"உங்கள் பணம் உங்கள் கையில்" என்ற முழக்கத்துடன் பெரும் ஆரவாரங்களுக்கிடையில் புதியத் திட்டம் ஒன்றை 2013 சனவரி 1 முதல் இந்திய அரசு செயல்படுத்துகிறது.

அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள் ஆகியவை இடைத்தரகர்களிடம் கசிந்து போகாமல் பயன்பெறும் மக்களிடமே நேரடியாகச் சென்று சேரும் 'மந்திரத் திட்டம்' இது என்று நிதியமைசர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரசு இளவரசர் இராகுல் காந்தி ஆகியோர் குதியாட்டம் போடுகிறார்கள்.

உணவு மானியம், உரமானியம், எரிபொருள் மானியம், கல்வி உதவித் தொகைகள், மாணவர் நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியம் மற்றும் மருத்துவத்திட்டங்கள் உள்ளிட்ட 39 வகை மானியங்கள் பணமாக நேரடியாக பயனாளிகளிடமே சென்று சேரும் திட்டம் என இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் குடும்பத்தினருக்கும் வங்கி கணக்குகள் மூலம் அவர்களுக்காக அரசு செலவிடும் மானியச் செலவு அனைத்தையும் இந்திய அரசு பணமாக செலுத்திவிடும் என்று கூறுகிறார்கள்.

'ஆதார்' அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு இத்தொகை அவர்களுக்கு வழங்கப்படுமாம்.

பல்வேறு மாநிலங்களில் 51 மாவட்டங்களுக்கு 1-1-2013 அன்று இத்திட்டம் முன்னோட்டமாக செயல்படுத்தப்படும் என்றும், இன்னும் ஓராண்டுக்குள் இந்தியா முழுவதும் செயலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்குகளை அள்ளித்தரும் அதிசயத் திட்டம் இது என சோனியாகாந்தி முதல் காங்கிரசு கட்சியினர் அனைவரும் நாக்கில் எச்சில் ஊற பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் மக்களுக்கும், மாநிலங்களுக்கும் எதிரான மிகக் கொடிய திட்டத்தையே மாபெரும் மக்கள் நலத்திட்டம் போல படம் காட்டுகிற கண்கட்டு வித்தை இது. மக்கள் நலனை வீழ்த்தி, அதே நேரம் அவர்களிடம் வாக்குகளைப் பறிக்கும் ஒருகல்லில் இரண்டு மாங்காய்த் திட்டம் இது.
 
இந்திய அரசும், மாநில ஆட்சிகளும் செலவிடும் மக்கள் நல மானியங்களையும், நலத்திட்ட ஒதுக்கீட்டையும் கடுமையாகக் குறைக்க வேண்டுமென்று உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 1991-ல் தொடங்கி உலக மயப் பொருளியல் தீவிரம் பெற்ற பிறகு மக்கள் நலச் செலவுகளை வெட்டுவதற்கு ஆட்சியாளர்கள் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பெரும் பாய்ச்சலாக " நேரடி பண மாற்றத் திட்டம் " (Direct Money Transfer) என்ற இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மக்கள் பகைத் தன்மையை மறைக்க “உங்கள் பணம் உங்கள் கையில்" என்ற முழக்கம் எழுப்பப்படுகிறது.

இதற்கு இந்திய அரசு கூறும் ஒரே காரணம் “அரசு செலவிடும் பணம் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேராமல் அதிகார வர்கத்தினர், அரசியலாளர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரிடம் கசிந்து விரயமாகிறது. அரசு மக்களுகென்று ஒதுக்கும் பணம் அவர்களுக்கே சேர்வதற்குத்தான் இந்த நேரடி பண மாற்றத் திட்டம் " என்பதே.

“ஒரு பனிக்கட்டியை ஆளுக்கு ஆள் கைமாற்றிவிடும்போது கடைசியில் அதைப் பெற வேண்டியவர் கைக்கு முழுப் பனிக்கட்டியும் செல்லாமல் ஒரு பனித்துளி தான் செல்வது போல் நலத்திட்ட உதவிகள் பல அதிகார மட்டங்களைக் கடந்து செல்லும் போது பயனாளிக்கு ஒரு சிறு பகுதியே சென்றடைகிறது. பனிக்கட்டியை கைமாற்றிக் கைமாற்றிக் கொடுப்பதற்கு பதிலாக உரியவரிடம் நேரடியாகக் கொடுப்பதுபோல், அரசின் பல்வேறு நல மானியங்களை பணமாக மாற்றி வங்கி மூலம் பயனாளிக்கு வழங்குவது தான் அரசின் நோக்கம்" என்று இதற்கு நியாயம் சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

அரசு வழங்கும் மக்கள் நல மானியங்களும், நலத்திட்ட உதவிகளும் மக்களைச் சென்றடைவதற்கு முன்பே அதிகார வர்க்கத்தினரிடம் கையூட்டாக பெருமளவு கரைந்துவிடுகிறது என்பது உண்மைதான். இந்தக் கசிவு தடுக்கப் படவேண்டும் என்பதும் மக்கள் இயக்கங்களின் நீண்ட நாள் கோரிக்கைதான்.

