தொடர்புடைய படைப்புகள்

மனுதர்மம், கௌதம சூத்திரம், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் சூத்திரர்களுக்குக் கல்வி, அறிவு, உரிமை மறுக்கப்பட்டதற்கான செய்திகள் இடம்பெற்றுள்ளன. சூத்திரன் வேதம் படித்தால் தண்டனை வழங்க வேண்டும் என மனுதர்மமும், வேதம் கேட்டால் காதில் ஈயத்தையும் அரக்கையும் ஊற்ற வேண்டும், வேதம் ஓதினால் நாக்கைத் துண்டிக்க வேண்டும் எனக் கௌதம சூத்திரமும் கூறுகின்றன. ஏகலைவனின் கட்டை விரல் வெட்டப்பட்டதும், சம்பூகனை ராமன் கொன்றதும் இதே சமூக ஒடுக்குமுறையை எடுத்துக்காட்டும் இதிகாசக் கதைகள்தாம் உள்ளன.

இதற்கு மாறாக, 1920ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்பனரல்லாத மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் இடஒதுக்கீட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கல்விப் பரவலை ஊக்குவிக்க நிதியுதவி, உணவு வழங்கி கல்வியை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் சென்றது.

ஆனால், ராஜாஜி 1937ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது மதுவிலக்கினால் நிதிப் பற்றாக்குறை என்று காரணம் காட்டி 2,500 பள்ளிகளை மூடினார். பின்னர் 1952ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது குலக்கல்வியைப் புகுத்தி 6,000 பள்ளிகளை மூடினார்.

குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து பெரியார் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டார். அதன் தொடர்ச்சியாக காமராஜர் முதலமைச்சரான பிறகு, ராஜாஜி மூடிய பள்ளிகளின் எண்ணிக்கையைவிட இருமடங்காகப் பள்ளிகளை உயர்த்துவதில் பெரியாருக்குப் பெரும் பங்கிருந்தது. 1951ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது பெரியார் நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டு இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.

1954இல் அகில இந்தியப் பின்தங்கிய வகுப்பினரை முன்னேற்ற ஒரு கமிஷனை மத்திய அரசாங்கத்தினர் நியமித்து, அதற்கான வழிமுறைகளைச் சிபாரிசு செய்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டதாவது: ''நான் அந்தக் காலத்தில் எக்சிகியூடிவ் கவுன்சில் மெம்பராக இருந்தபோது, வெள்ளைக்கார வைசிராயுடன் பேசி, விளக்கி, தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்த திறமைமிக்க மாணவர்களைப் பொறுக்கி, மேல்நாட்டுக்கு அனுப்பி, கல்வி பெற வசதியளிக்கும் திட்டத்தைச் சர்க்கார் செய்ய வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொள்ளும்படிச் செய்தேன் லட்ச ரூபாய் ஒதுக்கினார்கள்; இது தொடர்ந்து நடந்து வந்தது. நான் மந்திரி பதவியில் இருந்து வெளியேறியவுடன் எனது நண்பர் திரு. இராஜகோபாலாச்சாரியார் இதை ஒழித்துக் கட்டிவிட்டார்'' என்று அம்பேத்கர் கூறினார். (அப்போது ஒவ்வொரு ஆண்டிற்கும் 26 தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் அரசாங்க உதவியுடன் வெளிநாட்டிற்குச் சென்று கல்வி கற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது). -(Report of the Backward Classes Commission) Vol. III-ல் பக்கம் 75இல் இரண்டாவது பாராவில் உள்ளது.

கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கிடைக்கவும், மேல்படிப்புக்கு வெளிநாடு சென்று படிக்கும் பொருளாதார நிலையை அம்பேத்கர் நன்கு உணர்ந்திருந்ததால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் பேசி அம்மக்கள் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார். அன்று ஆண்டுக்கு 26 தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. அந்த மாற்றத்தை உருவாக்கிக் கொடுத்தவர் அம்பேத்கர். ஆனால் ராஜாஜி அந்தத் திட்டத்தையே ரத்து செய்திருக்கிறார் என்றால், கல்வி பயில்வதே தவறு; இதில் வெளிநாடு சென்று கல்வியா? என்று அந்த 26 பேரின் வாழ்வில் மட்டுமல்ல, கல்வி கற்க நினைக்கும் ஒடுக்கப்பட்ட தலைமுறையையே ஒழித்துக் கட்டும் வேலையை ராஜாஜி செய்திருக்கிறார்.

