(1878-1888ஆம் ஆண்டுகளில் செயல்பட்ட சென்னை இலௌகிக சங்கத்தினரின் அமைப்பு விதிமுறைகளை இப்பகுதியில் காணமுடி கிறது. அமைப்பின் நோக்கம், உறுப்பினர்கள், உறுப்பினராகச் சேரும் முறை, உறுப்பினர் கட்டணம், நிர்வாக முறை, செயலாளர்- பொருளாளர் ஆகியோரின் தகுதிகள், கூட்டம் கூட்டும் முறை, உறுப்பினர்களை நீக்கும் முறை ஆகியவை குறித்த விவரங்களை இப்பகுதியில் பதிவாகியுள்ளது.)

இந்து சுயக்கியானிகள் சங்கம் (Hindu Free Thought Union) என்னும் பெயர் சென்னை இலௌகிக சங்கமாக (Madras secular society) பெயர் மாற்றம் பெற்றபின், அந்த அமைப்பின் விதிமுறைகள் கீழ்க்காணும் வகையில் அமைந்துள்ளது.

1886-வருடம் ஏப்ரல் 12-தேதி

1. இதுவரையிலே, இந்து பிரீதாட்யூனியன் என்னும் பேருடையதாயிருந்த சபை இனி மதிராஸ்சிகியுலர் சொசைட்டி என்று அழைக்கப்படும்.

2. இந்தசபை இங்கிலாந்திலுள்ள “நாஷனல் சிகியுலர் சொசைட்டி”யைச் சேர்ந்திருக்க வேண்டியது.

நோக்கங்களும் கோட்பாடுகளும்

3.    a) லவுகீகத்துக்குரிய கொள்கைகளையும் சுதந்திரங் களையும் காத்துக்கொள்வது.

     b) அவற்றை இசத்திற்குண்டான சீர்திருத்தத்திற்குச் செலுத்துவது

(லவுகீகமென்பது இவ்வுலகத்தில் மானிட வாழ்க்கைக் கும், அனுபவத்திற்கு ஒத்துவரும்படியான காரியங்களுக்கும் மாத்திரம் சம்பந்தப்படுவதுமல்லாமல், அறிவுக்கெட்டிய இவ்வுலக வாழ்க்கையை விர்த்திசெய்வதையும் கருதி நிற்கிறது.

லவுகீகியென்பவன் இகலோக வாழ்வைச் சேர்ந்த விஷயங்களையும் தத்துவங்களையு மாத்திரம் அங்கீகரிகிற வனாயிருக்கிறான்.  இப்பிரபஞ்சத்திற்குரிய சங்கதிகளிலே, மதசம்பந்தத்தைக்கொண்டுவந்து நுழைத்துக்கொள்ளாமல் சகலத்தையும் நிர்வாகம் பண்ண வேண்டியிருக்கிறதென்று நம்புகிறான்.  மானிடசீர்திருத்தத்தையும் சுகத்தையும் விர்த்தி செய்வதே சிரேஷ்டமான கடமையென்றும், எது பலருக்கும் பிரயோசன காரியாயிருக்கிற தென்று ருசுப்படுகிறதோ அதுவே நீதிமார்க்கமென்றும் துணிகிறான்.

மானிடசுகத்தையும் சீர்த்திருத்தத்தையும் பலிதமாகும் படிவிர்த்திசெய்யும் பொருட்டு, தன்மக்களுக்குப் போதுமான கல்விப்பயிற்றுவிப்பதும், அவர்களுடைய சொந்த நன்மைக்காவும் ஜனசமுதாய நன்மைக்காகவும் உபயோகமாகத்தக்க வேலையைத் தொடரும்படி முயற்சி செய்வதும், பிரதிலவுகீகியினுடைய மாறாதகடமையாகும்.)

4. மேற்கண்ட நோக்கங்கள் பயிரங்கப் பிரசங்கங்களி னாலும் சபை சேர்ந்து சர்ச்சை செய்வதினாலும், சிறு புத்தகங்களச்சிட்டுப் பரவவிடுவதினாலும், அப்போதப் போது தீர்மானிக்கப்படுகிறபடி கிரமமான மற்றமுகாந் தரங்களினாலும், கைகூடிவரும்படி முயற்சி செய்யவேண் டியது.

