பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் சென்னை யில் இயங்கிய சென்னை இலௌகிக சங்கம் என்ற அமைப்பு தொடர்பான பதிவுகள் இதுவரை அறியப்படாமல் இருந்தது. இவ்வமைப்பின் தோற்றம், செயல்பாடுகள் ஆகியவை தொடர்பான செய்திகளைப் பதிவு செய்வது நமது நோக்கம். இவ்வமைப்பு குறித்துப் புரிந்து கொள்வதற்குக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்

- சென்னை இலௌகிக சங்கம் உருவான பின்புலம் எத்தன்மை உடையதாக அமைந்துள் ளது மற்றும் இவ்வமைப்பு உருவாக்கம் என்பது எவ்வகையில் உலகம் தழுவிய செயல்பாடாக நிகழ்ந்துள்ளது.

- இவ்வமைப்பிற்குள் உருவாக்கப்பட்ட பல்வேறு உள் அமைப்புகள் எவையெவையாக உள்ளன.

- இவ்வமைப்பு நடத்திய தமிழ் மற்றும் ஆங்கில இதழ்கள் குறித்த விவரணங்கள்.

- இந்த அமைப்பின் நிர்வாகச் செயல்பாடுகள் எவ் விதம் நிகழ்ந்தன என்பது தொடர்பான விவரங்கள்

- இவ்வமைப்பின் நோக்கம் மற்றும் கோட்பாடு என்பவைகள் எவையெவையாக இருந்தன.

- இவ்வமைப்பு தொடர்பான தகவல்கள் இது வரை அறியப்படாமல் இருந்தமையை எப்படிப் புரிந்துகொள்வது என்ற உரையாடல்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பல்வேறு புதிய நிகழ்வுகள் உருவாயின. இந்நிகழ்வுகள் சார்ந்தே சென்னை இலௌகிக சங்க உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள இயலும். பத்தொன்பதாம் நூற்றாண்டு நிகழ்வுகளை நமது புரிதலுக்காக பின்வரும் வகையில் தொகுத்துக்கொள்வோம்.

- பதினாறாம் நூற்றாண்டு முதல் உலகம் முழுதும் உருவான புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப் புகள் உலகச் சமூக வெளியில் பல்வேறு புதிய தன்மை கள் உருவாவதற்கான சூழலை உருவாக்கிற்று.

- அச்சுக் கருவியின் வருகை மூலம், பண்பாட்டுத் தளத்தில், இதுவரை இருந்த தொடர்பாடல் முறைகள் மாறத் தொடங்கின. எழுத்துப் பயிற்சி, வாசிப்புப் பழக்கம், செய்தித்தாள், அச்சுப்புத்தகம், துண்டறிக்கைகள் எனப் பல்வேறு தொடர்பாடல் சாதனங்கள் உருவா யின. மொழியில் உரைநடை என்னும் புதிய வடிவம் உருவானது.

- மதம் என்னும் அமைப்பு இதுவரை கேள்விக்கு உட்படுத்தப்படாத ஒன்றாக இருந்து வந்தது. நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டு வரும் இவ்வமைப்பு குறித்து கேள்வி கள் எழுப்பப்பட்டன. மதத்திற்கு அடிப்படையாக அமைந்த நம்பிக்கைகளின் பல்வேறு பரிமாணங்கள் குறித்த உரையாடல் பொதுவெளியில் நிகழத் தொடங்கின.

- புதிய இயங்குதளத்தில் குடியரசு என்னும் சனநாயகம், சோசலிசம், உலகாயதம் ஆகிய பல பல்வேறு புதிய தன்மைகள் குறித்த விரிவான உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.

இயற்கை நிகழ்வுகளைக் குறித்துப் பல்வேறு மூடநம்பிக்கை களில் மூழ்கியிருந்த சமூகம், இப்போது, அந்நிகழ்வுகள் தொடர் பான காரண காரியங்கள் குறித்து விவாதிக்கத் தொடங்கியது. பிரபஞ்சம் என்றால் என்ன? பிரபஞ்ச இயக்கத்தை எப்படிப் புரிந்து கொள்வது? பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் எவையெவை? ஆகிய பல்வேறு வினாக்கள் இயல்பாகவே உருவாயிற்று.

பிரபஞ்ச நிகழ்வுகள் தொடர்பான நம்பிக்கைகள் மற்றும் அனுபவம் சார்ந்து இதுவரை பதிவாகியிருந்த கருத்துநிலைகள் முற்றிலும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. உயிர்களின் தோற்றம், பிரபஞ்சத்தில் உள்ள கோள்களின் இயக்கம், கோள்கள் மூலம் பெறப்படும் பல்வேறு விசைகள் ஆகியவை குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்காட்டினார்கள்.

இதன் மூலம் நம்பிக்கை சார்ந்து செயல்பட்ட மதம் நிலைகுலையத் தொடங்கியது. அம்மதம் கூறும் கருத்துகளும் கேள்விக்கு ஆளாக்கப்பட்டன. இவ்வகையில், சமூகவெளி என்பது பல்வேறு புதிய புதிய கண்டுபிடிப்புகளால் நாள் தோறும் மாறிக் கொண்டே வந்தது, வருகிறது.

புதிதாக உருவான அறிவியல் நிதழ்வுகளால் நடைமுறை வாழ்க்கையில் உருவான மாற்றங்கள் ஒருபுறமிருக்க, மனிதர்க ளுடைய சிந்தனைமுறைகளிலும் மாற்றங்கள் உருவாயின. தங்களிடம் உருப்பெற்றுள்ள நம்பிக்கைகள் எவ்விதமான தர்க்கமும் இன்றி இருப்பதை உணர்ந்தனர். மனித சமூக இயங்குவெளி குறித்தப் பல்வேறு கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

மனிதர்கள் இத்தன்மைக்கு முகம் கொடுக்காமல் இருக்க இயலாது என்ற நிலை உருப்பெற்றது. பிரபஞ்ச இயக்கம் தொடர்பாக இருந்த பல்வேறு மாயைகள் மறைந்தன. இந்தப் பின்புலத்தில் மதம் என்ற நிறுவனமே பெரிதும் விமர்சனத்திற்கு உட்படுத்தப் பட்டது.

