கடந்த பத்தாண்டுகளாக இரசியாவில், பழைய சோவியத் இரசியாவிலிருந்து பிரிந்து போன உக்ரைன், உஸ்பிகிஸ்தான், கசகஸ்தான், அசர்பெய்ராஜான், டஜகஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் குறைந்த கூலிக்காக, இரசியாவின் பல்வேறு தொழில்களிலும் பணியமர்த்தப்பட்டனர். தெற்கு காகஸ் பகுதிகளைச் சேர்ந்த இசுலாமியர்களும் இதில் கணிசமாக இருந்தனர். மேலும், அசர்பெய்ஜான், செசன்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இரசியாவின் வணிகங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

மக்கள் தொகையில் உலகின் 9ஆம் நாடாக சற்றொப்ப 14.5 கோடி மக்கள் வசித்துக் கொண்டுள்ள இரசியாவில், தற்போது சற்றொப்ப 1.3 கோடி வெளிநாட்டவர்கள் அனுமதி பெற்றும், 40 இலட்சம் பேர் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகவும் குடியேறியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே அமெரிக்காவை அடுத்து இரசியாவில் தான் அதிகளவிலான வெளிநாட்டவர்கள் பணி நிமித்தமாக அதிகளவில் குடியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (காண்க: தி இந்து, 14.10.2013).

இவ்வாறு, இரசியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுள், அவரவர் நாடுகளில் குற்றம் புரிந்து விட்டுத் தப்பியோடி வந்த குற்றவாளிகளும் கணிசமாக இருந்தனர். இதன் காரணமாக, இரசியாவிலும் அவ்வப்போது அவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது நடைபெற்று வந்தது.

இரசியாவில் குடியேறுகின்ற வெளிநாட்டவர்கள் அங்கு பணிபுரிவதற்கான அனுமதி பெறவும், வீடு உள்ளிட்ட சலுகைகள் பெறவும் இரசிய அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் பெருமளவில் கையூட்டு அளிப்பதால், அவர்களை அதிகளவில் இரசியாவில் உள்நுழைய அரசு அதிகாரிகள் அனுமதிக்கும் போக்கும் அங்கு நிலவி வருகின்றது.

ஏற்கெனவே, பொருளியல் நெருக்கடியின் காரணமாக வேலையிழந்து நின்ற இரசியர்கள், வெளியாரின் வருகைக்கும், அவர்களது வணிக ஆதிக்கத்திற்கும் பல இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இரசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெளியார் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென கோரிக்கைகள் விடுத்து வருகின்றன.

இன்னொருபுறத்தில், மண்ணின் மக்களான இரசியர்களுக்கும், வெளி நாட்டவர்களுக்கும் அவ்வப்போது ஆங்காங்கு சிறு சிறு மோதல்கள் ஏற்படுவது இரசியத் தலைநகர் மாஸ்கோவில் வாடிக்கையாகிப் போனது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகத்து மாதம், வடக்கு இரசியாவின் கொன்டோபோகா (Kondopoga) நகரத்தில், அசர்பெய்ஜான் – செசன்யா நாட்டைச் சேர்ந்தவர்களால் 3 இரசியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரிலுள்ள அசர்பெய்ஜான் – செசன்யா நாட்டவர்கள் நடத்தும் நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அனைத்து வெளிநாட்டவர்களையும் உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனக் கோரி, இரசிய மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். (காண்க: தி இந்து, 05.09.2006) இதன் காரணமாக பெருமளவில் வெளிநாட்டவர்கள் அந்நகரை விட்டு வெளியேறினர்.

