த.க.சி என்று அன்புடனும், மதிப்புடனும் அழைக்கப்படும் திருநெல்வேலி கணபதி - சிவசங்கரன் அவர்கள் 25.3.2014 அன்று இரவு காலமானார் என்ற செய்தி தமிழ் இலக்கிய உலகி லும், மார்க்சிய, தமிழ்த் தேசிய இயங்கங்களிடையேயும் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.

1925 மார்ச்சு 30 ஆம் நாள் பிறந்த தி.க.சி அவர்களுக்கு 30.3.2014 அன்று 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக நெல்லையில் நடத்த வேண்டும் என்று நினைத்திருந்த நெஞ்சங்களுக்கு பேரிடியாய் அவர் இறப்புச் செய்தி விழுந்தது.

1940களின் தொடக்கத்தில் “நெல்லை வாலிபர் சங்கம்’’ தொடங்கி பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த தி.க.சி. இளந்தமிழன் என்ற ஒரு கையெழுத்து ஏட்டையும் தொடங்கி நடத்தி வந்தார். அந்த இளைஞர் பிற்காலத்தில் சோவியத் நாடு இதழில் ஆசிரியர் குழுவில் செயல்படப் போகிறார் என்று அப்பொழுது யாரும் கருதியிருக்க முடியாது.

அது மட்டுமின்றி ஜீவா அவர்கள் தொடங்கிய தாமரை இதழின் ஆசிரியராக தோழர் தி.க.சி. 1965 முதல் 1972 வரை பணியாற்றி முத்திரை பதித்தார். தாமரை இதழின் பொற்காலம் என்று அந்த ஏழு ஆண்டுகள் கருதப்படு கின்றது. ஏராளமான இளம் எழுத்தாளர்களை தாமரையில் எழுத வைத்து ஊக்கப்படுத்தினார்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு இலக்கியப் படைப்பாளிகள் இலக்கியத் திறனாய்வாளர்கள் தோழர் தி.க.சி. அவர்களால் ஊக்கம் ஊட்டப்பெற்று வளர்ச்சி அடைந்தவர்களே! அவருடைய மகன் கல்யாண சுந்தரம் (கல்யாண்ஜி, வண்ணதாசன்) பிரபல மான எழுத்தாளர் ஆவார்.

தி.க.சி. நான்கு திறனாய்வு நூல்களையும், ஆறு மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.

மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுவுடைமைக் கொள்கையின் அடித்தளத்தில் நின்று இலக்கியம் படைத்த அவர் அன்றாடம் புதிய புதிய நூல்களைப் படிப்பவர். ஏடுகளைப் படிப்பவர். ஆனாலும் அன்றாடம் ஒரு தடவையாவது திருக்குறள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், ஆகிய நூல்களைப் புரட்டிப் பார்த்து விடுவார் என்று தோழர் ஸ்டாலின் குணசேகரன் தி.க.சியைப் பற்றி கூறுகிறார்.

அவருடைய திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலுக்கு 2000 ஆம் ஆண்டு இந்திய அரசு, சாகித்ய அகாடமி விருது வழங்கியது. ஏராளமான இதழ்களை அன்றாடம் படிக்கும் தி.க.சி. உடனுக்குடன் அத்தனை இதழ் களுக்கும் அஞ்சல் அட்டையில் பாராட்டுகளையும் மென்மை யான திறனாய்வுகளையும் அனுப்பிவிடுவார். அவ்வாறு எதிர்வினைப் புரிவதில் தி.க.சிக்குப் பிறகு தமிழ்நாட்டில் வேறுயாரும் இல்லை யென்றே சொல்லலாம்.

தமிழர் கண்ணோட்டம் இதழ் கட்டுரைகளைப் பாராட்டியும், திறனாய்வு செய்தும் பல கடிதங்கள் தி.க.சி எழுதியுள்ளார். அவை த.க. இதழில் வந்துள்ளன. த.தே.பொ.க. தலைமைத் தோழர்களுடன் பாசம் மிக்க உறவு வைத்திருந்த தி.க.சி மிகச் சிறந்த முறையில் ஊக்கம் ஊட்டுபவராகவும் விளங்கினார்.