ராஜாஜியின் தொடர்ச்சியாக, மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கல்வி நிதி, கல்வி ஊக்கத்தொகை, சிறுபான்மையினர் மற்றும் தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, SC/ST மேம்பாட்டு நிதி, தொழிலாளர் நிதி, தலித் குடியிருப்பு மேம்பாட்டு நிதி உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான நிதியைக் குறைத்தும், மறுத்தும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் ₹48.95 கோடி கல்விக் கடனைத் தள்ளுபடி செய்து, அவர்களின் உயர்கல்விச் சுமையைக் குறைத்துள்ளது. மேலும், 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இம்மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96% ஆக உயர்த்தியுள்ளது. 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் சாதனை படைத்து வந்தனர். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய மாணவர்களுக்கு அயல்நாடு சென்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL, IELTS, GRE, GMAT போன்ற தகுதித் தேர்வுகளுக்குத் திராவிட மாடல் அரசின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தி 2023–24ஆம் ஆண்டில் 35 மாணவர்களுக்கு ₹8.94 கோடியும், 2024–25ஆம் ஆண்டில் 163 மாணவர்களுக்கு ₹60.33 கோடியும், 2025–26ஆம் ஆண்டில் 181 மாணவர்களுக்கு ₹84.87 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ஆக, இந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 379 மாணவர்களுக்கு ₹154.14 கோடி கல்வி உதவித்தொகை திராவிட மாடல் அரசால் வழங்கப்பட்டது.

மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஆண்டுக்கு அதிகபட்சமாக ₹36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவு உள்ளிட்டவற்றுக்கும் உதவி செய்யப்பட்டது.

ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள விஜய் அரசு ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியில் மண்ணைப் போடும் வேலையைச் செய்து வருகிறது. தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில உருவாக்கப்பட்ட அம்பேத்கர் வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகைத் திட்டம் தற்போது முடங்கும் நிலையில் உள்ளது.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 365 மாணவர்களில் 164 பேர் மட்டுமே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 201 பேரின் சேர்க்கை நடைமுறைகள் தாமதமாகின்றன. சேர்ந்த மாணவர்களுக்கும் உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, 65 மாணவர்களுக்கு மட்டுமே ரூ.19.53 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கல்விக் கட்டணம், உணவு, தங்குமிடச் செலவுகளுக்குப் பணமின்றித் தவிக்கின்றனர்.

இதுகுறித்து நவம்பர் 13ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மாணவர் பாரதிதாசன் தனது வேதனையை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து பெரும் போராட்டத்துக்குப் பிறகே உதவித் தொகையை விஜய் அரசு வழங்கியது.

கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற்ற பட்டியல் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில், நடப்பு ஆண்டில் பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5,903.51 கோடியும், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட ரூ.349 கோடியும் முழுமையாகப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்யிடம் தெரிவித்துள்ளனர் (தி இந்து, ஆகஸ்ட் 5).

ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறும் நிலையில், அம்பேத்கர் திட்ட மாணவர்கள் ஏன் நிதியின்றித் தவிக்கிறார்கள்? தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல், நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கவும், 201 மாணவர்களின் சேர்க்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் அமைச்சர் வன்னியரசுவும், விஜய் அரசும் நடவடிக்கை எடுக்குமா? அல்லது ராஜாஜி செய்ததைப் போல ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வியில் விளையாடப் போகிறார்களா?

அன்று அம்பேத்கர் உருவாக்கிய கல்விக் கனவுக்கு ராஜாஜி முட்டுக்கட்டை போட்டார்; இன்று அந்தக் கனவைச் செயல்படுத்தி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடுத்த தலைமுறையை உலகளாவிய கல்விக்கு அழைத்துச் சென்றது திராவிட மாடல் மு.க.ஸ்டாலின் அரசு. இன்று கல்வி கற்க முறையாகக் கொடுக்க வேண்டிய நிதியைக்கூட கொடுக்காமல் மோடி செய்யும் அதே பாணியில் அலட்சியம் செய்கிறது விஜய் அரசு. இதுதான் மனுதர்மத்திற்கும் சமூகநீதிக்கும் இடையிலான வேறுபாடு!

- த.மு.யாழ் திலீபன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.