இவ்வளவு பெருமளவில் சமத்துவமின்மை நிறைந்த அமைப்பு எப்படி நிலைத்து நீடிக்க முடிந்தது என்று வியப்படைவோர் பலர் இருப்பார்கள். அதற்கு ஆதரவாக உள்ள சக்திகள் என்ன? இந்த அமைப்பைக் காப்பாற்றும் சக்திகளில் மிக முக்கியமானது, இதை எப்படியாவது பாதுகாத்து வைக்கவேண்டும் என்பதில் இந்துக்கள் கொண்டுள்ள உறுதியாகும். தீண்டாதவர்கள் இந்த அமைப்பை மிகச் சிறிதளவேனும் மாற்றுவதற்கு எப்போது முயற்சி செய்தாலும் இந்துக்கள் அதை ஒடுக்குவதற்கு எல்லா வழிகளையும் பின்பற்றத் தயாராக உள்ளனர்.

ambedkar 259சாதாரணமாக அஹிம்சையைப் பின்பற்றும் இந்து, தீண்டாதவர்களுக்கெதிராக மிகக் கொடுமையான வன்முறையைப் பின்பற்றத் தயங்கமாட்டார். நிறுவப்பட்ட அமைப்பைப் பாதுகாப்பதற்கு அவர்களுக்கெதிராக எந்தக் கொடுமையையும் அவர் இழைப்பார். பலர் இதை உண்மையில் நம்பமாட்டார்கள். ஆனால் இது உண்மை. இதைப்பற்றி ஏதேனும் சந்தேகம் கொள்ளக்கூடியவர்களுக்காக, தீண்டாதவர்கலுக்கெதிராக இந்துக்கள் செய்த கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் பற்றி அவ்வப்போது செய்தித் தாள்களில் வந்த சில சம்பவங்களைக் கீழே தருகிறேன்:

 I

பின்வரும் செய்தி தில்லியிலிருந்து வெளியாகும் ‘தேஜ்’ பத்திரிகையில் 1927 செப்டம்பர் 27 – ஆம் தேதி வெளியிடப்பட்டது;

“வைக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு மிக அருகில் ஹரிஜனங்கள் வந்ததன் மூலம் அதைத் தீட்டுப்படுத்திவிட்டார்கள். கோவிலில் மீண்டும் பூஜைகள் நடத்துவதற்கும் தகுதியாக அதைச் சுத்தப்படுத்துவதற்கு பெரும் செலவில் விரிவான அளவில் சாந்தி சடங்குகள் நடத்தவேண்டும் என்று அந்தப் பகுதியின் இந்துக்கள் முடிவுசெய்துள்ளனர்.”

 ‘பிரதாப்’ பத்திரிகையின் செய்தியாளர் தந்த பின்வரும் செய்தி 1932 செப்டம்பர் 2-ஆம் தேதி இதழில் வெளியிடப்பட்டது:

“மீரம், ஆகஸ்ட் 1932, ஜன்மாஷ்டமி தினத்தன்று சாதி இந்துக்களின் கோவிலுக்குள் நுழைய ஹரிஜனங்கள் சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் அதன் விளைவாகப் பரவலாகக் கலவரங்கள் நடந்ததைத் தவிர வேறு பலன் ஏதும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு தங்களுக்குக் கோவில் கதவுகள் திறந்துவிடப்படவில்லை என்றால் சத்தியாக்கிரகம் நடத்துவதென்று உள்ளூர் தலித் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்துக்கள் இதை அறிந்தபோது அவர்கள் ஹரிஜனங்களின் முயற்சியை முறியடிப்பதற்குத் திட்டமிடத் தொடங்கினார்கள்.

கடைசியாக ஜன்மாஷ்டமியன்று இரவில் ஹரிஜன சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து கோவிலில் உள்ள கடவுள்களுக்கு அருகே செல்ல முயற்சி செய்தார்கள். ஆனால், கோவில் புரோகிதர்கள் அவர்களை உள்ளேவிட மறுத்தார்கள். “நீங்கள் வெளியே தெருவில் நின்று கொண்டு சுவாமிகளைத் தரிசிக்கலாம்,” என்று அவர்கள் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து அங்கே ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஹரிஜனங்கள் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்தார்கள். இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டு பெரிய அடிதடியாகிவிட்டது.”

 இந்துக்கள் தங்களுடைய ஆலயங்களில் தீண்டாதவர்கள் நுழைய அனுமதிப்பதில்லை. தீண்டாதவர்கள் தங்களுக்குச் சொந்தமாகக் கோவில்கள் அமைத்துக்கொண்டு அவற்றில் கடவுள்களின் உருவங்களை நிறுவிக்கொள்ள இந்துக்கள் அனுமதிப்பார்கள் என்று நினைக்கக்கூடும். ஆனால், இது தவறாகும். இந்துக்கள் இதையும் அனுமதிப்பதில்லை. இதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களைக் காட்டுவது போதுமானதாகும். ஒன்று, 1923 பிப்ரவரி 12 – ஆம் தேதி ‘பிரதாப்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டது:

“ஆக்ரா மாவட்டத்தில் ஒரு பிராமணர் தமது இல்லத்தில் விஷ்ணுவின் உருவம் ஒன்றை வைத்துப் பூஜை செய்வதைக் கண்ட சமார் ஒருவர் தாமும் அதேபோல் செய்யத்தொடங்கினார். அந்தப் பிராமணருக்கு இது தெரிய வந்தபோது அவர் மிகவும் கோபமடைந்தார். கிராமவாசிகள் பலரின் உதவியுடன் அந்த அப்பாவி ஹரிஜனைப் பிடித்து ‘விஷ்ணு பகவானைப் பிரீதி செய்ய முயலுவதற்கு உனக்கு என்ன துணிச்சல்?’ என்று கூறி அவருக்கு நன்றாக அடிகொடுத்தார். கடைசியாக, அவர்கள் அவரது வாயில் அசுத்தத்தை வைத்து அடைத்து அவரைப் போகவிட்டார்கள். கொடுமைகளைத் தாங்கமுடியாத அந்தச் சமார், இந்து சமயத்தைக் கைவிட்டு இஸ்லாமைத் தழுவினார்.”

மற்றொரு சம்பவம் 1939 ஜுலை 4 – ஆம் தேதி “ஹிந்து” பத்திரிகையில் வெளியிடப்பட்டது:

“பெல்லாரி மாவட்ட ஹரிஜன் ஆலோசனை வாரியத்தின் கூட்டம் 1939 ஜுன் 29 – ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவரின் பங்களாவில் நடைபெற்றது. கமிட்டியின் தலைவரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திரு. ஏ.டி. குரோம்பி, சி.ஐ.அ., ரு.சி.எஸ். தலைமை தாங்கினார்.

நாராயணதேவரகேரியைச் சேர்ந்த ஹரிஜனங்கள், தாங்கள் கட்டாயமாக வேலை செய்யவைக்கப்படுவதாகவும், லேவாதேவிக்காரர்களால் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கூறியுள்ள புகார்கள் உள்ளிட்ட எல்லாப் புகார்கள் பற்றியும் நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரப்பூர்வ அறிக்கை கோருவதென்று கமிட்டி முடிவுசெய்தது.

குடத்தினி கிராமத்தில் வசிக்கும் ஹரிஜனங்களுக்கு ஏற்படும் சமயரீதியான இடர்ப்பாடுகள் கமிட்டியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. ஹரிஜனங்கள் தங்கள் குடியிருப்பில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கோவில் கட்டியிருப்பதாகவும், அதில் நிறுவுவதற்குக் கடவுள் சிலை கோவிலில் தயாராக இருந்தும்கூட அதை நிறுவமுடியவில்லை என்றும் கூறப்பட்டது. சிலையை நிறுவுவதற்குமுன் ஹரிஜனங்கள் அதைக் கிராமத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு இந்துக்களில் ஒரு சாரார் எதிர்ப்புக் தெரிவிப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.”