அறிவியல் கண்டுபிடிப்புகள் உயிர்களின் தோற்றத்திற்கு காரணங்களை வெளிப்படுத்தின. புவி ஈர்ப்பு விசை மூலம் பிரபஞ்சம் இயங்குவதை வெளிப்படுத்தினர். பூமியிலும் பிரபஞ்ச வெளியிலும் உள்ள பல்வேறு தாதுப்பொருட்களை மனிதர்கள் எவ்விதம் பயன்படுத்த முடியும் என்பதும் அறியப்பட்டது. ஐம்பூதங்கள் எனப்படும் பொருட்கள் மனிதவாழ்வுக்கு எந்தெந்த வகையில் உதவக்கூடும் என்ற தெளிவு ஏற்பட்டது. வெப்பம், காற்றழுத்தம், ஈர்ப்புவிசை ஆகிய பிற அடிப்படைகள் பிரபஞ்ச வெளியில் இயங்குவதை, சமூக நடைமுறை வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதும் நடைமுறையில் நிகழ்ந்தது. இதன் மூலம் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இடம் விட்டு இடம் நகருதல் என்பது இதுவரை இல்லாத புதிய பண்பாடாக உருவானது. மனிதர்களின் வாழ்வெளியின் எல்லைகள் விரிந்தன. இதனால் மனிதர்கள் மனிதர்களை ஆதிக்கம் செலுத்தும் நிகழ்வுகளும் ஒருபுறம் நடந்தேறின. ஆனால், மனிதர்கள் இப்புவிக்கோலம் குறித்து அறியப்படாது இருந்த தன்மை மாறியது.

மேலே விவரித்த நிகழ்வுகள் சார்ந்து மனித சிந்தனை மரபில் உருவானது தான் விடுதலைச் சிந்தனை மரபு (Free thought) என்று கூறமுடியும். மதம் என்பதிலிருந்து விடுதலை அடையும் நிகழ்வே உலகம் முழுவதும் முதல் கட்டத்தில் நிகழத்தொடங்கியது. ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களில் இத்தன்மை கிறித்தவ மத எதிர்ப்பு இயக்கமாக உருவானது. வால்டேர், தாமஸ்பெயின், ஸ்பினோசா, இங்கர்சால், பெர்னட் ரஸ்ஸல், பிராட்லா ஆகிய பலரின் செயல்பாடுகள் கிறித்தவ மடங்களை எதிர்க்கும் இயக்கமாகவே உருவாயின.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கப் பகுதிகளில் உருவான கிறித்தவ மத எதிர்ப்பு, சுயசிந்தனை மரபை தடைசெய்வதாக, மதம் சார்ந்த செயல்பாடுகள் இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டினர்.

இவ்வகையில் பல்வேறு சமயச்சார்பற்ற இயக்கங்களும் அதனைச் சார்ந்த சுயசிந்தனை சார்ந்த இயக்கங்களும் உருவாயின. இத் தன்மைகளின் நிகழ்விடமாக இலண்டன் மாநகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் திகழ்ந்தது. பிராட்லா செயல்பாடுகள், இவ்வமைப்பினர் நடத்திய இதழ்கள், வெளியிட்ட நூல்கள், சிறுவெளியீடுகள் ஆகிய அனைத்தும் உலகம் முழுதும் செயல்பட்ட மதச்சார்பற்ற சுயசிந்தனையாளர் களுக்கு அனுப்பப்பட்டது.

இலண்டன் நகரில் செயல்பட்ட அமைப்பின் தாக்கம் சென்னையில் உருவான இந்து சுயசிந்தனையாளர் அமைப்பிற்கு (Hindu Freethought Union) ஏற்பட்டிருப்பதை அறியமுடிகிறது. இவ்வகையில் 1878ஆம் ஆண்டு தொடக்கம் சென்னையில் இந்து-சுய சிந்தனையாளர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படத் தொடங்கியிருப்பதை அறிய முடிகிறது.

இவ்வமைப்பில் செயல் பட்டவர்கள் தங்களைச் சுயக்கியானிகள் என்று அழைத்துக் கொண்டனர். ‘இந்து சுயக்கியானிகள் சங்கம்’ என்று தங்கள் அமைப்பை அடையாளப்படுத்தினர். ‘இந்து’ என்னும் சொல் மத அடையாளத்தில் இங்கு பயன்படுத்தவில்லை. மாறாக ‘இந்தியர்கள்’ எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது. காலனிய காலத்தில் செயல்பட்ட இந்திய சுயசிந்தனையாளர்களாக இவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். சென்னையில் இவ்வமைப்பு உருப்பெற்ற சூழலில் காலனிய கால இந்தியச் சூழலும், தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த சூழலும் எவ்வகையான சமூகப் போக்குகளைக் கொண்டிருந்தது. அவ்வகையான போக்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சமுதாய இயங்குவெளி சென்னையில், இச்சுயசிந்தனையாளர்கள் மூலம் எவ்வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளும் தேவை நம்முன் உள்ளது. அதனைப் பின் வரும் வகையில் தொகுக்கலாம்.

- இந்தியச்சூழலில் உருவான நவீன அறிவாளிகள், இங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த மதங்களின் செயல்பாடுகளில் மாற்றங்களைக் கோரி நின்றனர். இதன் விளைவாக மதச்சீர்திருத்த இயக்கங்கள் உருவாயின. ஆரிய சமாஜம், பிரம்மசமாஜம் ஆகிய பிற அமைப்புகளை இப் பின்புலத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

- மதக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண் டிருந்தவர்களும், அவற்றை நவீனப்படுத்தும் கண்ணோட்டத்தை முன்வைத்தனர். வேதாந்தம், சித்தாந்தம் என்னும் சொற்களைப் பயன்படுத்தினர். இவற்றைப் பழம் தத்துவங் களாகவே கருதினர். அவைதீக சமயங்கள் முன்னெடுத்த உலகாயதக் கோட்பாடுகளை எதிர்கொள்ள வைதீக சமயங்கள் சார்ந்தவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளாக இவை அமைந்தன. இவ்விதம் மத ஒழுங்கு முறையில் மாற்றங்களை முன்வைத்தனர்.