ஆனால் அரசு அறிவித்துள்ள நேரடிப் பணமாற்றத் திட்டம் கையூட்டைத் தடுப்பதற்கு பதில் மக்கள் நல மானியங்களில் கைவைப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. குறிப்பாக உழவர்களுக்கு வழங்கப்படும் உரமானியத்தையும் மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தையும், எரிபொருள் மானியத்தையும் படிப்படியாகக் குறைத்து விரைவில் முற்றிலுமாகக் கைவிடுவது என்பதுதான் இதன் உண்மையான உள் நோக்கம்.

நிலவும் சமூக மெய் நிலைக்கு எதிரான முறையில் மக்களை வறுமைக் கோட்டுக்கு மேல், வறுமைக் கோட்டுக்குக் கீழ் எனப் பிரித்து பெரும் பகுதி மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருள்களும், எரி பொருள்களும் கிடைக்காமல் செய்வதற்கு பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்திக்கொண்டே வருகிறது. உர மானியமும் தொடர்ந்து கடுமையாக வெட்டப்பட்டு வருகிறது. கல்வி, மருத்துவம் ஆகியவற்றிக்கு அரசு செலவிடும் தொகையை ஏற்கெனவே குறைத்துவிட்டது. இச்சேவைகளெல்லாம் தனியார் முதலாளிகளின் கொள்ளை இலாபத் தொழிலாக மாறிவிட்டன.

ஆயினும் மக்கள் நல மானியங்களை இந்திய அரசால் ஒரே அடியாகக் கைவிட முடியவில்லை. மக்களின் எதிர்ப்பே இதற்கு முதன்மைக் காரணம்.

இந்திய மற்றும் பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்கு வரி விலக்கு, வரிக் குறைப்பு, ஏற்றுமதி மானியம் என்று வகைவகையாக வாரி வழங்குவதை வளர்ச்சிக்குத் தேவையான மானியச் செலவு என வரையறுக்கும் இந்திய அரசு, மக்கள் நலனுக்கு வழங்குவதை மட்டும் மானியச் சுமை என அலுத்துக்கொண்டது. மக்களுக்கான மானியச் செலவு தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து, அதன் காரணமாக அரசு நிதிப் பற்றாக்குறையில் சிக்கிவிட்டது என்ற பரப்புரையை இந்திய அரசே திட்டமிட்டு கட்டவிழ்த்துவிட்டது.

இந்த நிதிச் "சுமை"யைக் குறைப்பதற்கான வழிவகைகளைக் காண்பதெற்கென்று பல்வேறு ஆய்வுக் குழுக்களை இந்திய அரசு அமர்த்தியது. இவற்றுள் முக்கியமான ஒரு குழு மெஹ்ரோத்ரா குழு ஆகும். இந்திய திட்டக்குழுவின் துணை அமைப்புகளில் ஒன்றான மனித ஆற்றல் ஆய்வு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆய்வுக்குழு இது.

இக்குழு கடந்த 3-12-2010 அன்று தனது ஆய்வறிக்கையையும் பரிந்துரையையும் அரசுக்கு வழங்கியது. இப்பரிந்துரைகளைப் பகுதிப் பகுதியாக இந்திய அரசு ஏற்கெனவே செயல்படுத்திவிட்டது. அதன் இறுதிப் பகுதியே இப்போது “உங்கள் பணம் உங்கள் கையில்" என்ற முழக்கத்தோடு செயலுக்கு வந்துள்ளது.

“இந்திய அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கிய போதும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளோர் எண்ணிக்கை 30 கோடி பேர் என்ற நிலையை குறைக்கவே முடியவில்லை. இந்த எண்ணிக்கை தொடர்ந்து நீடிக்கிறது. அரசு 3.65 ரூபாய் செலவு செய்தால் தான் 1 ரூபாயை மக்களுக்கு வழங்க முடிகிறது. மருத்துவம், கல்வி, முதியோர் நலம், உணவுப் பங்கீடு உரம் வழங்கல், எரிபொருள் வழங்கல் போன்ற சமூக பாதுகாப்புத்திட்டங்களுக்கு அரசு செலவிடும் மானியத்தொகை 2 இலட்சம் கோடி ரூபாயை எட்டிவிட்டது. இது இந்திய அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தி, குறிப்பாக 2008 உலக நிதிநெருக்கடிக்குப் பிறகு, தாங்க முடியாத நிதிப்பற்றாக்குறைக்கு இட்டுச்சென்றுவிட்டது. இதில் 85 ஆயிரம் கோடி ரூபாய் உணவு மற்றும் உர மானியத்துக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அடுத்த நிலையில் எரிபொருள் மானியம் வருகிறது. இதனை வெகுவாகக் குறைக்க முடியவில்லை என்றால் மிகப்பெரும் நிதி நெருக்கடியில் அரசு மூழ்கிவிடும் " என்று மெஹ்ரோத்ரா அறிக்கை அபாய சங்கு ஊதியது.