இறுதி வணக்கம் :

25. 3. 2014 இரவு உயிர் பிரிந்தவுடன் அவரது உடல் திருநெல்வேலி 24 இ, சுடலைமாடன் வீதியில் அவர் வசித்து வந்த வீட்டில் மக்கள் பார் வைக்கு வைக்கப்பட்டது. இலக்கியப் படைப்பாளிகளும், தொழிலாளி களும், அரசியல் இயக்கங் களின் தலைவர்களும் என ஏரா ளமானோர் 26, 27 நாள்களில் தோழர் தி.க.சி உடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தி னர். 26. 3. 2014 அன்று ம.தி. மு.க. பொதுச் செயலாளர் திரு வைகோ, தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன்,ஆகியோர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

 27. 3. 2014 மாலை 4 மணியளவில் அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் முன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் இரா. நல்லக் கண்ணு, நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்லிங்கம், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் அய்யா பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்,தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ. இராசு, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன், பொதுக்குழு உறுப்பி னர்கள் தோழர்கள் குரும்பூர் தமிழ்மணி, புளியங்குடி பாண்டியன், செம்மலர் இலக்கிய இதழ் பொறுப் பாசிரியர் தோழர் எஸ்.ஏ. பெருமாள் (சி.பி.எம்), பேராசி ரியர் அறிவரசன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

தாமிரபரணி ஆற்றுக்கரையில் கருப்பந்துறை சுடுகாட்டில் தோழர் தி.க.சியின் உடல் எரியூட்டப்படுவதற்கு முன்பாக நடந்த இரங்கல் கூட்டத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்கப் பொறுப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

அய்யா பழ நெடுமாறன், தோழர் பெ.மணியரசன், தோழர் ஸ்டாலின் குண சேகரன்(சி.பி.ஐ), புலவர் கி.த.பச்சையப்பனார், கவிஞர் அறிவுமதி, நெல்லை முன்னாள் மாநகராட்சி மேயர் சுப சீத்தாரமன் (தி.மு.க.), வியனரசு (பா.ம.க.), கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் இராகுலதாசன் உள் ளிட்ட பலர் இரங்கல் உரையாற்றினார்.

இரங்கல் கூட்டத்தில் தோழர் பெ. மணியரசன் பேசிய தாவது :

“தோழர் தி.க.சி அவர்கள் பழம்பெரும் எழுத்தாளர், பழம் பெரும் கம்யூனிஸ்ட், பழம்பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புவாதி, பழம் பெரும் தமிழர் ஆவார். அதைப் போலவே அவர் புத்தம் புதிய எழுத்தாளர், புத்தம் புதிய கம்யூனிஸ்ட், புத்தம் புதிய தமிழர், புத்தம் புதிய தமிழ்த்தேசியர் ஆவார். 90 அகவையைத் தொடுகின்ற நிலையிலும் தி.க.சி. தம்மைப் புதுபித்துக் கொண்டே இருந்தார்.

தமிழர்கள் ஒவ்வொருவரும் தி.க.சி அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி புதிய வளர்ச்சி போக்குகளுக்கு ஏற்ப, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தம்மைப் பொருத்தப் படுத்திக் கொள்ளும் வகையில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தி யாகும்.

நான் சார்ந்திருந்திருக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழக விடுதலையை முன் வைக்கும் அமைப்பு என்றாலும், அவர் எங்கள் அமைப்பை நேசித் தார். எங்கள் மீது பாசம் பொழிந் தார். ஒரு தோழராக. ஒரு தந்தை யாக, எங்களுக்கு கருத்துகள் கூறினார்; அறிவுரைகள் வழங்கினார். தேசிய இனங்கள் இறையாண்மையுடன் தனி அரசு அமைத்துக் கொள்ள உரிமை படைத்தது என்றும், அந்த உரிமை ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை என்றும் லெனின் கூறிய கருத்துகளை அப்படியே ஏற்று உள்வாங்கிக் கொண்டு தான் அவர் தம்மை தமிழ்த் தேசியர் என்றும் அறிவித்துக் கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்தார். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்க ளின் வீரத்தையும், ஈகத்தையும் மதித்தார், பாராட்டி னார்.

தோழர் தி.க.சி. தாம் ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் பெருமை கொண்டார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எள்ளளவும் விட்டுக் கொடுக்காமல் எதிர்க்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் இறுதிவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன், நல்லுறவு வைத்திருந்தார்; அவர்கள் மீது நன்மதிப்புக் கொண்டிருந்தார்.

பன்முகப்பட்ட ஆற்றல்களின் சிந்தனைக்கூறுகளின் வார்ப்பாக விளங்கிய தி.க.சி. அவர்களின் வாழ்க்கை, அவரது மறைவுக்குப் பின்னும் நமக்கு வழிகாட்டும். தோழர் தி.க.சி. அவர் களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறேன்.’’

Pin It