - outside) வேற்றுமை தனி - பொது எனும் வேற்றுமைகளிலிருந்து எளிதில் தவறாக வழிநடத்தக் கூடியது என்பதை இவ்வகையிலான நடத்தை/ஒழுக்கம் கூட காலனிய நவீனத்துவத்தின் விளைவே எனும் உண்மையைப் புரிந்து கொள்ளும்போதும், குறிப்பாக, நடுத்தர வகுப்பு இந்தியர்களின் மற்றவர்களுக்குச் சமமாக அல்லது மற்றவரைவிட உயர்ந்திருக்க வேண்டுமென்ற அவாவின் துரத்தலே காரணம் என்பதிலிருந்தும் அறியலாமென வாதிடுகின்றனர். மேலும் இவ்வாசிரியர்கள், தெற்காசியச் சூழலில் “வெளிப்பக்கம்” என்பதை அனைவருக்கும் பொதுவான இடம் என மரியாதை செய்யவேண்டிய அவசியம் எதுவுமில்லை. அது ஒருவருக்கே உரிமையானது, வீடு என்பதன் எதிர்நிலை மட்டுமே.

சரியாகச் சொன்னால் “Public” என்ற சொல்லின் பிரித்தானிய ஆங்கிலப் பொருள் போலக்கடைத்தெரு அல்லது வீதி போன்ற ஒழுங்குமுறையற்ற இடம் எனும் பொருளே நெருக்கமானது என வலியுறுத்துகின்றனர். Inside எனும் சொல் வீடு போன்ற இடம் அல்லது பாதுகாவலை உடைய அல்லது புனிதமான கோவில் / கருவறையைக் குறிக்கின்றது. ஆனால் ஒரு நபரின் உடைமை அல்லது தன்னாளுகைக்கு உட்பட்டதென்கிற “Private” எனும் பொருளை ஒருபோதும் தருவதில்லை. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்திருப்பது இதுதான், அல்லது தனி - பொதுவேற்றுமை, உள் - வெளி வேற்றுமையாகத் தொடர்புறுத்தப்பட்டுள்ளது, இரு முரண்களின் தன்மையும் உறுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று அதிகரித்து வருகின்ற இவ்வேற்றுமை நடுத்தர வகுப்பினர் அடையத்துடிக்கும் ஆசையின் மீது கவிவதை விடவும், உள் - வெளி வேற்றுமைகளுக்கு ஈடுகட்டுவதற்காக அதிகமாகச் சுமக்கின்ற, ஆனால் சொத்துக்களுடன் உறவற்றவர்களாக, நுகர்வுப் பொருட்களாக, உட்புற வாழ்வையே வாழ்ந்து வருகின்ற ஏழைமக்களின் மீது பெருஞ்சுமையெனக் கனத்துவருவதைக் கவிராஜ் குறிப்பிடுகின்றார். ஆகையால் தான் உள் - வெளி வேற்றுமை குறைந்த அளவே வேலன் போன்ற கிராம மக்களிடையே இருந்து வருகின்றதெனவும் கருத்தியல் மற்றும் நடைமுறை ரீதியான தனி - பொது வேற்றுமை ஒரு சிறிதே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இருந்தாலும் குமாரின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் “வீட்டிற்குள்ளே” என்பது மிகமிகத் தன்னுரிமையும் தனிமையும் நிறைந்த இடத்தையே குறிக்கின்றது.

எங்கு வகுப்பு பற்றிய வினாக்கள் பால் சார்ந்தவையாக எழுகின்றதோ அங்கெல்லாம் இந்த உள் - வெளி வேற்றுமைகள் நிலவுகின்றன. இன்று உள் - வெளி / தனி - பொது வேற்றுமைகள் கலந்து இணைந்து வருகின்ற சூழலில் ஊடாடுகையில் ஆடவர்கள் அல்லது உழைக்கும் வர்க்க மகளிர் எதிர்கொள்வதை விட நடுத்தர வர்க்க மகளிர் தமது வகுப்புசார் தகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ள பாடுபடுகின்றனர். கவிராஜின் கவனிப்புப்களை விரிவுபடுத்தி நான் வாதாடுகின்றேன். தனது வீட்டிற்காக தினமலர் நாளிதழுக்குச் சந்தா கட்டுவதன் மூலமாக நடுத்தரக் குடும்பத்து இயல்புகளையே உறுதிப்படச் செய்கின்றார் குமார். அச்செயலினூடாக அவர் எதை வெளியில் வாசிக்க வேண்டும், எதை வீட்டிற்குக் கொண்டுவந்து, வீட்டில் வைத்துத் தனிமையில் வாசிக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறார். குமார்; வேலன் மற்றும் அவரது மக்களைப் போன்றவரல்ல. வேலன் போன்றோருக்கு இந்த உள் - வெளி வேற்றுமைகள் எவையும் பொருந்திவருவனவல்ல. அவர்களுக்கு வாசித்தல் ஒரு தனிமை நிகழ்வு அல்ல; எந்த நாளிதழ் எங்கே புழங்குகின்றது என்பது பற்றிய புகழ்பெற்ற கருத்துகளைத் தவிர்த்துக் கொண்டு அனுபவப்பூர்வமாகப் பார்த்தால் தினத்தந்தியைப் போல தேநீர்க்கடை, சலூன்கடை போன்ற இடங்களில் அதிகமாக அளிக்கப்படாமல் தினமலர் வீடுகளுக்காகவே பெரிதும் அளிக்கப்படுகிறது என்பதே உண்மை. புதுக்கோட்டையில் நான் அறிந்த ஒரு நாளிதழ் விநியோகஸ்தரின் பேச்சிலிருந்தே கூறுகின்றேன்.19

