· விபச்சாரத்தை சட்டப்படியான தொழிலாக மாற்றிவிடலாம் என்று அனைத்திந்திய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறியிருப்பதை வரவேற்கிறீர்களா?

ஐயோ, டாஸ்மாக் போல் தமிழக அரசு அத் தொழிலையும் அரசுடைமையாக்கி விடப்போகிறது!

விபச்சாரத்தை சட்டப்படியான தொழிலாக்கினால், அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து அதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, விபச்சாரத் தரகர் களைத் தடுக்கலாம், கட்டாயமாக விபச்சாரத்தில் சில பெண்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுத்து அப்பெண்களை விடுவிக்கலாம், அப்பெண்களுக்கு மருத்துவச் சோதனை அடிக்கடி செய்தும், ஆணுறை களைக் கட்டாயமாக்கியும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்கலாம் என்று தமது கருத்துக்கான காரணங்களைக் கூறுகிறார் லலிதா குமாரமங்கலம்.

விபச்சாரத்தைச் சட்டப்படியான தொழிலாக்கி னால், சட்ட ஏற்புடன் தரகர்கள் தலை நிமிர்ந்து திரி வார்கள். விபச்சாரப் பெண்களின் உறவினர்கள், உதவியாளர்கள் என்று கூறிக் கொள்வார்கள். இன்னும் அதிகமான பெண்கள் இத்தொழிலில் ஈடுபடுவார்கள். மருத்துவ சோதனைகள் காலமுறைப்படி நடத்தப்படு வதாக விபச்சார விடுதி உரிமையாளர்கள் மருத்தவர் களிடம் போலிச் சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள் வார்கள்.

சட்டப்படிதான் நடக்கிறதா என்று விபச்சார விடுதிக்குள் நுழைந்து தொழிலாளர் துறை அலுவ லர்கள் ஆய்வு செய்ய முடியாது. ஏனெனில் அவ்வாறு முன் அறிவிப்பு செய்யாமல் திடீரென்று நுழைந்து தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதை “இன்ஸ்பெக்டர் ராஜ்” என்று மோடி சாடியுள்ளார். அத்தகைய முறையைத் தடை செய்து சட்டமும் கொண்டு வரப் போகிறார்.

டாஸ்மாக் கடைகளைத் திறந்த பிறகு குடிகாரர்கள் அதிகமாகிக் குடும்பங்கள் சீரழிவதும், மனிதர்கள் சாவதும், கொலைகள் நடப்பதும் கூடியிருப்பது போல், விபச்சாரத்தை சட்டப்படியானதாய் ஆக்கினால், பெண் கள் விலைப் பண்டமாய் மாறுவதும் நோய்கள் பரவு வதும் அதிகமாகும். பண்பாட்டுச் சீரழிவும் கூடுத லாகும்.

பா.ச.க. தலைவர்களில் ஒருவரான லலிதா குமார மங்கலம் சொல்லாமல் மறைத்த காரணம், பன்னாட்டு நிறுவனங்களின் பிரிக்க முடியாத பண்பாடான விபச்சாரத் தொழிலை இந்தியாவில் இன்னும் தடை செய்து வைத்திருந்தால் வெளிநாட்டு முதலாளிகளை யும் பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளையும் பெண் பொறுக்கிகளையும் எப்படிக் கவர்ந்திழுக்க முடியும் என்பதுதான்! விபச்சார விடுதிகளைத் திறந்து வெளிநாட்டு நிறுவனங்களை இழுக்கும் செயலுக்கு நம் ஊரில் வேறொரு மரபுத் தொடர் வைத்திருக்கிறார்கள்.

பா.ச.க.வின் இந்துத்துவா பண்பாட்டின் யோக்கிதை இதுதான்!

விபச்சாரத்தை சட்டப்படியான தொழிலாக்கக் கூடாது. விபச்சாரம் தேவைப்படாத அரசியல், பொருளியல் கொள்கை மாற்றம் தேவை. பண்பாட்டுப் பயிற்சியும் மனவளர்ச்சியும் மக்களிடம் உருவாக்க வேண்டும். இதுவே சரியான மாற்றுப் பாதை.