- வடலூர் சி. இராமலிங்கன் என்னும் வள்ளலார் தமது சமயச் சித்தாந்த மரபாக ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ என்பதை தமது இறுதிக் காலங் களில் முன்வைத்துச் செயல்படத் தொடங்கினார்.

- வழக்கமான வைதீக சமய மரபுகளை ஆறுமுக நாவலர் போன்றவர்கள் முன்னெடுத்த சூழலில் மேற்குறித்த வகையில் சமயம் தொடர்பான உரையாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விரிவாகவே நடைமுறையில் இருந்ததைக் காண்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் என்பது இவ்வகையில் வேகமான மாற்றங்களை முன்னெடுத்த காலமாகக் கருத முடியும். இந்தச் சூழலில் தான் ‘இந்து சுயக்கி யானிகள் சங்கம்’ சென்னையில் உருப்பெற்றிருப் பதை கவனத்தில் கொள்வது அவசியமாகும். இதுவே பின்னர் ‘சென்னை இலௌகிக சங்கம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. இச்சூழலைப் பின்வரும் வகையில் புரிதலுக்காகத் தொகுத்துக் கொள்ளலாம்.

-              காலனியத்தின் மூலம் புதிதாகக் கிடைத்த கல்வி மற்றும் பிற செயல்பாடுகள், சமூக இயங்கு வெளியில் புதிய தன்மைகளை உரையாடலுக்கு உட்படுத்தும் தன்மை பெற்றிருந்தது.

-              புத்தொளி மரபால் முன்னர் சொல்லிக் கொண்டிருந்த சமய மரபுகளில் மாற்றம் வேண்டிய அமைப்புகள் உருவாயின.

மேற்குறித்தப் பின்புலத்தில் சமய மறுப்பு இயக்கமாக இந்து-சுயக்கியானிகள் சங்கம் உருப்பெற்றிருப்பதைக் காண்கிறோம். இத்தன்மை அன்றைய சூழலில் இந்தியப் பகுதிகளில் எவ்விடத் தும் இல்லாத, தமிழ்ச் சூழலில் மட்டும் நடைமுறையில் இருந் ததைக் காண்கிறோம். இத்தன்மை வியந்து பேசப்பட வேண்டிய ஒன்றாகவே கருத இயலும். இதனைப் பின்வரும் வகையில் வரையறை செய்யலாம்.

- வங்காளம் போன்ற பகுதிகளில் வெறும் சமய சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமே உருவாயின.

-  தமிழ்ச் சூழலிலும் சமயத்தில் மாற்றங்கள் வேண்டிய குரல்கள் எழுந்தன.

ஆனால், சமய மறுப்பு இயக்கமாக இந்து - சுயக்கியானிகள் சங்கம் ஏன் உருவாக வேண்டும் என்பதன் உரையாடலை முன் வைப்பது அவசியமாகிறது. இத்தன்மை ஐரோப்பிய - புத்தொளி மரபின் நேரடித் தாக்கம் என்று கருதமுடியும். ஐரோப்பிய - அமெரிக்கப் பின்புலத்தில் செயல்பட்ட கிறித்தவ மத எதிர்ப்பு இயக்கம் போலவே சென்னை சுயக்கியானிகள் செயல்பட்டதாகக் கூற இயலாது. அவர்களின் தாக்கம் நேரடியாகப் பெற்றிருந்தாலும், தமிழ்ச் சூழலின் சமூக இயங்குவெளி சார்ந்தே இவர்கள் செயல் பட்டிருப்பதைக் காண்கிறோம். இத்தன்மையை பின்கண்டவாறு தொகுக்கலாம்.

- முற்றிலும் சமய மறுப்பு இயக்கமாகவே இவ் வமைப்பு செயல்பட்டது. சமயத்தின் மீது விமர்சனம் என்னும் ஐரோப்பியச் சூழலிலிருந்து இங்கு மாறுபட்ட சமய மறுப்பு நடைமுறை யில் முன்னெடுக்கப்பட்டதை அறிகிறோம்.

- சமயத்தின் மூலமாக இருக்கும் ‘கடவுள்’ இருப்பு குறித்த கேள்விகளை முன்வைக்கும் இயக்கமாக நடைபெற்றது. ‘சாங்கிய நாத்திக இயக்கம்’ என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண் டனர்.

இவ்வகையில் இந்தியச் சூழலில் முதல் நாத்திக இயக்கமாக சென்னை சுயக்கியானிகள் உருப்பெற்று செயல்பட்டிருப்பதைத் தனித்துக் கவனத்தில் கொள்வது அவசியம்.

காலனியத் தமிழ்ச் சூழலில் ‘இந்து சுயக்கியானிகள் சங்கம்’ என்னும் சென்னை இலௌகிக சங்க செயல்பாடானது சமூக தளத்தில் உருவான புதிய புத்தொளியைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். சமய மறுப்பு அன்றைய சூழலில் அவ்வளவு எளிதாக நடைமுறைப்படுத்தக் கூடிய ஒன்றாகக் கருத முடியாது. முற்றுமுழுதும் சமய ஆதிக்கமே நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதனை முற்றுமுழுதாக மறுதலித்த ஓர் இயக்கம் உருப்பெறுவது என்பது சமூக இயங்கு தளத்தில் தனித் தன்மையாகவே கருத வேண்டும்.

வைதிக மரபுகளைப் புறங்கண்ட அவைதிக மரபு மதங்கள் நிலவிய சூழல் பண்டைத் தமிழ்ச் சூழல் என்று கூறலாம். பின்னர் உருவான திருமூலர், தாயுமானவர், சில சித்தர்கள், வள்ளலார் ஆகியோர் வெறும் சமயத்தை மட்டும் முன்னெடுத்தவர்களாகக் கருத இயலாது. சமய மரபுகளுக்கு மாறான சில மரபுகளை மேற்குறித்தவர்கள் முன் வைத்திருப்பதாகக் கருதலாம். அந்த மரபின் தொடர்ச்சியாக சென்னை இலௌகிக சங்கமாகப் பின்னர் அறியப்பட்ட சென்னை சுயக்கியானிகள் சங்கம் என்று கருத முடியும்.

