metha patkar 600

மனித உரிமைப் போராளி மேதா பட்கர், காவிரிப்படுகையை நஞ்சாக்கும் மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஊக்கமளித்திடவும், கள ஆய்வு செய்யவும், கடந்த 08.02.2015 அன்று, தமிழகம் வந்தார்.

அன்று காலை 6 மணியளவில், சிதம்பரம் வந்த மேதா பட்கர் அவர்களை, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு. சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் திரளாக வரவேற்றனர். காலை உணவுக்குபின் தோழர் கு.சிவப்பிரகாசம் இல்லத்தில் மேதாபட்கர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மீத்தேன் திட்ட எதிர்ப்புத் திட்டம் பேரழிவுத் திட்டம் என்றும், அதை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு எங்கள் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப் பின் ஆதரவைத் தெரிவிக்கவே வந்ததாகவும் கூறினார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்களும், பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் தோழர் இலெனின் அவர்களும், பொங்கு தமிழ் அமைப்புத் தலைவர் மருத்துவர் பாரதிச் செல்வன் அவர்களும் சிதம்பரத்திலிருந்து மேதா பட்கர் அவர்களை அழைத்துச் சென்று, நாகை, திருவாரூர் மாவட்டங்களில், மீத்தேன் குழாய்ப் பதித்த இடங் களையும், மீத்தேனுக்காக ஓ.என்.ஜி.சி. குழாய்ப் பதித்த இடங்களையும் பார்வையிட்டனர்.

மாலை 6 மணிக்கு, தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு மேதா பட்கர் அவர்கள் வருகை தந்தார்கள். அங்கு, எழுப்பப்பட்டுள்ள ஈழத் தமிழர் இனப்படுகொலை மற்றும் ஈழ விடுதலைப் போர் குறித்த நினைவுச் சின்னங்களை, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் ஐயா. பழ.நெடுமாறன் அவர்கள் காண்பித்து, விளக்கினார்.

அதன்பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில், ஈழத் தமிழர்கள் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஈழத் தமிழர்கள் தங்களுக்குரிய உரிமையைப் பெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகளை சர்வதேசச் சமூகத்தினர் உருவாக்கித் தர வேண்டும் என்றும் கூறியபின், மீத்தேன் திட்டத்தை முற்றாகத் திரும்பப் பெற வேண்டும், அரசுத் திரும்பப் பெறவில்லை யென்றால் மக்கள் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அதன்பிறகு, திரு. பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடந்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன் வரவேற் புரையாற்றினார். திரு. பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையுரையாற்றினார். அதன்பிறகு, மேதா பட்கர் அவர்கள் எழுச்சியுரையாற்றினார். அரங்கு நிறைந்த கூட்டத்தில், அவர் ஆற்றிய எழுச்சி உரை எல்லோருக் கும் உரிய செய்திகளைத் தெரிவித்து, போராடுவதற்கான உந்து விசை அளித்தது.

”ஈழத்தில் தமிழர்களின் நிலத்தைப் பறித்துக் கொண்டதை எதிர்த்து, அதை மீட்க அங்கே போராடு கிறார்கள், அவர்களுக்கான இந்த நினைவரங்கத்தில் இந்தியாவில் உழவர்களின் நிலங்களைப் பறித்துக் கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்களையும் பெரு முதலாளிய நிறுவனங்களையும் அவர்களுக்கு சேவை செய்யும் இந்திய அரசையும் எதிர்த்துப் போராடு வதற்காக இந்தக் கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டி ருக்கிறோம்.

மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தி காவிரிப்படுகை மண்ணை நஞ்சாக்கியப் பிறகு, இந்த மண்டலத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு ஒப்படைக்கும்.

மோடி அரசின், வகுப்புவாதம் அதை எதிர்த்திட மதச்சார்பின்மைவாதம் ஆகியவற்றை நாம் பேசுவதைப் போல, அவருடைய மோசடியான வளர்ச்சிவாதம் பற்றியும் நாம் பேசியாக வேண்டும். மோடி அரசு சொல்லும் வளர்ச்சி என்பது, பெரு முதலாளிகளின் தொழில் வளர்ச்சிக்காக விவசாயிகளையும், விவசாயத்தையும் பலியிடுவதாகும். ஆனால், இந்தியாவில் வேளாண் வளர்ச்சிக்குத் துணை செய்யும் வகையில்தான் தொழில் வளர்ச்சி இருக்க வேண்டும்.

இப்பொழுது, மோடி அரசு பிரகடனப்படுத்தியுள்ள நில அபகரிப்புச் சட்டம் _ அதை நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்று அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அந்த நில அபகரிப்புச் சட்டம், அரசாங்கம் நாட்டின் தேவைக்காக நிலத்தைக் கையகப்படுத்தலாம், அதற்கு எந்தத் தடையும் கூடாது என்றிருந்ததை தனியார் துறை முதலாளிகளும், தங்குதடையின்றி விவசாயி களிடமிருந்து நிலத்தைப் பறித்துக் கொள்ளலாம் என்று மாற்றியுள்ளார்கள். இந்தச் சட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, பிப்ரவரி 24ஆம் நாள், தில்லியில் நடைபெறும் பேரணிக்கு நீங்கள் அனைவரும் வருக வருக என்று அழைக்கிறேன்!

மீத்தேன் திட்டத்தை கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி குழுமத்தின் மூலம் நிறைவேற்றினாலும், நாம் தடுத்து முறியடிக்க வேண்டும். ஓ.என்.ஜி.சி. மூலம் நிறை வேற்றினாலும், நாம் தடுத்து முறியடிக்க வேண்டும். அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வில்லையென்றால், நாம் மாபெரும் போராட்டம் நடத்துவோம். ஏற்கெனவே இதற்கானப் போராட் டத்தை இங்குள்ள தலைவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக் கிறார்கள். அந்தப் போராட்டத்தை மேலும் விரிவு படுத்துவோம். வலுப்படுத்துவோம்”

இவ்வாறு மேதா பட்கர் அவர்கள் பேசினார்கள்.

நிறைவில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆலோசகர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு நன்றி நவின்றார். மேடைநிகழ்ச்சிகளை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் ஒருங்கிணைத்தார்.

Pin It