கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

19 ஆம் நூற்றாண்டின் புதிய பார்வை

மனிதனின் தோற்றம் (Origin) பற்றி அறிவதில் ஆர்வம் 19 ஆம் நூற்றாண்டில் மிகுந்தது. மனித வகையின் ஒற்றைத் தன்மை அல்லது பன்முகத் தன்மை (Unity or plurality of the human species) பற்றி அறியும் ஆவல் மேலிட்டது. இதன் விளைவாக மாந்தவியல் மேலும் விரிவடைந்தது. மனித இனங்களை வகைபாடு செய்வது, மனித உடற்கூறுகளை ஆய்வு செய்வது, குடியேற்றப் பகுதிகளில் உள்ள மனிதர்கள் பேசும் மொழிகளை ஆய்வுக்கு உட்படுத்தி வகைபாடு செய்வது, அம்மொழிகளின் இலக்கணத்தை ஆய்வு செய்வது, பிற மொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வது, மனித சமூகங்களின் பொருளியல் வரலாற்றை ஆய்வு செய்வது - ஆகியவை மாந்தவியல் ஆய்வில் புகுந்தன.

இத்தகைய போக்கு முன்னமே தொடங்கி யிருந்தாலும் கூட, சார்லஸ் இராபர்ட் டார்வின் (Charles Robert Darwin 1809--1882) எழுதிய ‘உயிரினங்களின் தோற்றம்’ (On the Origin of Species) என்ற நூல் 1859 இல் வெளிவந்த போது அது புதுவிசையைப் பெற்றது. இனம் (Race) பற்றிய பார்வையும் மாற்றத்துக்குள்ளானது.

டார்வினின் கோட்பாடு ‘இயற்கைத் தேர்வு’ (Natural Selection) என்பதாகும். உயிர்களின் வளர்ச்சி மாற்றத்துக்குக் காரணமாக ‘படிநிலை மலர்ச்சி’ an class="con tentpane"> அல்லது பரிணாம வளர்ச்சி (Evolution) என்ற கோட்பாட்டை முன்வைத்தார்.

அதன் சாரம் இதுதான்:

உலகெங்கும் உயிர்கள் மிதமிஞ்சிப் பெருக்கமடைகின்றன. அவை உயிர்வாழத் தொடர்ந்து போராடுகின்றன. தகுதி உள்ளவை எஞ்சி வாழ்கின்றன. தகுதியற்றவை இயற்கையாலேயே அழிக்கப்படுகின்றன. தான்வாழும் சூழலுக்கு ஏற்ப உயிரினங்களிடத்தே மாறுபாடுகள் ஏற்படுகின்றன. பயனுள்ள இம்மாறுபாடுகள் பாரம்பரியமாக அடுத்தடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. இதனால் உயிரினங்கள் மாறுபாடுகளை அடைகின்றன.

வாழ்வதற்கான போராட்டம், தகுதியற்றவை அழிந்து போதல், தகுதியுடையவை எஞ்சிவாழ்தல் ஆகியவற்றையே டார்வின் ‘இயற்கைத் தேர்வு’ (Natural Selection) என்ற நிகழ்வாகக் குறித்தார். வாழ்க்கைப் போராட்டத்தில் தேவையான பண்புகள் மேலும் மேலும் வளரும், தேவையற்றவை தேய்ந்து மறையும். இதன்படி ஓர் உயிரினம் சூழலுக்கு ஏற்பத் தகவமைப்புகளை வளர்த்துக் கொள்கிறது. ஒரு தலைமுறையைச் சேர்ந்த தகவமைப்புப் பண்பு அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்ப டுவதால் மூதாதையரிடமிருந்து விலகிவிலகி ஒரு புதிய சிறப்பினமாக (Species) படிமலர்ச்சியின் விளைவாக உருவாகி விடுகிறது.

