சென்னை, அறிவாலயம், கலைஞர் அரங்கில், திராவிட இயக்க நூற்றாண்டு விழா நடைபெற்ற நாளில், தினமலர் நாளேடு, அவ் விழாவிற்கு எதிராகப் புனையப்பட்ட செய்தி ஒன்றினை, வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. விழாவிற்குத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு என்றும், மக்கள் மாநாடு கட்சி கடும்கண்டனம் என்றும், மீண்டும் பத்தாவது பக்கத்தில் தலைவர்கள் கண்டனம் என்றும் பல்வேறு தலைப்புகள் இட்டுத் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.
அந்தச் செய்திகளில் முன்வைக்கப்பட்டுள்ள விவாதங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, அந்த அறிக்கைகளைக் கொடுத்த மாபெரும் கட்சி களும், மாபெரும் தலைவர்களும் யார் என்று பார்க்கலாம். முதல் பக்கத்தில், மக்கள் மாநாடு கட்சியின் தலைவர் சக்திவேல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மக்கள் மாநாடு கட்சி என ஒன்று எங்கே உள்ளது என்பது குறித்தும், அதனுடைய தலைவர் சக்திவேல் எங்கே தலைமறைவாக உள்ளார் என்பது குறித்தும் விவரம் அறிந்தவர்கள் நமக்குச் செய்தி அனுப்பலாம்.
காணவில்லை என்னும் பகுதியில் போட வேண்டிய செய்திகளை எல்லாம் தினமலர் முதல் பக்கத்தில் வெளியிடுகிறது. அந்தப் பகுதியில் கூட காணாமல் போனவரின் புகைப்படத்தை வெளியிடும் பழக்கம் உண்டு. தினமலரில் அவ்வளவு பெரிய தலைவரின் படம் கூட வெளியிடப்படவில்லை. தமிழகத்தின் முன்னாள் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் தலைமைநிலையச் செயலாளர் என ஒருவர் என்று அடையாளம் தெரியாத பலரின் பெயரால் அறிக்கைகள் வெளியிடும் மஞ்சள் பத்திரிகையாக மாறிவிட்டது தினமலர்.
தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்வதில்லையாம். தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தப் பூணூல் மலர் ஒரு கேள்வியை முன்வைக்கிறது. திராவிடன் என்பதை ஒப்புக் கொண்டால், திராவிட மொழிக்குடும் பத்தை ஒப்புக்கொள்ள வேண்டிவரும். அதன்படி, திராவிட மொழிக்குடும் பத்தில் தமிழே மூத்த மொழியும், முதன்மை யான மொழியும் ஆகும் என்ற கால்டுவெல்லின் ஆய்வை ஏற்க வேண்டி வரும்.
அப்படி ஏற்றால் தமிழுக்குப் பின்னால் தான் தங்கள் மொழிக ளெல்லாம் நிற்கின்றன என்னும் உண்மையை அவர்கள் ஏற்றவர்கள் ஆவார்கள். அதனால்தான் அவர்கள் யாரும் தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்வ தில்லை. அதனை அவர்கள் தங்களுக்குத் தாழ்வு என்று கருதுகிறார்கள். ஆனால் தமிழே மூத்த மொழி என்னும் உண்மையை ஏற்கும் தமிழர்கள் பெருமிதத்தோடு தங்களைத் திராவிடர் என்று அழைத்துக் கொள்கின்றனர். இதுதான் வேறுபாடு. இந்த வேறுபாடு பூணூல்களுக்கும் புரியத்தான் செய்யும். ஆனால் சமற்கிருதமே தேவபாசை என்று பிதற்றிக்கொண்டிருக்கும் அவர்கள், திராவிடர் என்று சொல்வதன் மூலம் தமிழுக்கு வரும் ஏற்றத்தை எப்படித் தாங்கிக் கொள்வார்கள்?
பா.ம.க. நிறுவனர் ராமதாசை வேறு தினமலர் தன் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. திராவிட இயக்கத்தை யார் கொச்சைப்படுத் தினாலும் அவர்களைப் பார்ப்பனர்கள் பாராட் டத்தானே செய்வார்கள். திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று ராமதாசு கூறிவிட்டாராம், திளைத்து மகிழ்கிறது தினமலர். “கருணாநிதி வம்சாவளியினர் ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்” என்பது ராமதாசின் கூற்று என்கிறது தினமலர். எந்த ரத்தப்பரிசோதனை நிலையத்தில் இதுபோன்ற ஆராய்ச்சிகள் எல்லாம் நடக்கின்றன என்பது நமக்குத் தெரிய வில்லை. அதனை நம்பி ராமதாசு அப்படிச் சொல்லியிருப்பாரெனில், அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அடுத்த பரிசோதனையில் உங்கள் மூதாதையரைப் பற்றியும் இவர்கள் ஆராய்ச்சி செய்து, உங்களை மராத்தியர் என்று சொன்னாலும் சொல்லி விடுவார்கள்.