தினமலர் குடும்பப் பரப்பினுள் வெற்றிகரமாக நுழைந்து ஊடாடக் காரணமாக அமைந்திருப்பது, குமார் சொல்வது போல இணைப்பிதழ்கள்தான். 1980களில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்காக அதன் அன்றாட நடுப்பக்கத்தை ஒதுக்கியது தினமலர். இந்நோக்கமே இணைப்பிதழ் முயற்சியில் தினமலரை முன்னோடியாக்கியது. முக்கியமாக ஆடவர்களே பெரிதும் நாளிதழ்களின் “கடுமையான செய்தி”களை விரிந்ததாள் வடிவில் வாசிக்க ஆர்வம் கொண்டுள்ளனர். மகளிரும் குழந்தைகளும் சிறுகதைகள், கல்விக்கு உதவுவன, சினிமா நடிகர்கள் பற்றிய கதைகளே சிறு இதழ் வடிவிலான இணைப்பிதழ்களில் இடம்பெறுவதை விரும்புகின்றனர் என்ற கணிப்பே இப்புதிய நகர்வுக்கு வழிவகுத்தது. தெரு வீதிகள், தேநீர்க்கடைகள், போன்ற ஆடவர் பொதுவெளிகளில் அல்லது சில வேளை அலுவலகங்களில் வாசிக்கப்படுகின்ற பிற நாளிதழ்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் முயற்சியில் எல்லைக் குட்படுத்தப்பட்டிருந்த மகளிர் ஆற்றலை எழுச்சிபெறச் செய்யும் மாறுபட்ட உள்ளடக்கங்களுடன் மிகுந்த செயல்திறமையுடன் தன் தோற்றத்தை விரிவுபடுத்திக் கொண்டது. குமாரின் தங்கையும் மனைவி சித்ராவும் பிற கலை இணைப்பிதழ்களை விடவும் “சினிமாமலரி”ன் ஆர்வம்மிக்க வாசகர்கள் (தினமலரின் அனைத்து இணைப்பிதழ்களும் “மலர்” என்றே அழைக்கப்படுகின்றன) என்றாலும் சித்ரா தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தையும் வாசிப்பதுண்டு. மிக அண்மையில் 2008 இல் தினமலர், வளர்ச்சியடைந்து வரும் தகவல் தொடர்பியலை அறிய ஆர்வமுடைய இளம் வாசகர்களைக் கவரும்வகையில் “கம்ப்யூட்டர் மலர்” எனும் மற்றொரு புதிய இணைப்பிதழைத் திங்கட்கிழமைகள் தோறும் வெளியிட்டது.20 முழுக் குடும்பத்திற்குமே உகந்த வகையில் தினமலரின் இணைப்பிதழ்கள் இருப்பதைக் காணும் போது, குமாரின் முடிவால் மட்டுமல்ல அது குடும்பத்திற்கான பத்திரிகையென்றே படுகிறது.

குடும்பத்தில் பல்வேறு உறுப்பினர்களைக் கவரும் வேறுபட்ட பகுதிகளைக் கொண்டிருப்பதால் மட்டுமல்ல, குமாரின் வீட்டில் செய்தி நுகர்வின் இடம், கால வடிவம்கூடக் குடும்பத்தில் பால்சார்ந்த, புதிய தலைமுறை சார்ந்த வழக்கங்களை வடிவமைப்பதைக் காண்கிறோம். இக்குடும்பத்தின் காலைவேளைகள் சூரியன் உதித்துக் கொண்டிருக்கும்போதே ஆரம்பித்துவிடுகின்றது. அவ்வேளையில் குமாரின் அம்மாவும் சித்ராவும் அனைவருக்குமான காஃபி தயாரிக்கின்றனர், காலை உணவாக இட்லி அவிக்கின்றனர், பின்னணியில் ரேடியோவில் திரைப்பாடல் ஒலிக்கின்றது. அப்போது, குமார் எழுந்து வெளியே சென்று நாளிதழை எடுத்துவந்து வீட்டின் முன்பகுதியில் உட்கார்ந்து, தங்கையை எழுப்புகின்றார், நாளிதழை வாசிக்க வராந்தாவில் உட்காருவதற்கு முன் காஃபியை உறிஞ்சிக் கொள்கிறார். காலை உணவின் பின், ஊர்ப் பேருந்து நிறுத்தத்தில் தனது (ஆடவ) நண்பர்களைச் சந்திக்கின்றார் குமார், பணிக்குச் செல்லுமுன் வழக்கம்போல ஊர் விவகாரங்களும் நகர அரசியலும் அலசப்படுகிறது.

உதாரணமாக, அரசு வழக்கறிஞர் பணியிடத்திற்கு வகுப்புவாரி அடிப்படையிலான பணியிட ஒதுக்கீட்டுப் போராட்டம் குறித்துத் தினமலரில் கூறப்பட்டவை பற்றி விவாதிக்கப்படுகிறது. பின் விவாதம் அதே செய்தி தினமணி, தினத்தந்தியில் வெளியாகியுள்ளது பற்றிய ஒப்பீடாகவோ21 அல்லது அவர்கள் முதல்நாள் இரவு வீட்டில் சன் டிவி செய்திகளில் கேட்டவற்றின் மீதோ நடக்கிறது.(21). அந்நேரம், வீட்டில், சித்ரா வழக்கமான வீட்டுவேலைகளில் தன் மாமியாருக்கு உதவி செய்துகொண்டு, மும்முரமாகச் சமைத்துக்கொண்டு, அந்நாளிற்கான தயார்ப்படுத்தல்களைச் செய்துகொண்டு, அவ்வேலைகளுக்கு இடையே குமாரைப் போலக் காலையிலேயே அல்லாமல் ஒரு நாளின் பல வேளைகளில் நாளிதழை வாசிக்கின்றார். குமாரின் அம்மாவும் வாசிக்கத் தெரிந்தவர்தான் என்றாலும் அவர், மாலை வேளைகளில் தொலைக்காட்சிச் செய்திகள் கேட்கவே விரும்புகின்றார். மாலை வேளைகளில், இரவுணவு சமைப்பதற்கு முன்னரோ அல்லது வாரத்தில் என்றோ அவரவர்களுக்கு வாய்க்கும் ஓய்வுப்பொழுதுகளில் தங்களுக்குரிய அறைகளில் இருந்து குமாரின் தங்கையும் சித்ராவும் “சினிமாமலர்” போன்ற இணைப்பிதழ்களை வாசிக்கின்றனர். இவ்வாறு வார - இதழ் செய்திகளின் மதிப்பும் வாழ்வும் நாளிதழை விடவும் சற்று நீண்டதாக அமைகின்றது.