1871 இல் டார்வின் ‘மனிதனின் பாரம்பரியம்’ (The Descent of Man) என்ற நூலில், மனிதனின் மூதாதையர் குரங்கினமே என்று கருத்துரைத்தார். இது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.

உயிரியல் படிமலர்ச்சி எனப்படும் டார்வினியம் (Darwinism) அதுவரை இருந்த படைப்புக் கோட்பாட்டுக்கு வேட்டு வைத்தது. மனிதனைக் கடவுள் படைக்கவில்லை, பரிணாம வளர்ச்சியாலேயே மனித இனம் உருவாகியது என்ற இந்தக் கோட்பாடு சமூகம் பற்றிய ஆய்வுப் போக்குக்குப் பங்களித்தது.

நியூயார்க்கைச் சேர்ந்த இனவியலாளர் லூயி ஹென்றி மார்கன் (Lewis Henrry Morgan 1818-- 1881) டார்வினின் உயிரினப் படிமலர்ச்சிக் கோட்பாட்டை சமூகங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வில் பயன்படுத்தினார். செவ்விந்தியர் பற்றிய முதல் ஆய்வு நூலை 1851 ஆம் ஆண்டு எழுதினார். இது இராக்காய்ஸ் (Iroquois) என்ற செவ்விந்திய இனம் பற்றிய ஆய்வு ஆகும். இராக்காய்ஸ் இனத்தின் தாய்வழி குடும்ப அமைப்பு, உறவுமுறை பற்றிய அவருடைய கண்டுபிடிப்புகள் பிற செவ்விந்தியர் இனங்கள் பற்றிய ஆய்வுகளுக்கும் நீட்டிக்கப்பட்டன. அமெரிக்காவில் விரிவாக 139 வேறுபட்ட உறவுமுறைகளைப் (Kinship) பற்றி ஆய்வு செய்தார். அவருடைய ஆய்வுகள் ‘System of Consangunity and Affinity of the Human Family’ (1871) என்ற நூலாக வெளிப்பட்டன. மார்கனின் முக்கியமான ‘படைப்பு தொன்மை சமூகம் (Ancient Society - 1877) என்ற நூல் ஆகும்.

மார்கனுக்கு முன்னாலேயே துளிர்விட்டிருந்த ஒரு கருத்து இதில் முழுமையாகப் பேசப்பட்டது. அதாவது, எல்லா சமூகங்களுமே ஒரு படிநிலை வளர்ச்சியை அடைந்துதான் ஒரு பண்பட்ட, உயர்நிலையை அடைகின்றன என்று மார்கன் கூறினார். மனித சமூகம் ஒழுங்கற்ற ஒரு தொடக்கத்திலிருந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் உயர்நிலையை அடைந்தது என்றார் மார்கன். தாய் வழிச் சமூகம் என்பது இந்த படிநிலை வளர்ச்சியின் ஒரு கட்டம்.

மனித சமூகங்கள் பலவற்றை ஆய்வு செய்த மார்கன் மூன்று கட்டங்கள் உள்ள சமூக வளர்ச்சிப் படிநிலைகளைக் கண்டறிந்தார். அவை, 1. விலங்காண்டி நிலை (savegery), 2. காட்டுமிராண்டி நிலை (Barbarism), 3. நாகரிக நிலை (Civilization).

இத்தகைய நிலைகளில் நிலவும் எளிமையான மற்றும் வளர்ச்சியடைந்த தொழில் நுட்பங்களையும் ஆய்வு செய்தார். இந்த மூன்று படிநிலைகளையும் மேலும் உட்பிரிவுகள் கொண்டனவாகப் பிரித்தார். தாம் வகுத்துக் கொண்ட பண்பாட்டின் படி மலர்ச்சி நிலைகளைப் பல சமுதாயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தார். தற்போது, தொடக்க நிலையில் உள்ள விலங்காண்டி நிலையில் எந்தப் பண்பாடும் இல்லை என்றும், ஐரோப்பியர் நாகரிக நிலையில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். நாகரிக நிலை என்பதில் ஐரோப்பியரை மட்டுமின்றி, தொன்மை நாகரிகத்தவரான கிரேக்க, ரோமானிய, எகிப்தியரையும் வைத்தார்.

