இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளி இராசபட்சே படுதோல்வி அடைந்தது வரவேற்கத்தக்கது. ஆனால், இத்தேர்தல் முடிவு தமிழீழத்தில் இராணுவ முற்றுகைக்குள் பணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு குடியியல் உரிமைகள்- அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மெய் நடப்பில் பெற்றுத் தருமா என்பது மிகப் பெரியக் கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில், வெற்றி பெற்றுக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மைத்ரி பால சிறிசேனா தமது தேர்தல் அறிக்கையிலும் தேர்தல் பரப்புரையிலும் வடக்கு - கிழக்கு மாநிலங்களிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் தமிழர்கள் அழிக்கப்பட்ட “போர்க் குற்றங்கள்” குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றம் அமைத்துள்ள பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்றும் இராசபட்சேயோ அல்லது அவரது குடும்பத்தையோ எந்த விசார ணைக்கும் உட்படுத்த மாட்டேன் என்றும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இராசபட்சேக்கும் சிறிசேனாவுக்கும் இடையிலான வாக்கு வேறுபாடு 4,49,072. இந்த வாக்குகள் முழுக்க முழுக்க தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாக்குகள் ஆகும். இதன் பொருள் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாக்களித்து சிறிசேனாவைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதுதான். சிங்களர்களின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்ற முறையில் தான், தமிழர்களுக்குச் செய்ய வேண்டியக் கடமைகள் பற்றி எந்த அறிவிப்பும் தேர்தல் காலத்தில் சிறிசேனா செய்யவில்லை.

அத்துடன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னை ஆதரிக்கிறது, ஆனால் நான் அக்கூட்டமைப்புக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை” என அவர் அறிவித்தார். யாழ்ப்பாணம் சென்று வாக்கு கேட்ட இராசபட்சேயும், போலியாக வேனும் தன்னைத் தமிழர்களின் நண்பன் என்று கூறிக் கொண்டால் சிங்களர்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனக் கருதி, ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்த பிசாசு என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

தமிழினத்திற்கு எதிரான சிங்கள இனவெறி என்பது, ஒரு காலத்தில் சிங்களத் தலைவர்களிடமிருந்து தோன்றியிருந்தாலும், இன்றைக்கு அது மிகப் பெரும் பான்மையான சிங்கள மக்களின் குருதியோடு கலந்த சிங்கள பௌத்த இனவெறிக் கொள்கையாகிவிட்டது. அங்கு, சிங்கள இனவெறிக்கு மாற்றாக, தமிழின மக்களும் சில குடியியல் உரிமைகளைப் பயன்படுத்து மாறு அனுமதிக்க வேண்டும் என்று எந்தத் தலைவராவது பேசினால், அவர் சிங்கள அரசியலில் தனிமைப் படுத்தப் படுவார். எனவே, இன்று சிங்கள இனவெறி என்பது மக்கள் மயமாகியுள்ள பாசிச இனவெறி யாகும்.

இச்சமூகச் சூழ்நிலையில், இலங் கையில் தமிழர்களுக்கான அரசியல் _ குடியியல் உரிமைகளைச் செயல் படுத்துவதற்கு எந்தத் தலைவரும் முன்வர மாட்டார். சிங்களர்களிடம் இராச பட்சேயைவிட கூடுதல் வாக்குப் பெறமுடியாத மைத்ரி பால சிறிசேனா தேர்தல் வெற்றியும் இதைத்தான் காட்டுகிறது. சிங்களர் களிடம் சிறிசேனா தோல்வி அடைந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

திரு. இரா. சம்பந்தன் தலைமை யிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. போன்றது. இந்தியாவிலிருந்து விடுதலை பெறுவதற்காகத் தனிநாடு கோரி கட்சி தொடங்கி, பின்னர் அதைக் கைவிட்டு இந்தியத் தேசிய வெறிக் கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி சேர்ந்து தமிழினத்தைத் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு அட மானம் வைத்த தி.மு.க.வின் வரலாற்றை நன்கு புரிந்து கொண்ட தமிழ் மக்கள், சம்பந்தன் தலைமை யிலான தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் போக்கையும் புரிந்து கொள்ள முடியும். அடுத்துவரும் தேர்தல்களில் ஏதாவதொரு சிங்களக் கட்சியுடன் சம்பந்தன் தேர்தல் கூட்டணி சேர்ந்தாலும் வியப்பதற்கில்லை.

இந்நிலையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு, தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கு குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைச் செயல் படுத்துவதற்கான வெளி, இப்பொழுதுள்ள சிங்களக் கட்சிகளாலோ குறிப்பாக சிறிசேனா ஆட்சியி னாலோ தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினாலோ கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

ஆனால், குடும்ப ஆட்சி நடத்திய கொடுங்கோலன் இராச பட்சே தோற்கடிக்கப்பட்டு புதிய கருத்துகள் விவாதத்திற்கு வந்தி ருக்கும் இந்தக் காலத்தில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள், தங்களுக்கான குடியியல் மற்றும் அரசியல் உரிமை களைப் பெற அறவழியில் போராடும் மக்கள்திரள் இயக்கம் ஒன்றைத் தொடங்க வேண்டிய தருணம் இது.