 II

இந்துக்களின் கிணற்றிலிருந்து தீண்டாதவர்கள் தண்ணீர் எடுப்பதற்குச் செய்யும் முயற்சி எதையும் இந்துக்கள் எப்படி எதிர்க்கிறார்கள் என்பதைப் பின்வரும் சம்பவங்களிலிருந்து காணலாம். முதல் சம்பவம் 1923 பிப்ரவரி 12 – ஆம் தேதி ‘பிரதாப்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டது:

“மகாஷ்ய சேதிலால்ஜி பின்வரும் செய்தியை அனுப்பியிருக்கிறார் சமார் ஒருவர், கடவுள் சிலையை வழிபடச் சென்று கொண்டிருந்த போது வழியில் அவருக்குத் தாகம் ஏற்பட்டது. அவர் தம்மிடமிருந்த இரும்பு வாளியை ஒரு கிணற்றில் போட்டுத் தண்ணீர் எடுத்தார். அதைப் பார்த்த உயர் சாதி இந்து ஒருவர் அவரைத் திட்டினார். பின்பு அவருக்கு நன்றாக அடிகொடுத்து ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டார்கள். தற்செயலாக அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த நான் அவரை ஏன் பூட்டி வைத்திருக்கிறார்கள் என்று கேட்டேன். அவர் எங்கள் கிணற்றில் தம்முடைய வாளியைப் போட்டுத் தண்ணீர் எடுத்து மதத்தை அவமதித்தார் என்று திவான்சாகிப் பதிலளித்தார்.”

இந்துக்களின் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கத் துணியும் தீண்டாதார்மீது இந்துக்கள் நடத்தும் தாக்குதலில் இந்துப் பெண்களும் கலந்து கொள்ளத் தயங்கமாட்டார்கள். ‘பிரதாப்’ பத்திரிகையில் 1932 பிப்ரவரி 26 – ஆம் தேதி வெளியான பின்வரும் செய்தியைப் பாருங்கள்:

“1932 பிப்ரவரி 17 – ஆம் தேதி புல் பஜ்வான் கிராமத்தில் மிகவும் சோகமான ஒரு சம்பவம் நடந்தது. மகாஷய ராம்லால் ஒரு கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது இது நடந்தது. அதே கிணற்றில்தான் 1932 ஜனவரி 13 – ஆம் தேதி மகாஷய ராம்லாலையும் அவரது நண்பர் பண்டிட் பன்சிலாலையும் சில ராஜபுத்திரர்கள் அடித்திருந்தார்கள். அந்தச் சம்பவத்தின் போது ராஜபுத்திரப் பெண்களின் கூட்டம் ஒன்று கழிகளையும் குச்சிகளையும் எடுத்துக் கொண்டு வந்து மகாஷயாவுக்குக் கொடுத்த அடியை வர்ணிக்க முடியாது. அவர்கள் அடித்து முடித்தபோது அவரது உடம்பெல்லாம் ரத்தமாகியிருந்தது. இப்போது அவர் புக்லியான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.”

கிணற்றிலிருந்து தீண்டாதவர்கள் தண்ணீர் எடுப்பதற்கு உள்ள உரிமையைப் பயன்படுத்துவதற்கு அரசு அதிகாரி ஒருவர் ஆதரவாக இருந்தால் கூட அவர்கள் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்பது பின்வரும் சம்பவத்திலிருந்து தெளிவாகிறது. ‘மிலாப்’ பத்திரிகையில் 1924 ஜுன் 7 – ஆம் தேதி வெளியான செய்தி:

“சில நாட்களுக்குமுன் கால்வாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சபா வட்டத்தில் உள்ள ராகியான் கிராமத்துக்குச் சென்றார். அவர், ஒரு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதில் உதவும்படி, மேகா சாதியைச் சேர்ந்த தீண்டாதவர்கள் சிலருக்கு உத்தரவிட்டார். முதலில் அவர்கள் மறுத்தார்கள். ஆனால் அந்த அதிகாரி அவர்களைக் கடுமையாகக் கண்டித்து, தண்ணீர் இறைக்குமாறு கட்டாயப்படுத்தினார். மறுநாள் இந்துக்கள் அந்தக் கிணற்றினருகே கூடி, ஒரு சௌக்கிதார் மூலம் அந்த மேகாக்களைக் கூப்பிட்டனுப்பினார்கள்.

கிணற்றின் அருகே செல்வதற்கு அவர்கள் ஏன் துணிந்தார்கள் என்று இந்துக்கள் கேட்டார்கள். அவ்வாறு செய்யும்படித்தாங்கள் கட்டாயப் படுத்தப்பட்டதாகவும், அது தங்களுடைய குற்றம் அல்ல என்றும் ஒரு மேகா கூறினார். இப்படி எதிர்த்துப் பதில் கூறியதற்காக இந்துக்கள் அவரைக் கம்புகளாலும் கைகளாலும் அடித்து நொறுக்கினார்கள். இதை எழுதுகின்ற நேரம் வரையிலும் அவர் நினைவிழந்துகிடக்கிறார். காயங்கள் இலேசானவைதான் என்று டாக்டர் கூறினார் என்றாலும் கொலை முயற்சி, சட்ட விரோதக் கூட்டம் ஆகிய குற்றங்களைக் குறிப்பிட்டு காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் காவல் துறையினர் இந்தப் புகாரைப் பொருட்படுத்தவில்லை. காவல் துறையினரின் அலட்சியப் போக்கு மேகா மக்களிடையே மிகுந்த பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கிராமவாசிகளும் மேகா மக்களை மிகவும் தொல்லைகளுக்கு உள்ளாக்கி வருகிறார்கள். அவர்களுடைய கால்நடைகளைக்கூடத் தண்ணீர் குடிக்கவிடாமல் எல்லாக் கிணறுகளையும் குளங்களையும் அடைத்துவைத்துள்ளனர்.”

தீண்டாதவர்கள் இந்துக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது என்பது மட்டுமல்ல. அவர்கள் தங்களுக்கெனச் செங்கல் சுவர் கொண்ட கிணற்றைக் கட்டிக் கொள்வதற்குப் பணம் இருந்தாலும் கூட, அத்தகைய கிணற்றைக் கட்டிக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்வது தீண்டாதவர்கள் தங்களை இந்துக்களின் நிலைக்கு உயர்த்தும் முயற்சியாகக் கருதப்பட்டது. இது நிலைநிறுத்தப்பட்ட அமைப்பு முறைக்கு முரணானதாகும்.

1934 ஜுன் 6 – ஆம் தேதி “மிலாப்” பத்திரிகை பின்வரும் நிகழ்ச்சிகள் பற்றி செய்தி வெளியிட்டது.

“லாலா ராம்பிரசாத்ஜி,” செயலாளர், அச்சூத் உதாரக் கமிட்டி, பஞ்சாப், பின்வருமாறு எழுதுகிறார்:

”இந்தக் கோடை காலத்தின் போது தண்ணீர் கிடைப்பது பெரிய பிரச்சினையாகி வருகிறாது என்று எல்லா இடங்களிலுமிருந்து புகார்கள் வருகின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் தங்களுக்கென்று சொந்தமான கிணறு இல்லாததால், கைகளில் பானைகளை வைத்துக் கொண்டு கிணறுகளின் அருகே உட்கார்ந்திருக்கிறார்கள். யாரேனும் மனமிரங்கிக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினால் நல்லது; இல்லையென்றால் வேறொன்றும் செய்யமுடியாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். சில இடங்களில் இவர்கள் காசு கொடுத்தால்கூட யாரும் தண்ணீர் ஊற்ற அனுமதிக்கப்படுவதில்லை. யாரேனும் ஊற்றினால் கடும் சண்டை ஏற்படுகிறது. கிராமக் கிணற்றை இவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தடுக்கப்படுவது மட்டுமின்றி, தங்களுடைய சொந்தப் பணத்தைச் செலவிட்டுத் தங்களுக்கென கிணறு அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவதில்லை.”