மனித சமூகத்தின் படிநிலை வளர்ச்சியை ஆய்வு செய்த போது, ‘குடும்பம்’ என்ற நிறுவனத்தை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் ஐந்து படிநிலை வளர்ச்சியைக் கண்டறிந்தார். மார்கனின் இந்த சமூகப் படிமலர்ச்சி ஆய்வு வேறு துறைகளிலும் பயன்பட்டது.

மார்கனின் படிமலர்ச்சி அணுகுமுறை மார்க்சியத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் மார்கனிடமிருந்து இந்த படிமலர்ச்சி அணுகுமுறையை மார்க்சிய மூலவர்கள் கடன்பெற்றார்கள் என்று கூறமுடியாது. மார்கனின் ‘தொன்மைச் சமுதாயம்’ (Ancient Society - 1877) என்ற நூல் வெளியாவதற்கு 30 ஆண்டுகள் முன்னரே ‘பொதுவுடைமை அறிக்கை’ (Communist Manifesto) வெளியிடப்பட்டு விட்டது. வியக்கத்தக்க வகையில், மார்க்சியம் விரித்துரைக்கும் இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவையுடன் பின்னாளில் வெளியான மார்கனின் ஆய்வு ஒத்துப் போயிருந்தது. தொன்மைச் சமூகங்கள் உருவான நிலையையும் மார்கன் பேசுகிறார். இது மார்க்சியம் இல்லாத அல்லது தேவைப்படாத ஒன்று ஆகும்.

மார்கனின் நூல் ஏங்கெல்ஸ் மீது ஆதிக்கம் செலுத்தியது. ஏங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ (Origin of the Family - Private property and State – 1884) என்னும் நூல் மார்கனின் நூலின் சாரத்தை அளிக்கிறது. மார்கனின் நூல் எவ்வாறு மார்க்சிய ஆய்வு முடிவுகளை வலுப்படுத்துகிறது என்று காட்டும் வகையில் ஏங்கெல்ஸ் எழுதினார். ஆனால் அரசு தோன்றிய விதம் குறித்து ஏங்கெல்ஸ் குறிப்பிடுவது மார்கன் பேசாத கருத்து ஆகும். சமூகப் படிமலர்ச்சியைப் பேசிய போது, மார்க்சியம் சமூகப்படிமலர்ச்சிக்கான காரணங்களைப் பேசியது.

மார்கனின் ஆய்வானது இனங்கள் பற்றிய ஆய்வில் ஒரு புதிய போக்கைத் தோற்றுவித்தது. அது பண்பாட்டு மானிடவியல் என்ற ஆய்வுப் போக்கை உருவாக்கியது. உலகில் உள்ள மனிதர்களின் உடல்சார் கூறுகளைக் கொண்டு வகைபடுத்தாமல் அவற்றைப் பண்பாட்டுச் சமூகங்களாக அடையாளம் காணும் போக்கு இதுவாகும். இது பண்பாட்டு மானிடவியல் என்ற போக்குக்கு வழிவகுத்தது.

பண்பாட்டு மானிடவியல் இவ்வாறு வரையறுக்கப்படுகிறது.

“உலகம் முழுவதும் எண்ணிலடங்கா வகைகளாகப் பரவி வாழும் சமுதாயங்களின் பண்பாட்டைக் காலப் பரிமாணங்களுடன் ஆராயும் மானிடவியல் பிரிவே பண்பாட்டு மானிடவியலாகும்.”

