தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (27) கவினை 27.7.25 அன்று பாளையங்கோட்டையில் சுஜித் என்பவர் வெட்டி படுகொலை செய்கிறார்.

கவின் பட்டியல் சமூகத்தையும் சுஜித் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சார்ந்தவர்கள். சுஜித்தின் சகோதரியை கவின் காதலித்த காரணத்தினால் கவினை சுஜித் ஜாதி ஆணவப் படுகொலை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது.

ஜாதி ஆணவப் படுகொலை செய்த சுஜித் தானாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. கவின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டு அவர்கள் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொலையாளி சுஜித்தின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என்று போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

ஜாதி ஆணவப் படுகொலை நடந்த உடன் உடனடியாக கைது நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்தப் படுகொலையில் சுஜித்தின் பெற்றோர்கள் உள்ளனரா என்பதை உடனடியாக விசாரித்து அதற்கு முகாந்திரம் இருந்தால் அவர்கள் பெற்றோரையும் தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஜாதி ஆணவப் படுகொலை நடந்த உடன் இது பெரியார் மண்ணா? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்பது போன்ற கேள்வி இம்மண்ணில் ஜாதி ஒழிப்பிற்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடும் பெரியாரியல்வாதிகளை நோக்கியும் திமுக அரசை நோக்கியும் மட்டுமே கேட்கப்படுகிறது.இது திராவிட எதிர்ப்பு மனநிலையில் உள்ளவர்களால் உள்நோக்கத்தோடு கேட்கப்படும் பார்ப்பன ஊடகங்களால் திட்டமிட்டு பரப்பப்படும் ஒரு பரப்புரை யுக்தியே ஆகும். இது ஜாதிய மனநிலையில் இருக்கும் பெரும்பாலான பொதுச் சமூகத்தின் பொறுப்பை தட்டிக் கழிப்பதே ஆகும். அதே நேரம் ஜாதி ஆணவப் படுகொலைகளை ஊக்கப்படுத்தும் ஜாதி சங்கத் தலைவர்களின் தூண்டுதல்களையும் மறைக்கும் செயலே ஆகும்.

தற்பொழுது ‘குடி தேசியம்’ எனும் பெயரில் போலி தமிழ் தேசியவாதிகள் ஜாதியின் பெயரை ‘குடி’ என மாற்றி அது பெருமைக்குரியது என்று பேசி வருவதும், ஆணவப் கொலைகளை ‘குடிப்பெருமைக் கொலை’ என்று கூறுவதும் இது போன்ற கொடூரக் கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது என்பதையும் மறைத்து விட்டு முற்போக்காளர்களை கேள்வி கேட்பதும் நிகழ்கிறது.

ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு அடிப்படை காரணம் ஜாதியப் பெருமை கொண்ட மனநிலையே ஆகும். தொடர்ந்து ஜாதி அமைப்புக்கு எதிராகவும் ஆதிக்க ஜாதி வெறிக்கு எதிராகவும் ஜாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருப்பது திராவிடர் விடுதலைக் கழகம். ஜாதியப் பாகுபாட்டிற்கு அடிப்படையான சனாதன கோட்பாடு, மனுதர்மம் இவற்றிற்கு எதிரான பரப்புரைகளை இன்னும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டியதையும் இந்த அடிப்படைகளை தகர்ப்பது தான் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்

மேலும் குறிப்பிட்ட ஆதிக்க சமூகம் அதிகம் வசிக்கும் பகுதியில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் காவல்துறையில் உயர் பொறுப்பில் வரக்கூடாது என்றும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் இணையர்களுக்கு தக்க பாதுகாப்பும் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதையும் நாம் தொடர்ந்து கோரிக்கையாக எழுப்பி வருகிறோம். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் "ஜாதி என்பது ஒரு மனநோய்" என்று குறிப்பிடுகிறார். ஜாதியப் பெருமை மிக்கவர்கள் மனநோயாளிகளாக மாறித்தான் இது போன்ற கொடூரக் கொலைகளை ‘குடி’ பெருமைக்காக செய்வது என்பது நிகழ்கிறது.

இவற்றைத் தடுப்பதற்கான பொறுப்பும் கடமையும் ஒட்டுமொத்த சமூகத்திற்கு உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்,

***

"மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்!"

சமூகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஜாதியப் படுகொலைகளை (ஆணவ கொலைகள்) தடுக்க சட்டம் மட்டும் போதாது மக்களின் மன உணர்வுகளில் இருந்து அதை நீக்க வேண்டும்.

நாகரீக சமூகமாக இந்த தமிழ் சமுதாயத்தை மாற்றி அமைக்கப் போராடியவர் பெரியார். அவர் தொடங்கிய இயக்கம் தொடர்ந்து ஜாதி எதிர்ப்பு, சடங்கு மறுப்பு கருத்தியலை வலிமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அதன் விளைவாக இன்று பல்வேறு மாற்றங்கள் வந்து இருக்கின்றன.

தமிழ்நாட்டில் யாரும் பெயருக்குப் பின்னால் ஜாதி போடும் வழக்கத்தைப் பின்பற்றுவது இல்லை.

ஆகவே அதன் தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு தலைப்புகளில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களை கள ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து SC/ST ஆணையத்திடம் மனு அளித்தது. தற்போது இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்து உள்ளது. ஜாதிவெறி சிந்தனைகளில் இருந்து இளைஞர்களை மீட்க சென்னை மாவட்டக் கழகம்

"மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்!" என்ற தலைப்பில் தொடர் தெருமுனைக் கூட்டங்களை அமைப்பு தொடங்கிய நாளான ஆகஸ்டு-12ம் தேதி முதல் நடத்தவுள்ளது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.