 1924 ஏப்ரல் 21 – ஆம் தேதி “தேஜ்” பத்திரிகையில் வெளியான பின்வரும் செய்தியும் இதைப் போன்றதே:

“ஓபட் கிராமத்தில் சமார் மக்கள் சுமார் 250 பேர் இருக்கிறார்கள். ஒன்றரை மாதத்திற்கு முன் அவர்கள் முஸ்லிம் தண்ணீர் தூக்கிகளின் தோல் பைகளிலிருந்து தண்ணீர் குடிப்பதை (ஆர்ய சமாஜ் பண்டிதர்களின் யோசனை காரணமாக?) நிறுத்திவிட்டார்கள். இப்போது அவர்களுக்குத் தண்ணீர் கிடைப்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. கிராமத்தின் ஜாட் மக்கள் கிராமக் கிணற்றிலிருந்து சமார்கள் தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. அது மட்டுமின்றி அவர்கள் தாங்களே சொந்தமாகக் கிணறு அமைத்துக் கொள்ளவும் அனுமதிப்பதில்லை. பரிதாபத்துக்குரிய சமார்கள் குளங்களிலும் பள்ளங்களிலும் கிடைக்கும் தண்ணீரைக் குடித்து உயிர்வாழ்கிறார்கள்.

நேற்று, தலித் சுதார் (ஹரிஜன முன்னேற்ற) கமிட்டியின் செயலாளர் டாக்டர் சுக்தேவ்ஜி உபாடுக்கு வந்து விசாரணை நடத்தினார், அவர் எல்லாவற்றையும் தமது கண்களாலேயே பார்த்தார். சமார்களின் நிலைமை வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு மிகவும் பரிதாபமாக இருப்பதையும், ஜாட்கள் அவர்களைக் கொடுமைப்படுத்துவது கண்ணெதிரே காணும் உண்மையாக இருப்பதையும் அவர் கண்டார்.”

 பின்வரும் செய்தி “டைம்ஸ் ஆப் இண்டியா” வில் 1931 மே 9 – ஆம் தேதி வெளியாகியிருந்தது:

“பரோடா சமஸ்தானத்தில், அண்டையில் உள்ள பிரிட்டிஷ் பிரதேசத்தில் உள்ளதைவிடத் தீண்டாதவர்கள் நல்ல முறையில் நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது. அந்த சமஸ்தானம் அந்த்யஜாக்களுக்கு சாதி மக்களுடன் சமத்துவம் அளித்து சட்டம் இயற்றியுள்ளது. ஆயினும் பத்ராஸ்தாலுகாவில் ஒரு அந்த்யஜா பெண்ணின் வயலில் உள்ள பயிர் தீயிட்டு எரிக்கப்பட்டது; அந்தப் பெண்ணும் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார். இதற்கெல்லாம் காரணம் அந்தப் பெண் தன்னுடைய மகனான சிறு பையனை உள்ளூர்த் தொடக்கப் பள்ளிக்கு அனுப்பியதேயாகும். இனி, காடி பகுதியைச் சேர்ந்த சனாஸ்மாவிலிருந்து ஒரு துயரக்கதை. அங்கு அந்த்யஜாக்களின் உழைப்பினால் ஒரு ஊற்றுக்கிணறு தோண்டப்பட்டு கட்டப்பட்டது. அவர்கள் அந்தக் கிணற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வாக்களிக்கப்பட்டது.

ஆனால் கிணறு பயன்படுத்தத் தயாரானதும் அது அவர்களுக்கல்ல என்று கூறப்பட்டது. அவர்கள் பஞ்சாயத்தாரிடம் புகார் செய்தார்கள். அவர்கள் 500 அடி நீளக் குழாய் ஒன்றைப் போட்டு அதன் முடிவில் தங்களுக்கென்று தனியாக தண்ணீர் பிடிக்கும் குழாய் பொருத்திக் கொள்ளலாம் என்று அவர் தாராளமனத்துடன் அனுமதித்தார். ஆனால் தண்ணீர்க்குழாய் அமைந்த இடத்துக்குத் திடீரென எதிர்பாராத சொந்தக்காரர் ஒருவர் முளைத்தார். எனவே குழாய்ப்பாதை மாற்றப்பட்டு உள்ளூர்க் குளத்துக்கருகே கொண்டு செல்லப்பட்டது. ஆனால், இது அந்தக் குளத்தையும், அதில் துவைக்கப்படும் அழுக்குத் துணிகளையும் தீட்டாக்குவதாகி விட்டது. எனவே தண்ணீர் எடுக்கும் குழாயின் இடம் மாற்றப்பட்டது.

ஆனால் இத்தோடு தொல்லை முடிந்துவிட்டதா? இல்லை. கோபமடைந்த சாதி மக்கள் குழாய்ப் பாதையைப் பலமுறை வெட்டிவிட்டார்கள். அந்த்யஜாக்கள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள். தீண்டாதவர்கள் தங்களுடைய சொந்த மதத்தினர் தங்களை நடத்தும்விதம் எவ்வளவுதூரம் திரு. காந்தியின் வார்த்தையில் சொன்னால் – “போதுமானது” என்று கருதவேண்டும்?”

திரு. சஞ்சனா “டைம்ஸ் ஆப் இந்தியா” வுக்கு 1928 நவம்பர் 7 – ஆம் தேதி எழுதிய கடிதத்தில், தண்ணீர் விஷயத்தில் தீண்டாதவர்களின் நிலைபற்றி 1927 – இல் திரு. டக்கர் கண்டதைப் பின்வருமாறு விவரிக்கிறார்;

“பல்சட் தாலுகாவில் ஒரு பங்கிப் பெண் ஒரு கிணற்றுக்கருகே இரக்கமுள்ள சில ‘மக்கள்’ தண்ணீர் கொடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் திரு. டாக்கர் பார்த்தார். அவள் காலையிலிருந்து நண்பகல் வரை காத்திருந்த பின்னும் யாரும் தண்ணீர் கொடுக்கவில்லை. ஆனால் பங்கிகளுக்குத் தண்ணீர் கொடுப்பதற்குச் செய்யும் ஏற்பாட்டில் மிக அருமையான ஆன்மிக உணர்வு வெளிப்படுவதைக் காணலாம்: தண்ணீரை அவர்களின் பானைகளில் நேரடியாக ஊற்றக்கூடாது – யாரேனும் அப்படிச் செய்தால் அவர்கள் தீட்டுப்பட்டுவிடுவார்கள். திரு. டக்கர் கூறுகிறார்: ‘ஒரு முறை எங்கள் ஆசிரியர் சுனிபாய் தம்முடைய வாளியிலிருந்து தண்ணீரை நேரடியாக ஒரு பங்கியின் பானையில் ஊற்றிவிட்டார். அதற்காக அவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். '

ஐயா, இம்மாதிரியான விஷயம் இங்கே கூடாது (சகிக்கப்படமாட்டாது)’. கிணற்றின் சரிவுக்குக் கீழே ஒரு தொட்டி கட்டப்படுகிறது. இரக்க உணர்வு மேலிடும் எவரும் அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றலாம். தொட்டியிலிருந்து ஒரு மூங்கில் குழாய் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். பங்கிப் பெண் தன் பானையை அந்தக் குழாயின் கீழே வைத்துத் தண்ணீர் பிடிக்க வேண்டும். பானை நிரம்புவதற்கு ஒரு மணிநேரம் ஆகலாம். இதற்குக் காரணம் என்ன என்று திரு. டக்கர் கூறுகிறார். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும் பெண்கள் தங்கள் வாளிகளில் அடியில் உள்ள வேண்டாத தண்ணீரைத் தான் தொட்டியில் ஊற்றுவார்கள்; அதுவும் கூட காத்திருக்கும் பங்கிப் பெண்ணின் மேல் இரக்கப்பட்டால்தான்.’”

