திருச்சி தேவர்மன்றத்தில் 1968 அக்டோபர் 06 -ஆம் நாள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரும் மற்ற தமிழறிஞர்களும் உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவினர். அந்த மாநாட்டில் மாணவர் என்ற வகையில் பேச எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. அங்கு தான் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களான தோழர்கள் வே.மு.பொதியவெற்பன், அரணமுறுவல் ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் வழியாகப் பொறியியல் மாணவர் சேயோன் நட்பு கிடைத்தது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தோழர் சி. அறிவுறுவோன் அவர்களும் நானும் முயன்று உலகத் தமிழ்க் கழகக் கிளை அமைத்தோம். தோழர் அ. மன்னர்மன்னன், புலவர் அடஞ்சூர் அரங்கராசன், புலவர் செந்தலை ந.கவுதமன், தோழர்கள் சாமி. தங்கமணி, கு.பெரியசாமி முல்லக்குடி எம்.கே. பாலசுப்பிர மணியன், முல்லக்குடி கோ.செயபாலன், மகாராசபுரம் கலியப்பெரு மாள் எனப் பலரும் சேர்ந்து உலகத் தமிழ்க் கழகத்தை ஒரு புரட்சி இயக்கமாகவே திருக்காட்டுப்பள்ளியில் நடத்தினோம்.

தனித்தமிழ், தனித் தமிழ்நாடு என்ற இலட்சியங்கள் எங்கள் நெஞ்சில் சுடர் விட்டன. “பிராமணாள் ஓட்டல்’’ என்ற பெயர் அழிப்பு போன்ற போராட்டங்கள், கொள்கை விளக்கப் பொதுக் கூட்டங்கள் எனப்பல நிகழ்வுகள் நடந்தன. இச்செயல்பாடுகளில் தோழர் சி. அறிவுறுவோன் அவர்களின் முனைப்பும், களப்பணியும் கூடுதலாக இருந்தன.

திருக்காட்டுப்பள்ளியில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்தோம். நான் ஒரு தலைப்பில் பேச வேண்டும் என்றார்கள். என்ன தலைப்பு என்பதை, உடனடியாக முடிவு செய்ய முடியவில்லை. அந்த நிலையில் நான் என் ஊருக்கு (ஆச்சாம்பட்டிக்கு) செல்ல விடைபெற்றேன். தோழர் ஒருவர் என் தோளில் கிடந்த துண்டை இழுத்து, “தலைப்புச் சொல்லிவிட்டுப் போங்கள்’’ என்றார். நான் உடனடியாக “துண்டு’’ என்ற தலைப்பை வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். இத் தலைப்பில் நான் என்ன பேசப்போகிறேன் என்று தோழர்களுக்குச் சொல்லாமல் புறப்பட்டு விட்டேன்.

பொதுக்கூட்டத்தில், இந்தியா விலிருந்து தமிழ்நாடு துண்டாகித் தனிநாடு ஆக வேண்டும் என்று வலியுறுத்தியும் அதற்கான காரணங்களை அடுக்கியும் பேசினேன். தோழர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இப்பேச்சு- ஈர்ப்பாக இருந்தது. பாராட்டினார்கள். சர் சிவசாமி அய்யர் உயர்நிலைப் பள்ளியில் எங்களுக்கு இந்தி ஆசிரியராக இருந்த திரு பாஷ்யம் அவர்கள் அப்போது தினமலர் ஏட்டின் செய்தியாளராக இருந் தார். அவருடைய மாணவர்கள் நடத்திய கூட்டம் என்ற அக்கறையில் எங்கள் கூட்டத்தையும் இந்த தலைப்பையும் தினமலர் ஏட்டில் போட்டு விட்டார். நாளேட்டில் எங்கள் கூட்டச் செய்தி வந்தது பெரும் மகிழ்வாக இருந்தது.

நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நாவலர் நெடுஞ்செழியன் சொற் பொழிவை செங்கிப்பட்டியில் கேட்டது முதல் தி.மு.க. ஆதரவாளனாக ஆனவன் நான். மொழி உணர்வும், இன உணர்வும் பள்ளிப் பருவத்திலேயே தி.மு.க. தொடர்பால் என்னிடம் வளர்ந்தன.

இந்நிலையில் 1964லிருந்து பாவலரேறு அவர்களின் “தென் மொழி’’ இதழைத் திருக்காட்டுப் பள்ளி அரசு நூலகத்தில் படிக்கும் வாய்ப்பு பெற்றதால், மொழி உணர்வும், தமிழின உணர்வும், தனித் தமிழ்நாடு வேட்கையும் மேலும் மேலும் வளர்ந்தன.

தமிழ்நாட்டில் ஓர் அரசியல் கட்சியின் கிளைபோல் துடிப்புடன் செயல்பட்டகிளை திருகாட்டுப் பள்ளி உலகத் தமிழ்க் கழகக் கிளையாகும்.

இக்கிளையின் சார்பில் “சங்கொலி’’ என்று கையெழுத்து இதழ் நடத்தினோம். பின்னர் “முடிவு’’ என்ற பெயரில் அச்சிட்ட சிற்றேடு நடத்தினோம்.