இந்து சுயக்கியானிகள் சங்கம் (Hindu-Free thought Union) என்னும் பெயரில்தான் இச்சங்கம் முதன்முதல் செயல்படத் தொடங்கியது. தங்களை சுயசிந்தனையாளர்கள் எனும் பொருளில் சுயக்கியானிகள் அழைத்துக் கொண்டனர். இலண்டனில் செயல்படும்.

‘தேசிய மதச்சார்பற்றோர் சங்கம்’ (National Secular Society) மால்தூசியின் கோட்பாடுகளை முதன்மைப்படுத்தி, தம் கருத்துக்களைப் பரப்புவதற்காக ‘மால்தூசியின் சங்கம்’ (Malthusion Society) என்ற அமைப்பை நிறுவியது. அதே பெயரில் சென்னையிலும் மால்தூசியின் சங்கத்தைச் சுயக்கியானிகள் சங்கமும் உருவாக்கியது.

1882 முதல் இவ்வமைப்பு செயல்படத் தொடங் கியது. இவ்வமைப்பின் செயலாளராக பி.எஸ். நரசு என்ற குறிப்பு உள்ளது. பின்னர் தமிழ்ச் சூழலில் புத்த சமயக் கோட்பாட்டு அறிஞராக அறியப்பட்ட பேராசிரியர். பி.இலட்சுமிநரசு சுயக்கியானிகள் சங்கத்தில் செயல்பட்டிருக்கிறார் என்று கருத முடியும். சுயக்கியானிகள் சங்கத்திற்கும் பின்னர் தமிழ்ச்சூழலில் உருவான பௌத்த சமய அமைப்புக்கும் தொடர்பு இருப்பதைப் பின்னர் விவாதிக்கலாம். மால்தூசியின் சங்கம் என்பதை ‘தரித்திர நாச சங்கம்’ என்று தமிழில் அழைத்திருப்பதைக் காண்கிறோம். தரித்திரம் எனும் சொல் வறுமையைக் குறிப்பதாகும். வறுமையை ஒழிக்கும் சங்கம் என்பதே மால்தூசியின் சங்கத்தின் நோக்கமாக இருப்பதைக் காணமுடிகிறது.

‘மிகுதியான மக்கள் பெருக்கமே’ சமூகத்தில் வறுமை நிலவு வதற்கான காரணமாக சுயக்கியானிகள் கருதினர். இதனை இலண்டனில் செயல்பட்ட சங்கமும் கூறியது. எனவே, மக்கள் வறுமையிலிருந்து விடுபட வேண்டுமானால், நிறைய குழந்தை களைப் பெறுவதை தடைசெய்ய வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு என்று பின்னர் அறியப்பட்டதன் முன்னோடி வடிவமே மால்தூசின் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டு சுயக்கியானிகள் செயல்பட்டனர். அத்தன்மை தொடர்பான விரிவான பதிவுகளை, தாங்கள் நடத்திய தமிழ், ஆங்கில இதழ்களில் அறிவிப்புகள் மற்றும் கட்டுரைகள் வடிவில் வெளியிட்டனர்.

மால்தூசியின் கோட்பாடு பேசப்பட்ட சமகாலத்திலேயே காரல் மார்க்ஸ் போன்றவர்களால் மறுத்துப் பேசப்பட்டதை அறிகிறோம். ஐரோப்பியச் சூழலில் கத்தோலிக்கர்களும் இதனை மறுத்தனர். பொருளாதார உற்பத்தி விதி சார்ந்து இக்கோட்பட்டை மார்க்ஸ் மறுத்தார். 1930களில் ஈ.வெ.ரா. பெரியார் இக்கோட்பாட்டை எதிர்த்ததாக அறிய முடியவில்லை. ஆனால், சிங்காரவேலர் அதனை மறுத்தெழுதியதைக் காண்கிறோம். இவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் தொடங்கி மால்தூசியின் கோட்பாடு தமிழ்ச் சூழலில் விவாதிக்கப்பட்டதைக் காண்கிறோம். நவீன சிந்தனை மரபுகளைத் தமிழ்ச்சூழல் எவ் வகையில் உள்வாங்கியது என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.

சுயக்கியானிகள் சங்கம், சிறுவெளியிடுகளைக் கொண்டுவருதற் கான ‘சிறுபத்திரிகா பிரகடந சங்கம் (Madras Secular Tract Society) என்ற அமைப்பையும் உருவாக்கியது. இதன் பொறுப்பாளராக லிங்கம் என்பவர் செயல்பட்டுள்ளார். சிறுவெளியீடுகளைக் கொண்டுவருவதில் சங்கம் பெரிதும் அக்கறை எடுத்துக் கொண்டதைக் காணமுடிகிறது. சுயக்கியானிகளின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்றாக, சிறுவெளியீடுகளை அச்சிட்டு இலவசமாக வழங்க வேண்டும் என்பதாகும். அன்றைய சூழலில் சமயவாதிகள் இவ்வகையான செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். மிக அதிகமான சிறுவெளியீட்டுச் சங்கங்களை சமய நிறுவனங்கள் கொண்டிருந்தன.

இதனை எதிர் கொள்ளும் வகையில் சுயசிந்தனையாளர் சங்கமும் இவ்வகையான வெளியீட்டுச் சங்கத்தை உருவாக்கியது. இச்சங்கத்தின் வெளியீடாக ம. மாசிலாமணி அவர்கள் எழுதிய ‘வருண பேதச் சுருக்கம்’ எனும் சிறுநூல் 1885ஆம் ஆண்டில் முதன் முதல் வெளி வந்தது. இந்நூலில் சுயக்கியான சங்கத்தின், கிளை அமைப்பான சிறுபத்திரிகா பிரகடந சங்க வெளியீடு என்னும் குறிப்பு உள்ளது. இந்நூல் பின்னர் ‘வருண பேத விளக்கம்’ என்னும் பெயரில் சற்று விரிந்து எழுதி வெளியிடப்பட்டது. இச்சங்கத்தின் மூலம் சுமார் ஐந்து குறுநூல்கள் வெளிவந்திருப்பதைக் காண்கிறோம். இந்நூல் செய்திகள், இச்சங்கத்தின் இதழான ‘தத்துவவிவேசினி’ இதழிலும் வெளி வந்திருப்பதைக் காண்கிறோம். இக்குறுநூல்கள் அனைத்தும் கிடைக்கவில்லை. அவைகளை நேரடியாகக் காண்பதின் மூலம் மேலும் பல புரிதல்களை நாம் பெற முடியும்.

