தாய்மொழி புறக்கணிப்பு, தாயக வன்கவர்தல் ஆகியவைதான் சீனாவில் அண்மையில் நடந்த உரும்கி கலவரத்தி ற்கு  அடிப்படைக் காரணங்கள் ஆகும். சீனாவின் மேற்கு மூலையில் உள்ளது ஜிங்ஜியாங் மாநிலம். உய்கூர் (Uighur) என்ற தேசிய இனத்தின் தாயகமான அப்பகுதியானது, 1949 சீனப்புரட்சிக்கு முன்னால் துர்க்கிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக விளங்கியது. துர்க்கிக் (Turkic) மொழி அவர்கள் தாய் மொழி. மதத்தால் அம்மக்கள் இசுலாமியர்கள். அவர்கள் தமது தாயகத்தை உய்கூர் என்று அழைப்பதுண்டு.

புரட்சிக்குப் பின்னால் இவர்களது தாயகம் சீன நாட்டோடு வலுவந்தமாக இணைக்கப்பட்டது. உய்கூர் எண்ணெய் வளம் மிக்கப் பகுதி. இப்பகுதி சீன செம்படையால் ஆயுத வலுவில்  இணைக்கப்பட்ட பிறகு ஜிங்ஜியாங் மாநிலம் என சீன மொழியில் பெயரிடப்பட்டது.

உய்கூர் இன மக்கள் தமது தனித்த அடையாளத்தை வலியுறுத்தி வந்தனர். இதனை எதிர்கொள்ளும் விதத்தில் சீன அரசு சில சலுகைகளை அம்மக்களுக்கு வழங்கினாலும், அடிப்படையில் தமது ஆக்கிரமிப்பை வலுப்படு்த்தியே வந்தது. உய்கூர் மண்டலத் தன்னாட்சி நிர்வாகம் என்ற சிறப்பு நிர்வாக ஏற்பாடு அப்பகுதிக்கு வழங்கப்பட்டது. மசூதிகள் கட்டித்தரப்பட்டன. ஒரு பிள்ளைதான் பெற்றுக்கொள்ளலாம் என்ற குடும்பக் கட்டுப்பாட்டு விதி உய்கூர் மக்களுக்குத் தளர்த்தப்பட்டது. அவர்கள் இரண்டு பிள்ளைகள் பெற்றுக்கொள்ளலாம்.

ஆயினும் சீனாவின் பெரும்பான்மை தேசிய இனமான ஹன் தேசிய இனத்தின் மாண்டரின் (சீனமொழி) உய்கூர் மக்கள் மீது திணிக்கப்பட்டது. சீனமொழி படித்தால்தான் உய்கூரிலேயே வேலை என்ற கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. ஜிங்ஜியாங் உய்கூர் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்ற நிலை சீன அரசால் திட்டமிட்ட முறையில் சீர்குலைக்கப்பட்டது. ஹன் தேசிய இன மக்கள் உய்கூரில் திட்டமிட்ட முறையில் பெரும் எண்ணிக்கையில் குடியேற்றப்பட்டனர். உய்கூரின் இப்போதைய மக்கள் தொகை இரண்டு கோடி. 1949-ல் உய்கூரில் 80மூ அளவு உய்கூர் தேசிய இன மக்கள் இருந்தனர். 2004 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பார்த்தால் அவர்களது தொகை 45% என்ற அளவுக்கு சுருங்கிப் போனது.

