nedumaran ki vekatraman

சென்னை வள்ளலார் நகர் - ஏழு கிணறு பகுதியில், திருவருட் பிரகாச வள்ளலார் நற்பணி மன்றம் சார்பில், தைப்பூச சோதி சரிசனப் பெருவிழாவும், வள்ளலார் அவர்கள் வாழ்ந்த வீட்டை அரசுடைமை யாக்கக் கோரும் பொதுக்கூட்டமும், 02.02.2015 அன்று சிறப்புற நடைபெற்றது.

பள்ளி மாணவர்களின் தொல் இசை நாட்டிய நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்நிகழ்வில், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த. வெள்ளையன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், ஓவியர் வீரசந்தானம், இயக்குநர்கள் வெ.சேகர், வ.கவுதமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நிகழ்வில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட் ராமன் பேசியதாவது :

“தைப்பூச நாளான இன்று, தமிழ்த்திரு வள்ளலார் அவர்கள் வாழ்ந்த இல்லத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கூட்டப்பட்டுள்ள, இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள நண்பர் களுக்கு, முதலில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு எந்தத் தளத்தில் பார்த்தாலும் வள்ளலாருடைய தேவை, எல்லாப் பக்கங்களிலும் வளர்ந்திருக்கிறது.

அறிவியல் அதிகமாக வளர்ந்துள்ளதாக சொல்லப்படுகின்ற இன்றைய கால கட்டத்தில், மனம் என்பதன் தேவை உணரப்பட்டு வருகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே தமிழினத்தில், தொல்காப்பியர் ஆறாவது அறிவு என்று பகுத்தறிவு என்பதைக் குறிப்பிடவில்லை. மனம் என்று தான் குறிப்பிட்டார். இது மிக ஆழமான செய்தி!

ஏனெனில், மனம் என்பது இணக்கப்படுத்தும். அறிவு என்பது போட்டிபோட வைக்கும். மனம் என்பதையும், அதுசார்ந்த அன்பு, கருணை ஆகியவற்றையும் இணைத்த ஒரு ஆயுதமாக நம்மிடம் வழங்கியவர் வள்ளலார் அவர்கள் ஆவார். இணக்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நியாயத்தின் பக்கம் நிற்கிற் ஆயுதம் அது! அதன் மிகப் பெரிய தேவை இன்று உணரப்பட்டு வருகின்றது. ஏனெனில், அன்பும், சமத்துவ நேசமும் அனைவரிடமும் தேவைப்படுகின்ற காலம் இது!

அவருடைய வழிபாட்டு முறையில், ஆன்மிக முறையில், சமத்துவத்தையும் பெண்களை ஒதுக்கி வைக்கும் அடிமைத்தனத்தையும் அவர் அடித்து நொறுக்கினார். பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட அந்த காலத்தில், நேரடியாக அவர்களை வழிபாட்டில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தியவர், வள்ளலார் அவர்கள். அது போல் சாதி பார்த்து, மதம் பார்த்து பலரும் ஒதுக்கி வைக்கப்பட்ட காலத்தில், எல்லோருக்கும் இடம் ஒதுக்கி, அன்பு செலுத்தியவர் வள்ளலார் அவர்கள்.

இன்றைக்கு, மதசார்பின்மை என்பதும் சமத்துவம் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் வெறும் பெயருக்குத்தான் இருக்கிறது. இருப்பினும், அந்தப் பெயரளவிலான மதசார்பின்மை என்பதும் சமத்துவம் என்பதை எடுத்துவிட வேண்டும் என்று கூச்சலிட்டு விவாதித்துக் கொண்டிருக்கும் காலத்தில், வள்ளலார் மிகவும் தேவைப்படுகிறார். ஏனெனில், மெய்யான மதசார்பின்மையையும், சமத்துவத்தையும் வலியுறுத்தி யவர் வள்ளலார்.