· சி.பி.எம் கட்சி நடுவண் குழு, இந்துத்துவா மதவாத ஆற்றல்களைத் தீவிரமாக எதிர்க்கப் போவ தாகக் கூறியுள்ளதே?

இந்துத்துவாவின் கால்கள் இந்து மதவெறி, ஆரிய இனவெறி - பார்ப்பனிய வர்ணாசிரம வெறி ஆகியவற் றில் காலூன்றி, இந்திய நாட்டு - பன்னாட்டுப் பெருமுத லாளிகளோடும் உலகமயத்தோடும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறது. இது மிகவும் மாறுபட்ட ஒரு கோட்பாடும் நடைமுறையுமாகும்.

இதனை வெகுமக்களின் நுகர்வுக் கேற்ப வழங்கி இந்தியாவில் மக்கள் திரள் ஆற்றலாக வளர்ந்திருக் கிறது பா.ச.க. இந்துத்துவா என்பது தன்னல வர்க்கக் குழுவின் கொள்கையாக குறுகி நிற்கவில்லை.

சி.பி.எம். தலைமை இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தனது பார்ப்பனியச் சார்பைக் கைவிட வேண்டும். அதன்பிறகு அது இந்துத்துவாவை எதிர்த்தால் பயனளிக்கும்.

இந்துத்துவா எதிர்ப்பு என்ற பெயரில் அதன் இன்னொரு மென்மையான வடிவமான காங்கிரசை சி.பி. எம். ஆதரிப்பதில் போய் முடியக்கூடாது. பொறுத் திருந்து பார்ப்போம்.

· இராசபட்சேவுக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று சுப்பிரமணியசாமி கோரிக்கை வைத்துள்ளார். பா.ச.க.வுக்கு இதில் உடன்பாடு உண்டா? தங்கள் கருத்து என்ன?

தமிழினப் படுகொலைக் குற்றவாளி இராசபட் சேவுக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியசாமி கடிதம் எழுதியுள்ளதாக அவரே கூறியுள்ளார்.

தமிழினத்தின் ஒரு பகுதியை அழித்து எஞ்சியுள்ள தமிழர்களை அச்சுறுத்தி இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் கட்டுப்பட்ட இரண்டாம்தர குடிமக்களாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மன்மோகன்சிங், சோனியா காந்தி, நரேந்திர மோடி, இராசபட்சே ஆகியோருக்கு ஒரு பொதுத் திட்டமாகும். அவர்களின் வெளியிடப்படாத உள்ளக்கிடக்கையைத்தான் சுப்பிர மணியசாமி ஒளிவு மறைவின்றி பகிரங்கப்படுத்தியுள் ளார். எனவே சுப்பிரமணியசாமி என்ற ஒரு பொறுக் கித் தரகனை கண்டனம் செய்வது மட்டும் போதாது.

இந்திய அரசுக்கானப் போரைத்தான் விடுதலைப் புலிகளை எதிர்த்து இலங்கையில் நடத்தினேன் என்று இராசபட்சே இலங்கை நாடாளுமன்றத்தில் 2009இல் அறிவித்தார். அதற்கு அப்போதைய காங்கிரசு அரசு மறுப்புத் தெரிவிக்கவில்லை. பா.ச.க உள்ளிட்ட வலதுசாரி, இடதுசாரி அனைத்திந்திய கட்சிகள் இராச பட்சேயின் அக்கூற்றுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

இதிலிருந்தே இந்திய அரசு மற்றும் அனைத்திந்திய கட்சிகளின் மனத்திற்குள் இருக்கும் தமிழினப் பகை அரசியல் நன்கு தெரியவருகிறது.

அன்மையில் இலங்கை அரசு தனது வெளியுறவுக் கொள்கை தொடர்பாக நடத்திய பன்னாட்டு கருத்தரங் கிற்கு பா.ச.க. சார்பில் சுப்பிரமணியசாமி கலந்து கொண்டார். அங்கு சென்ற சுப்பிரமணியசாமி இராச பட்சேயிடம் நான்தான் படகுகளை விடவேண்டாம் மீனவர்களை விடுதலை செய்யுங்கள் என்று கூறினேன் என்றார். இந்திய ஆளும் வர்க்கத்தின் உண்மையான பிரதிநிதியாகவே சுப்பிரமணியசாமி பேசி வருகிறார்.