“ஆடவர் வெளி”யில் பரவலாகப் புழங்கும் நாளிதழான தினத்தந்தி, பகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு வீடுகளில் தனிமையில் மௌனமாகக் கால இட அவகாசப்படி வாசிக்கப்படுகின்ற தினமலர், இவற்றிடையே நிலவுகின்ற திட்டவட்டமான வேற்றுமைகள் இந்நாளேடுகளிடையே பரவல் எல்லைகளில் ஆழ்ந்த வேறுபாட்டை அல்லது வழக்கமான செய்திப் பிரதிகளினூடாகத் தமது வாசகப் பொதுச்சமூகத்தை உருவாக்கியுள்ளன என்பதே எனது வாதத்தின் மைய இழை. அந்நாளிதழைத்தத்தம் வீடுகளில் தனிமையில் உச்சாடன இயல்பில் வாசிக்கின்றனர் எனும் நிலையில் நிச்சயமாக, குமாரும் அவரது குடும்பமும் தினமலர் வாசிக்கின்ற பொதுச்சமூகத்தைச் சார்ந்தவர்களே. அவர்களை அச்சமூகத்தைச் சார்ந்த பிறமக்கள் பற்றி அறிவதற்கான குறிப்பாகக் கொள்ளலாம். எவ்வாறாயினும் வாசகச்சமூகம் என அவர்களால் வடிவமைக்கப்பட்ட அதன் பொருள் வேலன் மற்றும் அவரது கிராமத்து மக்கள் தினத்தந்தியைச் சூழ்ந்து உருவாகின்ற உள்ளூர்ப் பொதுச்சமூகம் என்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பொருளை உடையது.

செய்தி உருவாக்கமும் நேருக்குநேர் உரையாடலும் இவ்விரு இதழ்களின் முரண்மிக்க பரவல் எல்லைகளில் வெவ்வேறு விதமாக ஒருங்கிணைக்கப் பெறுகின்றன; ஒரு இதழ் (தினத்தந்தி) அதன் பயன்கொள்ளல் நிலையில் சமூகத்திடம் நேருக்குநேராக தருக்க அடிப்படையுடன் முன்னுரை நிகழ்த்தும் போக்கில் அமைய, மற்றொரு இதழ் (தினமலர்) வாசிப்புப் புள்ளியிலிருந்து வெகுதூரம் விலகிச் சூழலுக்கேற்ற பிரதி இயக்கத்தின் காரணமாகத் தோன்றுகின்ற சமூகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்விருவகைப் பொதுச்சமூக வேறுபாடு பிரதி - பிரதி செய்தி உருவாக்க உறவுகள் பற்றிய பகுத்தாராயும் கண்ணோட்டத்தில் மட்டுமல்ல; ஒன்று அல்லது மற்றொன்றைச் சார்ந்த மக்கள் ஏதேனுமொன்றில் தன்னறிவுடன் சார்ந்திருப்பினும் கூட, கண்டிப்பாக, குமார் போன்ற பெரும் எண்ணிக்கை மக்கள் இரு சமூகத்தையும் சார்ந்திருப்பதுடன் சமூக வாழ்வில் உள்ளேயும் வெளியேயுமாக அசைவியக்கம் கொள்வதுமுண்டு.

நாளிதழ் மொழியின் செய்திப்பிரதி மற்றும் எழுத்துமுறை முரண்கள்

இதுவரை இக்கட்டுரை வாசிப்புச் செயல்பாடுகள் மற்றும் மொழி மீதான வெளிப்படையான சொல்லாடல்களை முதன்மை யாகப் பார்வையிட்டது. ஆனால் செய்திகள் தமதாகிய பரவல் வெளிகளை வடிவமைப்பதற்கு உகந்த முறையில் எவ்வாறு தொழிற்படுத்துகின்றன என்பதைக் காணவேண்டியுள்ளது. ஆகவே நாம் இப்போது நாளிதழ்களின் மொழி மற்றும் வரைவு வடிவமைப்பு பற்றிக் கவனம் கொள்ளவேண்டியுள்ளது. மொழிவடிவம் பற்றிய கண்ணோட்டத்துடன் தமிழ் நாளிதழ்களின் பதிவாக்கமுறை பற்றி ஆராயும் எந்தவொரு வாசகனுக்கும் எளிதில் தட்டுப்படுவது, ஏராளமான எழுத்தாளர்களும் வாசகர்களும் அய்யத்திற்கிடமின்றி உரிமை கோருகின்ற இந்நாளிதழ்களின் “பேச்சுத்தமிழ்” வடிவம். நாளிதழின் பேச்சுத்தமிழ் பயன்பாடு பற்றி ஆதித்தனார் தமது “பொன்விதி”யில் கூறியிருப்பினும்கூட, ஒரு மொழியியலாளரின் பார்வையில் தினத்தந்தியின் மொழி, உண்மையில் அதன் சொல், ஒலியியல், சொல்லமைப்பு மற்றும் தொடரியல் கூட முற்றிலும் “எழுத்து” சார்ந்தது.22 இந்நாளிதழில் பயன்படுத்தப்படுகின்ற மொழியில், பேச்சொலி, சொல்வடிவைப் பதிவு செய்வதற்காக இன்றைய நாவல் எழுத்தாளர்கள் கைக்கொள்கின்ற எழுத்திலக்கணக்கூறுகள் எதுவும் இடம்பெறுவதில்லை.