இராணுவத்தை வெளியேற்றக் கோருதல், இராணுவம் பறித்துக் கொண்ட நிலங்களைத் திரும்பத் தரக் கோருதல், தமிழ் மக்கள் கூட்டம் கூடவும் - அறவழியில் போ ராட்டம் நடத்தவும் உரிமை கோரு தல், ஐ. நா. புலனாய்வு மன்றத்தை இலங்கைக்குள் அனுமதிக்கக் கோருதல், தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளும் அதிகாரத்தைக் கோருதல் போன்றவற்றை உடனடிக் கோரிக்கைகளாக முன்வைத்து, பதவி - பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத தேர் தலில் போட்டியிடாத புதிய தலை மையின் கீழ் அறவழிப் போராட்டத் திற்கான மக்கள்திரள் அமைப்பைத் தமிழர்கள் உருவாக்க வேண்டும்.

சிறிதாகத் தொடங்கினாலும் தனது செயல்பாட்டின் மூலம் அது வளரும். பன்னாட்டுச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும். அதற்காக செய்ய வேண்டிய ஈகங்களையும் செய்தாக வேண்டும். இவ்வாறான ஓர் இயக்கம் தமிழீழத்தில் தோன்றி செயல்படாதவரை, தமிழ்நாட்டிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழீழ மக்களுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் நாம் எதிர்பார்க்கும் முழுப்பலனை அளிக்காது என்பது தான், கடந்த ஐந்தாண்டு கால பட்டறிவு!

எனவே, இவர் செய்வார் - அவர் செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், ஈழத் தமிழர்களில் அறிவாற்றலும் செயல் துடிப்பும் உள்ள இளைஞர்கள், ஆண்களும் பெண்களும் முன்வந்து, தங்களுக்கான அரசியல் உரிமைக்கான அறவழி இயக்கத்தைத் தொடங்குவதே சாலச் சிறந்தது.

 பொங்கல் விழா - தமிழர் புத்தாண்டு விழா வாழ்த்துகள்!

தமிழகப் பெருமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்! தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான பொது விழாக்களை உருவாக்கி, அதனை அனைவரும் கொண்டாடி களிப்பெய்துவது காலம்காலமாக இருந்துவரும் நிகழ்வாகும். அவ்வகையில் தமிழர்களுக்கான அறு வடைத் திருவிழாவாக ஒரு காலத்தில் உருவான விழாதான் பொங்கல் கொண்டாட்டம்.

புத்தரிசி கொண்டு பொங்கலிட்டு சூரியக் கடவுளுக்குப் படைத்தல் என்ற நிகழ்வு பொங்கல் விழாவில் இருந்தாலும், அது மட்டும் பொங்கல் விழாவன்று.

ஆங்கிலப் புத்தாண்டு என்பது கிறித்துப் பிறப்பை அடையாளமாகக் கொண்டது என்றாலும் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் எல்லோரும் கிறித்து வழிபாட்டை மையப்படுத்திக் கொள்வதில்லை. நடைமுறையில் கடைபிடிக்கப்படும் ஆண்டுக் கணக்கின் தொடக்கம் என்ற வகையில் சமயச் சார்பற்று அனைவரும் அந்நாளைக் கடைபிடிக்கும் பழக்கம் உருவாகியுள்ளது.

அதேபோல், தமிழர்களின் பொது விழாவாகக் கடைபிடிக்கத் தகுந்த கூறுகள் கூடுதலாக உள்ள ஒரே விழா பொங்கல் விழாதான். கேரளத்தில் இந்துப் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஓணம் பண்டிகை, மலையாள மக்களின் பொதுவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழா என்பது, தமிழறிஞர்களால் 1921ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தொடக்க விழாவாகவும் திருவள்ளுவர் நாளாகவும் முன்மொழியப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில், தீபாவளிக்கு ஊக்கத் தொகை (போனஸ்) வழங்குவதை மாற்றி, பொங்கலுக்கு வழங்கும் முறையைக் கொண்டு வர வேண்டும். ஆனால், அ.இ.அ.தி.மு.க. அரசோ, தி.மு.க. அரசு சட்டம் இயற்றிக் கொண்டு வந்த தை மாதம் தொடங்கும் திருவள்ளுவர் ஆண்டு முறையை நீக்கி, புராணக் கதைகள் கொண்ட சித்திரை சுழற்சி ஆண்டு முறையை சட்டமாக்கியுள்ளது. இதை, மறு ஆய்வு செய்து தமிழக அரசு மீண்டும் திருவள்ளுவர் ஆண்டு முறையை சட்டமாக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட கடவுள் வழிபாட்டோடு கட்டுப்படுத்தாமல், அனைத்து மதத்தினரும், அதே போல் கடவுள் மறுப் பாளர்களும் கடைபிடிக்கும் தமிழர் திருநாளாகப் பொங்கல் விழாவைத் தமிழர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

தமிழர்களின் சின்னமாக விளங்குவது காளை. ஆரியர்களின் சின்னமாக விளங்குவது குதிரை. குதிரையைக் கொடுமைப்படுத்தி சூதாட்டமாக நடைபெறும் குதிரைப் பந்தயத்தைத் தடை செய்யாமல், தமிழர்களின் ஏறுதழுவுதல் என்ற மாட்டு வேடிக்கையைத் தடை செய்திருப்பதில் தமிழர் - ஆரியர் இனப் பாகுபாடு இருக்கிறது. இந்தத் தடையை நீக்கி ஏறு தழுவுதலை (சல்லிக்கட்டு) மீண்டும் கொண்டு வரத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பொங்கல் விழா - தமிழ்ப் புத்தாண்டு விழா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது!

Pin It