 III

நிலைநிறுத்தப்பட்ட முறைமையின்கீழ், தீண்டாதவர்களுக்குக் கல்வி பெறும் உரிமை கிடையாது; அதிலும், கிராமப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு நிச்சயமாக உரிமை கிடையாது. இந்த விதிகளை மீறி நடக்கத் துணிந்த தீண்டாதவர்களை இந்துக்கள் கடுமையாகத் தண்டித்திருக்கிறார்கள். இத்தகைய எண்ணற்ற நிகழ்ச்சிகளில் ஒரு சில மட்டுமே கீழே தரப்படுகின்றன:

“ஒரு டகதஷயா ‘யங் இண்டியா’ வில் ஒரு கட்டுரை எழுதினார். சூரத் மாவட்டத்தில் சிசோத்ரி என்ற கிராமத்தைப் பற்றி அவர் அதில் கூறியிருந்தார். தேசிய இயக்கப் பாதையில் அந்தக் கிராமம் மிக விரைவாக முன்னேறி, நாடு முழுவதற்குமே ஒத்துழையாமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. இவ்வளவு நடந்த பின்பும் ஹரிஜனங்களைப் பற்றிப் பழைய தாழ்வான மனப்பான்மையே நீடித்தது. அந்தக் கிராமத்தின் தேசியவாதப் பள்ளிக்கூடத்தில் தேட் சாதிக் குழந்தை ஒருவன் வகுப்பின் ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்திருந்ததைத் தாம் பார்த்ததாக கட்டுரையை எழுதியவர் கூறுகிறார். அந்தக் குழந்தையின் தோற்றமே தான் தீண்டாதார் என்பதைப் பிரகடனம் செய்தது. அந்தப் பையனைத் தங்களுடன் சேர்ந்து உட்கார ஏன் அனுமதிக்கவில்லை என்று நான் மாணவர்களைக் கேட்டேன். ஹரிஜனப் பையன் மது அருந்துவதையும் மாமிசம் உண்பதையும் நிறுத்தினலன்றி அது முடியாது என்று அவர்கள் பதில் கூறினார்கள். அந்த ஹரிஜனப் பையன் உடனே தான் இவற்றை ஏற்கெனவே விட்டுவிட்டதாகச் சொன்னான். உயர்சாதி மாணவர்கள் இதற்கு ஒன்றும் சொல்லமுடியவில்லை.”

 1923 பிப்ரவரி 12 – ஆம் தேதி ‘பிரதாப்’ பத்திரிகையிலிருந்து:

“மகாஷயா சந்த்ராம்ஜி தெரிவிக்கிறார்: சமீபத்தில் பிராமண ஆசிரியர் ஒருவர் ஒரு கிராமத்தில் சமார் பையன்களுக்கான பள்ளிக்கூடத்துக்குச் சென்று பணிசெய்ய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். அவர் அங்கே சென்றபோது பிராமணர்கள், சத்திரியர்கள், மற்றவர்கள் அந்த ஆசிரியரைப் பகிஷ்காரம் செய்தார்கள். அவர்கள் கூறினார்கள்: “நீர் இங்கே சமார் பையன்களுக்குப் படிப்புக் கற்பித்து அவர்களை எங்களுடைய நிலைக்கு உயர்த்துவதற்காக வந்திருக்கிறீரோ?””

1924 ஏப்ரல் 11 – ஆம் தேதி ‘தேஜ்’ பத்திரிகையிலிருந்து:

“சுவாமி சிரத்தானந்தாஜி எழுதுகிறார்:

கத்சயாஸ் என்ற இடத்தில் உள்ள தேசியவாதிகளின் பள்ளி ஒன்றுக்கு நான் 1921 நவம்பரில் சென்றிருந்தேன். அந்தப் பள்ளியில் ஹரிஜன மாணவர்கள் எத்தனைபேர் படிக்கிறார்கள் என்று விசாரித்தேன். மூன்று பேர்தான் இருப்பதாகவும் அவர்கள் வகுப்புக்கு வெளியே வராந்தாவில் உட்கார்ந்து படிப்பதாகவும் கூறினார்கள். நான் அங்கே உரை நிகழ்த்திய போது நான் இந்த நடைமுறையை ஆட்சேபித்தேன். தேசிய வாதிகளின் பள்ளிக்கூடத்தில் அவர்கள் வகுப்பின் உள்ளே உட்கார அனுமதிக்க வேண்டும் என்று கூறினேன். பள்ளியின் மேலாளர் என்னுடைய அறிவுரைப்படி செய்தார். மறுநாள் பள்ளியின் எல்லா பெஞ்சுகளும் காலியாகக் கிடந்தன. இன்றுவரை அந்த தேசியப் பள்ளிக்கூடத்தின் கம்பீரமான கட்டிடம் பூட்டிப் பாழாகக் கிடக்கிறது.”

 1924 ஏப்ரல் 18 – ஆம் தேதியிட்ட ‘மிலாப்’ பத்திரிகையிலிருந்து:

“ஹோஷங்காபாதில் நடந்த ஒரு நிகழ்ச்சி. மாவட்ட சபை பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. பள்ளிகளில் ஹரிஜனக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. தலைமையாசிரியர்கள் இந்த உத்தரவுப்படி செயல்படத் தொடங்கினார்கள். ஒரு பள்ளியில் சில ஹரிஜனக் குழந்தைகள் சேர்க்கப்பட்டபோது கௌரவ மாஜிஸ்ட்ரேட்டுக்கு அது பிடிக்கவில்லை. அவர் தமது குழந்தைகளை அந்தப் பள்ளியிலிருந்து விலக்கிக் கொண்டார். மற்ற பெற்றோர்களும் அவ்வாறே செய்தார்கள். எல்லோருமாகச் சேர்ந்து பள்ளிக் கமிட்டியின் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். பள்ளியில் ஹரிஜனக் குழந்தைகளைச் சேர்த்துக் கல்வியளித்தால் அவர்களுடன் பழகும் பிராமணக் குழந்தைகள் தங்கள் பூணூலை மாற்றிவிடுகிறார்கள் என்றும் எனவே அந்தப் பள்ளிக் கமிட்டி ஹரிஜனக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.”

1932 ஏப்ரல் 3 – ஆம் தேதியிட்ட ‘பிரதாப்’ பத்திரிகையிலிருந்து:

“அகமதாபாத், 1 ஏப்ரல், 1932: பரோடா சமஸ்தானம், நவகான் மாவட்டத்திலிருந்து பின்வரும் செய்தி வந்திருக்கிறது. அங்கு ஹரிஜனப் பள்ளிகள் மூடப்பட்டு, ஹரிஜனக் குழந்தைகளைச் சாதாரண கிராமப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது முதல், கிராம மக்கள் ஹரிஜனங்களை முடிவற்ற தொல்லைகளுக்கு உள்ளாக்கி வருகிறார்கள். ஹரிஜன விவசாயிகளுக்குச் சொந்தமான ஆயிரம் வைக்கோல் போர்கள் எரிக்கப்பட்டன. ஹரிஜனக் கிணறுகளில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது. அவர்களின் வீடுகளுக்குத் தீவைக்கவும் முயற்சி செய்யப்பட்டது. பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஹரிஜனச் சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டான். ஹரிஜனங்களுக்கெதிராகப் பொதுவான பகிஷ்காரம் அறிவிக்கப்பட்டுள்ளது.”

“ஹிந்துஸ்தான் டைம்ஸ்” 1939 மே 26 – ஆம் தேதியிட்ட இதழ் பின்வரும் செய்தியை வெளியிட்டது.

“இந்த மாவட்டத்தின் காடிபுர் கிராமத்தில் விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் கல்வியளிக்கப்பட்டு வந்த இரவுப் பள்ளியொன்றைப் பலர் தாக்கினார்கள். அந்தப் பள்ளியின் ஆசிரியரைப் பிடித்து பள்ளியை மூடிவிடும்படிக் கூறினார்கள். தீண்டாதவர்களின் பையன்களுக்குக் கல்வி அளித்தால் அவர்கள் பின்பு தங்களை மற்றவர்களுடன் சமமாக நடத்தக் கோருவார்கள் என்று அதற்குக் காரணம் கூறினார்கள். ஆசிரியர் மறுத்தபோது அவரை அடித்து, மாணவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள்.”

 நான் கடைசியாகக் குறிப்பிட விரும்பும் நிகழ்ச்சி 1935 – இல் பம்பாய் மாகாணம், டோல்கா தாலுகா, கவிதா கிராமத்தில் நடந்தது. 1935 ஆகஸ்ட் 8 – ஆம் தேதி அது நடந்தது.

