கர்நாடகம் மேக்கேதாட்டு, இராசிமணல் என்ற இரு இடங்களில் புதிய அணைகள் கட்டி, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராமல் தடுக்கத் திட்டம் தீட்டிச் செயல்படுகிறது.

மேக்கேத்தாட்டில் முற்றுகைப் போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில், தேன்கனிக்கோட்டையில் குழுமி, “கர்நாடக அரசே சட்டவிரோத அணைகள் கட்டாதே - தமிழகத்தின் காவிரி நீரைத் திருடாதே!” என்று முழங்கி கைதானோம்.

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி மிகை நீர் வெளியேற்றப்பட்டால், அத்தண்ணீர் தங்கு தடையில் லாமல் மேட்டூர் வந்து சேரும். அவ்வாறு மிகை நீரும் மேட்டூர் அணைக்கு வராமல் தடுத்துக் கொள்வதற்காகக் கர்நாடகம் போட்ட சதித்திட்ட அணைகள் தாம் இவை இரண்டும்!

இப்பொழுது மேட்டூர் வரும் தண்ணீரில் பெரும்பகுதி, கபினி நிரம்பிய பின் திறந்து விடப்படும் வெள்ள நீர் தான்! அந்நீரையும் தடுக்கப் பார்க்கிறார்கள்.

ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா புதிய அணைகள் கட்டிய பின் காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி 192 ஆ.மி.க.(டி.எம்.சி.) தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்து விடுவோம் என்று ஏமாற்றுப் பேச்சு பேசினார். தற்போது, 13.03.2015 அன்று, கர்நாடக சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்டத் தயாரிப்புப் பணிகளுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

12.03.2015 அன்று, பெங்களுருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், “அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிடும் பேச்சுக்கே இடம் இல்லை. மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக 8 முதல் 10 மாதங்களுக்குள் அரசுக்கு உரிய அறிக்கை வந்து சேரும். அணை கட்ட 6 நிறுவனங்கள் டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளன. 2 மாதங்கள் ஆய்வு மேற்கொண்டு ஒரு நிறுவனத்திடம் அணை கட்டுவதற்கானப் பணி ஒப்படைக்கப்படும். இங்கு அணை கட்டுவதால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமா என்பது குறித்த விவரம் விரைவில் தெரியவரும்” என்று தெரிவித்தார்.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி புதிய அணைகள் கட்டவே கூடாது.

1991 சூன் 25-இல் காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் கூறியபடி, 205 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும். திறந்துவிட்டார்களா? இல்லை.

காவிரித் தீர்ப்பாயம் 05.02.2007-இல் வெளியிட்ட இறுதித் தீர்ப்பில் கூறியபடி 192 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும். உச்ச நீதிமன்றம் கர்நாடகம் இத்தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டதுடன் அரசிதழிலும் வெளியிட வேண்டும் என்று இந்திய அரசைப் பணித்தது. இன்றுவரை இத்தீர்ப்பைச் செயல்படுத்தவில்லை கர்நாடகம்.

இந்திய அரசில் ஆட்சி செய்த காங்கிரசு, சனதா தளம், பா.ச.க. ஆட்சிகள் இடைக்காலத் தீர்ப்பையும் செயல்படுத்தி வைக்கவில்லை; இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்தி வைக்கவில்லை. புதிய அணைகள் கட்டிவிட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காது.

தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகள் மாறி மாறி வந்தன. எந்த ஆட்சியும் இடைக்காலத் தீர்ப்பையோ, இறுதித் தீர்ப்பையோ செயல்படுத்திக் காட்டவில்லை.

இப்போது, கர்நாடக அரசு வெளிப்படையாக 48 ஆ.மி.க. கொள்ளளவில் மேக்கே தாட்டு - இராசிமணல் பகுதியில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு அணைகள் கட்டப் போகிறோம் என்று அறிவித்தபின், தமிழகத்தின் ஆளுங்கட்சியும் ஆண்ட கட்சியும் கண்டனம் தெரிவிக்கின்றன. இப்போது, அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

இத்தனை பேராபத்தும் பேரிழப்பும் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இத் தருணத்தில் கூட இங்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவோ - அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைப் பார்த்து அழுத்தம் கொடுக்கவோ தமிழக ஆளுங்கட்சி முன் வரவில்லை; மறுத்து வருகிறது.