(பக்தவத்சல பாரதி, ‘பண்பாட்டு மானிடவியல்’ மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003, பக். 110)

பண்பாட்டு மானிடவியல் என்ற விரிந்த ஆய்வுத்துறையின் பிரிவுகளாக தொல்லியல் (Archaeology) மொழியியல் (Linguistics), இனக் குழுவியல் (Ethnography), இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnology) - ஆகியவை வளர்ச்சியுற்றன.

உடல்சார் மாந்தவியல் ஆய்வுப் போக்குக்குப் பின் எழுந்த சமூகம் சார்ந்த மானிடவியல் இரண்டு வகைப்பட்டது. அவை, ‘Social Anthropology’ எனப்படும் இங்கிலாந்தில் தோன்றிய ஆய்வுப் போக்கும், Cultural Anthropology எனப்படும் அமெரிக்காவில் தோன்றிய ஆய்வுப் போக்கும் ஆகும்.

அமெரிக்க செவ்விந்திய இனக்குழுக்களைப் பற்றி அறியும் ஆர்வம் ‘Cultural Anthropology’ எனப்படும் பண்பாட்டு மானிடவியலின் தளமாக இருந்தது. செவ்விந்தியர்களின் துயரம், அவர்களது கடந்த கால வாழ்வின் பாரம்பரியம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதனால் தொல்லியல் சான்றுகளைத் தேடுவது, தொன்மக் கதைகளை ஆய்வு செய்வது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், வரலாற்று அணுகுமுறையுடன் ஆய்வு செய்தல், மொழியியல், உடல்சார் மானிடவியல், தொல்லியல் போன்ற பிரிவுகளின் ஆய்வுகளால் கிடைத்த அறிவை பண்பாட்டு ஆய்வுகளுடன் இணைத்தல் - என்ற போக்கு தோன்றியது. இவ்வாறு எழுந்த ‘பண்பாட்டு இனவியல்’ ஒரு புதிய அணுகுமுறையாகும்.

பண்பாட்டு சமூகங்கள் என்பவை குறிப்பிட்ட நிலப் பரப்பில் குறிப்பிட்ட காலக் கட்டத்தில், மொழி, பண்பாடு, சமூக அமைப்பு, மரபுகள், நம்பிக்கைகள், தொழிற் செயல்பாடுகள், வாழ்வு முறை ஆகியவற்றுடன் வாழ்ந்த அல்லது வாழ்ந்து வரும் சமூகங்கள் ஆகும். ஒவ்வொரு பண்பாட்டு சமூகத்திலும் உடல்சார் மரபினங்களான நீக்ராய்டு, காகசாய்டு, மங்கோலாய்டு, போன்றவற்றின் இனக்கூறுகள் காணப்படலாம். பண்பாட்டு இனங்களைப் பொறுத்தவரை இனக்குருதித் தூய்மை பேசமுடியாது.

ஐரோப்பாவில் இன்று பல தேசிய இனங்களையும் (Nations) உருவாக்கியுள்ள ஆங்கில்ஸ், நார்மன்ஸ், செல்ட்டுகள், கோத்துகள் போன்றவை கடந்த காலத்திய பண்பாட்டு இனங்களே ஆகும்.

மாந்தவியல் ஆய்வில் உடல்சார் இனப்பிரிவுகளைப் பேசவும், பண்பாட்டு இனங்களைக் குறிப்பிடவும் ‘ஸிணீநீமீ’ என்ற ஆங்கிலச் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. இது புரிதலில் ஒரு குழப்பத்தை உருவாக்கும் என்பதால் நாம் காகசாய்டு, ஆஸ்ட்ரலாய்டு போன்றவற்றை ‘மரபினம்’ என்றும், ஒரு மொழி, பண்பாடு, தங்களுக்கென்று ஒரு வாழ்வுமுறை இவற்றுடன் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்கும் ஆங்கில்ஸ், நார்மன்ஸ் போன்ற இனங்களை ‘ பண்பாட்டு இனங்கள்’ (Cultural Race) என்றும் குறிப்பிடலாம்.