தமிழர்களின் உயிருக்கும் தொழிலுக்கும் தாயக உரிமைக்கும் ஆபத்தான சர்வதேச சதிகாரனாக உள்ள சுப்பிரமணிய சாமியை இந்தியா நாடு கடத்த வேண்டும். சுப்பிரமணிய சாமியை நாடுகடத்தாவிட்டால் இந்தியா தமிழ்நாட்டை விடுவித்து விடவேண்டும்.

· புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது போல் இந்திய அரசும் நீக்குமா?

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப் பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, 16.10.2014 அன்று லக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெய ரில், பல அமைப்புகள் உலக நாடுகளால் தடை செய்யப் பட்டன.

இதனைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட, இலங்கை - இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகங்கள், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளையும் ‘பயங்கரவாத அமைப்பு’ என முத்திரை குதித்தின.

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் உட்பட எந்த அயல் நாட்டிலும், புலிகள் ஆயுதம் தாங்கிய நடவடிக் கைகளில் ஈடுபட்டதில்லை என்ற போதிலும், இலங்கை மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகங் களின் அழுத்தங்களுக்கு ஏற்ப, அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடு தலைப்புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு, இத்தடை மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்ற இனக்கொலைப் போர், ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்று ஞாயப்படுத்தப்பட்டது. அதற்கு இந்தத் தடை உதவியாக இருந்தது.

2011ஆம் ஆண்டு சூன் மாதம் நேபிள்ஸ் நீதிமன்றம் புலிகள் மீதான் தடைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. அதே ஆண்டு, அக்டோபர் 11 அன்று, நெதர்லாந்து நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் “பயங்கரவாத அமைப்பு” அல்ல எனத் தீர்ப்பு வழங்கி யது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டு தொடுக் கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இப்போது விடுதலைப்புலிகள் மீதான தடை யானது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித் துள்ளது.

ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இந்தியாவின் கூற்றுகளைக் கொண்டுதான் இந்தத் தடைவிதிக்கப்பட்டது என்றும், வேறோரு நாட்டில் செயல்படும் இயக்கத்திற்கு உள்நாட்டில் ஆதாரங்கள் ஏதுமின்றி தடை விதிக்கப்பட்டிருப்பது வியப்பளிக் கிறது என்றும் கூறியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளரால் சுட்டுக் கொள்ளப்பட்ட செய்யது முகமது குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் ரூபாய் 5 இலட்சம் இழப்பீடு வழங்கி, அவரையும் இடைநீக்கம் செய்திருப்பது தகுந்த நடவடிக்கைதானே?

காவல் நிலையத்தில் வைத்து 14.10.2014 அன்று செய்யது முகமதுவை சுட்டுக் கொன்ற துணை ஆய்வாளர் காளிதாசு மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்திருந்தால் முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்களை பாராட்டியிருக்கலாம். காவல்துறையினருடன் மோதல் (என்கவுண்டர்) என்ற பெயரில் காவல்துறையினரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டால் அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென்று ஏற்கெனவே பல முறை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அந்தத் துணை ஆய்வாளரை இடைநீக்கம் செய்ததது மட்டும் போதாது. இப்பொழுது தமிழகக் குற்றவியல் புலனாய் வுத் துறை விசாரணைக்கு ஆணையிட்டுள் ளார் முதல்வர். இப்புலனாய்வு, காவல்துறையைக் காப்பாற்று வதாக நினைத்துக் கொண்டு குற்றமிழைத்த தனி நபரைக் காப்பாற்ற முயலக் கூடாது. செய்யது குடும்பத்திற்குக் குறைந்தது 10 இலட்ச ரூபாயாவது இழப்பீடாக வழங்க வேண்டும்.

Pin It