புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழாவில் மோடியை மேடையில் வைத்துக் கொண்டே நடிகை ஐஸ்வர்யா ராய் வெளுத்து வாங்கி விட்டார்.

உலகின் ஒரே மதம் அன்பு; ஒரே மொழி அன்பின் மொழி ஒரே கடவுள் -உலகம் முழுதும் நிறைந்துள்ள சக்தி என்று பேசியதோடு உரையை முடிக்கும் முன் நக்கலாக ஒர் பஞ்ச் வைத்தார் "ஜெய் ராம்; ஜெய்ஹிந்த்" மோடியின் முகம் செத்து கிடந்தது.

அடுத்த நாள் தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச மாநாட்டில் ஆஸ்திரேலியா நாட்டு பிரதமரை மோடி சந்தித்து உடன்பாடுகளை செய்து கொண்டார் என்ற செய்தி வந்தது.modi and australian pmஆஸ்திரேலியாவில் இப்போது தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களின் தேசம். கூட்டாட்சி அரசாங்கம் நடக்கிறது. அனைத்து இனங்களுக்கும் சம உரிமை, தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலாய்டு நகரில் கடந்த 14ஆம் தேதி கலாச்சாரங்களின் திருவிழா ஒன்று அரசு சார்பில் நடத்தப்பட்டது.

இது ஆண்டுதோறும் நடக்கும் விழா. ஒவ்வொரு தேசிய இன மக்களும் ஒன்று கூடுகிறார்கள். அவர்களின் கலை நிகழ்ச்சிகள் பொதுவெளியில் அரங்கேற்றப்படுகின்றன. அவரவர் உணவுகள் விற்பனைக்கு தனி அரங்குகளை அரசே அமைத்துத் தருகிறது. அதற்கான கட்டணத்தையும் அரசே வழங்குகிறது. கலை நிகழ்வுகளில் பங்கேற்கும் குழுவினருக்கும் அரசு நிதி வழங்குகிறது.

அடிலெய்டு தமிழ்ச் சங்கம் தமிழர்களின் அடையாளமான பறை இசையுடன் தமிழ் மாணவ மாணவிகள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சி மெய்சிலிர்க்க வைத்தது. தமிழர் உணவு அரங்கில் தோசை, இட்லியுடன் மாட்டுக்கறியையும் இணைத்தது மிகச் சிறப்பு.

சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் கருப்பு சீருடையுடன் வந்திருந்தார்கள். பல்வேறு இனங்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்குவதோடு, ஆஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் போன்ற கெடுபிடிகளோ மதத் திணிப்புகளோ இல்லாத ஒரு தேசம் ஆஸ்திரேலியா.

வேட்பாளர்கள் விரும்புகிற கட்சிக்கு ஒரு வாக்கு, விரும்புகிற வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு என்று தனித்தனியாக வாக்களிக்கலாம். வாக்களிப்பு 10 நாட்கள் வரை நீடிக்கும். சர்ச்சுகளும் வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படுகின்றன. நேரில் சென்று தான் வாக்களிக்க வேண்டும்‌. காகித வாக்களிப்பு தான். வாக்கு எந்திரங்கள் கிடையாது. ஆனால் வாக்களிப்பது கட்டாயம் வாக்களிக்காவிட்டால் அபராதம்.

முக்கிய சட்ட திருத்தங்களுக்கு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி வழங்குகிறது. பள்ளிகள் நீதிமன்றங்கள் அரசு அலுவலகங்களில் மதத் திணிப்புகள் கிடையாது. நாடாளுமன்ற கூட்டங்கள் தொடங்கும் போது மட்டும் கிறிஸ்தவ மதப் பாடல்கள் பாடப்படுகின்றன.

பூர்வீக குடிகளுக்கு அரசு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கினாலும், அவர்களுடைய சமூக மாற்றத்திற்கு போராடக்கூடிய பெரியாரோ அம்பேத்கரோ இங்கு பிறக்கவில்லை. பூர்வீக குடிகளுக்கு அரசு சூட்டியுள்ள பெயர் "First Nation" இந்தப் பெயரிலேயே அழைக்க வேண்டும் என்று பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது.

40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் பூர்வ குடிகள். இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் ஆஸ்திரேலியா அரசாங்கம் இரண்டு முறை மன்னிப்பு கேட்டு இருக்கிறது.

பாகுபாடுகளை நியாயப்படுத்தும் பார்ப்பனியம் முற்றாக இல்லை. சமத்துவ நாகரிக விழுமியங்களுடன் வாழும் இந்த நாட்டையும் பார்ப்பனியம் விட்டு வைக்க விரும்பவில்லை.

அரசு நடத்திய கலாச்சாரங்களின் விழாவில் முதன்முறையாக விசுவ இந்து பரிசத் நுழைந்து தனது அரங்கை அமைத்து இருந்தது. கிருஷ்ண பகவான் பெயரில் அமைக்கப்பட்ட ஒரு அரங்கில் சனாதன வாழ்வின் பெருமைகளை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தனர். மோடியும் ஆஸ்திரேலியா பிரதமரும் தென்னாப்பிரிக்காவில் கைகுலுக்கினாலும்; அந்த கைகளில் ஒன்று மத வெறியாகவும் மற்றொன்று மனித நேயமாகவும் இருந்தது என்பதே உண்மை.

- விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.