தமிழ்நாட்டில் ஜாதி-தீண்டாமை வன் கொடுமைகள் தொடர் நிகழ்வுகளாகிவிட்டது. வெட்கித் தலைகுனிய வேண்டிய அவமானமாகும். ‘திவ்யா-இளவரசன்’ இணையரின் ஜாதி மறுப்புத் திருமணம் தமிழ்நாட்டில் ஜாதி வெறியின் களமாக மாற்றப்பட்டது. தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனி தலித் மக்களின் உடைமைகள் அனைத்தையும் ஜாதி வெறிக் கும்பல் சூறையாடியது. அதன் தொடர்ச்சியாக மரக்காணத்தில் தலித் மக்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள். இவ்வளவுக்குப் பிறகும் தலித் இளவரசனோடு வாழ்வதில் உறுதியாக இருந்தார் ‘வன்னிய’ சமூகத்தைச் சேர்ந்த திவ்யா.

ஜாதித் தடைகளைக் கடந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இணையர் கட்டாயப்படுத்தப்பட்டு அரசியல் சதியின் காரணமாக மிரட்டி பிரிக்கப்பட்டு விட்டனர். கணவர் வீட்டில் எந்தக் குறையும் தனக்கு இல்லை என்று நீதி மன்றத்தில் கூறிய திவ்யா, ‘ஜாதி அரசியல்’ தந்த அழுத்தத் துக்காக தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை தொலைத்து விடும் நிர்ப்பந்தத் துக்கு உள்ளாகி யுள்ளார். ஜாதி மனிதத்துவத்துக்கு எதிரானது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 வயது தலித் சிறுவன் காலில் செருப்புப் போட்டு நடந் தான் என்ற “குற்றத்துக்காக” ஜாதி வெறியர்கள் அந்த சிறுவனின் தலை மீது செருப்பை தூக்க வைத்து வீதிகளில் நடக்கவிட்டிருக்கிறார்கள். உசிலம்பட்டி என்றாலே அது ஜாதி வெறிப் பகுதி என்றே தமிழக வரைபடத்தில் ரத்த அடையாளத் துடன் பதிந்து போய் நிற்கிறது. அதே உசிலம் பட்டியில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தை கழகம் நடத்தியபோது, ‘மாவீரன் இமானுவேல் சேகரன்’ என்ற பெயரை உச்சரித்த ஒரே காரணத்தால் கழகச் செயல்வீரர் இராவணன் மீது கல்வீசி, அவரது கையை உடைத்தனர். அதே உசிலம்பட்டியில்தான் இப்போது 6ஆவது வகுப்பில் படிக்கும் தலித் சிறுவன் தலை மீது ‘செருப்பை’ சுமக்க வைத்துள்ளார்கள்.

இதே உசிலம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மூன்று பஞ்சாயத்துகளை ‘ரிசர்வ்’ தொகுதி யாக்கியதை எதிர்த்து 1996-லிருந்து 2001 ஆம் ஆண்டு வரை தேர்தலே நடத்தவிடாமல் தடுத்து வந்தது ஜாதி வெறிக் கும்பல். 9 முறை இடைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டும், ஒருமுறைகூட தேர்தலை நடத்தவிடவில்லை. தலித் மக்களுக்கு ‘கொட்டாங்கச்சி’யில் தேனீர் ஊற்றும் அவலமும் சுடுகாடுகளில் பிணத்தைப் புதைக்க தடை போடும் கேவலமும் இப்போதும் தொடருவதாக ‘இந்து’ நாளேடு (ஜூன் 10) கூறுகிறது.

ஜாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம், ‘தீண்டாமை எதிர்ப்பு முன்னணி’ போன்ற ஒரு சில அமைப்புகள் மட்டுமே எதிர்த்துப் போராடி வருகின்றன. வேறு கட்சிகளோ, இயக்கங்களோ, இப்பிரச்னைகளிலிருந்து முழுமையாக ஒதுங்கி நிற்கின்றன. மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் இப்படி அவமதித்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை ஜாதி வெறிக் கும்பல் பறித்துக் கொண்டு வெறியாட்டம் போடுவதை எதிர்த்து ஒரு கண்டனக் குரல் எழுப்புவதற்குக்கூட இந்த நாட்டில் தமிழுக்கும் தமிழனுக்கும் கட்சிகளையும் இயக்கங்களையும் நடத்துகிறவர்கள் ஏன் முன்வரவில்லை? என்ற கேள்வியை வேதனை யுடன் எழுப்ப வேண்டியிருக்கிறது.

ஜாதி வெறியும் தலித் மக்கள் மீதான வெறுப்பும் பொதுப் புத்தியில் திணிக்கப்பட் டுள்ளதன் வழியாக பார்ப்பனியம் உயிர்த் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை! இந்தப் பார்ப்பனியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக் கான போராட்டத்தை முன்னெடுக்கும் செயல் களத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உறுதியாக பயணிக்கும்.

“தமிழன் என்று சொல்லடா? அவன் தலை யில் செருப்பைத் தூக்கி வையடா” என்பது தமிழனுக்கான அடையாளமல்ல; அது அவமானம்!