மாறாக, 1949-ல் வெறும் 8% ஆக இருந்த உய்கூரின் ஹன் சீன மக்களின் தொகை 2004-ல் 40% ஆக உயர்ந்தது. அரசின் திட்டமிட்ட குடியேற்றக் கொள்கையே இந்நிலைக்குக் காரணம். எண்ணெய் தூய்மையாக்கல் நிலையங்கள், உரத்தொழிற்சாலைகள, பொம்மைத் தொழிலகங்கள் என்று உய்கூர் பெருமளவு தொழில் வளர்ச்சி பெற்று வருகிறது. ஆயினும் இந்த வளர்ச்சியின் பயன்கள் உய்கூர் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.  உயர் ஊதிய வேலைகளி லெல்லாம் ஹன்சீன தேசிய இனத்தவரே நியமிக்கப்பட்டனர. உய்கூர்கள் அத்தக் கூலிகளாக வைக்கப்பட்டனர். உய்கூர் மக்களிடையே கொடுமையான அளவு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தமது துர்கிக் மொழியும், உய்கூர் தாயகமும் சீன ஹன் தேசிய இன ஆதிக்கத்தில் சிக்கித் தவிப்பதை எதிர்த்து உய்கூர் இன இளைஞர்கள் அவ்வப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘துர்க்கிஸ்தான் விடுதலை இயக்கம்’ என்ற அமைப்பு சார்பில் பெய்ஜிங் ஒலிம்பிக் நேரத்தில்  பெருங்கிளர்ச்சிகள் நடந்தன.  அக்கிளர்ச்சி சீனப்படையால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. இப்போது குவாங்டங் மாநிலத்தில் ஏற்பட்ட சிறு மோதலைத் தொடர்ந்து உயர்கூரின் கலவரம் வெடித்தது. உய்கூர் தலைநகரான உரும்கி 2009, சூலை 5 தொடங்கி ஐந்து நாள்கள் பற்றி எரிந்தது.

ஹன்சீன இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெட்டியும், எரித்தும் உய்கூர் இளைஞர்களால் கொல்லப்பட்டதாக சீன அரசு கூறியது. நூற்றுக்கும் மேற்பட்ட உய்கூர் இன இளைஞர்கள் சீன படையாட்களால் சுட்டுக்கொல்லப்பட்டு, பல்லாயிரம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக "உலக உய்கூர் பேராயம்" (World Uighur Congress) என்ற அமைப்பின் தலைவி ரெபியா கதீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர் சீன அரசுக்கு அஞ்சி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர். வாசிங்டனில் இருக்கிறார். சுதந்திரச் சீனாவின் வரலாற்றில் இதுபோன்ற தீவிரக் கிளர்ச்சி இதுவரை நடந்ததில்லை. அதனால் தான் சீனக்குடியரசுத்தலைவர் ஹுஜிண்டாவோ எகிப்தில் ஜி-8 மாநாட்டிலிருந்து பாதியிலேயே அவசர அவசரமாக பெய்ஜிங் திரும்பினார்.

பல்லாயிரம் படையினர் குவிக்கப்பட்டு,வீடு வீடாக தேடுதல் வேட்டை அச்சுறுத்தல் நடத்தி அதன்பிறகு இப்போது அங்கு ‘அமைதி’ திரும்பியுள்ளது. ஆயினும் இது அடக்குமுறையினால் அமுக்கி வைக்கப்பட்ட ‘அமைதி’. இது நீடிக்காது. மீண்டும் போராட்டம் வெடிக்கும். உய்கூரின் தாயக வன்கவர்தலை சீன அரசு கைவிட வேண்டும். துர்க்கிக் மொழி கற்பதற்கும், அவ்வாறு கற்றவர்கள் சீனாவில் வேலை வாய்ப்பைத் தடையின்றி பெறுவதற்கும் உறுதி செய்ய வேண்டும்.

உய்கூர் தேசிய இன மக்கள் தங்கள் தேசிய விழைவை சுதந்திரமாக வெளியிட சீன அரசு அனுமதிக்க வேண்டும். அவர்கள் விழைவின்படி அவர்கள் தமது எதிர்கால அரசியலை அமைத்துக்கொள்ள உய்கூர்களின் தன்னுரிமையை சீன அரசு அங்கீகரிக்க வேண்டும்.  உய்கூர் மக்களின் தாயகப் போராட்டம் வெல்லட்டும

Pin It