காவிரி நீர்ச்சிக்கல் டெல்டா மாவட்டங்கள் சிலவற்றிற்கு மட்டும் உரிய சிக்கல் அல்ல. பன்னிரண்டு மாவட்டங்களில் பாசன நீர் காவிரி நீர்! பத்தொன்பது மாவட்டங்களில் குடிநீர், காவிரி நீர்!

ஏற்கெனவே கர்நாடகம் கட்டியுள்ள ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய அணைகள் சட்ட விரோத அணைகளே! இன்னும் எத்தனை சட்டவிரோத அணைகளைக் கர்நாடகம் கட்டினாலும் இந்திய அரசு தடுக்கப் போவதில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு நேர் எதிராக முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டக் கேரள அரசு ஆய்வுப் பணிகள் செய்யலாம் என்று இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியதில்லையா?

தமிழகத்தின் கண்ணில் சுண்ணாம்பு வைப்பது, தமிழக உரிமைகளைப் பறிப்போர் கண்ணில் வெண்ணெய் வைப்பது என்பதுதான் இந்திய அரசு காலம் காலமாகக் கடைபிடித்து வரும் (அ)தர்மம்!

எல்லாம் வல்ல இந்தியப் பேரரசு, சட்டத்தின் ஆட்சி, உச்ச நீதிமன்றத்தின் உச்சி அதிகாரம் என்பவையெல்லாம் தமிழக உரிமைச் சிக்கல்களைப் பொறுத்தவரை வெறும் வர்ணனைகள்தான்!

காவிரி உரிமையை இழந்து விட்டால் கோடிக்கணக்கான மக்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டிவரும். தமிழ்நாட்டில் எங்கு போனாலும் குடிநீர் கிடைக்காது - தமிழகத்தை விட்டே வெளியேறி அகதிகளாய், அண்டிப் பிழைப்போராய் வாழ வேண்டிய அவலம் நேரும்.

காவிரிப் படுகையில் வேளாண்மை செய்ய முடியாத வகையில் மண்ணையும் நீரையும் நஞ்சாக்கும் மீத்தேன் நச்சுக் காற்றுத் திட்டத்தைக் கொண்டுவர வசதியாக, காவிரி நீரின்றி முன்கூட்டியே வேளாண் மக்கள் வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் இந்திய ஆட்சியாளர்களின் திட்டம்!

மேக்கேத்தாட்டுப் பகுதியில் அணை கட்டுவதற்கு, நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் பெறவில்லை. காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டு மற்றும் இராசிமணல் பகுதிகளில் கர்நாடக அரசு, புதிய அணைகள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டுமென்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, விசாரணையில் உள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பும் உச்ச நீதிமன்றப் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், கர்நாடக அரசு மேக்கேத்தாட்டுவில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கி இருப்பது, முற்றிலும் சட்ட விரோதச் செயலாகும். இந்திய அரசு, உடனடியாக இதில் தலையிட்டு, கர்நாடகத்தின் நிதிநிலை அறிக்கையிலிருந்து மேக்கேத்தாட்டு அணைக்கான நிதி ஒதுக்கும் பகுதியை நீக்கிடச் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்திய அரசமைப்புச் சட்டம், உச்ச நீதிமன்றம் என்பவையெல்லாம் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்கும் தகுதியற்றவை என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வரவேண்டியிருக்கும்.

கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி ஒரு தடவை கூட தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கர்நாடக அணைகள் நிரம்பியபின் ஓடிவரும் மிகை நீர்தான் மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறது. அத்தண்ணீரையும் தடுத்து தேக்கிட, புதிய அணைகள் கட்ட முனைகிறது கர்நாடகம். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்த நிலையிலும், கர்நாடக அரசு தனது அணை கட்டும் பணியை நிதிநிலை அறிக்கையிலேயே கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பேராபத்து சூழ்ந்துள்ள இந்நிலையில், தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, இச்சிக்கலை சந்திப்பதற்கான ஒருமித்தத் தீர்வைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், அனைத்துக் கட்சிக் குழுவினரை தில்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமரைச் சந்தித்து, கர்நாடகத்தின் திட்டத்தை தடுத்து நிறுத்த அரசியல் அழுத்தம் கொடுக்கவும் களத்தில் இறங்க வேண்டும்.

Pin It