மால்தூசியின் சங்கம், சிறுபத்திரிகா பிரகடந சங்கம் ஆகியவை கூடி அவ்வப்போது செயல்படும் முறைகள் குறித்து விவாதித்திருப் பதையும் அறிகிறோம். இவ்வகையில் சுயக்கியானிகள் சங்கத்தின் மிக முக்கிய செயல்பாட்டுக் கேந்திரங்களாக இவ்வமைப்புகள் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஜனநாயக மரபுகளை முன்னெடுக்கும் அமைப்பாக இவ்வமைப்பு செயல்பட்டதை மேற்குறித்த அமைப்புகள் தொடர்பான செயல்பாடுகள் மூலம் அறிய முடிகிறது. இவ்வகையில் ஓர் இயக்கம் எப்படிச் செயல்பட வேண்டுமோ அந்த வகையில் இந்த அமைப்பும் செயல்பட் டிருப்பதைக் காண்கிறோம்.

ஓர் அமைப்பு செயல்பட வேண்டுமெனில் அதற்கு முதன்மை யாகத் தேவைப்படுவது கருத்துப் பரப்புரைக்கான தொடர்பாடல் சாதனங்கள் ஆகும். இதில் முதன்மையாகச் செயல்படுவது அச்சுவழி ஊடகங்கள் ஆகும். சென்னை இலௌகிக சங்கம், சிறு நூல்களை வெளியிடுவதற்கென சிறுபத்திரிகா பிரகடந சங்கம் ஒன்றை உருவாக்கியது குறித்து முன்னர் கண்டோம். இந்த வகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வார இதழ்களை இவ்வியக்கம் நடத்தியது. தமிழ் இதழ் ‘தத்துவ விவேசினி’, ஆங்கில இதழ் ‘தி திங்கர்’ (THE THINKER) ஆகும்.

இவ்வியக்கம் 1878இல் தொடங்கிய பொழுது தத்துவ விசாரிணி என்னும் தமிழ் வார இதழையும் பிளாஸபிக் என்கொயர் (Philosophic Enquire) என்ற ஆங்கில இதழையும் நடத்தியது தொடர்பான செய்தியை அறிய முடிகிறது. இவற்றிலிருந்து சில கட்டுரைகளைப் பிற்காலத்தில் ‘தத்துவவிவேசினி’ மற்றும் ‘திங்கர்’ இதழ்களில் மறுவெளியீடு செய்திருப்பதைக் காண்கிறோம்.

‘தத்துவவிவேசினி’ எனும் வார இதழ் 1882ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 1888ஆம் ஆண்டு மார்ச் முடிய, வார இதழாக வெளிவந்திருப்பதைக் காண்கிறோம். நான்கு பக்கங் களைக் கொண்ட A3 வடிவத்தில் இவ்விதழ் வெளிவந்தது. இவ்விதழில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளும் செய்திகளும் வெளியிடப்பட்டன. பொதுச்செய்திகளை மிகுதியும் வெளியிடாமல் இலௌகிக சங்கம் தொடர்பான கருத்து நிலை சார்ந்து கட்டுரைகள் வெளிவந்தன. வாசகர்கள் எழுதும் கட்டுரைகள் ‘கடிதம்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டன.

இதில் பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. உரையாடல் வடிவத்தில் இலௌகிக சங்க கருத்து நிலைகள் விவாதிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. பிராட்லா பேச்சுகள். அன்னிபெசன்ட், இங்கர்சால், தாமஸ்பெயின் ஆகியோரின் நூற்செய்திகளின் மொழியாக்கங்கள் ஆகியவையும் இடம்பெற்றன. மதமறுப்பு, கடவுள் மறுப்பு, வறுமை ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் குறித்த விமர்சனம் ஆகியவை பெரிதும் இடம்பெற்றன. இதழின் மொழிநடை தொடக்கத்திலிருந்து படிப்படியாக மாறியதைக் காண முடிகிறது. மணிப்பிரவாள மொழிநடையில் தொடங்கி படிப்படியாக வந்த தாக்கம் குறைவாக இருந்ததைக் காண முடிகிறது. இவ்விதழ் வெளிவந்த காலத்தில், இதைப்போல் வெளிவந்த இன்னொரு இதழைக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது.

தொடக்கத்தில் தத்துவவிவேசினியும் திங்கர் இதழும் இணைந்தே வெளிவந்தன. மொத்தம் 8 பக்கங்கள். பின்னர் ஆங்கில இதழ் தனியாகவும் தமிழ் இதழ் தனியாகவும் பிரித்து அனுப்பப்பட்டன. தமிழ் இதழ்ச் செய்திகளிலிருந்து ஆங்கில இதழ்ச் செய்திகள் பெரிதும் மாறுபட்டிருப்பதைக் காணமுடிகிறது. இலண்டனிலிருந்து வெளிவரும் செய்திகளின் தாக்கத்தை ‘திங்கரில்’ காணமுடிகிறது.

தமிழ் இதழ் அவ்வகையில் அமைய வில்லை. திங்கரின் இறுதிக் காலங்களில் இலண்டன் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளிவந்த இதழ்களிலிருந்த செய்திகள் பெரிதும் மறுவெளியீடு செய்யப்பட்டன. இதழைப் பொறுப்பெடுத்து நடத்துவதற்கான ஆள்பாற்றாக்குறை உருவான போது மேற்குறித்த வகையில் இதழைக் கொண்டுவந்தது தொடர்பான குறிப்பை இதழில் வெளியிட்டுள்ளனர்.