என் தொடர்பில் செங்கிப் பட்டி சானடோரியத்தில் தோழர்கள் தாமசு, சிவகடாட்சம் ஆகியோர் முயற்சியில் உ.த.க. கிளை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல் பட்டது. பின்னர் சாணுரப்பட்டி புலவர் இரத்தினவேலவன் செங்கிப்பட்டி பகுதி உ.த.க. அமைப்பிற்குப் பொறுப்பேற்று முனைப்பாககளப் பணி ஆற்றினார் “தனித் தமிழ்நாடு’’ இலட்சியத்தை முன் வைக்கும் புரட்சி இயக்கமாக உலகத் தமிழ்க் கழகம் செயல்பட வேண்டும் என்பது எங்கள்தாகமாக இருந்தது. ஆனால் மொழி அறிஞர்கள் தலைமை தாங்கும் மொழி இயக்கமாகவே உ.த.க. தன்னைப் பெரிதும் வெளிப் படுத்திக் கொண்டது.

1968 - 1969 காலம் மிக முகாமையானது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பெரும் போர் நடந்து, ஏராளமான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, பலர் தீகுளித்து மடிந்து இனயெழுச்சி ஏற்பட்ட 1965க்குப் பின் வந்த ஆண்டுகள் அவை. அச்சூடு தணியவில்லை என்பது ஒருபுறம்; 1967-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்து, அதன் வரம்பு என்ன என்று தெரிந்து விட்ட காலம் மறுபுறம். அதிலும் 1968 இறுதியில் முதலமைச்சர் அண்ணா நோய்வாய் பட்டு 1969 பிப்ரவரி 3-இல் காலமானபின், தி.மு.க.வின் மீதிருந்த பிரமைகள் உடைந்தன. உண்மையான தமிழின உணர்வாளர்கள் மாற்று அமைப்பு உருவாக வேண்டும் என்று எதிர் நோக்கினர். அப்படிபட்டகாலத்தில்தான் உ.த.க. தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

தி.மு.க.வினால்கைவிடப் பட்ட தமிழின உணர்வாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு சரியான மாற்று வழியினைக் காட்டி, தலைமை தாங்கும் இயக்கமாக உ.த.க. செயல்பட்டிருக்க வேண்டும். அது அவ்வாறு இல்லை.

இதற்கிடையே மார்க்சிய ஈடுபாடு எனக்கு ஏற்பட்டது. வியட்நாம் விடுதலைப் போர் மார்க்சியத்தின் பால் மேலும் மேலும் ஈடுபாடு கொள்ளச் செய்தது. நான் மட்டுமின்றி, உ.த.க.வில் இருந்த பலரும் தமிழகம் தழுவிய அளவில், மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டனர்.

என்னுள் மார்க்சிய ஆர்வமும், தனித்தமிழ்நாடு வேட்கையும் அதிக மாகியது. வியட்நாம் விடுதலை போல் தனித் தமிழ்நாட்டு விடு தலைப் போர் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

உ.த.க. தலைமை ஒரு விடுதலை இயக்கத் தலைமையாக இல்லையே என்ற கவலை என்னுள் வளர்ந்தது. உ.த.க. தலைமையோடு அப்போது முரண்பட்டிருந்த புலவர் பாவிசைக்கோ, உணர்வுப்பித்தன், தேனி இரும்பொறை ஆகியோர் தொடர்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் தனித் தமிழ்நாடு - மார்க்சியம் ஆகிய இரண்டிலும் பற்றுக் கொண்டி ருந்தனர். வியட்நாம் விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் ஈகம் செய்த ஒரு போராளியின் ஈகவர லாற்றைக் கூறும் “உன் அடிச் சுவட்டில் நானும்’’ என்ற நூலைப் படிக்குமாறு எனக்கு அவர்கள் கொடுத்தனர். படித்தேன். உணர்வுகள் மேலும் கொந்தளித்தன.

இந்த நிலையில் பரமக்குடியில் தமிழ்க் குடிமகன் முயற்சியில் 1969 டிசம்பர் 27, 28நாட்களில் உ.த.க. வின் முதல் மாநாடு நடந்தது. பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருக்காட்டுப் பள்ளியிலிருந்து நானும் தோழர் அறிவுறுவோனும் அதில் கலந்து கொண்டோம். ஆனால் மாநாட்டில் பாவாணர் ஆற்றிய தலைமை உரை ஒரு விடுதலை இயக்கத்திற்குரியதாக இல்லாமல்; மொழி அறிஞர் உரையாகவே இருந்தது. தீர்மானங்களும் அப்படியே இருந்தன.

மாநாட்டை முடித்துக் கொண்டு திரும்பும் போது உ.த.க. விலிருந்து விலகுவது என்ற முடிவுக்கு வந்தேன். வியட்நாம் போராட்டம் போல், போராட்ட உத்திகளைக் கற்றுக் கொள்ள, புரட்சி அமைப்பைக் கட்டமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தற்காலிகமாக இணைந்து கற்றுக் கொள்வது என்று முடிவு செய் தேன். இக்கருத்து பற்றி விவாதித்து முடிவெடுப்பதற்காக பரமக்குடியிலிருந்து மாநாடு முடிந்து திரும்பும் வழியில் பேராவூரணி இரட்டை வயல் சென்று, அங்கு கிராமக் கூட்டுறவு வேளாண்சங்கச் செயலாளராகப் பணியாற்றிய தோழர் கூட நாணல் கு.பெரியசாமி அவர் களைச் சந்தித்தேன். அவரும் என் கருத்தை ஏற்றார்.