மதங்கள் நிறுவனமயமாகியும், சாதிய ஏற்றத் தாழ்வுகள் மேலிருந்து கீழ் எனவும் இறுகிய காலத்தில், பெண்களுக்கு வழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட காலத்தில், ஒரு சமத்துவமான நோக்கில் சிந்திக்கத் தொடங்கியவர் வள்ளலார். அவருடைய, சிந்தனைகள் இன்றும் தேவைப்படுகின்றன.

20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட, மறுமலர்ச்சி சிந்தனைகளின் பாய்ச்சலாக - ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தவர், வள்ளலார் அவர்கள். ஏனெனில், மதம் - சாதி என எவையெல்லாம் மக்களை பிளவு படுத்தினவோ, அதனையெல்லாம் நிராகரித்து, அருள் சார்ந்த - அன்பு சார்ந்த ஓர் உலகத்தை படைக்க விரும்பியவர், வள்ளலார்.

இன்றைக்கு, மனித நேயம் மட்டுமல்ல, உயிர்மநேயம் என்பதும் தேவைப்படுகிறது. பல தளங்களிலும் அது பேசப்படுகின்றது.

இந்த உலகம் என்பது மனிதர்களுக்காக மட்டும் அல்ல. “உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக” என்று, இயற்கையை ஒரு பயன்பாட்டுப் பொருளாக, நுகர்வுப் பொருளாகக் கருதி, அதனை பயன்படுத்தித் தூக்கியெறியும் பண்பாடு வளர்ந்துள்ள சூழலில், உயிர்ம நேயம் என்பது மிகவும் அவசியமானது. இயற்கையுடன் மோதுவது என்ற அறிவு உலகக் கோட்பாட்டை, இயற்கையுடன் ஒன்றிணைந்து - இணக்கப்படுத்தி வாழ்வது என ஆன்மிகக் கோட்பாட்டால் எதிர்கொண்டு, பாதை காட்டியவர் வள்ளலார் அவர்கள்.

இன்றைக்கு, புவி வெப்பமயமாதல் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பலரும், மீண்டும் இயற்கை வாழ்வியலுக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர். இதனை அன்றே உணர்ந்து, இயற்கை வாழ்வியல் என்பதை ஆன்மிகத் தளத்தில், உணர்த்தியவர் வள்ளலார்.

எனவேதான், பலதுறைகளிலும், இன்றைக்கு வள்ளலார் நமக்குத் தேவைப்படுகிறார்.

அவருடைய சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டும். அதற்கானக் குறியீடுகளாக உள்ள அவரது நினைவுச் சின்னங்கள், அவர் வாழ்ந்த இல்லங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஏனெனில், நாளை என்ன ஆகும் எனச் சொல்ல முடியாது. இந்த வடசென்னை பகுதியில்தான், அதிகளவில் மார்வாடிகள் படையெடுத்து வருகிறார் கள். தங்கச் சாலை முழுவதும் அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். நாளை, இந்தப் பகுதியும் அவர்கள் வசமானால் என்ன செய்வது? எனவே, இந்த ஏழுகிணறு பகுதியில் அமைந்துள்ள, வள்ளலார் அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த இல்லத்தை ஒர் அறக்கட்டளை ஏற்படுத்தி, அரசாங்கம் அரசுடைமையாக்கிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு, எங்களைப் போன்றவர்கள் உறுதியாக துணை நிற்போம். வள்ளலார் அவர்களுடைய சமத்துவ நோக்கில், நாம் எல்லோரையும் இணைத்துக் கொண்டு இதற்குச் செயல்படுவோம். இதற்கான, சட்ட வழிமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.

ஆன்மிகத் தளத்தில் இருப்பவர்கள், எங்களைப் போன்றவர்களையும், எங்களைப் போன்றவர்கள் ஆன்மிகத்தில் ஆரியத்திற்கு எதிராகப் போராடுபவர் களையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய காலமிது! எனவே, நாம் ஒருங்கிணைந்து செயல்படு வோம்!”

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

கூட்டத்தில், வள்ளலார் வழிபாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Pin It