சென்னை இலௌகிக சங்கத்தை அடையாளப்படுத்துவதாக இவ்விதழ்களே இன்று எஞ்சியுள்ளன. இவற்றில் வெளிவந்தவை களை பதிப்பித்து ஆறு தொகுதிகளாக வெளிக்கொண்டு வந்துள்ளோம். இதன் மூலமே சென்னை இலௌகிக சங்கம் என்னும் வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய முடிந்தது. இவ்விதழ்கள் கிடைக்காமல் போயிருப்பின் இவ்வரலாற்றை மீள்கண்டுபிடிப்பு செய்திருக்க முடியாது.

தொடக்கத்தில் இவ்வமைப்பு இந்து சுயக்கியானிகள் சங்கம் (Hindu Free thought Union) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் இவ்வமைப்பின் பெயர் சென்னை இலௌகிக சங்கம் (Madras Secular Society) என மாற்றம் செய்யப்பட்டது. சுயசிந்தனை மரபை முன்னெடுப்பவர்கள் என்ற நோக்கத்தில்தான் இந்து சுயக்கியானிகள் சங்கம் செயல்படத் தொடங்கியது. பின்னர் விரிவான சட்ட திட்டங்களைக் கொண்ட அமைப்பாக உருவாக் கப்பட்டது. இவ்வமைப்பின் சட்ட திட்டங்கள் இவ்விதழ் ஆவணம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் நடத்திய இரண்டு இதழ்களிலும் 1885களில் வெளியிடப்பட் டுள்ளன.

1878 முதல் செயல்பட்டாலும் 1885 இல் தான் இவ் வமைப்பு சட்ட திட்டங்களை உருவாக்கி வெளியிட்டிருப்பதைக் காண்கிறோம். இதன்மூலம் படிப்படியாகவே இவ்வமைப்பு வளர்ச்சி பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இவ்வமைப்பு நடத்திய இதழ்களின் கையப்பக்காரர்கள் (சந்தாதாரர்கள்) அமைப்பின் உறுப்பினர்களாகவும் இருந்ததைக் காணமுடிகிறது. இவ்விதழ்கள் குறித்த பிரித்தானிய அரசு அலுவலர்கள் சென்னை இராஜதானி செய்திப் பத்திரிக்கைகள் தொடர்பான அறிக்கையில் (Native News Paper Report) செய்திருக்கும் பதிவுகள் பின்வரும் வகையில் அமைகிறது. அதிலிருந்து இவ்விதழ்கள் குறித்தும் இவ் வியக்கம் குறித்தும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது.

‘தத்துவ விசாரிணி’ இதழ் தொடர்பான சென்னை நகர காவல் துறை சார்ந்த (NNPR) பதிவுகளில் 25.1.1879 முதல் 11.6.1882 வரை இதழ் வெளிவந்ததாக இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் 1879-1882 முடிய நான்கு ஆண்டுகள் வெளிவந்திருப்பதை அறிகிறோம். இதில் டிசம்பர் 1880, சனவரி மற்றும் பிப்ரவரி 1881 ஆகிய மூன்று மாதங்கள் குறித்தப் பதிவுகள் இடம்பெறவில்லை. இதழ் வராமல் இருந்ததா? அல்லது காவல் துறையினர் பதிவு செய்யாமல் இருந்தனரா? என்ற விவாதத்துக்கு இடமுண்டு.

‘தத்துவவிவேசினி’ இதழ் 2.7.1882 முதல் 25.3.1888 முடிய காவல்துறைப் பதிவு உள்ளது. ஏழு ஆண்டுகள் வெளிவந்திருப் பதை அறிகிறோம். 1879-1888 என்ற பத்து ஆண்டுகளில் இவ்வியக்கம் தொடர்பான தமிழ் இதழ்கள் வெளிவந்திருப்பதைக் காணமுடிகிறது. 1878ஆம் ஆண்டில் ‘தத்துவ விவாரிணி’ இதழ் தொடங்கப்பெற்றதாக, பின்னர் வந்த ‘தத்துவ விவேசினி’ இதழ்களில் பதிவு உள்ளது. ஆனால் இதற்கான சான்றுகள் இல்லை. 1879 முதல்தான் சான்று கிடைக்கிறது. 1879-1888 என்ற பத்து ஆண்டுகளில் இவ்வியக்கம் செயல்பட்டதை உறுதிப்படுத்த முடிகிறது.

‘தத்துவ விவேசினி’ இதழ் வெளிவந்த எண்ணிக்கை தொடர்பான குறிப்பு பின்வரும் வகையில் பதிவாகியுள்ளது. 1882 ஜூலையில் 400 இதழ்கள், 1883 ஜூலை 22இல் 350 இதழ்கள், 1884 ஜூன் முதல் தேதி 463 இதழ்கள், 1885 மே 24ந் தேதியில் 300 இதழ்கள், 1886 செப். - அக். மாதங்களில் 100 இதழ்கள், 1887 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் 140 இதழ்கள், 1888 சனவரி 15இல் 140 இதழ்கள் வெளிவந்ததாக பதிவு செய்துள்ளனர். 1888 மார்ச் 25ந் தேதியோடு பதிவுகள் நின்றுவிட்டன.

இவ்வமைப்பில் நேரடி உறுப்பினர்கள், மறைமுக உறுப் பினர்கள் என்று இருவகையினர் செயல்பட்டதைக் காண்கிறோம். நேரடி உறுப்பினர்கள் தங்கள் பெயர்களை இதழ்களில் வெளிப்படுத்திக் கொண்டனர். மறைமுக உறுப் பினர்கள் தங்கள் பெயர்களின் முன்னெழுத்து களை மட்டும் போட்டுக் கொண்டோ அல்லது புனைபெயர் களிலோ இதழ்களில் எழுதியிருப்பதைக் காணமுடிகிறது. இவ்வமைப்பின் செயற்குழு கூட்டங்கள், பொதுக்குழு கூட்டங்கள் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்ததைக் காணமுடிகிறது.

