ஓர் இனம் தனது கடந்த காலச் சாதனைகளைத் தொடர்ந்து நினைவு கூர வேண்டியது எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை அது தனக்கேற்பட்ட அவலங்களை நினைவு கூர்வது!

முள்ளிவாய்க்கால் நம் இனத்தின் தோல்விக்கான அடையாளமன்று. நம் இனத்தின் வீரத்திற்கான அடையாளம். உரிமைக்காக உயிரைக் கொடுப்போமே தவிர உயிருக்காக உரிமையைப் பலியிடமாட்டோம் என்று இலட்சக் கணக்கான தமிழர்கள் உலகறியப் பறைசாற்றி பகைவனை நேருக்கு நேர் சந்தித்த புரட்சி மண் முள்ளிவாய்க்கால்! தேசவிடுதலை வேள்வியில் அஃறிணைப் பிராணிகளல்ல, மனிதர்களே ஆகுதி ஆன புனித மண் அது!

அந்த முள்ளிவாய்க்கால் மண்ணுக்குத் தஞ்சையில் அரண்மனை எழுப்பியுள்ளார் ஐயா பழ.நெடுமாறன்!

அந்த வீரம், அந்த மானம், அந்த ஈகம், அந்த அவலம் ஈழத் தமிழர்களுக்கு மட்டும் உரியதன்று, தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் உரியது! உலகெங்கும் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராடுகின்ற அத்தனை இனங்களுக்கும் மக்களுக்கும் உரியதாகும், ஊக்கமளிப்பதாகும்!

பொறியியல் அற்புதமாக, தமிழினத்தின் புகழின் வெளிச்சமாக, கலைத்திறனின் காட்சி யாகத் தஞ்சையில் பேரரசன் இராசராசன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரிய கோயிலை எழுப்பினான். அதே தஞ்சையில் இன்று சிற்பக் கலையின் சிகரமாக விடுதலைப் போரின் வெளிச்சமாக முள்ளிவாய்க்கால் முற்றம்!

முற்றத்திற்குள் நுழைந்ததும் முதலில் காட்சி தருவது கையில் விளக்கேந்திய தமிழ்ப் பாவைப் படிமம்! அறுபது டன் எடையுள்ள ஒரே கல். பதினைந்தடி உயரம். அதன் உச்சியில் தமிழ்ப்பாவை! முள்ளிவாய்க்கால் ஈகியர்க்கும் முத்துக்குமார் உள்ளிட்ட இருபது தழல் ஈகியர்க்கும் வணக்கம் செலுத்துவதுபோல் தமிழ்ப்பாவை விளக்கேந்தி நிற்கிறாள்!

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக சிங்களப்படையினர் கொன்றழிக்கும் போரில் இலங்கை அரசுக்குத் துணையாக எல்லா வகையிலும் பங்கெடுத்தது இந்தியா. உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீக்குளித்து மாய்ந்த தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி தழல் ஈகம் செய்த இருபது பேர் கற்சிலைகளாக அங்கே வாழ்கிறார்கள்! ஐம்பத்தைந்தடி நீளம் பத்தடி உயரம் கொண்ட கற்பரப்பில் அச்சிலை கள்! அது மூன்றடி உயரம் கொண்ட கருங்கல் மேடை மீது நிறுத்தப்பட்டுள்ளது. கருங்கல்லில் தீப்பற்றி எரிகிறது. அந்த ஒளியில் ஈகியர் முகம் ஒளிர் கிறது.

இந்தித்திணிப்பை எதிர்க்க 1964 சனவரியில் தீக்குளித்து மாய்ந்த கீழப்பழூர் சின்னச்சாமி தான் தமிழகத்தின் முதல் தழல் ஈகி! அவர்க்குப் பின் 1965 மொழிப்போரில் சற்றொப்ப பத்துப்பேர் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மாய்ந்தார்கள். அவர்களுக் குச் சிலை எழுப்பவில்லை அவர்களின் ஈகத்தில் அரியணை ஏறியவர்கள்! ஈழத்துத் தமிழர்களைக் காக்க எரிதழல் ஏந்திய ஈகியர்களுக்குச் சிலைகள் எழுப்பியிருப்பது பாராட்டிற்குரியது.