 உதாரணமாக, மொழி முதல் ‘உகரம்’ ஒகரமாக மாறுதல் அல்லது பால் - எண் - இடம் குறிக்கின்ற பின்னொட்டுக்கள் பேசப்படும் வினைச்சொல்லில் இருப்பதுபோல் எழுதப்படுதல்; ஆனால் தினத்தந்தியின் தமிழ் இலக்கியத்தரமானதோ செந்தமிழோ ஒன்றுமல்ல, அவற்றினின்றும் வெகுதூரம் விலகியது. அது, ஒரு புதிய, எழுத்தின், அரை - தர (quasstandard) வகைமையைச் சார்ந்த, அல்லது மொழியியலாளர் (Francis Britto 1986: 144) குறிப்பிடுவது போல மீயுயர் கல்வி பெற்றோருக்கான இதழ்களில் காணப்படுகின்ற இலக்கியத்தரத்திற்கு உயர்ந்த (Literary “H”) ஒருபக்கம் அல்லது தாழ்ந்த (“L” low) வட்டாரத்தன்மை மிக்க மொழி இன்னொரு பக்கம் இவை இரண்டிற்கும் இடையே மிக முரண் வேற்றுமைகள் கொண்ட பரவலான புழங்கு தன்மை மிக்க “popularH” (highயைச் சார்ந்தது.23 அம்மொழி, எழுத்திலக்கணம் விதிகளைப் பள்ளிச்சூழலில் ஒருவர் கற்கின்ற செந்தமிழின் எழுத்துநடையின் எளிமையாக்கமே. சொல் நிலையில் குறிப்பாகச் சில தூய்மையாக்கத்தை விலக்கிக் கொண்டது. அதைப் போலவே தொடர் வடிவிலும் எளிமையை உடையது. தினமலர் நிருபர்களும் தங்கள் நாளிதழ் “பேச்சுமொழி”யையே பயன்படுத்துவதாகவும் அம்மொழிநடை தினத்தந்தியின் நடையிலிருந்து வேறுபட்டது என்றும் வாதிடுகின்றனர். தினமலர் பெரும்பாலும் எப்பொழுதுமே பேச்சுவழக்கு மரபுத்தொடர்களை ஒரு - சொல் அல்லது சிறுதொடர்களாகத் தலைப்புகளில் நேரடியாகப் பயன்படுத்துவதோடு தினத்தந்தியைப் போலல்லாமல் இலேசான வடமொழிவாடை கொண்ட எழுத்துத்தரத்துடன் செய்தியின் மையத்தோடு அவற்றைத் தொடர்புறுத்துகின்றது. வட்டாரப் பேச்சை எழுதுவதற்கான நவீனப் படைப்பாக்கங்களிலிருந்து கடன்பெற்ற தமிழின் “பேச்சு” வடிவங்கள் தினமலர் நாளிதழின் பிற பக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்விரு நாளிதழ்களின் உள்ளார்ந்த வேறுபாடுகளை அடுத்தபடியாக ஆராயும் முன்னர் நான் இங்கு இவ்விரு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளின் நடையை ஒப்பிட்டுக்காண முனைகின்றேன்.

2004 செப்டம்பர் 3ஆம் தேதி வெளியான இரு நாளிதழ்களின் பதிப்பிலும் முக்கியச் செய்தியாக இடம்பெற்றிருந்த காவிரி நதி நீர்ப்பிரச்சினையின் அரசியல் பற்றிய பதிவுகளிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம். கன்னடமொழி பேசப்படுகின்ற அண்டை மாநிலமான கார்நாடகத்திலிருந்து உருவாகித் தமிழகத்தின் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்ற ஆறு காவிரி. நதி நீரைப் பயன்படுத்தல் இரு மாநிலப்பிரச்சினையாகக் கருதப்படுவதால் நடுவணரசு இப்பிரச்சினையில் தலையிடுவதில்லை. இப்பிரச்சினையில் தீர்வுகாணத் தமிழக, கர்நாடக அரசுகள் இணைந்து தாமே ஒரு நடுவர் மன்றத்தை அமைத்துக்கொண்டு ஒவ்வொரு மாநிலமும் நீர்ப்பாசனத்திற்காகக் காவிரிநதி நீரை எவ்வளவுவரை பயன்படுத்த அனுமதிக்கப்படலாமெனத் தீர்மானித்துக் கொண்டன. காவிரி நீரின் மீதான உரிமை கோரலை இரு மாநிலங்களும் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றன. ஆனால் குறைந்த மழையளவைக் கொண்ட 2004-ஆம் ஆண்டின் வேனிற்காலத்தில் இப்பிரச்சினை தீவிரமடைந்தது. தினந்தந்தியும் தினமலரும் அதனதன் அக்கறைக்கேற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டுவந்த வேளையில் காவிரி நடுவர்மன்றத்தை மாற்றி அமைப்பதற்கான கர்நாடகத்தின் நடவடிக்கையை அனைத்துத் தமிழ் வாசகர்களுக்குமான முதன்மைச் செய்தியாகக் கருதி இரு நாளிதழ்களும் வெளியிட்டன.

தினத்தந்தியின் தலைப்பு வழக்கம்போல் நீளமானது, செய்தியை அறிவிப்பது: “காவிரி நடுவர் மன்றத்தை மாற்றி அமைக்க யோசனை/ கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் / ஜெயலலிதா (அன்று தமிழக முதல்வர்) உறுதி” தமிழர்களின் பார்வையில் எது செய்தியாகக் கருதப்படுமோ (கர்நாடக அரசிடமிருந்து எந்தத் தகவலுமின்றி) அந்த உண்மைகளை ஓரளவுக்குப் புறவயத்தன்மையுடன் வெளியிடுவதாக அமைந்துள்ளது தலைப்பு24. முதல்வரின் அறிக்கை தலைப்பில் நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளமை ஆராயாமலே ஏற்றுக்கொள்ளத் தூண்டுகிறது. அவ்வெழுத்துக்கள் நாளிதழ்களில் பொதுவாக இடம்பெறும் கறுப்பான தடித்த எழுத்துருவில் அழுத்தமாகத் தீட்டப்பெற்றுள்ளன.

