prison 600

(மைசூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள தோழர் அன்பரசு அவர்கள் தமிழர் கண்ணோட்டத்திற்கு எழுதிய கடிதம்)

21.01.2014 மற்றும் 18.02.2014 தேதிகளில் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்புகள் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி யைத் தந்துள்ளது. சிறையில் உள்ள எங்களுக்கு அதிக, உற்சாகத்தையும், வெளியில் இருந்து போராடும் உங்களுக்கு அதிக வலிமையையும் தந்துள்ளதாக இத்தீர்ப்பை பார்க் கிறோம், இப்படிப்பட்டச் சூழலில் இந்த மாற்றத் திற்காக பாடுபட்ட உங்களுடனும் தமிழக மக்களுடனும் எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக இம்மடலை எழுதுகிறேன்.

இந்தத் தீர்ப்புகள் இரண்டும், நம்பிக்கையற்ற சூழலில் வாழ்ந்து வரும் கைதிகள் சமூகத்திற்கு ஒரு நம்பிக்கையையும், பலத்தையும் கொடுத்துள்ளதாக, பார்க்க முடிகிறது. சாமானிய கிராமப்புற கைதிகளைக் கூட இந்தத் தீர்ப்பு, இதைச் சார்ந்த அரசியல் விசயங்களையும் சிறைக் கொட்டடிக்குள் அசைபோடும், விவாதிக்கும் விசயமாக மாற்றியுள்ளது.

நம் நாட்டில் மரண தண்டனை என்ற தண்டனை முறை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் ஆதிவாசிகள் மீதும், சிறுபான்மை யினர் மீதும், தங்களின் உரிமைக்காக போராடிய சாமானிய மக்கள் மீதும், யாரோ ஒருவர் மகிழ்ச்சிக்காக, திருப்திக்காக ஏவப்பட்டு வருவதை வரலாற்றின் நெடுகிலும் பார்க்க முடிகிறது.

இந்தியா போன்ற நாட்டில், மரண தண்டனை என்ற தண்டனை முறை சட்ட வடிவில் இன்னும் உயிருடன் இருக்கும் போது, இன்றைக்கும் அதை நடைமுறைப்படுத்தும் ஒரு கடுமையான மனநிலையில் உள்ள ஒரு நாட்டில் மக்களின் போராட்டத்தாலும் உச்சநீதி மன்ற நீதியரசர்கள் இந்நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையினாலும், இச்சட்டத்தை தடுத்து நிறுத்தும் அளவு வெற்றி கண்டுள்ளது மிகப் பெரிய வெற்றியே!

என் சிறைவாசிகள் சமூகம், இன்றைய காலச் சூழலால் மரண தண்டனைக்கு எதிரானப் போராட்டங்களில், தமிழகம் தன் பங்களிப்பை மிகச்சரியாக செய்துள்ளதாகவும் புது மாதிரியான போராட்ட வடிவங்களை, உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், உலகில் எங்கும் காணாத அளவு போராட்டங் களை தமிழ் மக்கள் இந்த விசயத்துக்காக போராடியதாகவும் தோழர் செங்கொடி அவர்களின் உயிர்த் தியாகம் பற்றியும் அதன் மூலம் உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் பேசிக்கொள்வதை கேட்க முடிகிறது.

1990க்கு பின் மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு துறைகளில் நடந்து வருகின்றன. இச்சூழலில் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தங்களையும் (தோழர் பெ.மணியரசன்) சேர்த்து பல்வேறு தலைவர்களை உள்ளடக்கிய உயிர் பாதுகாப்பு குழு ஒன்றை அமைத் தீர்கள், தமிழகத்தில், சட்டவழியானப் போராட்டம் என்பது தனியாகவும் தெருமுனைப் போராட்டங்கள் தனியாகவும், அரசியல் போராட்டங்கள் தனியாகவும் நடந்து கொண்டிருந்த வேளையில் தெருமுனை போராட்டங்களை அரசியல் போராட்டமாக, அரசியல் போராட்டத்தை சட்டரீதியான போராட்டமாக வளர்ந்தெடுத்து, தமிழகம் தழுவிய விசயமாக போராட்டமாக மாற்றியமைத்தீர்கள். அதன் விளைவு தான் இன்றைய வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் நடக்கும் மரண தண்டனைக்கு எதிரானப் போராட்டம் என்பது, மனித அடிப்படையில் மட்டும் அல்லாமல், சட்ட நீதியான அநீதி என்ற அளவில் மட்டும் அல்லாமல், தன் தேசிய இனத்திற்கு ஏற்பட்ட அவமானமாகவும், அழுக் காகவும் இச் செயலை மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள், இதன் விளைவுதான், மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தை சுமார் “கால் நூற்றாண்டு காலமாக உயிர்ப்புடன் வைத்துக் கொண்டு போராடியது, என்பதாகத்தான் இந் நிகழ்வை பார்க்கப் பட வேண்டும்.

