அனைத்துலகப் பொருளியல் பேரவையும் (World Economic Forum), எல்லன் மேக் ஆர்த்தர் நிறுவனமும் இணைந்து நடத்திய ஓர் ஆய்வின் முடிவு, அனைத்துலக அளவில் வெளிவந்து கொண்டிருக்கும் தி கார்டியன், வாசிங்கடன் போஸ்ட், டெய்லி டெலிகிராப் போன்ற முன்னணி நாளேடுகளில் தலைப்புச் செய்தியாகி உள்ளது. “2050ஆம் ஆண்டு, கடலில் மீன்களை விட அதிக எண்ணிக்கையில் நெகிழிக் குப்பைகளே   இருக்கும்” என்பதே அந்த ஆய்வு முடிவு! ஆம். படிக்க அதிர்ச்சியாக இருந்தாலும், அதுதான் உண்மை என்கிறது, இந்த ஆய்வு!

“புதிய நெகிழிப் பொருளியல்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், பல உலக நாடுகள் கடலில் நெகிழிக் குப்பைகளை அதிகளவில் கொட்டி வருவதும், அதன் காரணமாக 2050ஆம் ஆண்டு கடலில் உள்ள மீன்களை விட நெகிழிக் குப்பைகளே  (பிளாஸ்டிக் குப்பைகள்) அதிக எடையுள்ளதாக இருக்கும் என்றும் கண்டறியப்பட்டது.

உலக நாடுகளின் கழிவுகளைப் பட்டியலிட்டு, அதில் எவ்வளவு நெகிழிக் கழிவுகள் என்று வரை யறுத்து, அதில் எவ்வளவு மறுசுழற்சி செய்யப்படு கின்றன என்றெல்லாம் ஆராய்ந்து, ஜார்ஜியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜென்னா ஜெம்பேக், யோர்க் பல்கலைக் கழகப் பேராசிரியர் கல்லம் இராபர்ட் ஆகியோர் உலகளவிலான நெகிழிக் குப்பை களைக் கணக்கிட்டனர்.

பிரிட்டனின் “சூழலியல் _- மீன்வளர்ப்பு அறிவியல் நடுவம்’’ என்ற அரசு நிறுவனம், 2008ஆம் ஆண்டு எடுத்த செயற்கைக்கோள் படங்களை வைத்து, உலக அளவில் மீன்களின் எடை கணக்கிடப்பட்டது.

இவை இரண்டையும் ஆராய்ந்து, 2050ஆம் ஆண்டு கடலில் வாழும் மீன்களின் எடை சற்றொப்ப 899 மில்லியன் டன் இருக்கும் என்றும், நெகிழிக் குப்பைகளின் எடை 850 மில்லியன் டன்னிலிருந்து 950 மில்லியன் டன் வரை இருக்கக்கூடும் எனக் கணக்கிடப்பட்டது.

கடந்த 1964ஆம் ஆண்டு உலகளவில் வெறும் 15 மில்லியன் டன் நெகிழிப் பொருட்களே உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இது 2014ஆம் ஆண்டு, சற்றொப்ப 311 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இன்றைக்கு நடைபெற்று வரும் இந்த நெகிழிப் பொருட்களின் உற்பத்திக்காக, உலகளவில் 6 விழுக் காட்டு எண்ணெய் வளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, 2050ஆம் ஆண்டு சற்றொப்ப 20 விழுக் காடாக உயரக் கூடும் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது.

நாம் பயன்படுத்தும் இந்த நெகிழிப் பொருட்களில், 70 விழுக்காட்டுப் பொருட்கள் நிலப்பகுதிகளிலும், நீர் வழித் தடங்களிலும் குப்பைகளாக வீசப்பட்டு வருகின்றன. அதில், பல மில்லியன் டன் நெகிழிக் குப்பைகளாக கடலில் மிதக்க விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிமிடமும் சற்றொப்ப 8 மில்லியன் டன் நெகிழிக் குப்பைகள் கடலுக்குள் செலுத்தப்படுவதும், அது மேலும் மேலும் அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.

மிதக்கவிடப்பட்டுள்ள இந்தக் குப்பைகள் மக்கிப் போகாமல், மீன்கள், ஆமைகள், முதலைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்து விளை விப்பவையாக உள்ளன.

நெகிழிக் குப்பைகளை மறு சுழற்சி செய்யும் முயற்சிகளை விரைவுபடுத்தினால், ஓரளவு இந்த மாசுபாட்டைக் குறைக்க முடியும். ஆனால், அந்த முயற்சிகள் குறைவாகவே நடைபெற்று வருகின்றன. வெறும் 14 விழுக்காட்டு நெகிழிப் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்த ஆய்வு முடிவு, உலகளவில் கடலில் குவிக்கப்பட்டுக் கொண்டுள்ள நெகிழிக் குப்பைகளின் அளவை வெளிப்படுத்தியதுடன், அதற்கெதிரான உலகளாவிய செயல் திட்டத்திற்கான விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

முடிந்தளவு நெகிழிப் பொருட்களின் பயன்பாட் டைத் தவிர்ப்பதும், பயன்படுத்திய நெகிழிப் பொருட் களை குப்பையில் வீசாமல் மறு சுழற்சியில் பயன் படுத்துவதும் அதற்கான தொழில்நுட்பங்களும் தான் இன்றைய தேவை!

Pin It