எழுவாய் - செயப்படுபொருள் - பயனிலை என அமையும் தமிழ்த் தொடர் அமைப்பைப் பின்பற்றுவதுடன், தடித்த எழுத்துருக்களைத் தொடரின் பல்வேறு இடங்களில் பயன்படுத்துவது தினத்தந்தியின் பாணியாக இருப்பதைக் காணலாம். வரி 1) “காவிரி நடுவர் மன்றத்தை மாற்றி அமைக்க யோசனை” என்பதைத் தொடர்ந்து பெரிய எழுத்துருவில், வரி 2) “கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க” பிறகு அதைவிடவும் பெரிய தடித்த எழுத்துருவில், வரி 3) “அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்” அதன் பிறகு சிறிய எழுத்துருவில் வரி 4) “ஜெயலலிதா உறுதி”. நாளிதழ் வடிவமைப்பு வல்லுநர்கள் பேசும்பாங்கில், இந்நான்குவரிகளை “முதலாவது மற்றும் இரண்டாவது மேல் தலைப்புகள் (வரி1 மற்றும் 2) முக்கியத் தலைப்பு (வரி 3), இரண்டாவது தலைப்பு (வரி 4) எனலாம்.” மிக முக்கியமான “முக்கியத் தலைப்பு” (வரி 3) நாளிதழின் சிறப்பு முத்திரை போன்ற சற்று தொலைவிலிருந்தே வாசித்துவிட முடியுமளவு தடித்த எழுத்துருவில் வடிவமைக்கப்படுகின்றது. தினத்தந்தி நிறுவனரின் பெயராலேயே அவ்வெழுத்துரு “ஆதித்தன் எழுத்துரு” என்று அழைக்கப்படுகின்றது.

நாளிதழின் வடிவமைப்புப் பிரிவுத் தலைமையர் என்னிடம் “எங்களின் தலைப்புகள் சாலையில் நடந்து செல்லும் ஒருவரால் கூட அல்லது பேருந்தில் பயணிக்கின்ற ஒருவரால் கூட வாசித்துவிடும் நிலையில் வடிவமைக்கப்படுகின்றன. சாதாரண மக்களைச் சென்றடைவதற்காக நாங்கள் தலைப்புகளை 8 பத்தியளவில் (ஒரு பக்கத்தின் முழு அகலத்தில்) ஆதித்தன் எழுத்துருவைப் பயன்படுத்துகிறோம். அந்தக் காலத்தில், (இந்தத் தலைப்புப் பாணியை ஆதித்தனார் கண்டடைந்த போது) உங்களுக்குத் தெரியுமா, மிகக் குறைவான பேர்கள் மட்டுமே எழுத, வாசிக்கத் தெரிந்தவர்கள். இந்தத் தலைப்புகளின் வழியாகத்தான் எளிய மொழியில் மக்களுக்குக் கற்பிக்க முயற்சி செய்தோம். தலைப்பைக் கேட்பதன் மூலமாகவே செய்தியைத் தெரிந்துகொள்ள முடிவதை நீங்கள் அறியவேண்டும்” என்று கூறினார். இன்று தினத்தந்தி வடிவமைப்புப் பிரிவில் பணியாற்றுவோரிடம் இவ்விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த போது, தலைப்பு, ஒரு செய்தியின் சாரத்தை ஒருவர் இன்னொருவரிடம் எப்படிச் “சொல்”வாரோ அதைக் குறிப்பிடுவதாக அமைய வேண்டும் என, நல்ல செய்தித்தலைப்பு பற்றி ஆதித்தனார் கூறுவதை மேற்கோள் காட்டினர். ஃபிரஞ்சு நவீனத்துவத்தின் ஆரம்பகால Bibiliothe, Que Bleue போல, தினத்தந்தியின் தலைப்புகள், “கண்களைப் போலவே காதுகளையும் முன்னிறுத்துவன... ‘வாய்வழி நிகழ்த்தலின்’ தேவைகளுக்கேற்ற உருவமும் செயலும் எழுதப்படும் சொல்லில் வடிவமைக்கப்படுகிறது” (Chartier & Gonza’lez 1992:53).

இந்நாளிதழ்களின் நிருபர்களிடம் இவற்றிடையேயான போட்டி பற்றி உரையாடிய போது நாளிதழின் பிரதிவடிவம் மற்றும் அறத்தின் மீதான சொல்லாடலில் எவ்வகையில் இந்நாளிதழ்களும் அவற்றின் வாசகர்களும் தன்னறிவுடன் மாறுபடுகின்றனர் என்பதைத் தெளிவாக உணர்ந்தேன். இரு நாளிதழ்களின் நிருபர்களும் தமது போட்டி இதழின் முதல் பக்கம் மற்றும் தலைப்புச் செய்தியை அலசி ஆராய்வதுண்டு. வடிவத்தின் குறைபாட்டால் ஏற்படும் செய்திப்பிரதியின் வெளிப்பாட்டு வேற்றுமைகளை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இக்கட்டுரையின் முன்பகுதியில் கண்டதுபோல, நான் நேர்காணல் செய்த தினத்தந்தி நிருபர் ஒருவர் தங்கள் பத்திரிகை கீழ்த்தட்டு மக்களின் வாசகத்தளத்தில் விற்பனையாவதென உரிமை கோரியதுடன் தங்கள் போட்டிப் பத்திரிகை போல “ஆபாசமான தலைப்பு”களைத் தருவதில்லை என்றார். மேலும் தினமலரின் பிரபலமான ஒரு-சொல் தலைப்புகளிலிருந்து “ஆப்பு”, “அல்வா” போன்ற தலைப்பு களைக் சுட்டிக்காட்டி தமது பத்திரிகை எவ்வாறு வித்தியாசப்படுகிறது என்று விளக்கினார்.