பொதுப் பள்ளிகளில் ஹரிஜனக் குழந்தைகளைச் சேர்ந்துக் கொள்ளும்படி பம்பாய் அரசாங்கம் உத்தரவிட்டிருந்ததால் கவிதா கிராமத்தின் தீண்டாதவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது கீழே விவரிக்கப்படுகிறது:

“ 8 – 8 – 1935 அன்று கவிதா கிராமத்தின் தீண்டாதவர்கள் தங்கள் குழந்தைகள் நான்கு பேரை கிராமப் பள்ளியில் சேர்ப்பதற்குக் கூட்டிச் சென்றார்கள். இதைப் பார்ப்பதற்குச் சாதி இந்துக்கள் பலர் பள்ளியின் அருகே கூடியிருந்தார்கள். அந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது அமைதியாக நடந்து முடிந்தது; தகாத சம்பவம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் கிராமத்தின் சாதி இந்துக்கள் தங்கள் குழந்தைகள் தீண்டாதவர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து உட்கார்ந்து தீட்டுப்படுவதை விரும்பாமல் மறுநாளிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவில்லை.”

அதன்பின் சில நாட்கள் கழித்து 1935 ஆகஸ்ட் 13 – ஆம் தேதி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தீண்டாதவர் ஒருவர், ஒரு பிராமணரால் தாக்கப்பட்டார். கிராமத்தின் தீண்டாதவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் அந்தப் பிராமணருக்கெதிராக மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப்புகார் கொடுப்பதற்காக டோல்காவிற்குச் சென்றிருந்தார்கள். தீண்டாதவர் சமுதாயத்தின் வயது வந்தவர்கள் கிராமத்தில் இல்லை என்று தெரிந்து கொண்டு இந்துக்கள் தீண்டாதவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள்.

கம்புகள், ஈட்டிகள், வாள்கள் போன்ற ஆயுதங்களை அவர்கள் கைகளில் பிடித்திருந்தார்கள். தாக்கியவர்களில், சாதி இந்துப் பெண்களும் இருந்தார்கள். தீண்டாதோரின் வீடுகளில் இருந்த வயதான ஆண்களையும் பெண்களையும் அவர்கள் தாக்கத் தொடங்கினார்கள். தாக்கப்பட்டவர்களில் சிலர் காட்டுக்குள் ஓடி ஒளிந்தார்கள், மற்றும் சிலர் கதவுகளை அடைத்துக் கொண்டு ஒளிந்து கொண்டார்கள். கிராமப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதில் முன்நின்று செயல்பட்டவர்கள் என்று தாங்கள் சந்தேகித்த தீண்டாதவர்கள் மீது இந்துக்கள் தங்கள் கோபத்தைத் திருப்பினார்கள். அவர்களின் வீடுகளின் கதவுகளை உடைத்துத் திறந்தார்கள். அவர்கள் உள்ளே இல்லை என்று கண்டபோது அந்த வீடுகளின் கூரைகளின் ஓடுகளையும் சாரக்கட்டைகளையும் உடைத்தார்கள்.

இவ்வாறு தாக்கப்பட்ட தீண்டாதவர்கள், ஆண்களும் பெண்களும், டகோலாவுக்குச் சென்றிருந்த பெரியவர்களின் பாதுகாப்புப் பற்றிக் கவலையடைந்தார்கள். அவர்கள் திரும்பி வரும் நேரம் ஆகியிருந்தது. அவர்கள் திரும்பி வருவதை எதிர்பார்த்து சாதி இந்துக்கள் கிராமத்துக்குச் செல்லும் வழியில் புதர்களின் பின்னாலும் செடிகளின் பின்னாலும் மறைந்திருந்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட தீண்டாத வகுப்புப் பெண் ஒருவர் இருட்டில் மறைந்து கிராமத்தை விட்டு வெளியேறி, டோல்காவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தவர்களைச் சந்தித்து, ஆயுதம் தாங்கிய இந்துக்கள் அவர்களைத் தாக்குவதற்காக மறைந்திருப்பதாகத் தெரிவித்து அவர்கள் ஊருக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் தாங்கள் போகாவிட்டால் சாதி இந்துக்கள் மேலும் அதிகமாகத் தீங்கு செய்யக்கூடும் என்று பயந்து அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்க மறுத்தார்கள். அதே சமயம், தாங்கள் ஊருக்குள் சென்றால் இந்துக்கள் தாக்குவார்கள் என்றும் அஞ்சினார்கள். எனவே நள்ளிரவு கழியும் வரை கிராமத்துக்கு வெளியே வயல்களிலேயே காத்திருக்க முடிவு செய்தார்கள்.

இதனிடையே, தாக்குவதற்காக மறைந்திருந்த சாதி இந்துக்கள் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றார்கள். தீண்டாதவர்களில் தலைவர்கள் இரவு 3 மணிக்குப் பின் கிராமத்திற்குள் சென்றார்கள். அவர்கள் முன்னதாகவே சென்று, காத்திருந்த கொலைகாரக் கும்பலைச் சந்தித்திருந்தால் அநேகமாகக் கொலை செய்யப்பட்டிருப்பார்கள். கிராமத்தில் மக்களுக்கும் சொத்துக்களுக்கும் சாதி இந்துக்கள் செய்திருந்த தீங்குகளைப் பார்த்துவிட்டு அவர்கள் பொழுது விடிவதற்கு முன்பே அகமதாபாதுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கே தீண்டாதவர்களின் நலன்களைக் கவனிப்பதற்காகத் திரு. காந்தி உருவாக்கியிருந்த ஹரிஜன சேவக் சங்கத்தின் செயலாளரிடம் நடந்த விவரங்களைத் தெரிவித்தார்கள். ஆனால், அவர் ஒன்றும் செய்யமுடியவில்லை.

சாதி இந்துக்கள் வன்முறைச் செயல்களைச் செய்தது மட்டுமின்றி, தீண்டாதோரின் வாழ்க்கையைச் சகிக்க முடியாததாக ஆக்குவதற்கும் சதி செய்தார்கள். அவர்கள் தீண்டாதோரைக் கூலி வேலைக்கு அமர்த்த மறுத்தார்கள்; அவர்களுக்கு உணவுப் பொருள்களை விற்க மறுத்தார்கள். அவர்களின் கால் நடைகள் மேய்ப்பதற்கு இடம் கொடுக்க அங்கங்கே தாக்குதல் நடத்தவும் தொடங்கினார்கள். இது மட்டுமின்றித் தங்களுடைய வெறியில் சாதி இந்துக்கள், தீண்டாதோர் தண்ணீர் எடுக்கும் கிணற்றில் மண்ணெண்ணெயை ஊற்றினார்கள். பல நாட்கள் இவ்வாறு செய்தார்கள். இதன் விளைவாகக் கிராமத்தின் தீண்டாதவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. இவ்வளவு தூரம் ஆனபின் தீண்டாதவர்கள் அக்டோபர் 17 – ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப் புகார் தாக்கல் செய்தனர். அதில் சாதி இந்துக்களில் சிலரைக் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டினார்கள்.

இந்த வழக்கில் மிக விசித்திரமானது திரு. காந்தியும் அவரது கையாளான சர்தார் வல்லபாய் பட்டேலும் செய்த செயல்தான். கவிதா கிராமத்தின் இந்துக்கள் தீண்டாதவர்களுக்குச் செய்த கொடுமைகளையெல்லாம் நன்றாக அறிந்திருந்தபோதும் திரு. காந்தி தீண்டாதவர்கள் அந்தக் கிராமத்தைவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்ற அறிவுரையைத்தான் அளித்தார்.

குற்றம் செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கூட அவர் கூறவில்லை. அவரது கையாளான திரு. வல்லபாய் பட்டேல் செய்த செயல் இதைவிட விசித்திரமானது. தீண்டாதோருக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம் என்று சாதி இந்துக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக அவர் கவிதா கிராமத்துக்குச் சென்றிருந்தார். ஆனால், அவர்கள் அவர் பேசுவதற்குக் கூட வாய்ப்பளிக்கவில்லை. ஆயினும் இதே மனிதர் தான், அவர்களைத் தீண்டாதவர்கள் நீதி மன்றத்தில் கொண்டு போய் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுப்பதை எதிர்த்தார். ஆயினும் அவரது எதிர்ப்பையும் மீறித் தீண்டாதவர்கள் புகார் தாக்கல் செய்தார்கள்.