கடந்த 2010ஆம் ஆண்டு திசம்பர் மாதம், இரசிய உதைப்பந்தட்ட இரசிகர் ஒருவர் வெளிநாட்டவர் ஒருவரால் கொல்லப்பட்டதையடுத்து, மாஸ்கோவிலுள்ள வெளி நாட்டவர்களை வெளியேற்ற வேண்டுமெனக் கோரி மாஸ்கோவின் மனேஸ்நயா சதுக்கத்தில் (Manezhnaya Square) இரசியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து, 2011ஆம் ஆண்டு, இரசியாவில் குடியேறும் வெளிநாட்டவர்களுக்கு இரசிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. 2012ஆம் ஆண்டு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரசியாவிற்குள் நுழையமுடியாதபடி வெளியேற்றப்பட்டனர். ஆனாலும், இரசியாவில் குடியேறும் வெளியாரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இவ்வாறான நிலையில் தான், கடந்த 10.10.2013 அன்று, இரசியத் தலைநகர் மாஸ்கோவின் தெறகு மாவட்டமான பிர்யுலியோவோ (Biryulyovo) பகுதியில், வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து, தனது காதலியை பாதுகாக்க முயன்ற இகோர் ச்செர்பகோவ் (Egor Shcherbakov) என்ற 25 அகவை இரசிய இளைஞன், வெளிநாட்டவர் ஒருவரால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.

அவரைக் கொலை செய்த வெளிநாட்டவர், வடக்கு காகஸ் பகுதியைச் சேர்ந்த இரசியரல்லாத இசுலாமியர் என அங்கிருந்த கமுக்க ஒளிப்படக் கருவிகளை ஆராய்ந்து காவல்துறையினர் கண்டறிந்தனர். எனினும், அவர் கைது செய்யப்படவில்லை.

இதனையடுத்து, சக இரசியரின் சாவுக்கு நீதி கேட்டும், இகோரைக் கொன்றக் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரியும், பிர்யுலியோவோ நகரில் நூற்றுக்கணக்கான இரசிய மக்கள் 13.10.2013 அன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இகோர் இறந்த இடத்தில், மலர்களைத் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி, ‘இரசியா இரசியர்களுக்கே’ என முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இன்னொரு குழுவினர், வெளியாருக்கு பணியளித்து வரும் காய்கறி நிறுவனங்களின் கடைகளையும், பொருட்களையும் அடித்து நொறுக்கித் தீ வைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றதையடுத்து, காவல்துறை வாகனங்களும், மகிழுந்துகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தூக்கி வீசப்பட்டன. இதன் முடிவில், 380 இரசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

மறுநாளான, 14.10.2013 அன்று இகோரைக் கொன்ற கொலையாளியை தேடியும், எதிர்த்தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சியும் பிர்யுலியோவோ நகரில், 1200 வெளிநாட்டவர்களையும், வடகிழக்கு மாஸ்கோவில் 450 வெளிநாட்டவரையும் இரசியக் காவல் துறையினர் கைது செய்தனர்.

”எங்களால் இந்தப் பகுதியில் வாழவே முடியாது. எந்த நேரமும் இங்கு விமானச் சேவை வசதியுண்டு. இங்கு பணிபுரிபவர்கள் நல்லவர்களாக இல்லை. அவர்களுள் குற்றவாளிகளும் இருக்கின்றனர்” என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்ற 23 அகவை இரசிய இளைஞர் (காண்க: தி கார்டியன், 13.10.2013).

மாஸ்கோ ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய இரசிய அதிபர் விளாடிமிர் புடின், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல தொழில்களுக்கும் வெளிநாட்டவர்கள் அவசியம் தேவைப்படுவதாகச் சொன்னார். ஆனால், அவர்களின் எண்ணிக்கையை வணிகத்தில் குறைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளியாரின் எண்ணிக்கையை வரம்புக்குள் வைப்பதற்கான விசா நடைமுறைக் கொண்டுள்ள இரசியா போன்ற நாடுகளிலேயே இவ்வாறான நிலையெனில், இது போன்று எந்தவொரு நடைமுறையும் இல்லாமல் வந்தேறிகளின் வேட்டைக்காடாக உள்ள தமிழ்நாட்டின் நிலை என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம்?

Pin It