இப்படிப்பட்டச் சூழலில் இந்த மாற்றத்திற்காக பாடுபட்ட உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் மைசூர் சிறைக் கைதிகள் சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள் கிறேன், இந்தத் தீர்ப்பு நமக்கு இன்னும் அதிக சக்தியை கொடுக்கும்.

மரண தண்டனை கொடுத்து பின், உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவரால் ஆயுள் தண்டனையாக தண்ட னைக் குறைப்பு, செய்தும் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் சுமார் 20,25 ஆண்டுகளாக விடுதலையாகாமல் உள்ள கைதி களையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த நேரத்தில் இதனை வலியுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விடத்தில் இன்னொரு செய்தியை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். தமிழகத்தில் 7 பேரின் விடுதலையுடன் கர்நா டகச் சிறையில் உள்ள நான்கு தமிழர்களின் விடுதலையும் முக்கியமானதே என்பதை தாங்கள் கருத்தில் கொண்டு இவர்களின் விடுதலைக்காவும் குரல் கொடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

நாங்கள் அனைவரும் மனித நேய அடிப்படையிலும், நீதி யின் படியும் சமூக பொருளாதாரா நிலைப்படியும், குடும்ப நிலைப்படியும் இப்படி எல்லா கண்ணோட்டத்திலும், ஏழைகள், ஆதிவாசிகள், இந்த புதிய சமூகத்தின் எவ்வித உதவிகளும் கிடைக்காதவர்கள், காவல்துறையின், பொய் வழக்கால், பொய்யான சாட்சிகளின் மூலம், வாழ்க்கையின் எல்லா வசந்தங்களையும், இழந்தவர்கள், இப்படிப்பட்ட எங்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுக்கும் நமது தமிழர் கண்ணோட்டம் மூலம் அய்யா பழ. நெடுமாறன், அண்ணன் திரு வைகோ , அண்ணன் திரு கொளத்தூர் மணி , அண்ணன் திரு வேல்முருகன் அண்ணன் திரு சீமான் ஆகியோருக்கு இதன் மூலம் கேட்டு கொள்கிறோம்,

நாங்கள் அனைவரும் எங்கள் ஒட்டுமொத்த வாழ்வில் சரிபாதி வாழ்க்கையை இந்த இருண்ட சிறைக் கொட்டடிக் குள்ளே கழித்து விட்டோம், வீரப்பன் இறந்த பின்பும் கூட இரண்டு மாநில அரசும் எங்களை இன்னும் சிறைப்படுத்தி வைத்துள்ளது என்ன ஞாயம் உள்ளது?

எங்களை போல் சாமானிய மக்களை இச்சமூகத்திற்கு எந்த வித அபாயத்தை ஏற்படுத்த முடியும் இன்னும் எவ்வளவு நாள் தான் நாங்கள் சிறையில் இருக்க வேண்டும்? யாருடைய தவறுக்கு யார் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரியவில்லை.

இச்சூழல் அடுத்த அமைய இருக்கும் மத்திய அரசியல் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள், எந்த கட்சியைச் சேர்ந்த வர்களாக இருந்தாலும், பாராளுமன்றத்தில் “மரண தண்டனை ஒழிப்புக் கான தனிநபர் தீர்மானத்தைக் கொண்டு வர நாம் வலியுறுத்த வேண்டும்.

மரண தண்டனை என்ற சட்ட பிரிவு, சட்ட புத்தகத்தில் இருந்து நீக்கும் வரை நாம் இப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும், தமிழக அரசியல் கட்சிகள், தமிழகத்தில் மரண தண்டனையை எதிர்த்து விட்டு அதை இரத்து செய்யும் மூலப் பிரச்சனையை மறந்து உட்கார்ந்து கொண்டுள்ளது. இதை சுட்டி காட்டி, தமிழக அரசியல் கட்சிகள், மரண தண்டனை ஒழிப்புக்கான தனி நபர் தீர்மானத்தை பாராளு மன்றத்தில் கொண்டு வர வலியுறுத்த வேண்டும்.

மரண தண்டனைக்கு எதிராகப் போராடிய தமிழக மக்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், சட்டரீதியான போராட்டத்தை நடத்திய வழக்கறிஞர்களுக்கும், தமிழக அரசியல் தலைவர்களுக்கும், மைசூர் தடா நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதி மன்றம் வரை எங்கள் வழக்கை கொண்டு சென்று எங்களுக்கு வாழும் உரிமையை பெற்று தந்த, வழக்கை நடத்திய அய்யா ஹென்றிடிபேன் அவர்களுக்கும் தமிழர் கண்ணோட்டம் மூலமாக மற்றும் ஒருமுறை கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்

அன்பரசு

Pin It