மெம்பர்கள்

5. மெம்பர்கள் ஆக்ட்டிவ் மெம்பர்களென்றும், பாலிவ் மெம்பர்களென்றும் இருவகைப் படுவார்கள்.

மதிராஸ்சிக்யுலர் சொசைட்டியில் மெம்பர்களாகத் தங்கள் பேர்களைப் பிரசுரஞ்செய்விக்க ஆட்சேபணை யில்லாதவர்கள் ஆக்ட்டிவ் மெம்பர்கள்.

ஆக்ட்டிவ்மெம்பர்அந்தப்பிரதேசத்திலுள்ள பாதிரி களும் குருக்கள்மாரும் (ஆச்சாரியர்களும் சாஸ்திரிகளும்) லவுகீகவிர்த்திக்குப் பாதகமாகச் செய்கிறகாரியங் களையும், அப்படிப்பட்ட பாதகமான விசேஷசங்கதிகளையும், பிரசங்கங்களையும் உபந்யாசங்களையும், பிரசுரங்களையுங் குறித்துச் செக்ரிட்டேரிக்குக் கூடுமான போதெல்லாம் உண்மையானரிப்போர்ட்டு அனுப்புவாரென்று எதிர்ப hர்க்கலாகின்றது.  லவுகீகசம்பந்தமாக அவருக்கு அனுப்பப் படும் வித்தியர் விஷயங்களைத் தாராளமாய்ப் பரவ விடுவ தற்கும், சாதாரணமாய்ச் சுற்றுப்பக்கங்களிலே லவுகீக சம்பந்தமான விர்த்தியுண்டாகும்படிக்கும் துணைபுரிவா ரென்றும் கோரலாகின்றது.

பேர்களைப் பிரசுரஞ்செய்வித்தால் மிக்க கெடுதி யுண்டாவதாயிருக்கிறபடியால், பிரசுரஞ் செய்யக்கூடாமை யான நிலைமையிலிருக்கிறவர்கள் பாஸிவ்மெம்பர்கள்.

இவர்களுடைய பேர்கள் மெம்பர்களுக்கு மாத்திரம் தெரிந்திருக்க வேண்டியது; இவர்களுடைய பேர்களைக் குறிக்கவேண்டுமானால், பெயர் முதலெழுத்தினாலாவது அடையாளங்களினாலாவது குறிக்கவேண்டும்.  பாஸிவ் மெம்பர்களும் உண்மைக் குறிதாரமாய்க் கடமைப்பட்டவர் களாகிறார்கள்.

ஆக்ட்டிவ் மெம்பர்களானாலும் பாஸிவ் மெம்பர் களானாலும், சகலரும் கூடிய மட்டில் சபையின் கொள்கை களை அப்பியசித்துவரவேண்டும்; முக்கியமாய் ஆக்ட்டிவ் மெம்பர்கள் அப்படிச் செய்யவேண்டும்.

குறிப்பு - ஸ்வாதீனமான நிலைமையிலிருப்பவர்கள் அகத்தியம் ஆக்ட்டிவ் மெம்பர்களாவார்களென்றே கேட்டுக்கொள்ளலாகின்றது.

6. ஒருவர் மெம்பராவதற்கு, அவர் இங்கிலீஷ்கி யானமுடைய வராயிருக்க வேண்டு மென்கிற அவசிய மில்லை.

7. இந்தச்சபையில் மெம்பர்களாகவேண்டுமென்கிற வர்கள் அடியில் கண்டிருக்கிறபடி உறுதிமொழிப்பத்திரி கையில் கையெழுத்து செய்து, செக்ரிட்டேரிக்கு அனுப்ப வேண்டியது; அவர் அதை நிர்வாகசபையின் ஆலோ சனைக்குவைத்து, செய்யப்படுந்தீர்மானத்தை எழுத்துமூல மாய் அவர்களுக்குத் தெரிவிப்பார்.  நிர்வாக சபையார் அப்படிப்பட்டயாதொரு பத்திரிகையைக் காரணஞ்சொல் லாமலே தள்ளிப்போடலாம்.

உறுதிமொழிப் பத்திரிக்கைக்கு நமூனா.

