ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம். 

          அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்ப்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள். 

          இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் - பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.

          அரசமைப்பு விதி 343(1) இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும். (343(3))

          இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். (344-2(3)) இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.

          எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூறும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது :

          “348(2) மேலே உள்ள உட்பிரிவு (ணீ)யின் கிளை (1) இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதி மன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.

          ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.”

          இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.

          குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதி மன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.

          இந்த விதியின்படி தமிழக உயர்நீதி மன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழங்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.

          இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348 (2) ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.

          மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டி விட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348 (2) விதியின் உள்நோக்கம்.

          அதனால்தான் பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராசஸ்தான் மாநிலங்களில் இதே 348 (2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாக இந்தியைச் செயல்படுத்தி விட்டது இந்திய அரசு.

          இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

          குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல் கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.

          மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறியுள்ளது.

          வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இல்லை. இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.

          இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதி மன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.

          உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய் மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. இக்பால்.

          ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.

          உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருட்டிணன் கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில் (தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபாத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.

          பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.

          தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348 (2) க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.

          காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.

          இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988 இல் விதி 394கி என்ற சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்;ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.

          தமிழினம் தில்லிக்குக் காலனியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.

          உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!

- தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு

Pin It