ஆனால், இறுதியாக அவர் அந்தப் புகாரை அவர்கள் திருப்பப் பெற்றுக் கொள்ளச் செய்தார். தீண்டாதோருக்குத் தொல்லை கொடுப்பதில்லை என்று சாதி இந்துக்கள் வாக்குறுதி அளிப்பதாக ஒரு நாடகக்காட்சி நடத்திவிட்டுப் புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளச் செய்தார். இந்த வாக்குறுதியை அவர்கள் செயல்படுத்தச் செய்வதற்குத் தீண்டாதவர்களுக்கு வழி எதுவும் கிடையாது. இதன் பலன் என்னவாயிற்று என்றால், தீண்டாதவர்கள் துன்பத்துக்குள்ளானார்கள், அவர்களைத் துன்பப்படுத்தியவர்கள் திரு. காந்தியின் நண்பர் திரு. வல்லபாய் பட்டேலின் உதவியுடன் தப்பித்துக் கொண்டார்கள்.

 IV

தீண்டாதவர்கள் இந்துக்களே என்று இந்துக்கள் கூறுகிறார்கள். ஆனால், தீண்டாதவர் ஒருவரின் இறந்த உடலை இந்து சுடுகாட்டில் எரிக்க முடியாது.

 1946 ஜுன் 7 – ஆம் தேதி “ஃரீப்ரஸ்” பத்திரிகை பின்வரும் செய்தியை வெளியிட்டது:

“மதுரை ஹரிஜன்கள் இரண்டுபேர், மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய ஒரு செயலைச் செய்ததற்காக அவர்களுக்கு நான்கு மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வழக்கைக் குறிப்பிட்டு திரு. ஏ. வைத்தியநாத ஐயர் பத்திரிகைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ‘தீண்டாமை காரணமாக ஹரிஜனங்கள் படுகின்ற கொடுமையான துன்பங்களை’ பொது மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்.”

திரு. வைத்தியநாத ஐயர் கூறுகிறார்: “மதுரை ஹரிஜன் ஒருவரின் மூத்த குழந்தை இறந்துவிட்டது. அவர் அந்தக் குழந்தையின் உடலை மதுரை நகராட்சி சுடுகாட்டில் ஹரிஜனங்களுக்கென ஒதுக்கப்பட்ட கொட்டகையில் எரிப்பதற்குப் பதில், சாதி இந்துக்களுக்கென்று உள்ளதாகக் கூறப்படும் கொட்டகையில் எரித்துவிட்டார். இப்படி இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது தமக்குத் தெரியாது என்றும், அப்போது மழை தூறிக் கொண்டிருந்தது என்றும், தாம் எரித்த இடம்தான் நல்ல இடமாக இருந்தது என்றும் ஹரிஜன் கூறுகிறார். சாதி இந்து யாரும் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை; யாருடைய உணர்வும் புண்படுத்தப்பட்டதாக நிரூபணம் எதுவும் இல்லை. இந்த நிகழ்ச்சி மதுரை காவல் துறையினரின் கவனத்திற்கு வந்தது. அவர்கள், குழந்தையின் தந்தை மீதும் மற்றொரு உறவினர் மீதும் வழக்குத்தொடுத்தார்கள். ஹரிஜனங்கள் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடும் என்பது காவல் துறையினர் கூறிய காரணம்.”

 திரு. ஐயர் மேலும் கூறுகிறார் : “நான் இந்த வழக்கை சென்னை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.”

 1945 ஏப்ரல் 22 – ஆம் தேதியிட்ட ’சேவாதன்’ கூறுகிறது:

“1945 மார்ச் 18 – ஆம் தேதி முசபர்நகர் மாவட்டம் ‘ஃப்ளோடா’ கிராமத்தில் ஒரு துப்புரவுத் தொழிலாளி இறந்து போனார். கிராமத்தில் தொழிலாளிகள் அவரது உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றார்கள். கிராமத்தின் தியாகி பிராமணர்கள் இதனால் கோபமடைந்தனர். துப்புரவுத் தொழிலாளிகள் தங்களில் இறந்தவரின் உடலைச் சாதி இந்துக்களின் சுடுகாட்டுக்குக் கொண்டு வரத் துணிந்ததற்காக அவர்களைத் திட்டினார்கள். துப்புரவுத் தொழிலாளிகள், தாங்கள் இந்துக்கள் என்றும், இறந்தவர் உடலை எரிப்பதே தங்கள் வழக்கம் என்றும் கூறினார்கள்.

ஆனால், பிராமணர்கள் நியாயவாதம் எதையும் ஏற்கவில்லை துப்புரவுத் தொழிலாளிகள் இந்துவாயிருந்தாலும் முஸ்லிமாயிருந்தாலும் அவர்களில் இறந்தவர்களின் உடலைப் புதைக்கத்தான் வேண்டும் என்றும், அவர்கள் புதைக்கத் தவறினால் தாங்களே (பிராமணர்களே) அந்த உடலைப் புதைத்து விடுவார்கள் என்றும் பிராமணர்கள் கூறினார்கள். இவ்வாறு அச்சுறுத்தப்பட்ட துப்புரவுத் தொழிலாளிகள், பிராமணர்கள் தங்களை அடிக்கக்கூடும் என்றும் பயந்து இறந்த உடலைப் புதைத்துவிட்டார்கள்.”

இது மட்டுமல்ல, கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. தீண்டத்தக்கவர்களான இந்துக்கள் தங்களில் இறந்தவர்களின் உடலை எரிக்கும் வழக்கம் உள்ளவர்கள். அவர்களுடைய உயர்ந்த அந்தஸ்தைக் காட்டும் வழக்கங்களைத் தாங்களும் பின்பற்ற வேண்டும் என்று தீண்டாதவர்கள் நினைப்பதாகக் கருதப்படுவதால், அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இறந்தவர்களின் உடலை அவர்கள் புதைக்கத்தான் வேண்டும்.

இவ்வாறு தீண்டாதவர்கள் தங்களில் இறந்தவரின் உடலைக் கட்டாயமாகப் புதைக்க வேண்டியிருந்த ஒரு நிகழ்ச்சி பற்றி 1924 ஜுன் 9 – ஆம் தேதி “மிலாப்” பத்திரிகையில் வெளியிடப்பட்டது:

“தீண்டாதவர்களிடையே ஏற்பட்டிருக்கும் விழிப்புண்ர்வுக்கு முக்கிய காரணம் இந்துக்களின் கொடுமையேயாகும். இதைப்பற்றி நான் அறியாமலிருந்தேன். ஆயினும், பல்வேறு ஊழியர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த தகவல்கள் மிகவும் வேதனையளித்தன. ஓர் இடத்திலிருந்து வந்த தகவல் அங்குத் தீண்டாதவர்கள் தங்களில் இறந்தவர்களின் உடலை எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கிறது. இதனால் அங்குள்ள துப்புரவுத் தொழிலாளிகளிடையே ஒரு புதிய உணர்வு உருவாகியுள்ளது. அவர்கள், இறந்த உடலைப் படுத்த நிலையில் புதைக்கும் மற்றவர்களின் வழக்கத்திலிருந்து மாறுபட்டுத், தங்களில் இறந்தவர்களின் உடலைத் தலைகீழான நிலையில் புதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மற்றவர்களின் வழக்கத்தைத் தாங்களும் பின்பற்றுவது தங்களுக்குக் கௌரவக் குறைவானது என்று துப்புரவுத் தொழிலாளிகள் நினைக்கிறார்கள்.”

