ராக்கிங் பழக்கம் விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த விளையாட்டு வினையாகி பல மாணவர்களை தற்கொலைக்கும் படுகொலைக்கும் இட்டுச் சென்றது.

அதன்பின்னரே, ராக்கிங் தடை செய்யப்பட்டது. இந்தத் தடையை அமல்படுத்தி மாணவர்களைக் காப்பதில் கல்லூரி நிர்வாகமும், அரசும் இதில் எந்தளவு முனைப்பு காட்டியது என்பதை ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் மௌன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதிலும் இந்த முறை சக மாணவியை ராக்கிங் செய்ததாக முதல் முறையாக ஒரு மாணவி கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யும் அளவுக்கு ஒரு மாணவி ராக்கிங் செய்தாரா என்ற அதிர்ச்சி எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு. அதைவிட பேரதிர்ச்சி என்ன வென்றால், இவரால் ராக்கிங் கொடுமைக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொண்டதுதான்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில், “விடுதியில் எனது அறைக்கு எதிர் அறையில் தங்கி. நான் படிக்கும் பிரிவில் 3–ம் ஆண்டு படிக்கும் கோட்டீஸ்வரி என்ற மாணவி என்னை அதிக அளவில் ராக்கிங் செய்து வந்தார். எனக்கு உடம்பு சரியில்லாத நேரங்களில் கூட என்னை அவர் ராக்கிங் செய்து வந்தார். என்னால் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசமாக ராக்கிங் செய்தார். இதனை நான் யாரிடமும் சொல்லாமல் எனது மனதுக்குள்ளேயே வைத்து வந்தேன். இதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை. எனவே, இந்த உலகை விட்டு போகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தாராம்.

மேற்கண்ட செய்தி நமக்கு உணர்த்தும் உண்மைகள் சுடுகின்றன.

ஒன்று, இயல்பிலேயே இரக்கக் குணம் கொண்டவர்கள் பெண்கள் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர், அதுவும் கருணையும், சமூகப் பொறுப்புணர்வும் கடைபிடிக்கப்பட வேண்டிய மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்த ஒரு மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவியை கொடூரமான முறையில் ராக்கிங் செய்துள்ளார்.

இரண்டு, மாணவர்களை பணம் கொழிக்கச் செய்யும் இயந்திரங்களாக பாவிக்கும் நம்முடைய நவீன கல்வி முறையும், சக மனிதன் மீது அன்பும் அக்கறையும் காட்ட மறுக்கும் மேற்கத்திய கலாசார தாக்கமுமே, இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாக இருக்க முடியும்.

தனி ஒரு மாணவி செய்த கொடூரத்துக்கு கல்வி முறையை ஏன் சாட வேண்டும் என்று இதை வாசிக்கும் யாருக்கும் ஐயம் ஏற்படலாம்.

இன்றைய சூழலில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சாதாரண சாமானியர்களால் கல்வி கற்பதற்கான சூழ்நிலை உள்ளதா?

குறிப்பாக, தற்கொலை செய்து கொண்ட மாணவி, தனக்கு நேர்ந்த ராக்கிங் கொடுமை குறித்து பல முறை புகார் அளித்தும் அந்தக் கல்லூரி நிர்வாகம் அப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக, மாணவியின் தந்தையே நேரில் வந்து புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.

நன்கொடை(!) பெற்றுக் கொண்டு மாணவர்களை சேர்ப்பதிலும், அவர்கள் படிக்கும் காலங்களில் கட்டணக் கொள்ளை ஈட்டுவதில் காட்டும் அக்கறையை அவர்களின் பாதுகாப்புக்கும், ஒழுக்கத்துக்கும் செலுத்தவில்லை என்பதுதானே இக் கல்லூரியின் அலட்சியப் போக்கு நமக்கு உணர்த்துகிறது. இவர்களின் அலட்சியம் ஒரு மாணவியை தற்கொலை செய்யவும், மற்றொரு மாணவியை குற்றவாளியாக சிறைக்கும் அல்லவா அனுப்பி இருக்கிறது.

அடுத்து, இச் சம்பவத்தில் மேற்கத்திய கலாசார தாக்கம் எங்கே வந்தது? உலக மயமாதல் நமக்கு வழங்கிய மிகப்பெரிய கொடை தகவல் தொழில்நுட்ப வசதி. இவ் வசதி ஒவ்வொரு மனிதனையும் சமூகத்தில் இருந்து பிரித்து தனித் தீவாக மாற்றி வருகிறது.

முகநூலில் நட்பு வேண்டுகோள் விடுக்கும் நம் இளைய தலைமறை, எதிரில் வரும் மனிதனை எதிரியாகவே பாவிக்கிறது என்பதை உற்று நோக்கினால் உணர முடியும். இத்தலைமறை இளைஞர்களின் ஒரு பிரதிநிதிதான், சக மாணவியை தோழியாகப் பாவிக்க முடியாமல் ஆபாசமாக ராக்கிங் செய்து அதன் பலனை சிறைக்குள் அறுவடை செய்து கொண்டிருக்கிறார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தியை பக்கம் பக்கமாக வெளியிட்டு வரும் நாளிதழ்கள், பத்திரிகைகளில் சில, அந்த மாணவியின் காதலன் யார்? என்பது வரைக்கும் தோண்டித் துருவி ஆராய்ந்து வாசகனுக்கு வழங்கி வருகிறது.

ஆனால் இப் பத்திரிகைகள் (தந்தி, தமிழ் இந்து உள்பட) அந்தக் கொடூரம் நிகழ்ந்த கல்லூரியின் பெயரை (போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி) ஒரு இடத்தில் கூட மறந்தும் குறிப்பிடவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

மனம் நொந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் அந்தரங்கத்தைத் அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தினாலும் படுத்துவோம்; அந்தக் கல்லூரியின் பெயரை வெளியிட்டு அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த மாட்டோம் என்பதில் ஜனநாயகத்தின் நான்காம் தூண்கள் காட்டும் அக்கறையை நினைத்தால் புல்லரிக்கத்தான் செய்கிறது.

ஏனெனில் இவர்களைப் பொறுத்த வரை அந்தக் கல்லூரி நிர்வாகம் வழக்கும் விளம்பரமும் அந்த விளம்பரங்களால் கிடைக்கும் வருமானமும் இறந்து போன மாணவிக்குக் கிடைக்க வேண்டிய நியாயத்தை விட உயர்வானது இல்லையா?

ஒரு மாணவியை தூக்கிடச் செய்துவிட்டது; இன்னொரு மாணவியை குற்றவாளியாக்கி சிறைக்குள் தள்ளிவிட்டது. இதுதான் நம் கல்விமுறையின் ஆகச் சிறந்த சாதனைகள்!!

Pin It