தினமலர் இதுபோன்ற குறிப்பிட்ட தலைப்பு களால் பெரிதும் பிரபலமடைந்தது. தமிழ் நாளிதழ்களிடையே புதிய வடிவத்திற்கு முன்னோடியாய் திகழ்ந்துள்ளது. நியுயார்க் போஸ்ட் மற்றும் அது போன்ற அமெரிக்க நாளிதழ்களோடு, சிறப்பாக இங்கிலாந்து பத்திரிகைகளுடன் இவ்விஷயத்தில் தினமலரை ஒப்பிடலாம்25. தினத்தந்தி நிருபர் இதுபோன்ற தலைப்புகள் முக்கியமான அரசியல் பிரச்சினைகளைத் தகுதியற்றதும் வெறுக்கத்தக்கனவுமாக மாற்றும் இயல்பையுடையன என்கிறார். அவர் தமது வெறுப்பை, ஆதித்தனாரின் “பத்திரிகை எழுத்தாளர் கையேட்டினை “எதிரொலிக்கும் வகையில் விளக்கினார்.” நாங்கள் எங்கள் கருத்துகளைத் திணிப்பதில்லை. என்ன நிகழ்ந்தது என்பதை மட்டுமே அறிவிக்கின்றோம். ஆனால் அதையே அவர்கள் ஒருவித வழி நடத்தலுடன் அளிக்கின்றனர். அவர்கள் ஊகங்களால் தலைப்புகளைக் கணப்படுத்துகின்றனர். எங்கள் பத்திரிகையில் ஊகங்கள் இடம் பெறுவதில்லை”. மேலும், நாகரிகமான சொற்களால் அமையும் புறவயமான தலைப்புகள், தெள்ளத்தெளிவான அறிவித்தல், பயன்படுத்தப்படும் மொழிக்கும் அறிவிக்கப்படும் நிகழ்வுக்கும் இடையே நிலவும் ஒருவிதமான அறம்சார் இடைவெளியும் தினத்தந்தியின் பண்புகளாகக் கருதப்படுகின்றது.

மற்றொரு பக்கம், தினமலர் நிருபர்கள் அடிக்கடி திரும்பத் திரும்பப் பொது அறிதலான தினத்தந்தி கீழ்த்தட்டு விருப்பங்களுக்குப் தரகுவேலை செய்வதைச் சுட்டுகின்றனர். தினத்தந்தி தொடர்ந்து மனதைப் பீடிக்கின்ற வட்டார வெட்டுக்குத்து, கொலைகள், தற்கொலைகள் அல்லது பிற வன்முறைக் காட்சிகளை அதீதமாகச் சித்திரிப்பதுடன் கண்டுபெறும் இன்பத்தின் வசப்படுத்தி வாசகர்களைக் கவர்வதற்காக முக்கியமான பக்கங்களில் கூடக் குருதிக்கறை படிந்த படங்களை வெளியிடுவதாக அவர்கள் என்னிடம் கூறினர். உதாரணமாக, நான் ஒருநாள் தினமலர் அலுவலகத்திற்குச் சென்றிருந்த போது, ஒரு நிருபர் என்னை அழைத்து இரு நாளிதழ்களின் அன்றைய பதிப்பை எடுத்துக் காட்டினார். தினத்தந்தியில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருந்த ஐந்து பேர்களின் மரணத்துக்குக் காரணமான இரயில் விபத்தைப் பார்வையிடச் சொன்னார்.

முதலில் அவர் இதே செய்தி எவ்வாறு தினத்தந்தியைப் போல் அல்லாமல் தினமலரின் ஏழாவது பக்கத்தில் வெளியாகி இருப்பதை பார்க்கச் சொன்னார். ஏனெனில் அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றிய செய்தி மிக முக்கியத்துவமுடையது என்றும் இரயில் விபத்து போன்ற செய்தி முதல் பக்கத்தில் வெளியிடக் கூடாதென அவர்கள் கருதுவதையும் அவர் கூறினார்26. மரணத்தைக் குறித்து இரு நாளிதழ்களிலும் வெளியான செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைக் காட்டி, தினமலர் பயன்படுத்தியுள்ள ‘பலி’ என்ற சொல், தினத்தந்தி பயன்படுத்தியுள்ள ‘சாவு’ என்ற கொச்சைச் சொல்லுடன் ஒப்பிடும் போது அநியாயம் என்ற பொருள்படுவதை எடுத்துக்காட்டினார். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அதே நிருபர் இரு நாளிதழ்களின் அறவுணர்வு மற்றும் விருப்புகளை வேறுபடுத்திக் காட்ட முயன்று, பெரிய சினிமா விளம்பரங்கள் தமது பத்திரிகையில் வாரத்திற்கொருமுறை மட்டுமே வெளியாவதையும் தமது போட்டிப் பத்திரிகையில் அன்றாடம் வெளியாவதையும் தமது பத்திரிகை பரிசுச்சீட்டுக் குலுக்கல் முடிவுகளை வெளியிட மறுத்திருப்பதும் நடத்தை தவறாத உணர்வுடைய நடுத்தர வர்க்கத்திற்கே உரிய உறுதியான மற்றுமிரு அடையாளமாகச் சுட்டிக்காட்டினார்27. தமது நாளிதழ் வட்டாரப் பேச்சுவழக்கைப் பயன்படுத்துவதில் பெருமைப்படும் அவர் அம்மொழி “மக்கள் உணர்வதை வெளியிடுவது” என்கிறார். தமது நாளிதழுக்குத் தனதாகிய ஒழுக்கம்சார் நிலைப்பாடுகள் இருப்பதையும் அது வெகுசன விருப்பங்களுக்கு வளைந்துகொடுக்காததையும் காண்கின்றார். தினமலரின் கல்விபுகட்டும் நோக்கு தினத்தந்தியிலிருந்து மிக அழுத்தமாக வேறுபட்டது.