இவ்வமைப்பு சென்னையில் மட்டுமின்றி இலங்கையிலும் செயல்பட்டதைக் காணமுடிகிறது. மைசூர், ஹைதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களிலும் இவ்வமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் இருந்தனர். புதுச்சேரி, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இவ்வமைப்பின் செயல்பாடுகள் நடைபெற்றதை அறிகிறோம். தொடக்கத்தில் சுமார் 400 பேரைக் கொண்டதாக இவ்வமைப்பு செயல்பட்டது. இறுதிக் காலங்களில் சுமார் 140 பேர் உறுப்பினர் களாக இருந்ததை அறிய முடிகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தில் இவ்வகை யான கட்டமைப்போடு இன்னொரு இயக்கம் இருந்ததாகக் கூறமுடியாது. இத்தன்மை பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இலண்டனில் செயல்பட்ட அமைப்பின் வடிவத்தை அப்படியே இங்கும் நடைமுறைப்படுத்த முயன்றிருப் பதைக் காணமுடிகிறது. இவ்வமைப்பின் செயல்பாடுகள் சம காலத்தில் இருந்த சமய அபிமானிகளைப் பெரிதும் பாதித்திருப் பதைக் காணமுடிகிறது. இவ்வமைப்பு தொடர்பான சமகால எதிர் விளைவுகள் இதனைப் புரிந்துகொள்ள உதவும். எதிர்விளைவுகள் யாழ்ப்பாணத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் வந்திருப்பதைக் காணமுடிகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சபாபதி முதலியார், குகதாசர் என்ற புனைபெயரில் இவ்வியக்கத்தை நாத்திக இயக்க மென விமர்சனம் செய்தார். இவ்வியக்கம் தொடர்பாக அவர் செய்த விமர்சனங்கள், ‘ஈச்சுவர நிச்சயம்’, ‘பிரபஞ்ச விசாரம் என்னும்’ இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. சபாபதி முதலியாரைப் போலவே தமிழகத்திலிருந்து புனைபெயரில் இவ்வமைப்பை மறுத்து எழுதினர். அந்த விவரங்கள் கீழ்வரும் வகையில் அமைகின்றது.

"சில வருஷங்களின் முன்னர்ச் சென்னையில் சில நாஸ்திகர்கள் கூடி நாஸ்திக சபையன்றேற்படுத்தி அதன் வாயிலாகத் ‘தத்துவவிசாரணி’ என்றும் பின் அதையே திருத்தித் ‘தத்துவ விவேசினி’ என்றும் பெயரளித்து, நாஸ்திக மதச்சார்பாய் பின் பின்னாக இரண்டு பத்திரிக்கைகளைச் சில வருஷங்கள் நடத்தி வந்தார்கள். அந்நாஸ்திகர்கள் உலகைச் சத்தென வாதிப்பவர்க ளாதலின் அவர்கள் கொள்கையினை மறுக்கவெண்ணி ‘இந்து’ என்னும் அத்வைதியருவர் 1886ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ஆம் தேதி சென்னைச் சுதேசமித்திரனிலும் 30ஆம் தேதி சிதம்பரம் ப்ரம்ம வித்தியாவிலும் ‘உலகம் சத்தா அசத்தா?’ என்னும் விஷயத்தையெழுதி யுலகத்தை அசத்தென்றே முடித்தார். அதைக் கண்ட ‘ஹிதோபசி’ என்ற நாஸ்திகர் அப்போதுள்ள மேற்படி- ‘தத்துவவிவேசினி’ என்னும் பத்திரிக்கையின் 1886ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி சஞ்சிகையில் உலகம் அசத்தா? சத்தா? என்ற விஷயமொன்றெழுதி உலகம் சத்தென்று பேசியதுபோல் காட்டி முடித்தார்.

யதார்த்தத்தில் சத்தென்று முடிக்கவில்லையாகலின் அதனையெதிர்த்து மேற்படி ‘இந்து’ என்பவர் ‘விடைகூறல்’ என்ற விஷயமொன்றெழுதி மேற்படி ‘ஹிதோபதேசி’ என்பவர் வரைந்த விஷயத்தை தடுத்து மேற்படி ப்ரம்மவித்தியா பத்திரகையின் 1887ஆம் வருடம் ஜனவரி 30ஆம் தேதி சஞ்சிகையில் உலகு அசத்தென்றே தெளிவுப்படுத்தினார். மேற்படி ‘ஹிதோபதேசியார்’ என்ற நாஸ்திகரேனும் அவரைச் சார்ந்த இன்னும் எவரேனும் அத்தத்துவவிவேசினிப் பத்திராசிரிய ரேனும் மேலே யாதும் பேசாது மௌனமுற்று உபசாந்தி அடைந்தனர்” (முதற்குறளுண்மை அல்லது முதல்குறள்வாத நிராகரண சத தூஷணி 1900).

இலௌகிக சங்கத்தினர் அனைத்தையும் கேள்வி கேட்பவர்கள். தங்களின் தர்க்க மரபுக்கு உடன்படாத எதனையும் ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள். சங்கா நாத்திகர்கள் என்றும் சுயக்கியானிகள் என்றும் தங்களை அழைத்துக் கொண்டனர். தத்துவவிவேசினி இதழில் வெளிவந்துள்ள பின்வரும் சுயக்கியானிகள் குறித்த வரையறைகள், இவ்வமைப்பைப் புரிந்துகொள்ள உதவும். சுயக்கியானிகளின் கடவுள் மறுப்புக் கோட்பாட்டைப் புரிந்து கொள்ளக் கீழ்க்காணும் விளக்கம் உதவும்.

“கடவுள் உண்டென்பவருக்கும் கடவுளின்னதென்று அறியாத வருக்கும் உள்ள முக்கிய பேதமென்னவெனில் - அறியாதவும் அறியப்படாதவுமாகிய கடவுளைப் பற்றி முழுமையுமறிந்ததாக ஆத்திகர்கொள்ள, நாத்திகர்களோ, ஜனங்கள் அறியாமையால் கடவுளென்று பெயரிட்டழைக்கும் வஸ்து மனதிற்கு இன்னதென அவகாஹப்படவில்லையென்று உண்மையாய் உரைப்பார்கள்.