மதிராஸ்சிக்யுலர் சொசைட்டியின் கோட்பாடுகளைப் பரவச் செய்யும்பொருட்டு அந்தச்சொசைட்டியில்சேர நான் ஆவலுள்ளவனாயிருக்கிறேன்.  என்னை மெம்பராகச் சேர்த்துக்கொண்டால், இந்தச் சபையினது உத்தேசத்தை நிறைவேற்றி என்னொப்புரவான மற்றமெம்பர்களோடு சேர்ந்து என்னாலியன்றமட்டில் பாடுபடுவதற்கு யான் உடன்படுகிறேன்.

பெயர்

மேல் விலாசம்.

உத்தியோகம்

ஆக்ட்டிவ் அல்லது பாஸிவ்.

வருடம்         மாதம்          தேதி

8. மெம்பராவதற்கு எழுதிக்கொள்ளும் விண்ணப்பத் தோடு கூட மூன்று மாசத்திய கையொப்பம் அனுப்ப வேண்டும்.

(உள்ளூர் மெம்பர் ரூ 3, வெளிமெம்பர் ரூ 1-14)

9. இந்த சொசைட்டியில் மெம்பராயிருப்பவர் இங்கிலாந்துதேசத்து நாஷனல் சிக்யுலர் சொசைட்டியிலும் மெம்பராயிருப்பார்.

10. வெளியூரிலிருப்பவர்களும் வழக்கமான திட்டப் படிக்கு மெம்பராயிருக்க அர்ஹராவார்கள்.

சகலமுக்கியமான நிகமனங்களையும் மற்ற சங்கதி களையும் அவர்களுக்கு செக்ரிட்டேரி தெரிவிப்பார்

சந்தா

11. உள்ளூர் மெம்பர் ஒவ்வொரு வரும் மூன்று மாசத்திற்கொருதரம் ரூ 3- ம் வெளியூர் மெம்பர் ஒவ்வொரு வரும் நு 1-14-0 மும், கையொப்பஞ் செலுத்த வேண்டும்.

12. மூன்று மாசகாலாக்கிரமத்தில் முதல்மாசத்திற் குள்ளாகவே சகல கையொப்பங் களையுஞ் செலுத்த வேண்டும்.

13. பூர்த்தியான கையொப்பஞ் செலுத்தக்கூடாமை யான லவுகீகிகள் பொது நன்மைக்காக மனதாரப்பாடு படுகிறார்களென்று நிர்வாக சபையாருக்குத் தெரிய வருவ தின்பேரில், அவர்களைக் குறைந்த கையொப்பவீதத் திற்காவது இலவசமாகவாவது ஏற்றுக்கொள்ளலாகும்.

நிர்வாக சபை

14. சபையின் அலுவல்களைப் பார்க்கிறவர்களும் சேர்ந்து ஏழு மெம்பர்கள் நிர்வாக சபையாராகச் சபையின் காரியங்களை நடத்திவர வேண்டியது; அலுவல் பார்க்கிறவர் கள் உத்தியோகமுறைமையினாலே நிர்வாக சபையில் மெம்பர்களாயிருப்பார்கள்.

15. நிர்வாக சபையார் அந்தந்தமாதம் முதல் ஆதிவார தினத்திலும், அவசியமானால் அடிக்கடிக்கும் சபைகூட வேண்டியது; அப்படிக் கூடுகிற எல்லாச்சபைகளிலும் நான்குமெம்பர்கள் வந்திருந்தால் சபைகாரியம் ஆலோசிக் கப்படும்.

16. சபையில்சேருவது, நீங்கிவிடுவது, குற்றங்கூறுவது, அப்புறப்படுத்துவது, சீர்திருத்தஞ்செய்வது, முதலியவற்றைக் குறித்து எழுதிக்கொள்ளும் சகலவிண்ணபங்களையும் செக்ரிட்டேரி மூலமாய் நிர்வாக சபையார் பேருக்கு அனுப்பவேண்டும்.