இச்சந்தர்ப்பத்தில், நாளிதழ்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் “பேச்சு மொழி” குறைந்த அளவே எழுத்தறிவுடைய நாளிதழ் நுகர்வோருக்கு எட்டாத தொலைவில் இருப்பதுடன் முறைசார் கல்வியை நன்கு பெற்றோரைக் கவர்ந்து பதிலாக ஓர் பரப்பெல்லையையும் பிரித்துக் காட்டுகின்றது28. தினமலர் தனித்துவம் மிக்க ஒரு குறியீட்டு அமைப்பின் ஊடாகத் தொழிற்படுகின்றது. பதிவுகள் மற்றும் வகைமைகளிடையேயான வேறுபாடு அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்துவடிவம், பயன்படுத்தப்படும் பலதர எழுத்துருக்கள் இவற்றிற்குக் கிடைக்கும் பாராட்டுகளை சூழ்நிலையைப் பயன்படுத்தி அறுவடை செய்கின்றது. இவ்வாறிருக்க ஒப்பிடும்போது தினத்தந்தி ஒற்றைக்குரலும் ஒரே மாதிரியான பதிவுகளையும் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. கண்டிப்பாக, வேலன் மற்றும் அவரது வாசகர்களும் தேநீர்க்கடையில் இப்பகுதியை உரக்க வாசிப்பதை அல்லது எப்படி அண்ணாச்சியும் அவரது நண்பர்களும் நேநீர்க்கடை பெஞ்சில் அமர்ந்து அரசியல் பேசுவதை விவாதிப்பதைக் கற்பனை செய்வதுகூடக் கடினமானது. இதுபோன்ற தொடர்பற்ற தன்மை அவர்களிடம் இல்லை. இதனால்தான் தினமலர் டீக்கடைகளில் காணப்படுவதில்லை எனக் கூறக் கூடாது அல்லது குறைந்த எழுத்தறிவே உடைய தேநீர்க்கடை வாசகர்கள் பதிவு வேறுபாடுகளை அறியுமளவு உலகியல் அறிவு கொண்டவர்கள் அல்லர் எனக் கூறவேண்டும்.

ஒரு நாளிதழோடு உறவுடைய வாசிப்புமுறை மற்றொரு நாளிதழின் வாசிப்பு முறைக்கு எதிரானதாக அமைவதை நான் மிகவும் கவனப்படுத்துவதோடு எழுத்தாக்கங்களில் அழகியல் தன்மைக்காகச் செய்யப்படுகின்ற மொழிநிலை மாறுதல்கள் அனைவரையும் கவர்வதில்லை என்பதையும் முன்வைக்கின்றேன்29. உதாரணமாக, தினமலர் வாசித்திருந்த கிராமப்புற ஏழை வாசகர்களிடம் கேட்டபோது அவர்கள், தேநீர்க்கடை பெஞ்சு பகுதியையோ அதில் இடம் பெறும் கதாபாத்திரங்களையோ பற்றிக்கூட அவ்வளவாக ஒன்றும் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும், வழக்கமாகத் தினமலர் வாசிப்பவர்களுக்கு “டீக்கடை பெஞ்சு” வேலைப் பொழுதிலும் நண்பர்களிடையேயும் உரையாடுவதற்கான பொருண்மையை அளிக்கின்றது30. நாம் கண்டது போலக் கட்சி அரசியலின் செய்தி இடையூடாடல் களத்தை உருவாக்குகின்றது. இதே நாளிதழின் தலைப்புச் செய்தி போலவே “டீக்கடை பெஞ்சும்” அந்நாளிதழுக்குள்ளேயே இழுத்துச் செல்லும் சுட்டுந்தன்மைமிக்க தொடர்புகளை இணைப்பவையாகும். இப்பகுதியில் நாளிதழின் முழுச் செய்திகளும் கலந்துரையாடப்படுகின்றது. அதுவே ஒருவரைத் தினமலர் வாசர் என அடையாளம் காட்டுகின்றது.

நாளிதழை வாசித்தல் மற்றும் பேசுதல் குறித்த கருத்துகளைத் தொகுத்தல்:

காலனியாட்சிக் காலத் தமிழகத்தில் நிலவிய வாசிப்பு முறை குறித்து, வேங்கடாசலபதி (1994) வாதிடும்போது, புதிதாகத் தோன்றிய மௌனமான, தனிமையிலான, அகவயமான வாசிப்பு முறை, தலைமையை நிறுவிக் கொள்ள இயலாத நடுத்தர வர்க்கப் பழக்கத்திற்குச் சொந்தமான நவீன நாவல்களின் தோற்றத்தோடு தொடர்புடையது என்கிறார். குறிப்பாகத் தினத்தந்தியைச் சான்று காட்டி 1940களில் நிலவிய வாசிப்புப் பழக்கத்தை உறுதிப்படுத்துகின்றார்.

பரவலாகப் புழக்கத்திலிருந்த வாசிப்பு முறை புதிய நிகழ்வுகளால் தொலைவுகளுக்கு இடமாற்றப்பட்டது31. நடுத்தரவர்க்கத்திடம் எஞ்சியிருந்தவற்றின் மீதாகப் பரவிச் சென்றது. பாதிப்புச் செலுத்தியது என்றால் அது நாளிதழ்களின் வளர்ச்சிதான் (1994:290)

