தமிழகத்தில் நடக்கும் சிங்களக் குடியேற்றம் தமிழர் தாயகத்தை உருச்சிதைத்து வருவதை உணர்ந்து, அது பற்றி பேசி வரும் தமிழகத் தமிழர்கள் அதிலிருந்து தங்களுக்கான பாடத்தைக் கற்றுக் கொள்ளாதது கவலை தருகிறது.

அங்கு வடக்கு மாநிலம் - கிழக்கு மாநிலம் இரண்டும் சேர்ந்ததுதான் தமிழர் தாயகம் - தமிழீழம். ஆனால், கிழக்கு மாநிலத்தில் 35 விழுக்காடு அளவிற்கு சிங்களக் குடியேற்றம் நடந்துவிட்டதால், அக்கிழக்கு மாநிலத்தைத் தமிழர் தாயகம் என்ற நிலையி லிருந்து கழித்துப் பார்க்கும் பார்வை உருவாக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் சிக்கல் வடக்கு மாநிலச் சிக்கலாகக் குறுக்கப்படுகிறது.

இதிலிருந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன பாடம் கற்றுக் கொண்டார்கள்? அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் அயல் மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் புகுந்து, தனியார் துறை வேலைகளில் சேருகிறார்கள். தமிழகத்தில் உள்ள இந்திய அரசுத் துறைத் தொழிற்சாலைகள், தொடர்வண்டித் துறை, வருமானவரி - உற்பத்தி வரி போன்ற வரி வசூல் அலுவலகங்கள் எனப் பலவற்றிலும் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிகமாக வேலைக்குச் சேர்க்கப்படுகிறார்கள். இந்நிறுவனங்கள், திட்டமிட்டு மண்ணின் மக்களைப் புறக்கணிக்கின்றன. தகுதி இருந்தும், தமிழக இளைஞர்கள் வேலையின்றி வீதிகளில் அலைகிறார்கள்.

வெளியாரின் மிகை நுழைவால் ஏற்படும் இழப்புகள் இரண்டு.

ஒன்று, மண்ணின் மக்கள் தங்களுக்குரிய வேலை வாய்ப்புகளை அயலாரிடம் இழந்து வேலையில்லாத் திண்டாட்டத்திலும், வறுமையிலும் உழல்கிறார்கள். மற்றொன்று, தமிழர்களுக்குரிய தாயகமான தமிழ்நாடு கலப்பின மாநிலமாக மாற்றப்படுகிறது. கர்நாடகத்தில், சரோஜினி மகிசி ஆணையத்தின் பரிந்துரைகளைக் கறாராக செயல்படுத்தப் போவதாக காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். அங்கு, அரசுத் துறை மற்றும் தனியார் துறை வேலைகளில் 90 விழுக்காடு மண்ணின் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சரோஜினி மகிசி ஆணைய அறிக்கை கூறுகிறது. அங்கு, எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது கர்நாடகத்தின் விளை நிலங்களை வெளி மாநிலத்தவர்கள் வாங்குவதற்குத் தடைச் சட்டம் கொண்டு வந்தார்.

மராட்டியத்தில் வடமாநிலத்தவர் வேலை தேடி வரக்கூடாது என்று மக்கள் போராட்டம் நடக்கிறது. மத்தியப்பிரதேசத்தின் பா.ச.க. முதல்வர் பீகாரிகள் உள்ளே வரக் கூடாது என்கிறார். அண்மையில் நடந்த அரியானா தேர்தலுக்கான காங்கிரசு அறிக்கையில் அரசுத் துறையில், அரியானாவாசிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், தனியார் துறையில் 50 விழுக்காடு வேலை அரியானாவாசிகளுக்கே ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் கேமரூன், இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து அயல் இனத்தவர்கள் வேலை தேடி பிரித்தானியாவுக்குள் வரக்கூடாது என்றும், அப்படி வந்துவிட்டவர்களுக்குப் பிரித்தானியக் குடிமக்களுக்குரிய எந்த சலுகையும் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளார். அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் நாடுகளி லிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைகிறவர்களை தடுக்கவில்லையெனில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தே பிரித்தானியா விலகிவிடும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.

தமிழர்களே, தமிழ்நாட்டின் நிலையை எண்ணிப் பாருங்கள்! திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், தமிழ்நாடு திறந்தவீடாக, வெளியாரின் வேட்டைக்காடாக உள்ளது. இந்தியத் தேசியம் பேசுவோரும், பிரித்தானியா போன்ற பல்லினச் சனநாயகம் (Cosmopliton democracy) பேசும் நாடுகளும், தன் தன் இனத்தின் தற்காப்புக்கு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாருங்கள்!

தமிழினத் தற்காப்பிற்காகத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் இப்போது, இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தவுள்ளது.

1. இந்திய அரசே, தமிழகத்தில் உள்ள நடுவண் அரசுத் தொழிலகங்களில், அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலைகளைத் தமிழக மக்களுக்கே ஒதுக்கு! அவற்றில், 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்றி, அந்த இடங்களில் தமிழர்களுக்கு வேலை கொடு!

2. தமிழக அரசே, தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுத்துறை, தனியார் துறைத் தொழிலகங்களில், அலுவலகங்களில் மண்ணின் மக்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்குவதற்குரிய சட்டம் இயற்று!

தமிழர்களே! இக்கோரிக்கைகளை முன்வைத்து, 12.12.2014 - வெள்ளி அன்று காலை 10 மணிக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சென்னை நடுவண் (சென்ட்ரல்) நிலையத்தில் மாபெரும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தவுள்ளது. இனத்தற்காப்பு உணர்ச்சியோடு, தமிழினத் தற்காப்பு ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் சென்னை மறியலுக்குத் திரளுங்கள்! 

Pin It