தேனிசை செல்லப்பா எனும் இசைப் போராளி விடை பெற்றுக் கொண்டு விட்டார். தமிழீழ விடுதலை வரலாற்றில் தேனிசை செல்லப்பாவுக்கு நிலைத்த இடம் உண்டு. தமிழ்நாட்டு விடுதலை இலட்சியத்தை முன்னிறுத்தி `தினத்தந்தி ’ நாளேட்டின் நிறுவனர் சி.பா ஆதித்தனார் தொடங்கிய `நாம் தமிழர் கட்சி’யிலிருந்து அவரது அரசியல் பயணம் தொடங்கியது. தனிநாடு விடுதலையில் தோய்ந்து நின்றவர். அந்த இலட்சியம்தான் அவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நோக்கி நகர்த்தியது.

thenisai chellappa1983-இல் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை உணர்வுகள் வெடித்து கிளம்பிய போது தேனிசை செல்லப்பாவின் இசை நாடா வெளிச்சத்துக்கு வந்தது. நாம் தமிழர் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டிருந்த கவிஞர் காசி.ஆனந்தன் எழுதிய உணர்ச்சிமிகு கவிதை வரிகளுக்கு இசை வடிவம் தந்திருந்தார் தேனிசை செல்லப்பா.

தமிழ்நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இயக்கங்களில் குறிப்பாக பெரியார் இயக்கங்களில் அவரது இசை நிகழ்ச்சிகள் உணர்வலைகளைத் தட்டி எழுப்பின. பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ஈழ விடுதலை ஆதரவு பரப்புரைகள், மாநாடுகளில் தேனிசை செல்லப்பா இசை நிகழ்ச்சிகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். திராவிடர் கழகத்தில் நாங்கள் இருந்தபோது கவிஞர்.காளமேகம் மற்றும் உணர்வுள்ள இளைஞர்கள் இணைந்து “ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியன், சங்கிலியன் வரலாறு மற்றும் தீர்வுக்காக..” போன்ற நாடகங்களை நாங்கள் அரங்கேற்றினோம். கவிஞர் காளமேகம் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்து தேனிசை செல்லப்பா தான் பாடினார். பெண்ணுரிமை, பகுத்தறிவு, இன விடுதலை கருத்துக்கள் கொண்ட பாடல்களையும் எடுத்து பாடி ஒலிநாடாகவாக வெளிவந்திருக்கிறது.

ஈழ விடுதலை ஆதரவு இயக்கத்தில் அவரது மகத்தான பங்களிப்பை அறிந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அவரை அரவணைத்துக் கொண்டது. தமிழீழம் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் மாவீரர் பிரபாகரன் அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் தேனிசை செல்லப்பா. வெகுசிலருக்கு மட்டுமே விடுதலைப் புலிகள் இயக்கம் வழங்கிய ‘மாமனிதர்’ விருதை மேதகு.பிரபாகரன் செல்லப்பாவுக்கு விழா எடுத்து வழங்கினார். விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்ட இலண்டன், பாரிஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு தேனிசை செல்லப்பா அழைக்கப்பட்டார். புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டுவதற்கு அவரது இசை நிகழ்ச்சிகள் நடந்தன. களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகளுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்தது தேனிசை செல்லப்பாவின் பாடல்கள்தான்.