மனித சமூகங்களைப் பண்பாட்டு இனங்களாக அடையாளப்படுத்தும் போக்குக்கு, 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய மொழியியல் ஆய்வுகள் காரணமாக இருந்தன. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மொழியியல் ஆய்வுகள் மூலம் மொழிக்குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்த மொழிக் குடும்பப் பெயர்களே அந்தப் பண்பாட்டு இனங்களுக்கும் பயன்படுத்தப்பட்டன

மொழியியலில் ஒப்பாய்வுக்கு ஒரு முடுக்கம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியல் ஏற்பட்டது. ஆங்கிலேய கீழ்த்திசை அறிவாளரான (English Orientalist) சர் வில்லியம் ஜோன்ஸ் (1746--1794) கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். மனுநூல் போன்ற சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். மொழிகளின் ஒப்பாய்வு (Comparative Philology) தொடக்கம் கண்டது.

1786 இல் இந்தோ - ஜெர்மானிய அல்லது இந்தோ - ஐரோப்பிய மொழிகள் பற்றிய ஆய்வு தொடங்கியது. மொழியியல் சான்றுகள், மாந்தக் கூட்டங்களின் இடப்பெயர்வு மற்றும் கலத்தல் ஆகியவற்றின் வரலாற்றை மறுகட்டுமானம் செய்யவல்லவையாகக் கருதப்பட்டன.

வில்லியம் ஜோன்ஸ் பழங்கால சமஸ்கிருதப் பண்பாட்டையே இந்தியப் பண்பாடென்று கூறினார். கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிறந்திருக்க வேண்டும் எனக் கண்டார். ஆரிய இன ஓர்மை உணர்வும், ஆரிய இன மேன்மைக் கோட்பாடும் இதிலிருந்தே தொடக்கம் கண்டது. இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்தே உருவானவை என கீழைத் தேயவியலாளர்கள் (Orientalists) கருதினர். இது ஆரிய இன உணர்வை இந்தியத் துணைக் கண்டத்தில் உசுப்பியது.

ஹூம் போல்ட் மற்றும் மாக்ஸ் முல்லர் ஆகியோரின் ஆய்வுகள் ஆரிய இன மேலாண்மைக் கோட்பாட்டுக்குப் பங்களித்தன. ஹூம் போல்ட் சமஸ்கிருத மொழிமரபினரை ‘ஆரிய இனம்’ (Aryan Race) என்று வரையறுத்தார். இந்த ஆரியர்கள்தாம் ஐரோப்பியர்களுக்கும், இந்தியப் பார்ப்பனர்களுக்கும் மூதாதையர் என்று ஜெர்மானிய ரொமான்டிக் சிந்தனையாளர்கள் கருத்துரைத்தனர்.

மொழிக்கும் இனத்துக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்ற புரிதல் ஏற்பட்டிருந்தது. மொழியியல் ஒப்பாய்வின் அடிப்படையில் மனித சமூகங்களின் சமயங்களைப் (Religion) பற்றி ஆய்வு செய்ய மாக்ஸ் முல்லர் (Max Muller, 1823-1900) முனைந்தார்.

சமயங்களின் தந்தை என்றழைக்கப்பட்ட மாக்ஸ் முல்லர் இவ்வாறு கூறினார் :

“குறிப்பாக மனித அறிவின் தொடக்க வளர்ச்சி வரலாற்றிலாவது - மொழி, சமயம், தேசிய இனம் (Nationality) - இவற்றிற்கிடையில் மிக நெருக்கமான உறவு இருந்திருக்கிறது’

அவருடைய இந்தப் புரிதல், ‘மரபுக் கூறுகளின் அடிப்படையிலான சமயங்களின் வகைபாடு’. (Genetic Classification Of Religion) என்ற கோட்பாட்டிற்கு அடிப்படையை அளித்தது. அதாவது ஒத்த வழிபாட்டுக் கூறுகளைக் கொண்ட மக்கள் ஒரு பொதுப் பாரம்பரிய மூலத்தைக் கொண்டவர்கள் - என்று இக்கோட்பாடு கூறுகிறது.