17. செக்ரிட்டேரி பொக்கிஷதாரர் வேலைதவிர, வேறே எவர் வேலையாவது குறித்த கெடுவுகாலத்திற்குள் காலி யானால் அதைப் பூர்த்தி செய்வதற்கும், சபையின் காரியங் களைச் சீராய் நடத்துவதற்கு சகாயவிதிகள் செய்ய வேண்டிய அவசியமிருந்தால், மகாசபையாரால் முன்ன தாய் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற சபை நிபந்தனைகளுக்கு விரோதமில்லாதபடி அப்போதைக்கப்போது செய்வதற் கும், யுத்தமாகத் தோற்றினால், சபையின் மிகுதிபணத்திலே சஞ்சிகைகள், ஏடுகள் முதலியவற்றை யச்சிட்டு வெளிவிடு வதற்கும் புஸ்தகங்கள் முதலியவை வாங்குவதற்கும், நிர்வாக சபையாருக்கும் அதிகாரமுண்டு.

18. சபையைச் சேர்ந்த சொத்துக்களை ஸ்வாதீனத்தில் வைத்திருப்பதும், கையொப்ப முதலிய திரவியவிஷயத்தில் விசாரணை செய்வதும், பணம் செலுத்துவதற்குர சீதுகளை ஜாரி செய்வதும், சகல காரியங்களையும் சிரமப்படுத்து வதும், சபையைச் சேர்ந்த சகலகாரியங்களையும் மேல் விசாரணைசெய்வதும், நிர்வாக சபை யாருடைய கடமையாகும்.

19. வேலைக்காரர்களை நேசிப்பதற்கும், தள்ளிப்போடு வதற்கும், அவர்களுக்கு சம்பளம் நிஷ்கரிஷைசெய்வதற்கும் நிர்வாகசபையார் அதிகாரமுடையவர்களாவார்கள்.

20. நிர்வாகசபையைச்சேர்ந்த யாதொருமெம்பர் தொடர்ச்சியாக நான்கு கூட்டத்திற்குவராதிருந்தால், நிர்வாகசபையாருக்குத் திருப்திகரமான காரணங்கள் சொல்லாத பட்சத்தில், அவர் நிர்வாக சபையிலுள்ள தனது சம்பந்தத்தை நீக்கிக்கொள்ள வேண்டியது.

21. நிர்வாக சபையார் சொசைட்டியில் நடத்துங் காரி யங்களைக் குறித்தும், இந்தியாவில் லவுகீகசம்பந்தமான விர்த்தியைக்குறித்தும், தகுந்த காலத்திலே ரிபோர்ட்டு எழுதி, ‘இன்டர் நாஷனல் கன்கிரெஸ் ஆவ் பிரீதின்கர்ஸ்’ ‘கான்பரென்ஸ் ஆவ் தி நாஷனல் சிக்யுலர் சொசைட்டி’ என்னுஞ் சபைகளிலுள்ள இச்சபையின் பிரதிநிதிகளுக்கு அதை அனுப்பவேண்டியது.

22. நிர்வாகசபை மெம்பர்களும் செக்ரிட்டேரியும் பொக்கிஷதாரரும் வருஷாவருஷம் மகாசபையாரால் நேமிக்கப்படுவார்கள்.

23. நிர்வாக சபையாருடைய அலுவற்காலமுடிவில், அவர்கள் தங்கள் கண் காணிப்புக்குள்ளிருந்த சகலத்தையும் பற்றி விருத்தாந்தஞ்சித்தஞ் செய்து, சொசைட்டியைச் சேர்ந்த சகல மெம்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

செக்ரிடேரியும் பொக்கிஷதாரரும்

24. செக்ரிடேரியானவர் சொசைட்டியினுடைய சரித்திரக் கிரந்தங்களையும் குறிப்புப் புத்தகங்களையும் எழுதி வைத்து, கடிதப்போக்குவரவு செய்துகொண்டு, மெம்பர்கள் தெரிவித்துக் கொள்வதையும் மற்ற சங்கதி களையும் நிர்வாகசபையாருக்கு அறிவிக்க வேண்டியது.

25. மகாசபையிலும், நிர்வாக சபையிலும், சொசைட் டியைச் சேர்ந்த மற்ற சபையிலும் நடத்தப்படுகிற சகல கிரந்தங்களையும், அதற்கென்று  வைத்திருக்கிற புஸ்தகங் களிலே செக்ரிடேரி எழுதி, அவரும் அப்போதிருக்கிற அக்கிராசநாதிபதியம் அவற்றில் கையெழுத்துப் பண்ண வேண்டியது.  அப்போதப்போது கூடுகிற சபையில் அதற்கு முந்திய சபையில் நடந்தகிரந்தங்களை ஊர்ஜிதஞ் செய்வதற் காக முதலில் படிக்க வேண்டியது. 