Comments

2 comments

2
ayyanar.n
இளவரசன் திவ்யா காதல் சாதிமறுப்பு நோக்கத்துடன் செய்யப்பட்டது இல்லை. தூனிலும்-பேனிலும் பெருமாலை பார்க்கும் பரமபக்தனைபோல், சாதரன இந்த இனவிருத்தி செயால் பாட்டில்கூட சாதிமறுப்பு பரபிரம்மம் அடங்கியிருப்பதை காட்டும் உங்களின் நவீன புரட்ச்சி புரானத்தை படித்ததும் எனக்கு புல்லரிக்கிறது.
seyed muhammed
தமிழகத்தில் ஜாதியம் ஒழிந்ததாக தப்பு கணக்கு போட்டுக் கொண்டார்கள் அய்யா:பெரியாரின் தொண்டர்கள்; நான் என் மக்களை சூத்திர இழிவோடு விட்டு செல்கிறேனே என்ற அய்யாவின் இறுதி வாசகங்கள் தொண்டர்களின் கவனத்திலில்லை. ஆனால்,எதிரிகள் அய்யாவின் வாசகத்தை தங்களின் மறு பிரவேசத்திற்க்கான பற்று கயிறாக்கி கொண்டார்கள். அய்யாவின் தொண்டர்களிடையே ஆயிரம் கருத்து மோதல்கள்;அன்றாட விமர்சனங்கள் குற்றங் குறைகள் அர்ச்சணைகள் நீண்ட பட்டியலில் எதிரிகள் விழுந்த குழிகளிலிருந்து ஏறி வந்து விட்டார்கள். திரும்பி பார்க்கும் அய்யாவின் தொண்டர்களோ பதறிப் போயுள்ளார்கள்;தமிழகத்தில் ஜாதியா?தமிழகத்தின் அடையாளம் ஜாதியா?என்றெல்லாம் விடை காண முடியாத வினாக்களோடு பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர். இதோ அய்யனாரின் விமர்சனத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள் "இளவரசன் திவ்யா காதல் சாதிமறுப்பு நோக்கத்துடன் செய்யப்பட்டது இல்லை. தூனிலும்-பேனிலும் பெருமாலை பார்க்கும் பரமபக்தனைபோல், சாதரன இந்த இனவிருத்தி செயால் பாட்டில்கூட சாதிமறுப்பு பரபிரம்மம் அடங்கியிருப்பதை காட்டும் உங்களின் நவீன புரட்ச்சி புரானத்தை படித்ததும் எனக்கு புல்லரிக்கிறது" சேர்ந்த ஜோடிகள் இனவிருத்திக்காக சேர்ந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.......ஆனால் விரும்பி சேர்ந்தவர்களை பிரித்தவர்கள் எதற்க்காக பிரித்தார்கள் என்ற ஒரு சாதாரண கேள்வியைக் கூட கேட்க இயலாத அறிவு முடக்கம் நிறைந்த சமுக சூழலில்"தமிழனின் அடையாளம் ஜாதியா ஆச்சரியப்படலாமா? அய்யா தொண்டர்களில் பலர் தங்களின் ஜாதிய கூடாரங்களுக்கு குடி போனதை தமிழகம் கண்டுள்ளது.அதில் சிலர் ஹிந்து மத பக்த கோடிகளாகவும் பவனி வந்தார்கள்.இராஜா ராம் போன்றோர்"ஆச்சாரியாரை"போற்றிப் புகழ்வதில் புதிய பிரகலாதனாக மாறிப் போனார். இந்நிலையில் அய்யாவின் தொண்டர்களோ பதவி பறி போன பழைய ராஜா போல் கர்ஜித்துக் கொண்டிருக்கிறீர்கள். மாறிப் போனவர்களால்,பழைய அடையாளங்களை தேடி கொண்டவர்களால் அய்யாவின் கொள்கை வீழ்ந்ததாக கொள்ள முடியாது.மக்களின் அவலங்கள் முழுமையாக நீக்கப் படாமல் எந்த ஒரு கொள்கையும் சோர்ந்து போவதில்லை. தமிழகத்தில் நடந்தது கொள்கை சோர்வல்ல....கொள்கையை பின்பற்றியவர்களின் சோர்வு,தவாறான முடிவு,தங்களை பெரிதாக எண்ணிக் கொண்டது,எதிரியை சாதாரணமாக எடை போட்டது. பார்ப்பனர்கள்,தங்களின் இருப்பை உறுதி செய்ய எதையும் இழக்க தயார்;யாரையும் போற்ற தயார்;யாருக்கும் முந்தி விரிக்க தயார். ஓர் உதாரணம்:பாலசந்தரின் இரு கோடுகளில் திரு:கருணாநிதி அவர்களை கடவுளை விட உயர்வாய் கருதும் ஒரு வசனம் உண்டு.அய்யாவின் தொண்டர்கள் பூரித்துப் போனார்கள்,அது அவர்களுக்காக வெட்டப் பட்ட பிணக்குழியானது; இந்த சினிமா இரசிகர்களை உருவாக்கும் அது நமக்கு தொண்டர்களைத் தரும் என திராவிட நன்பர்களை நம்ப வைத்த போது தொண்டர்கள் விழித்துக் கொள்ளவில்லை;விளைவு சோ தமிழகத்தின் சிந்தனை சிற்ப்பியாக,சுவாமி போராளியாக அவதாரம் எடுத்துக் கொண்டார்கள்.இவர்களின் கரம் பற்றி பாடம் பயின்ற பலர் திராவிட இயக்க தூண்களாயினர். இந்த தூண்கள் தான் இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டிகள்.இவர்கள் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்கள்.....இவர்களுக்கு பின்னுள்ளோர் ஆமாம் என உரக்க கத்துகிறார்கள்.குரல் இளவரசனை கொல்கிறது,திவ்யாவை இளம் விதவையாக்குகிறது,நத்தம் காலணியையும் மரக்காணத்தையும் தீக்கரையாக்குகிறது. இந்த சூழ்நிலையில் செய்ய வேண்டியது எல்லாம் அய்யாவின் இறுதி வாசகங்களை உள்ளத்தில் பதிய வைப்பது,பணியை அதிலிருந்து தொடங்குவது;நாம் பழைய ராஜா என்ற பழம் பெருமைகளுக்கு மூட்டை கட்டுவது.மீண்டும் அடிகளையும் அடக்கு முறைகளையும் மக்களுக்காக வாங்கப் பழகுவது. ஆம்!தமிழகம் ஜாதிகளற்ற மக்கள் வாழும் மாநிலமாய் மாற மாற்ற நிலை குலையாத மக்கள் போராட்டம் அதன் எழுச்சியே வழி.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.