புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் தலை மாணாக்கர் என்று சொல்வதற்குரிய தகுதியும் பெருமையும் பெற்றவர் பாவலர் முடியரசன். அவருடைய நினைவு நாள் 03.12.2014.

முடியரசனார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போலவே தமிழின உணர்ச்சி, ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சமூக சமத்துவம் உள்ளிட்ட இலக்குகளுடன் கவிதைகள் வழங்கிய மறுமலர்ச்சிப் படைப்பாளி ஆவார்.

பாரதிதாசன் அவர்களைப் போலவே தொடக்கத்தில் திராவிட இன அரசியல் பேசி பின்னர் தமிழினம், தமிழ்த் தேசியம் என்ற சரியான நிலைபாட்டுக்கு வந்தவர் முடியரசனார்.

முடியரசனார் அவர்களின் புகழ் ஓங்குக! தமிழர் நெஞ்சமெல்லாம் அவர் பாக்கள் நிறையட்டும்.

அவர் நினைவாக அவரது இரு பாக்கள் கீழே வழங்கப்படுகின்றன.

வாளேந்தி வாமகனே

எடுப்பு

கொம்பூது பொம்பூது மறவா - வந்த

கூடலர் ஒடிடச் சாடுவோம் என்றுநீ

                                                                (கொம்பூது)

தொடுப்பு

தெம்பெங்கே படர்மார்பில் திறலெஙகே தடந்தோளில்

திறம்பாடி மறம்பாடி நெஞ்சுக்குள் உரமேறக்

                                                                (கொம்பூது)

முடிப்பு

தமிழாலே ஒன்றானார் தமிழ்மாந்தர் என்றாலே

தலைதூக்க முடியாது தமிழ்நாட்டில் பகையாளர்

சுமையாக வாழாமல் சோற்றுக்கே சாகாமல்

சூடேற்றித் தோளேற்றித் தமிழா நீ வாவென்று

                                                                (கொம்பூது)

வந்தமொழி நாடாள வாய்த்த தமிழ் பீடேக

வாழ்வதிலே யாதுபலன் ? வாளேந்தி வாமகனே

எந்தமதம் எக்கட்சி என்றெதுவும் பாராமல்

எனதுதமிழ் எமதுதமிழ் என்றோடி வாவென்று

                                                                (கொம்பூது)

போருக்கு வா!

யாருக்கு நீயஞ்சிச் சாகிறாய் ? - மொழிப்

போருக்கு வா ! எங்குப் போகிறாய் ?

பாருக்குள் நீஇன்று மூத்தவன் - தமிழ்

வேருக்கு நீபுனல் வார்த்தவன்.

வீட்டுக்குத் தூணென நின்றனை - கனி

யாட்டுக்கு வாழ்வினைத் தந்தனை

நாட்டுக்கு யாரிங்குக் காவலோ ? - வட

நாட்டுக்கு நீயென்ன ஏவலோ ?

Pin It