26. செக்ரிடேரியானவர் போக்குவரவு செய்யப்படுகிற சகலகடிதங்களுக்கும் அதற்கென்று வைத்திருக்கிற பிரத்தி யேகமான புஸ்தகத்தில் நகலெழுத வேண்டியது.

27. மகாசபையாரும் நிர்வாக சபையாரும் செய்கிற நிகமனங்களைக் கூடிய சீக்கிரத்தில் செக்ரிடேரி நிறைவேற்ற வேண்டியது.

28. பொக்கிஷதாரர் எல்லா பாக்கிப் பணத்தையும் வசூல் செய்வித்து, பணம் வந்து சேர்ந்ததற்கு அடையாள மாக ரசீது முதலிய மூலமாய் அதை ஒப்புக்கொள்ள வேண்டியது.  அவர் வரவு செலவுக்குக் கணக்குவைத்து, அந்தந்த மாசக்கடைசி தேதியில் மொத்தத்தை அடுத்துக் கூடுகிற மாதாந்தர நிர்வாகச் சபையிலே பைசலுக்காக வைக்கவேண்டியது.

29. பொக்கிஷதாரர் தன் மூலமாய்ப் போக்குவரவாகிற பணத்திற்கு அவரே உத்தர வாதியாயிருக்க வேண்டும்.

மெம்பர்களை நீக்கி விடுதல்

30. யாதொரு மெம்பர் ஆறுமாசத்திற்கு அதிகமாகக் கையொப்பம் பாக்கி வைத்துக்கொண்டால், அதைக் குறித்து அவருக்குக்கிரமமாய் அறிக்கையனுப்பி யிருந்தும், அவர் பராமுகமாயிருப்பாராகில், அவருடைய பேரை நிர்வாக சபையான மெம்பர்களின் ஜாபிதாவிலிருந்து எடுத்துப் போட வேண்டியது.

31. சொசைட்டிக்குள்ளாவது சொசைட்டிக்கு வெளியிலாவதிருக்கிற யாதொரு மெம்பர் சொசைட்டியின் மேன்மைக்குக் கெடுதியாக நடந்தாலும், பிரத்தியேகமாய் எடுத்துச் சொல்லியிராக யாதொரு சங்கதியினால் சொசைட்டியின் ஒழுங்குக்கும் அமரிக்கைக்கும் அலைக் கழிவு உண்டாகும் போலிருந்தாலும், சொசைட்டியின் விதிகளை மீறினாலும், அவ்விதசங்கதியை நிர்வாக சபை யார் உடனே கண்காணித்து, அப்படிப்பட்ட மெம்பரை நீக்கி விடுவது யுக்தமென்று தங்களுக்குத் தோற்றுகிற பட்ச---------------------------------------- விசேஷ சபை கூட்டி, அவசிய மானால், அடுத்து வருகிறவிதியில் சொல்லியிருக்கிறபடிச் செய்ய வேண்டியது.

32. சொசைட்டியின் விசேஷ சபைக்கு வந்திருக் கிறமெம்பர்களில் மூன்றிலிரண்டு பங்காகிய பெருந் தொகையார் கேட்டுக்கொள்வதின் பேரில், யாதொரு மெம்பர் சொசைட்டியை விட்டு நீக்கிவிட வேண்டும்.

சபைக்கூடல்

33. செக்ரிடேரியானவர் சபைகூட்டக் குறைந்தது ஐந்து நாள் முன்னதாகச் சகல மெம்பர்களுக்கும் அறிக்கை செய்யவேண்டியது.

34. சபைகூட அனுப்பும் அறிக்கைப் பத்திரிகையிலே அந்தச் சபையில் யோசிக்கத் தக்க விஷயங்களையும் கண்டெழுத வேண்டியது.  சகலமெம்பர்களுக்கும் முன்னதாய் தெரிவிக்கப்படாதயாதொரு விஷயத்தைக் குறித்து எந்தச் சபையிலும் யோசிக்கலாகாது.

குறிப்பு. மேற்படி இரண்டு நிபந்தனைகளும் அவசரமான விஷயங்களுக்கும், கூடுவதைக் குறித்து வேறே விதமாய்ச் சொல்லியிருக்கிற கூட்டங்களுக்கும் சம்பந்தப்படமாட்டா.