தென்புறத்தில் தீக்குளித்தோர் படிமங்கள்! நேர் எதிரே வடபுறத்தில் கிளிநொச்சியில், முல்லைத் தீவில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த அவலக் காட்சிகள். மாட்டுவண்டியில் வீட்டுப்பொருட் களுடன் வளர்த்த நாய்க்குட்டியையும் ஏற்றிக் கொண்டு ஆட்டுக் குட்டியை இழுத்துக் கொண்டு இடம் பெயர்ந்து செல்லும் மக்களின் அவலம்!

படைவீரனின் காலணியோடு முழங்காலுக்குக் கீழே துண்டாகிக் கிடக்கும் விடுதலைப் புலியின் கால், பிணமான பின்னும் சிங்களனால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கிடக்கும் புலிப் பெண் .... அய்யய்யோ எத்தனை எத்தனை அவலங் கள்! பதுங்கு குழிக்குள் பச்சிளம் பிள்ளைகள்! ஓவியர் சந்தானத்தின் தூரிகை வடிவங்கள் சிற்பிகளின் உளியால் உயிர்பெற்று நிற்கின்றன. உள்ளத்தை வதைக்கின்றன. விழிகளை நனைக் கின்றன. இப்படிமங்கள் 55அடி நீளம் 10 அடி உயரம் கொண்ட கற்பரப்பில் செதுக்கப் பட்டுள்ளன. 3 அடி உயரக் கருங்கல் மேடை மீது நிறுத்தப் பட்டுள்ளன.

தஞ்சைப் பெரியகோயில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோயிலைக் கட்ட எங்கிருந்து எப்படிப்பட்ட கற்கள் கொண்டவரப்பட்டனவோ அங்கிருந்து அப்படிப்பட்ட கற்களைத் தேடிக் கொண்டு வந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தை எழுப்பியிருக்கிறார்கள்.

இராசராசன் காலத்தில் பெருந்தச்சர்கள் இருந்ததுபோல் இப்போதும் தமிழ்ப்பெருந்தச்சர்கள் இருக்கிறார்கள்! மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புளியங்குடி, சங்கரன்கோயில் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தமிழகப் பகுதியான குப்பம் ஆகிய ஊர்களிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பிகள் இரண்டாண்டுகளுக்கு மேலாக இரவு பகல் அரும்பாடுபட்டுத் தங்கள் கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார்கள்.

இப்படிமங்களைப் பார்த்துவிட்டு மேற்குநோக்கிப் போனால் இரு பெரும் மண்டபங்கள் எழில் குலுங்க உருவாக்கப்பட்டுள்ளன. முதல் மண்டபத்தில் தமிழீழ விடுதலைப் போரில் தம்முயிர் ஈந்தோரின் வண்ண ஓவியங்கள் நான்கு சுவர்களிலும் பொருத்தப் பட்டுள்ளன. அடுத்த மண்டபத்தில் மறைந்த தமிழறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் இசை வாணர்கள், தமிழகத்தின் வடக்கெல்லை, தெற்கெல்லை மீட்புத் தளபதிகள், நடிகர்கள், தமிழ்த் தொண்டுபுரிந்த சான்றோர்கள் ஆகியோரின் ஒளிப்படங்கள் அழகு சேர்க்கின்றன. இம்மண்டபத்தில் ஒலி - ஒளிக் குறும்படங்கள் திரையிடும் வசதியும் உள்ளது.

இன்னும், இன்னும் எத்தனையோ சிறப்புகள்! நேரில் வந்து காணுங்கள்.

திருவள்ளுவராண்டு 2044 ஐப்பசித் திங்கள் 22 ஆம் நாள் (8.11.2013) வெள்ளிக் கிழமை மாலை தஞ்சை விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்புவிழா நடைபெறுகிறது.

அடுத்து ஐப்பசி 23, 24, (நவம்பர் 9,10) காரி, ஞாயிறு இருநாள்களும் தஞ்சைத் தமிழரசி மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவை ஒட்டிய கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், பொதுஅரங்குகள் இடம் பெறுகின்றன. தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள், கலைஞர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.

உலகெங்கிலுமிருந்து தமிழர்கள் வருகிறார்கள். வாருங்கள் தமிழர்களே!

வென்றுவிட்டோம் என்போரின் செருக்கை வீழ்த்துவோம்

ஒன்றுபட்டோம் என்றுரைப்போம்; உலகதிரக் கூடுவோம்! 

Pin It