 V

பூணூல் அணிவது உயர்ந்த பிறப்பின் அடையாளமாகும். தீண்டாதவர்கள் தங்களை உயர்ந்தவர்களாக்கிக் கொள்ளுவதற்காகப் பூணூல் அணிய எண்ணினார்கள். ஐக்கிய மாகாணங்களின் கர்வால் மாவட்டம் ரிங்வாரி கிராமத்தில் தீண்டாதவர்கள் மீது சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைகள் ஜுன் 6 – ஆம் தேதியிட்ட ‘நேஷனல் ஹெரால்ட்’ பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளன:

“ரிங்வாரி கிராமத்தின் பத்து குடும்பங்களைச் சேர்ந்த 33 ஹரிஜன்கள் சாதி இந்துக்களின் கொடுமைகள் காரணமாக இரண்டு மாத காலம் ஊரைவிட்டு ஓடிப்போய் வாழ்ந்தபின் கர்வால் மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் இப்போது தங்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். இந்த ஹரிஜன்கள் தங்களுடைய முன்னேற்றத்துக்காக மகாத்மா காந்தியும், காலஞ்சென்ற ஸ்வாமி சிரத்தானந்தும் தொடங்கிய சமூக இயக்கத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் கர்வாலின் இந்துக்களுக்கு இது பிடிக்கவில்லை. இது தங்களுடைய ‘உரிமைகளையும் சலுகைகளையும்’ மீறும் செயல் என்று அவர்கள் கருதினார்கள். இதன் விளைவாக ஹரிஜன்கள் மீது பல தாக்குதல்கள் நடந்தன; அவர்கள் மீது சமூகரீதியான கொடுமைகள் தொடர்ந்து இழைக்கப்பட்டன. அவர்கள் தங்களுடைய திருமணங்களில் பல்லக்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டது. ஓர் இடத்தில் அவர்கள் ஓர் எருமையைக்கொன்று அதன் இறைச்சியை உண்ணும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ரிங்வாரியில் இந்தக் கொடுமைகளின் உச்சகட்டமாக, சாதி இந்துக்களுக்குப் பணிய மறுத்த ஹரிஜனங்களுக்குத் தண்ணீர் ஊற்றுக்கள், மேய்ச்சல் நிலங்கள் போன்ற பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் விளைவாக இந்தப் பத்து குடும்பங்களும் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. மேலும் கொடுமைகள் நடக்கலாம் என்று பயந்து அவர்கள் நள்ளிரவில் வெளியேறிச் சென்றார்கள்.”

 இது போன்ற வேறு சில நிகழ்ச்சிகள் கீழே தரப்படுகின்றன:

  • “சில ஆரிய சமாஜிகல், தீண்டாதவர்கள் சிலருக்குப் பூணூல் போட்டு அவர்களின் சாதி அந்தஸ்தை உயர்த்தினார்கள். ஆனால் சனாதனிகளுக்கு இதைப் பொறுக்கமுடியவில்லை. ஏனென்றால் அவர்களுடைய மதம், தீண்டாதவர்கள் பூணூல் அணிவதை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாகப் பூணூல் அணிந்த தீண்டாதவர்கள் ஒவ்வொரு நாளும் உயர் சாதி இந்துக்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.”
  • “ஜம்மு சமஸ்தானத்தின் மீர்புர் மாவட்டம், மோய்லாவைச் சேர்ந்த பகத் ஹரிசந்த் சில ஆரிய சமாஜிகளால் சுத்திகரிப்புச் சடங்கு செய்யப்பட்டுப், பூணூல் அணிவிக்கப்பட்டார். அங்குள்ள இந்த ஜாட்டுகள் அவரைக் கொடுமைப்படுத்திப், பூணூலை அகற்றிவிடச் சொன்னார்கள். கடைசியாக ஒருநாள் பகத் ஹரிசந்த காயத்திரி ஜபம் செய்தபின் ஜாட் இந்துக்கள் அவரைப் பிடித்து அடித்துப், பூணூலை அறுத்துவிட்டார்கள். அவர்களுடைய கோபத்துக்குக் காரணம் இதுதான்: சுத்தி சடங்குக்குமுன் ஷுதா மேக் வகுப்பினர் ஜாட்டுகளை ‘கரீப் நவாஸ்’ (ஏழைகளின் புரவலர்) என்று அழைத்தார்கள். இப்போது அவர்கள் ‘நமஸ்தே’ என்று மட்டுமே கூறுகிறார்கள்.”

 1929 செப்டம்பர் 14 – ஆம் தேதியிட்ட “ஆர்ய கெஜட்” பத்திரிகையிலிருந்து:

“குர்தாஸ்புர் மாவட்டம் பெர்காம்பூருக்கருகே உள்ள ரமணி கிராமத்தைச் சேர்ந்த ராஜபுத்திரர்கள் தங்கள் கிராமத்தின் தீண்டாதவர்களைக் கூப்பிட்டு, அவர்கள் அணிந்திருந்த பூணூலை உடனே அகற்றிவிட வேண்டும் என்றும் அதை மீண்டும் அணிவதில்லை என்று வாக்களிக்கவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறினார்கள். இதற்குத் தீண்டாதவர்கள் அமைதியாகப் பின்வருமாறு பதிலளித்தார்கள்: ‘மகராஜ்’ நீங்கள் ஏன் எங்கள் மேல் கோபப்படுகிறீர்கள்?

உங்களுடைய சொந்த சகோதரர்களான ஆரிய சமாஜிகள்தான் கருணைகூர்ந்து இந்தப் பூணூல்களை எங்களுக்குப் போட்டுவிட்டார்கள். இவை இந்து சமயத்தின் உண்மையான அடையாளங்கள் என்றும் இவற்றை நாங்கள் எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். இவற்றை நாங்கள் அணிந்திருப்பதில் உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் நீங்களே உங்களுடைய கைகளால் இவற்றை அறுத்தெறியலாம் என்று அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட ராஜபுத்திரர்கள் அந்த அப்பாவி மனிதர்கள் மீது பாய்ந்து தாங்கள் வைத்திருந்த தடிகளால் அவர்களை நீண்ட நேரம் அடித்தார்கள்.

அந்தத் தீண்டாதவர்கள் மிகுந்த பொறுமையுடன் இந்தக் கொடுமையைத் தாங்கிக் கொண்டார்கள்; அவர்களைத் தடுக்கவோ எதிர்க்கவோ மறுத்துவிட்டார்கள். ஆனால் அவர்களைத் துன்புறுத்தியவர்கள் அவர்களுடைய பரிதாப நிலையைக் கண்டு கொஞ்சமும் மனம் இரங்கவில்லை. மூன்று, நான்கு ராஜபுத்திரர்கள் கோரி ராம் என்ற ஹரிஜனின் பூணூலை இழுத்து அறுத்து எறிந்தார்கள். அவருடைய உடம்பில் களைகொட்டுக் கருவியினால் பூணூல் போட்டிருப்பது போலக் கீறிவிட்டார்கள்.”

 1929 அக்டோபர் 12 – ஆம் தேதி ‘மிலாப்’ பத்திரிகையிலிருந்து:

 “பாஹ்மனி கிராமத்தின் ராஜபுத்திரர்கள் பண்டை நாட்களிலிருந்தே தீண்டாதவர்களுக் கெதிராகச் செயல் திட்டங்களை நடத்தி வந்துள்ளனர். பூணூலை அறுத்தது பற்றி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்துவருகிறது. தீண்டாதவரான ஒரு பெண் 1929 அக்டோபர் 7 – ஆம் தேதி வயலில் அறுவடை செய்யச் சென்று கொண்டிருந்த போது ராஜபுத்திரர் ஒருவர் அவரைக் கடுமையாக அடித்துக் காயப்படுத்தியது பற்றிய வழக்கு ஒன்றும் உள்ளது. அந்தப் பெண்ணைப் படுக்கையில் வைத்து வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள்.”

 VI

 தீண்டாதவர் ஒருவர், ஒரு இந்துவின் முன், கட்டிலில் உட்கார்ந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை 1938 ஜுலை மாதம் ‘ஜீவன்’ பத்திரிகையில் வெளியான பின்வரும் செய்தியிலிருந்து காணலாம்:

“சீதாபுர் மாவட்டம் மர்காவ் காவல் நிலையப் பகுதியில் உள்ள பச்சஹேரா கிராமத்தைச் சேர்ந்த நந்தாராம், மங்கலி பிரசாத் ஆகியோர் தங்களுடைய நண்பர்களையும் உறவினர்களையும் விருந்துக்கு அழைத்தார்கள். விருந்தினர்கள் வந்து கட்டில்களில் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கிராமத்தின் அஜமீந்தார்களான டாக்குர் சூரஜ் பக்‌ஷ் சிங்கும், ஹர்பால் சிங்கும் அங்கு வந்து, நந்தா ராமையும் மங்கலி பிரசாதையும் கூப்பிட்டனுப்பிப், புகை பிடித்துக் கொண்டிருப்பவர்கள் யார் என்றும் அவர்கள் ஏன் கட்டில்களில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றும் கேட்டார்கள்.