அதன்பின்னர் நானும் அடுத் தடுத்து தோழர்கள் கு.பெரியசாமி திருச்சடைவளந்தை சாமி, தங்மணி, அ.மன்னர்மன்னன், அடஞ்சூர் அரங்கராசன், எம்.கே. பாலசுப்பிர மணியம், கோ.செயபால் உள்ளிட்ட தோழர்கள் சி.பி.எம். கட்சியில் இணைந்தோம். சிறிது காலம் கழித்து தோழர் சி.அறிவுறுவோனும் சி.பி.எம். கட்சியில் சேர்ந்தார். நாங்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்ட உ.த.க.தோழர்கள் அவரவர் முடிவுப் படி சி.பி.எம். கட்சியில் சேர்ந்தனர்.

இதற்கிடையே 1970-ஆம் ஆண்டு முதல் 1972 வரை, திரு வாரூர் அருகே உள்ள குருக்கத்தி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்தேன். அங்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் இயக்கத்தை அமைத் தேன். “தணல் வளர்த்தாய் வாழ்க நீ’’ என்ற தலைப்பில் வியட்நாம் விடுதலைப் போரைப்பாராட்டி நான் எழுதிய கவிதை சி.பி.எம். கட்சியின் தீக்கதிர் இதழில் வெளியானது.

என் செயல்பாடுகள், இலக்கிய ஈடுபாடு இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து, சி.பி.எம். கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின், தமிழகச் செய லாளராக 1973-ஆம் ஆண்டு என்னைத் தேர்ந்தெடுத்தனர். அக் கட்சியின் முழு நேரச் செயல் பாட் டாளன் ஆனேன்.

இடைக் காலப் பயிற்சிக்காக சி.பி.எம். கட்சியில் சேர்ந்த நான் நடைமுறைப் போராட்டங்கள்- இயக்கங்கள் அனைத்திலும் உள்ள ஒன்றிப்புடன் ஈடுபட்டு உண்மை யான சி.பி.எம். கட்சிக்காரனாய் மாறி விட்டேன்! என்னே முரண்! 1970லிருந்து 1985 சூன் வரை சி.பி.எம். அமைப்பில் மெய்யான ஈடுபாட்டுடன் செயல்பட்டேன்.

அதன்பிறகு அதிலிருந்து வில கல் - தனி அமைப்பு உருவாக்குதல், அதுவும் அனைத்திந்திய அமைப் பாய் இருத்தல் -அதன்பிறகு 1990-இல் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்துதல் - பின்னர் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்ற பெயர் மாற்றுதல் என நிகழ்ச்சி போக்குகள் வளர்ந்தன.

தமிழ்த் தேச விடுதலையை இலக்காகக் கொண்ட தமிழ்த் தேசியத்தை இலட்சியமாக ஏற்று, இயக்கம் நடத்துவது என நிகழ்வுகள் வேகமாக மாறின.

1990 பிப்ரவரி 25-இல் சென்னை பெரியார்திடலில் நாங்கள் நடத்திய தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில் பாவலரேறு பெருஞ் சித்திரனார் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்கள். என்னுடைய உ.த.க. தொடர்புகளை நினைவு படுத்தி பெருஞ்சித்திரனார் பேசினார்.

ஒருசுற்று சுற்றி வந்து விட் டோம். மீண்டும் முனைவர் அரண முறுவல் உள்ளிட்ட தனித் தமிழ் இயக்கத்தோழர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியப் போராட்டங்கள். இப்போது நடத்துகிறோம்.

அதே போல் இடையில் செயலற்றுப் போன உலகத் தமிழ்க் கழகத்திற்குத் தோழர் அரணமுறு வலும் மற்ற தோழர்களும் புத்துயிர் ஊட்டி அவ்வியக்கத்தைக் களப் போராட்டங்களுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். உ.த.க.வும் த.தே. பொ.க.வும் தோழமை உறவுடன் கூட்டாகவும், தனியாகவும் செயல்பட்டு வருகின்றன.

இடையில் ஏற்பட்டது கால விரையமா? கற்றுக் கொண்டதற்கான களமா?

அது பாதி, இது பாதி என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

தமிழக விடுதலைக் கொள்கையை இணைத்துக் கொண்ட உலகத் தமிழ்க் கழகம், மீண்டும் எழுச்சி பெறுவதற்கு முன்னோட்டமாக 19.04.2014-இல் தஞ்சை மாநாடு நடைபெறவுள்ளது. இம் மாநாடு தமிழ்த் தேசியப் புரட்சிக் குரிய புதிய படை வரிசைகளை உருவாக்கிட வாழ்த்துகள்.

Pin It