இதன்படி ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் மூன்று மொழிப் பெருங்குடும்பங்களுக்குச் சொந்தமான இனங்கள் இருப்பதாக ஏற்கப்பட்டது. அவை, 1. துரானியர்கள் (Turanians), 2. செமிட்டிகள் (Semites), 3. ஆரியர் (Aryans) (The New Encyclopedia britanica macropaedia, vol.15, chicago,1977, p 629)

இவ்வாறு மொழிக்குடும்பப் பெயர்களின் அடிப்படையில் அம்மக்கள் தொகுப்புகள் ‘இனங்களாக’ அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் இணைந்திருந்த இந்த இனங்கள் பின்னர் எண்ணிறந்த மொழியினங்களாக பிரிவுற்றது. மொழியையும், சமயங்களையும் ஆய்வு செய்து இனத்தின் துணைப் பிரிவுகளிடையே நிலவும் ஒருமித்த தன்மையை மாக்ஸ் முல்லர் வெளிக் கொணர்ந்தார். ஆரிய மொழி, இலக்கியம், புராணக் கதைகளின் ஒப்பீடு - ஆகிய ஆய்வுகள் மாக்ஸ் முல்லரின் சிறந்த பங்களிப்பு ஆகும்.

மாக்ஸ் முல்லர் வேதங்களை இந்தோ - ஐரோப்பிய ஆவணங்கள் என்றும், ஐரோப்பிய - இந்திய ஆரிய மொழிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டதாகவும் உணர்ந்தார். இந்தியப் பார்ப்பனர்களும் ஐரோப்பிய வௌ;ளை இனத்தவர்களும் ‘ஆரிய’ உணர்வோடு கை கோக்க வழிகோலினார். மாக்ஸ் முல்லரின் மொழிஆய்வு ஆரிய இன உணர்வுக்கு வழிகாட்டியது.

தென்னிந்திய மொழிகள் பற்றிய ஒப்பாய்வு திராவிடர் என்ற உணர்வு தென்னிந்தியாவில் எழக் காரணமானது. சென்னை மாவட்ட ஆட்சியராகவும் வேறு உயர் பதவிகளிலும் இருந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ் (Francis Whyte Ellis, 1777 – 1819) தமிழ்மொழி மீது அளவற்ற ஆர்வம் கொண்டு அம் மொழியைக் கற்றார். தமிழ்மொழி பெயர்ப்பிலும், தமிழ் நூல்களை அச்சேற்றுவதிலும் ஆர்வம் கொண்ட எல்லீஸ் திராவிட மொழிக்குடும்பம் பற்றி முதலில் கருத்துரைத்தவர் ஆவார். 1816 இல் காம்பெல் எழுதிய இலக்கண நூலுக்கு வரைந்தளித்திருந்த முன்னுரையில் ‘தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு’ ஆகியவை ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்று ஆய்வின் அடிப்படையில் தெரிவித்திருந்தார்.

அடுத்து வந்த இராபர்ட் கால்டுவெல் (1819-- 1891) என்ற ஸ்காட்லாந்திய சமயப் பரப்புனர் தமிழையும், பிற தென்னிந்திய மொழிகளையும் மிக விரைவாகக் கற்றுக் கொண்டு, ஒப்பிலக்கண ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கால்டுவெல் தாம் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative grammar of the Dravidian on South Indian Family of Languages, 1856) என்னும் நூலில், ‘தென்னிந்திய மொழிகள் அனைத்தும் பொது இலக்கண இயல்புகளைப் பெற்றுள்ளமையாலும் வேர்ச் சொற்கள் ஒன்றாகவே இருப்பதாலும், இம்மொழிகள் ஒரு மூலத்திலிருந்து பிறந்தவை’ என்றும், தென்னாட்டு மக்களையும், மொழியையும் குறிக்க சமஸ்கிருத மொழிநூல் ஆரியர்கள் ‘திராவிடம்’ என்ற சொல்லை முன்னமே பயன்படுத்தியிருப்பதாலும், அச்சொல் தகுதியுடையதே என்று, தான் தெரிவுசெய்து கொண்டதாக கால்டுவெல் குறிப்பிடுகிறார். (Robert Caldwell, A Comparative grammar of the Dravidian on South Indian Family of Languages - 1856, Kavithasaran pathipagam, Chennai 2008 P.5)

திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் பெயரே என்பதை கால்டுவெல் கூறுகிறார். தமிழை மட்டும் குறிக்க தமிழ் என்னும் சொல்லையும், தமிழையும் அதன் கிளை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்றவற்றையும் குறிக்க ‘திராவிடம்’ என்னும் சொல்லையும் தான் பயன்படுத்துவதாகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.(மேலது பக். 8)

தமிழ் என்ற சொல்லுக்கான சமஸ்கிருதச் சொல் ‘திராவிட’ என்றும், அச்சொல் திராவிடர் என்று அழைக்கப்படும் மக்கள் வாழும் நாட்டையும், அவர்களது மொழியையும் குறிக்கும் என்றும் கால்டுவெல் குறித்தார். (மேலது பக். 12)

கால்டுவெல்லின் காலத்திற்கு முன்பே ‘திராவிடம்’ என்ற சொல்லும் ‘திராவிடர்’ என்ற சொல்லும் புழக்கத்திலிருந்தன. ஆனால் அச்சொல் எவரைக் குறித்தது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கால்டுவெல் தம் ஆய்வின் தேவைக்கேற்ப சொற்களைத் தெரிவு செய்து கொண்டார்.

1865இல் மாந்தவியலாளர் தாமஸ் ஹக்ஸ்லி (Thomas Huxley) ஓர் ஆரியருக்கும் ஒரு திராவிடருக்கும் தமக்கு வேறுபாடு தெரியவில்லை எ;னறு குறிப்பிட்டார். 1898 இல் பிரெட்ரிக் ராட்சல் (Friedrich Ratzel) என்ற இனவியலாளர் திராவிடர்கள் மங்கோலிய உடற்பண்புகளைக் கொண்டிருப்பதாகக் குறித்தார்.

இவ்வாறு தென்னிந்திய மக்களைத் ‘திராவிடர்கள்’ என்ற குறிக்கும் போக்கு கால்டுவெல்லின் ஆய்வுக்குப் பிறகு ஏற்பட்டது. மேலை நாட்டு அறிஞர் பெருமக்கள் இப்போது தங்கு தடையின்றி ‘ஆரியர்’ என்றும் ‘திராவிடர்’ என்றும் தங்கள் நூல்களிலும், ஆய்வேடுகளிலும் எழுதிக் குவித்தனர். இதற்கு முன்பு இதே மேலை நாட்டு அறிஞர்கள் தென்னிந்தியர்களைக் குறிக்கவும், தென்னிந்திய மொழிகளைக் குறிக்கவும் ‘Tamulic’ என்ற சொல்லையும், Tamilian என்ற சொல்லையும் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

அவ்வாறெனில் ‘திராவிடர்’ என்ற சொல் இதற்குமுன் புழக்கத்தில் இருந்ததில்லையா? இருந்தது. ஆனால் அது எவரைக் குறித்தது என்பதுதான் நமக்கு வியப்பளிக்கும் செய்தி.

‘திராவிடர்’ என்பது தென்னிந்தியப் பார்ப்பனர்களை மட்டும் குறிக்கும் சொல்லாகவே நீண்ட காலமாக, 19 ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட இருந்து வந்தது என்பதே அச்செய்தி.

- முனைவர் த.செயராமன்