35. பதினைந்து நாளுக்குக் குறையாமல், முன்னதாய் அறிக்கை கொடுக்கப்பட்ட பின்பு, உத்தியோகஸ்தர்களை நேமிப்பதற்காகவும், நிர்வாக சபையாருடைய ரிபோர்ட்டையும் ஆடிட்டருடைய ரிபோர்ட்டையும் சிரவணித்து யோசிப்ப தற்காகவும் வருஷந்தோறும் ஜனவரிமாசத்தில் மகாசபை கூட வேண்டியது.

36. யுக்தமாகத் தோற்றுகிறபடி, சாதாரண சபையை யாவது விசேஷ சபையையாவது கூட்டவாகிலும் நிறுத்தி வைக்கவாகிலும் நிர்வாக சபையாருக்கு அதிகாரமுண்டு.

37. ஆறுமெம்பர்கள் கையெழுத்து செய்து மனுவு அனுப்பினால், அதுவரப் பற்றிக் கொள்ளப்பட்ட பின்பு பதினைந்து நாளுக்குள் அதில் கண்டிருக்கிற யாதொரு காரியத் திற்காக, நிர்வாகசபையார் சொசைட்டியாரை விசேஷ சபை கூட்ட வேண்டியது;

விசேஷசபைகளெல்லாவற்றிலும் பிரதேசத்திலுள்ள மெம்பர்களில் மூன்றிலிரண்டு பங்குபேர் கூடினால் மாத்திரமே சங்கதிகளை யோசிக்கக்கூடும்.

குறிப்பு. எப்படிப்பட்ட சபை கூடுவதற்கும், அறிக்கையை தின்கர் பத்திரிகையில் பிரசுரஞ் செய்யவேண்டும்.

கணக்கு

38. சொசைட்டியைச் சேர்ந்த கணக்குகளை அந்தந்த வருஷ மகாசபையில் சேமிக்கப்பட்ட மெம்பர் அந்தந்த வருஷத்தில் பண்ணவேண்டியது.

39. ஆடிட்டருடைய ரிபோர்ட்டையும் நிர்வாகசபை யாருடைய ரிபோர்ட்டையும் வருஷாந்தரமகாசபை யாருக்குத் தெரிவிக்க வேண்டியது; அந்த சபை கூடுந் தினத்திற்கு அதவா பத்து நாள் முன்னிட்டு அவற்றை மெம்பர்களுக்கு அனுப்ப வேண்டியது.

உபந்நியாசம்

40. கூடுமான போது ஜனங்களைக்கூட்டி உபந்நியாசஞ் செய்ய வேண்டும்.

41. மெம்பராயிருந்தாலும் இராவிட்டாலும், யாரை யாவது உபந்நியாசகராக நிர்வாக சபையார் ஏற்படுத்தலாம்.

வைப்பிரிசிடெண்டுகள்

42. ஒவ்வொரு பெரியபேட்டையிலும், ஒவ்வொரு ஆக்ட்டிவ்மெம்பரை அந்த பேட்டைக்கு வைஸ்பிரசிடெண் டாக நேமிக்க வேண்டியது.

சில்லரை நிபந்தனைகள்

I. நிபந்தனைகளில் எதையாவது எடுத்துப் போட வேண்டுமானாலும், சீர்ப்படுத்த வேண்டுமானாலும், புது நிபந்தனை ஏற்படுத்தவேண்டுமானாலும், அதற்கென்று கூட்டப்பட்ட விசேஷ சபையில் மெம்பர்கள் அப்படிச் செய்ய வேண்டுமேயல்லாமல் மற்றப்படி செய்யக்கூடாது.

II. எந்த மெம்பராவது சொசைட்டியின் ஆபீசு புஸ்தகங்களைப் பார்க்க வேண்டு மானால், செக்ரிட் டேரிக்குத் தெரிவித்தபின்பு சகலபுஸ்தகங்களையும் பார்வை யிடலாம்.

மதிராஸ் சிக்யுலர் சொசைட்டியின்

மகாசபையாருடைய உத்தரவின்படி,

சென்ன பட்டணம்           ஜெ.ர். அப்ஷன்,

Pin It