புலிகள் பயணிக்கும் வாகனங்களில் எப்போதும் தேனிசை செல்லப்பாவின் பாடல்கள் ஒலிக்கும். விடுதலைப் புலிகள் நடத்திய வானொலியில் நேயர் விருப்பமாக தேனிசை செல்லப்பாவின் பாடல்கள் ஒலிபரப்பியதையும் நான் தமிழீழம் சென்ற போது நேரில் பார்த்தேன். ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. தமிழீழ விடுதலைக்காக திராவிடர் கழகம் ஒரு இசைநாடாவை உருவாக்க திட்டமிட்டது. கவிஞர்கள் கலி.பூங்குன்றன், காசி.ஆனந்தன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புலமைப்பித்தன் எழுதிய பாடல்களுக்கு தேனிசை செல்லப்பா குழுவினர் பாடினர். தோழர் சாமி என்ற இசையமைப்பாளர் மெட்டுகளை உருவாக்கினார். வடபழனியில் உள்ள ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் இந்த இசை நாடா பதிவு மாலை தொடங்கி இரவு முழுதும் விடிய விடிய நடந்தது. அந்தப் பதிவின் போது கவிஞர் கலி.பூங்குன்றன், காசி.ஆனந்தன், வீரசந்தானம் அவர்களோடு நானும் பங்கேற்றேன். கடைசியாக ஒலிநாடாவுக்கு கூடுதலாக ஒரு பாடல் தேவைப்பட்டது; அவசர அவசரமாக பாடல் தேடல் நடந்தது. அப்போது `முரசொலி’ நாளேட்டில் கவிஞர்.காசி ஆனந்தன் எழுதிய ஒரு கவிதையை பாடலாக்க முடிவு செய்யப்பட்டது. “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்பதே அந்தப் பாடல். 30 நிமிடங்களில் இசை அமைத்து அந்தப் பாடல் உருவானது.

ஒலிப்பதிவு நாடா தயாரான அடுத்த நாள் அந்த நாடாவை புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பேபி சுப்பிரமணியத்துடன் நானும் தோழர்களும் சென்னை பட்டினப்பாக்கத்தில் தங்கி இருந்த மேதகு. பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து அளித்தோம். பாடல்கள் அனைத்தையும் கேட்டவர் “நம்புங்கள் தமிழீழம்” பாடல்தான் தன்னை மிகவும் ஈர்த்தது; நம்பிக்கை தரும் பாடல் என்றார். அது முதல் தமிழீழ தேசியப் பாடலாக அது கருதப்பட்டு ஒவ்வொரு நிகழ்விலும் நிறைவுப் பாடலாக மக்களின் கைத்தட்டலுடன் தேனிசை செல்லப்பா அந்தப் பாடலை பாடி வந்தார். தொடர்ந்து ஈழ விடுதலைக்காக ஏராளமான பாடல்களை ஒலி நாடாக்களாக அவர் உருவாக்கி வந்தார். முறையாக இசை பயின்ற இசை மேதைகள் நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள். அவர்களின் மேட்டிமை இசை மக்களுக்கானது அல்ல! ஆனால் தன்னிடம் இருந்த இயல்பான பாடும் திறனை ஒரு இலட்சியத்திற்காக அர்ப்பணித்த கலைஞர்கள் அந்த இசை மேதைகளை விட உயர்வானவர்கள். இந்த வரிசையில்தான் தடம்பதித்து நிற்கிறார் தேனிசை செல்லப்பா.

ஒன்றிய அரசு அவரது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) முடக்கி பயணங்களைத் தடுத்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு அவர் திரும்பப் பெற்றார். தமிழ்நாடு அரசால் பாவேந்தர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் பட்டினிப் போராட்டம் நடத்திய மாவீரன் திலீபன் தனது போராட்டத்தின் போது தேனிசை செல்லப்பா பாடல்களை கேட்க விரும்பினார். ஆனால் அவரது பயணம் தடைப்பட்டு விட்டது. தேனிசை செல்லப்பாவின் கம்பீரக் குரலில் ஒலித்த "பெண்ணே பெண்ணே போராடு!" " ஜாதி ஜாதி என்று தாழ்ந்து போனவன்!" என்ற கவிஞர் காளமேகத்தின் வரிகளில் ஒலித்த பாடல் இப்போதும் உயிர்த்துடிப்போடு நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பெரும் புகழோடு விடைபெற்ற தேனிசை செல்லப்பாவுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகழ்வணக்கம்!

 - விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.