‘நீட்’ என்பது சமமற்ற வாய்ப்பு. ‘நீட்’ என்பது அநீதி. ஏழைகள், கிராமப்புற மக்களுக்கு எதிரானது. சமச்சீரான கல்விமுறையை சீரழித்துவிடும். எனவே, நீட் ரத்து செய்யப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு போராடி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத ஒன்றிய அரசு, இப்போது தகுதித் தேர்வுகளை நடத்துவதில் சீர்திருத்தம் செய்யலாமா எனத் தேர்வு முகமை ஆலோசித்து வருவதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வெளியான செய்தியைப் பகிர்ந்து தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன்.
“நீட் தேர்வு பள்ளிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, கோச்சிங் நிறுவனங்களின் வணிக வேட்டைக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தது தமிழ்நாடு! dummy schools அதிகரித்துவிட்டன; நாள்தோறும் 6 மணி நேரம் கோச்சிங் மையங்களில் மாணவர்கள் வதைபடுகிறார்கள் என்ற அவலம் டெல்லியை, இப்போதுதான் உறுத்தத் தொடங்கி இருக்கிறது. ப்ளஸ்-ஒன் படிக்கும்போதே நீட்டை நடத்தி விடலாமா? கோச்சிங் மையத்தில் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என உத்தரவு போடலாமா? பெயரளவுக்கு பள்ளிகளில் (dummy schools) அட்டன்டன்ஸ் போட்டுவிட்டு, முழுநேரமும் கோச்சிங் சென்டரில் இருப்பதைத் தடுப்பது எப்படி? பழையபடி ப்ளஸ்-டூ மதிப்பெண்ணுக்கு மதிப்பு தரலாமா? என்றெல்லாம் வல்லுநர் குழுவை அமைத்து ஆலோசனை கேட்கத் தொடங்கி இருக்கிறது ஒன்றிய அரசு
‘நீட்’ என்பது சமமற்ற வாய்ப்பு. கோச்சிங் மையங்களில் லட்சக்கணக்கில் செலவழிக்கும் வசதியானவர்களுக்கு சாதகமானது. பள்ளிகளின் போதனை; ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை ஒன்றுமில்லாமல் செய்து, கல்விமுறையை சீரழித்துவிடும் என்ற தமிழ்நாட்டின் வாதம் சரியானது என்று மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி இருக்கிறது. கோச்சிங் நேரக் கட்டுப்பாடு நடைமுறை சாத்தியமானதா? ப்ளஸ்-ஒன் படிக்கும்போதே நீட் தேர்வு நடத்துவது சுமையைக் குறைக்கும் செயலா? ப்ளஸ்-டூ மதிப்பெண் போதும்; நீட் விலக்கு தாருங்கள் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை இப்போதாவது ஏற்பார்களா? நீட் ஒரு சர்வரோக நிவாரணி; அருமருந்து என்று தொடர்ந்து பிடிவாதம் காண்பிக்கப் போகிறார்களா?” என கேள்வி எழுப்புகிறது அவரது பதிவு.
ஆர்.எஸ்.எஸ்க்காக கோயில் இடிப்பு!
டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் கட்டியுள்ள புதிய தலைமையகத்தின் வாகன நிறுத்துமிட வசதிக்காக, அப்பகுதியில் இருந்த பழமையான கோயில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி, மாநகராட்சியின் துணைகொண்டு இந்த ‘கர’சேவையை நடத்தியிருக்கிறது ஆர்எஸ்எஸ். இந்துக்கள், ஆலயங்கள் என்றெல்லாம் பாஜகவும், சங் பரிவார் கும்பலும் பேசுவது வெறும் அரசியலுக்காகத்தானா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் நிர்வாக நடைமுறையைப் பின்பற்றித்தான் கோயில் இடிக்கப்பட்டுள்ளது இதில் எந்த விதிமீறலும் இல்லை என விளக்கம் தந்திருக்கிறது பாஜக தரப்பு. நடைபாதை கோயில்களை அகற்ற வேண்டுமென்று நீதிமன்றங்கள் எத்தனையோ முறை கூறிவிட்டன. விதிமுறைகளைப் பின்பற்றித்தான் அந்த கோயில்களையும் அதிகாரிகள் இடிக்க முயன்றனர். ஆனால் இந்துத்துவாதிகள் விட்டார்களா? ஜெய்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இப்போது தங்கள் தேவைக்காக கோயிலை இடித்திருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு பக்தியைப் பரப்பும் இயக்கமல்ல, பாகுபாட்டை விதைக்கும் நஞ்சு. அதற்கு பக்தியை பகடைக்காயாக பயன்படுத்துகிறது, அந்த இயக்கம் ஆன்மீகத்திற்கானது அல்ல, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கானது மட்டுமே என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்