ஏனெனில், கடவுள் ரூபத்திலும், புத்தியிலும், ஞானத்திலும் பூரணரென்கின்ற கொள்கையால், அபூரணனாகிய மனிதன் அறிவுக் கரிதாய் அகண்டமாய் நின்ற நிறைவைத் (கடவுளை) திரிகரணங்களாலும் அவகாஹப்படுத்தல் கூடாமை. ஆத்திகர்களால் கூறும் கடவுள் என்னுஞ் சப்தம் சுவக்கியானிகள் மனதிற்குத் தெளிவாயும் விவரமாயும் அருத்தத் தரவில்லை. பொன்னைப் போல் எவ்வித சோதனையினாலேயும் சந்தேகந் தராமல் கடவுளென்னுஞ் சப்தத்திற்கு உரிய பொருளின்னதென சுவக்கியானிகளின் எதிரிகள் கூடி நியாயமாய் விவகரித்தால் அப்போது அவர்கள் ஆத்திகர் கொள்கையை நம்புகிறதற்கு யாதொரு தடையுமிராது.

இப்படியிருக்கச் சுவக்கியானிகள் கடவுலில்லையென்று ஒருபோதும் உரையார். மேலும் அவர்கள் தங்கள்மனதில் இன்ன தென்று அவகாஹப்படாத ஒன்றையில்லையென்றும் சொல்லுதல் கூடாமையாலும், அது உண்டென்று வரைக்கும் ஒருவனுக்கே அது இன்னதென்று இவர்களுக்கு (சுவக்கியானிகளுக்கு) விரித்துரைக்க அவர்கள் புத்திக்கே அபூரணமாயிருப்பதினாலும், கடவுள் இல்லவே இல்லையென்று அஞ்ஞானிகளைப்போல ஒருக்காலும் சொல்லார் சுவக்கியானிகள். நாத்திகம் என்னும் பதத்திற்குச் சுவக்கியானிகள் கொண்ட அருத்தம் கடவுள் இன்ன தென்று அறியாமை. (நாத்திகம் - ஆத்திகர்கொண்ட கடவுள் அல்லாமை) இங்ஙனமாக சில நவீனவிவேகிகள் இவர்கள் கடவுளில்லையென்றுரைப்பார் என்பார். இனியேனும் மங்ஙனங் கொள்ளாமல் உண்மை ஈதென உணர்வாராக” (தத்துவவிவேசினி, 10-4-1887).

இதுவரை அறியப்படாதிருந்த இவ்வமைப்பு குறித்த உரையாடல்கள் பல்பரிமாணங்களில் நிகழ்த்தும் தேவை இருப்பதாகக் கருதலாம். இதற்கென செய்யப்படும் இரு செயல்கள் குறித்தும் பதிவு செய்வது அவசியமாகும். இவ்வமைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும் அடிப்படை ஆவணமாக இவர்கள் நடத்திய இதழ்களே எஞ்சியுள்ளவை.

அதனைக் குறிப்பிட்ட முறையியலில் ஆவணப்படுத்துவது அவசியம். அப்பணி முன்னர் குறிப்பிட்டுள்ளபடி 3400 பக்கங்களில் ஆறு தொகுதிகளாக பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பு குறித்த முழுமையான புரிதலை வேண்டுவோர் அத்தொகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தத்துவவிவேசினி, திங்கர் இதழ்ப் பதிவுகளோடு, அவர்கள் வெளியிட்ட குறுநூல் ஆகியவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதிப்பு முறையியலைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

- ‘சென்னை இலௌகிக சங்கம்’ என்னும் இயக்கம் குறித்தப் புரிதலுக்கு உதவும் வகையில் முதல் தொகுதி அமைகிறது. இத்தொகுதியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு இதழ்களிலும் உள்ள செய்திகள் இடம்பெற் றுள்ளன.

-  இரண்டாம் தொகுதி, இலௌகிக சங்கத்தினர் கடவுள் குறித்தும் தத்துவம் குறித்தும் கொண் டிருந்த கருத்து நிலைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் அமைகிறது. தத்துவவிவேசினியில் வெளிவந்த கட்டுரைகள் மட்டும் பிரதிகளாக்கப்பட்டுள்ளன. இவர்களின் நாத்திக மரபைப் புரிந்துகொள்ளும் வகையில் இப்பகுதி அமைந்துள்ளது.

-  சாதி, பெண்கள், சமயம் எனும் பொருளில் அமையும் மூன்றாம் தொகுதி, சாதி குறித்து இலௌகிக சங்கத்தின் கருத்துநிலையைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வமைப்பினர் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் குறித்துப் பெரிதும் பேசியுள்ளனர். முற்று முழுதான சமய மறுப்பாளராகவும் இருந்தனர். இத்தன்மைகளை இத்தொகுதி மூலம் அறிய முடியும்.

-              காலனியச் சூழலில் செயல்பட்ட இவ்வமைப்பினர் காலனியச் செயல்பாடுகளை எவ்வகையில் உள்வாங்கினர்; புத்தொளி மரபாக உருவான அறிவியலை எப்படி எதிர்கொண்டனர்; இதன்மூலம் மூடநம்பிக்கைகளை எவ்விதம் அம்பலப்படுத்தினர் என்பதை நான்காவது தொகுதி மூலம் அறிய முடிகிறது.

-              இறுதி இரண்டு தொகுதிகள் ஆங்கில இதழில் வெளிவந்த நாத்திக மரபுகள், பெண்கள் குறித்தப் பதிவுகள், பல்வேறு இயக்கச் செய்திகள் ஆகியவை பதிப்பிக்கப்பட்டுள்ளன.

                மேலே வெளிப்படுத்திய விவரங்கள் சார்ந்து தமிழ்ச் சூழலில் புதிய உரையாடல்களுக்கான வெளிதிறந்து விடப்படு கிறது. இதன் மூலம் தமிழ்ச்சமூகத்தின் புதியதொரு முகத்தினை காண முடிகிறது. இம்முகம் இதுவரை அறியாத நிலை இருந்தது. இபோது பதிப்பிக்கப்பட்டுள்ள மேற்குறித்த தொகுதிகள் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் வரலாறு இப்போது திருத்தி எழுதுவதற்கான தருணம் உருப்பெற்றுள்ளது. அதனை நூல் வடிவில் உருவாக்கும் பணி நடந்து கொண்டுள்ளது. சென்னை இலௌகிக சங்கம் எனும் நூல் விரைவில் வெளிவரும். 

Pin It