இந்து இந்தியாவின் தேசியக் கடவுளாக பகவான் பாலராமனை முன்னிறுத்தியது ஒன்றிய பாஜக ஆட்சி. அந்தத் தேசியக் கடவுளுக்கே நாமம் போட்டு இருக்கிறார்கள் ராமரின் பக்தர்கள். கோடிக்கணக்கான பக்தர்களின் காணிக்கைப் பணம் களவாடப்பட்டு இருக்கிறது; வெள்ளி நகைகள் காணாமல் போயிருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை 70 முறை காணிக்கைப் பணத்தை களவாடியதை சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்துள்ளன. வேறு வழியின்றி உ.பி. ராமராஜ்யம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இப்போது உச்சநீதிமன்றமே தலையிட்டு இதுவரை வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டிருக்கும் ஒன்றிய ஆட்சிக்கும் மாநில ஆட்சிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்து இருக்கிறது.
பாபர் மசூதிக்குள் இந்து ராமன் கோயில் இருந்தது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, நம்பிக்கையின் அடிப்படையில் கோயில் கட்ட அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதி தனது கனவில் ராமன் வந்து இந்தத் தீர்ப்பை வழங்கும்படி கூறினார் என்று கூறினார். இந்தக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியவர் பிரதமர் `மோடி.' கோயிலுக்கு கொடியேற்றம் செய்தவர் பிரதமர் `மோடி' கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கோயிலைத் திறந்து விட வேண்டும் என்று அவசரம் காட்டி கோயிலுக்குள் பாலராமனை நிறுவும் சடங்கை நடத்தியவர் `மோடி' இந்த கோயிலுக்கான அறக்கட்டளையை நிறுவியவரும் `மோடி'தான்.
இந்த அறக்கட்டளைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து விதிவிலக்கு தந்த வரும் `மோடி'தான் ஆனால் இந்த ஊழல் திருட்டு குறித்து இதுவரை வாய் திறக்காதவரும் `மோடி'தான். இப்போது உச்ச நீதிமன்றமே தலையிட்டு ஒன்றிய ஆட்சியின் விளக்கத்தைக் கேட்டு இருக்கிறது. பகவான் ராமனே தன்னுடைய கனவில் வந்து கோயில் திறப்புக்கான தேதியை அறிவித்துவிட்டு போனார் என்று பேசினார் மோடி. தலைமை நீதிபதி கனவிலும் மோடியின் கனவிலும் வந்த ராமன் இப்போது மோடி கனவில் வந்து தனது காணிக்கைகள் கொள்ளையடிக்கப்படுவதை முறையிட்டதாக மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. பகவான் ராமனின் உண்மையான பக்தர்களே கோயில் நிர்வாகிகளாக ஊழியர்களாக சலித்து சலித்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்து பக்தர்களின் காணிக்கையை உண்மையான இந்து பக்தர்களே சூறையாடுகிறார்கள் என்றால், இது இந்து அவமதிப்பு பட்டியலில் சேராதா?
கோயிலைக் கட்டுவதே தனது `பிறவிப் பயன்’ என்று சபதம் ஏற்று செயல்பட்ட பிரதமர் மோடி வாய்மூடி கிடப்பது ஏன்?
இந்துக்களை புண்படுத்துவதாக வீதிகளில் இறங்கிப் போராடுவதையும், நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதையும் முழு நேர வேலையாக செய்து கொண்டிருந்த கடவுள்களின் `போர்க்கள நாயகர்கள் எங்கே போனார்கள்?
'கண்டா வரச் சொல்லுங்க!.'
- விடுதலை இராசேந்திரன்