அவர்கள் தம்முடைய நண்பர்களும் உறவினர்களும் என்று மங்கலி பிரசாத் கூறினார். டாக்குர்கள் மட்டும்தான் கட்டிலில் உட்காரலாமா என்று அவர் கேட்டார். இதனால் கோபமடைந்த இரண்டு டாக்குர்களும் அந்தச் சகோதரர்கள் இருவரையும் அடித்தார்கள்; அவர்களுடைய ஆட்கள் விருத்தினர்களைக் கடுமையாக அடித்தார்கள். அடிபட்டவர்களில் ஒரு ஆனும் ஒரு பெண்ணும் நினைவிழந்தார்கள்; மற்றவர்கள் கடுமையாகக் காயமடைந்தார்கள்.”

 VII

தீண்டாதவர்கள் இந்துக்கள். அவர்களும் இந்துக்களுக்கு உள்ள அதே உரிமைகளைப் பெற்ற குடிமக்கள். ஆனால் நிறுவப்பட்ட முறைமையின் விதிகளுக்கு முரணான எந்த உரிமையையும் தீண்டாதவர்கள் பயன்படுத்தமுடியாது.

உதாரணமாக, சத்திரம் பொதுவானதுதான் என்றாலும் தீண்டாதவர் அதில் தங்குவதற்கு உரிமை கோர முடியாது. பதேகர் என்ற இடத்தைச் சேர்ந்த கன்ஹையா லால் ஜாடவ் என்ற தீண்டாதவருக்கு நேர்ந்த அனுபவம் பற்றி 1938 ஆகஸ்ட் மாத ‘ஜீவன்’ இதழில் பின்வரும் செய்தி வெளியாகியுள்ளது:

“அலகாபாத் ரயில் சந்திப்புக்கருகே உள்ள தர்மசாலாவில் 1938 ஆகஸ்ட் 15 – ஆம் தேதி இரவு 10 மணிக்கு நான் தங்கச் சென்றபோது எந்தக் கஷ்டமும் ஏற்படவில்லை. ஒரு ரூபாய் முன்பணம் செலுத்திவிட்டுக் கட்டிலில் படுத்துவிட்டேன். ஆனால் இரவு 11 மணிக்குத், தங்கியிருப்பவர்கள் தங்களுடைய முகவரிகளைப் பதிவு செய்வதற்குத் தர்மசாலாவின் மேலாளரிடம் சென்றபோது நான் என்னுடைய முகவரியை எழுதி, என்னுடைய சாதியை ஜாடவ் என்று குறிப்பிட்டேன். அதைப் பார்த்த மேலாளார் கோபங் கொண்டு அங்குத் தாழ்ந்த சாதிக்காரர்கள் தங்க முடியாது என்றும் நான் உடனே வெளியேற வேண்டும் என்றும் கூறினார். நான் தர்மசாலாவின் விதிகளைச் சுட்டிக்காட்டி இந்துக்கள் மட்டுமே அங்கே தங்கலாம் என்றும் தீண்டாதவர்கள் தங்குவதற்குத் தடை இல்லை என்றும் கூறி, நான் இந்து அல்ல என்று அவர் என்னை வெளியேறச் சொல்கிறாரா என்று கேட்டேன்.

நான் பரூக்காபாதிலிருந்து வந்திருப்பதாகவும், அலகாபாதில் எனக்கு யாரையும் தெரியாது என்றும் அதனால் இரவு 11 மணிக்கு நான் பேசக்கூடிய இடம் எதுவும் இல்லை என்றும் கூறிக் கெஞ்சினேன். அதைக் கேட்ட மேலாளர் கோபமடைந்து இராமாயணத்திலிருந்து (சூத்திரர்கள், படிக்காதவர்கள், மாடுகள், பெண்கள் ஆகியோர் அடிக்கப்படுவதற்கே தகுதியுள்ளவர்கள் என்று கூறும்) ஒரு பாடலைச் சொல்லித், தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் அவன் போகமாட்டான் என்றும் சொன்னார். திடீரென்று அவர் என்னுடைய படுக்கையையும் பொருள்களையும் தூக்கி வெளியே வீசினார். அங்கிருந்த எல்லோரும் என்னை அடிக்கத் தயாராயிருந்தார்கள்.

வேறு வழியில்லாமல் நான் தர்மசாலாவிலிருந்து வெளியேறி, எதிரே ஒரு கடையின் முன் இருந்த பலகையில் படுத்துக் கொண்டேன். அதற்காகக் கடைக்காரருக்கு 2 அணா வாடகை கொடுத்தேன். எனவே ஷெட்யூல் சாதியைச் சேர்ந்த என் சகோதரர்கள் எல்லா இடங்களிலும் கூட்டங்கள் நடத்தி அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு நகரத்திலும் நம் மக்களுக்குத் தனியாகத் தர்மசாலாக்கள் கட்டவேண்டும் அல்லது இப்போதுள்ள தர்மசாலாக்களை நமக்குத் திறந்துவிடவேண்டும்.”

 VIII

 நிறுவப்பட்ட முறைமையின்கீழ், இறந்த கால்நடைகளைத் தூக்கிச் சென்று அகற்றுவதும் துப்புரவுப் பணி செய்வதும் இந்துக்களின் கௌரவத்திற்குக் குறைவான செயல்களாகும்.

தீண்டாதவர்கள்தான் இவற்றைச் செய்யவேண்டும். தீண்டாதவர்களும் இந்த வேலைகள் தங்களுடைய அந்தஸ்திற்கு இழுக்கானவை என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர்; இந்த வேலைகளைச் செய்ய அவர்கள் மறுக்கிறார்கள். ஆயினும் இந்துக்கள் அவர்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்த வேலைகளைச் செய்ய வைக்கிறார்கள்.

1938 ஜூன் ‘ஜீவன்’ இதழில் பின்வரும் செய்தி வெளியாகியுள்ளது:

“1938 மே மாதத்தில் ஒரு நாள் அலிகர் மாவட்டம், பர்லா காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த பிப்போலி கிராமத்தில் பஜ்ஜூ ராம் ஜாடவ் பகல் 11 மணி அளவில் தம் வீட்டில் உட்கார்ந்திருந்தார். அப்போது சில பிராமணர்கள் – பிரதிக், ஹோடால், சீதாராம், தேவி, கனி ஆகியோர் – கையில் தடிகளுடன் அங்குச் சென்று, இறந்து போன ஒரு மாட்டைத் தூக்கிச் செல்ல அவர் வரவேண்டுமென்று கூறினார்கள். தமக்கு அம்மாதிரி வேலைகள் பழக்கமில்லை என்றும், அதைச் செய்யக்கூடிய வேறு யாரிடமாவது போகும்படியும் அவர் கூறியபோது, அவர்கள் அவரைத் தடிகளால் சற்றும் இரக்கமில்லாமல் அடித்தார்கள்.”

 இதே பத்திரிகையின் 1938 அக்டோபர் இதழில் பின்வரும் செய்தி வெளியாகியுள்ளது;

“1938 அக்டோபர் 24-ஆம் தேதி, மத்ரா மாவட்டம் சதாபாத் வட்டம் லோதாரி கிராமத்தில் ஒரு பிராமணரின் சில மாடுகள் இறந்து போயின. அந்தக் கிராமத்தின் ஷெட்யூல் சாதி மக்கள் அவற்றைத் தூக்கிச் சென்று அகற்ற மறுத்துவிட்டார்கள். இதனால் கோபமடைந்த சாதி இந்துக்கள், ஷெட்யூல் சாதியினர் காலைக் கடன்களுக்குத் தங்கள் வயல்களுக்குச் செல்லக்கூடாது என்றும் தங்கள் மாடுகளைச் சாதி இந்துக்களின் வயல்களில் மேயவிடக் கூடாது என்றும் தடுத்துவிட்டார்கள்.”

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 6)

Pin It