தினத்தந்தியின் வாசிப்பு முறை, அதாவது நான் குறிப்பிட்ட வேலன் மற்றும் அவர் போன்ற கிராம மக்களின் வாசிப்புப் பழக்கம், பழமையான வாசிப்பு முறைகளில் வாசிக்கப்பட்டு வந்த முச்சந்தி இலக்கியம் போன்ற பரவலான வாசிப்புப் பிரதிகளின் வெகுசனமாக்கத்துடன் தொடர்புடையது என்பது வேங்கடாசலபதியின் கருத்து, தினமலருடன் தொடர்புடைய நடுத்தர வகுப்பினரின் நாளிதழ் வாசிப்பாகப் பெரிய அளவில் கைமாற்றம் நிகழ்ந்திருக்கக் கூடும் என நான் விளக்க முயல்கிறேன். பின் காலனியச் சூழலில், குறிப்பாக 1990களின் பின் ஏற்பட்ட இந்தியாவின் தாராளமயமாக்கப் பொருளாதாரத்தை ஒட்டி, குறிப்பிடத்தக்க, இனங்காண முடிகின்ற இரு வகையான வாசிப்பு முறைகள் நிலவுகின்றன. எனினும் நடுத்தர வகுப்பு பிரதி வாசிப்புப் பழக்கம் தாக்கத்தைச் செலுத்துமளவு விரிவு பெற்றுள்ளது32.

வாய்மொழி, எழுத்துமொழிக் கருவிகளின் வழியாக அவற்றின் குறிப்பிட்ட பரவல் வெளிகளை உருவாக்கிடத் தகுதிப்படுத்துகின்றன எனும் களத்தை மேலும் கூட நாம் விரிவாக ஆராய்ந்தால், இருவேறுபட்ட வாசிப்பு முறைகளும் நாளிதழ்களின் “பேச்சு மொழி”ப் பயன்படுத்தலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதைக் காணலாம். நாளிதழில் பேச்சு மொழி பயன்படுத்தலுக்கான உரிமைகோரல் இரு மிக வேறுபட்ட புறத்தோற்றத்தைக் கொண்டுள்ளது: தினத்தந்தி எழுத்துத் தமிழை வாய் விட்டு உரக்க வாசிப்பதற்காக உருவாக்குகிறது. “பேச்சுத் தமிழை” மௌனமாக வாசிக்கச் செய்கிறது தினமலர் அல்லது சில வேளைகளில் உரையாடல்களில் மறுஇயக்கம் பெறுகிறது. ஒரு வாசிப்பு வடிவம் மற்றும் பொதுச் சமூகத்தில் அதன் பரவலின் வெகுசன மாக்கம் அதற்கேயுரிய சட்டதிட்டங்களை வழங்குவதுடன் அதற்கு எதிரான வேறுபட்ட பரவல் வகைமை, மேற்கோள் / குறித்தல்களின் தொடர்ச்சி, வளர்ப்பதுடன், தனித்த இடத்தகுதிகளைப் பிரித்து அடையாளப்படுத்துவதை இதழியலில் நாம் காண்கிறோம். இப்பரவலெல்லைகள் பலதரப்பட்ட வாசகர்களிடையே ஒன்றின் மீது விருப்பம் கொள்பவரைத் தேர்வு, சமூக இயல்பின் தன்மைகள், பிரதிகளின் வகைமாதிரிகள் இவற்றின் விளைவு எனலாம். இதையே புர்த்தியூ (1984:230) “பண்பாட்டுச் சந்தை”யில் “பொருட்களின் உற்பத்திக்கும் விருப்பங்களின் உற்பத்திக்கும் இடையேயான தொடர்பு” என்கின்றார். நிச்சயமாக, இம்மாதிரியான பிரதி நுகர்வு முறைகள் சமூகப் பொருளாதார வகுப்பு மற்றும் பாலினப் பழக்கவழக்கங்களைத் தீர்மானிக்கின்றன.

இவ்வாறாக ஊடக - நுகர்வுப் பழக்கம் வகுப்பு, பாலினம் உருவாக இடமளிப்பதை நன்கறிவோம். ஊடகங்களின் ஊடான மொழியாய்வு மற்றும் சமூக வேற்றுமை குறித்த பகுப்பாய்வு, ஊடகங்கள் உள்ளடக்கியுள்ள கூறுகள் மற்றும் பண்பாட்டு இயக்கவியலின் வழியே பொதுச்சமூகத்தை விளக்குதல் இவ்வாய்வின் மேலதிகப் பங்களிப்பாக அமைய வேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்33. பிரதிசார் பழக்க அடிப்படைகள் அல்லது நான் அழைக்கின்ற பரவல் எல்லைகள் வரலாற்று உற்பத்திகளே, அவற்றை ஒரு வெகுசனச் சமூகத்தில் விளையச் செய்திட இயலும். உதாரணமாக, தென்னிந்தியாவுக்குப் புதுமையான மௌன வாசிப்பு முறை, கிராமங்களில் குழுவாசிப்பில் இருந்து வந்த மைய ஊடகப் பிரதிகள் நாளிதழ்களால் அப்புறப்படுத்தப்பட்டதன் விளைவு என்பதை நாம் அறிவோம். ஆனால் இதுபோல் பிரதிகளின் மாறுபட்ட அடிப்படைகள், ஒருமுறை உருவாக்கப்பட்டுப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்ட பின், சமூக வேற்றுமையின் நீட்சிக்குக் காரணமாவதுடன் பொதுச் சமூகத்திற்குக் குறிப்பிட்ட உணர்வுகளையும் பண்பாட்டுத் தருக்கத்தையும் அளிக்கின்றது. பிரதியின் மீதான பல்வேறுபட்ட உணர்வின் தளங்களைப் பிரித்தெடுத்துக் கொண்டு செய்யும் நமது பகுப்பாய்வில் மிக வேறுபட்ட இரு பரவல்வெளிகளில் ஒரு படித்தான வளர்ச்சியுடன் இரு நாளிதழ்களும் இந்தியாவின் வட்டார மொழி நாளிதழ்ப் புரட்சியின் எரிபொருட் சக்தியாக இருப்பதை நாம் மிக நன்கு புரிந்து கொள்ளலாம்.

பிரான்சிஸ் கோடி

மொழியாக்கம்: ந.மனோகரன்

Pin It