திராவிட என்ற போர்வையில் கருணாநிதியும், வீரமணியும் மீண்டும் தமிழர்களை அழிக்கப் புறப்பட்டுள்ளனர் என்கிறார் அந்த மாபெரும் தலைவர் சக்திவேல். திராவிட என்பது நமக்குப் போர்வையோ முகமூடியோ அல்ல. நம் இனமானப் பேராசிரியர், விழாவில் குறிப்பிட்டதைப் போல, திராவிடன் என்பதே நம் முகம். இந்து என்பதும், சூத்திரன் என்பதும்தான் நமக்குப் போடப் பட்ட முகமூடிகள். அந்த முகமூடிகளை, அந்தப் போர்வைகளைக் கிழித்தெறிந்துவிட்டுத்தான் திராவிடர்களாய் மீண்டும் இப்போது அணிவகுக்கத் தொடங்கியுள்ளோம்.
தினமலருக்கும், பார்ப்பனர்களுக்கும்தான் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் எவ்வளவு அக்கறை. திராவிடர்கள் என்னும் பெயரில் தமிழை அழிக்க வருவதாய் முதலைக் கண்ணீர் வடிக்கும் தினமலர் அறியுமா, தமிழகத்தில் தமிழ் உணர்வை ஊட்டியதே திராவிட இயக்கம்தான் என்பது? 1950களில் ஏராளமான சமற்கிருதப் பெயர்களைத் தமிழில் மாற்றிய இயக்கம் எது? சமற்கிருதப் பேராசிரியர்களுக்கு இணையாய்த் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் ஊதியம் பெற்றுத் தந்த இயக்கம் எது? 1911ஆம் ஆண்டு முதல் நீக்கப் பட்டிருந்த தமிழ்ப்பாடத்தை மீண்டும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1926ஆம் ஆண்டு முதல் கொண்டு வந்த இயக்கம் எது?
மேற்காணும் கேள்விகளுக்கு எல்லாம் பார்ப்பனர்கள் விடை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் இங்கு அவற்றை எழுப்பவில்லை. தமிழால் பயன்பெற்ற, திராவிட இயக்கத்தால் பயன்பெற்ற தமிழர்களேனும் இந்த உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கே அச்செய்திகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
ஒரு கட்சி அல்லது இயக்கம் தங்களின் நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு எவரேனும் எதிர்ப்புத் தெரிவிப்பார்களா? 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தன் நூற்றாண்டைக் கொண்டாட வில்லையா? எங்கோ நடந்த சோவியத் புரட்சியின் வீரவரலாற்றை இங்கே இந்த மண்ணில் நாம்கூட மகிழ்ந்து கொண்டாட வில்லையா? எந்த விழாவிற்காவது எவராவது கண்டனம் தெரிவிக்கும் அநாகரிகம் அரங்கேறி உள்ளதா இன்றுவரையில்?
திராவிட இயக்க நூற்றாண்டிற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு? எதற்காகப் பார்ப்பனப் பூணூல் கள் படபடக்கின்றன? எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உள்ளது. திராவிட இயக்கம் கண்டு நடுங்கும் பார்ப்பனர்களின் பயமும் பதற்றமும் இன்னும் அவர்களை விட்டு விலகிட வில்லை. எங்கே மறுபடியும் அந்த இயக்கம் வீறுகொண்டு எழுந்துவிடுமோ, தங்களின் ஏமாற்றுப் பிழைப்பில் எதிர்காலம் மண்தூவிவிடுமோ என்று அவர்கள் அஞ்சி ஒடுங்குகின்றனர். அச்சமே எதிர்ப்பாய் வேறுவடிவம் எடுக்கிறது.
நச்சுப் பாம்பை அடிக்கத் தடி ஓங்கினால், அது அச்சத்தின் காரணமாய் சீறி விழுவது இயல்புதானே! பெரியாரின் தடி கண்டு இந்தப் பெரும்பாம்புகள் இப்போது சீறுகின்றன.
ஒரு விதத்தில் தினமலருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அன்றைய விழாவிற்கு வீரியமும் விறுவிறுப்பும் வந்து சேர்ந்ததற்கு அந்த நாளேட்டின் அறிக்கையும் ஒரு காரணம். தினமலரின் பணி தொடர வாழ்த்துகிறோம்.