 நான்கு முக்கியப் பரிந்துரைகளை இக்குழு முன்வைத்தது. அவையாவன:

வீடுகளுக்கு வழங்கும் மானியவிலை எரிவளி உருளை (கேஸ் சிலிண்டர்) களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 என வரம்பு கட்டவேண்டும்.

மானிய விலை மண்ணெண்ணையின் அளவை உடனடியாக 60 விழுக்காடாக குறைக்க வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை போன்ற இன்றியமையாப் பண்டங்களுக்கு பதிலாக ஒரு குறிப்பிட்டத் தொகையை பயனாளிகளுக்கு பணமாக நேரடியாக வழங்க வேண்டும். அந்தப் பணத்தைக் கொண்டு வெளிச் சந்தையில் அவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவு தானியங்களை வாங்கிக்கொள்ளட்டும்.

உழவர்களுக்கு மானிய விலை உரம் அளிப்பதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையை பணமாக நேரடியாக வழங்கி விடலாம். அவர்கள் தங்களுக்கு வேண்டிய இடுபொருள்களை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ளட்டும்.

இப்பரிந்துரைகளில் முதல் இரண்டும் அண்மையில் செயலுக்கு வந்துவிட்டன. மானிய விலை எரிவளி உருளைகளை ஆண்டுக்கு 6 என வரம்பு கட்டியதன் மூலம் இந்திய அரசின் எரிவளி மானிய செலவு 9546 கோடி ரூபாயிலிருந்து பாதிக்கும் குறைவாக 4657 கோடியாக குறைக்கப்பட்டுவிட்டது.

ரேசன் கடைகளின் மூலம் வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணையின் அளவை 1 கோடியே 14 இலட்சம் கிலோ லிட்டர் என்பதிலிருந்து 75 இலட்சத்து 85 ஆயிரம் கிலோ லிட்டராக இந்திய அரசு வெட்டிவிட்டது.

 நான்காவது பரிந்துரை கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசின் வரவு-செலவு திட்டத்தின் (பட்ஜெட்) மூலம் ஏற்கெனவே படிப்படியாக செயல்படுத்தப்பட்டு விட்டது. யூரியா, பொட்டாஷ், பாஸ்பேட் உரங்களுக்கான மானியம் பெருமளவு குறைக்கப்பட்டு இவற்றின் விலை தாறுமாறாக ஏறிவிட்டது. இனி விரைவில் உர மானியம் முற்றிலுமாகக் கைவிடப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் 2011-லேயே அறிவித்துவிட்டார். அதை முற்றிலுமாக கைவிடும் வரையில் இடைக்காலத்திற்கு ஒரு குறிப்பிட்டத் தொகை உழவர்களுக்கு பணமாக வழங்கப்பட வேண்டும் என்பதே மெஹ்ரோத்ரா அறிக்கையின் பரிந்துரை ஆகும்.

மூன்றாவது பரிந்துரையை நேரடி பண பறிமாற்றத்திட்டத்தின் மூலம் இந்திய அரசு செயல்படுத்தப் போகிறது.

முதற்கட்டமாக ஏற்கெனவே பலதுறைகளின் மூலமாக பணமாகக் கொடுக்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, பேறுகால உதவித்தொகை ஆதரவற்றோர் உதவித்தொகை போன்றவற்றை ஒன்றுகூட்டி ஒரே நேரத்தில் பணமாக வழங்கும் திட்டம் சனவரி 1-ல் செயலாகிறது. பிறகு படிப்படியாக பணமாற்றத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப் போவதாக அரசு அறிவித்துள்ளது.

"உங்கள் பணம் உங்கள் கையில்" என்ற பளபளப்பான முழக்கத்தோடு செயல்படுத்தப்படும் நேரடி பணமாற்றத்திட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

இதற்கு நாம் வைக்கும் முதன்மைக் காரணங்கள் வருமாறு:

இத்திட்டம் மாநில உரிமையை – அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையாகும். மாநிலங்களிலிருந்து கொள்ளையடித்துச் செல்லும் வரி வருமானத்திலிருந்து ஒரு சிறு பகுதியை பல்வேறு தலைப்புகளில் மானியமாக இந்திய அரசு வழங்குகிறது. இவற்றில் பெரும்பாலானவை மாநில அரசுகளின் வழியாக மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கும் போது மாநில அரசுகள் தாங்களும் ஒரு பகுதி மானியத்தை தங்கள் நிதியிலிருந்து சேர்த்து மக்களுக்கு வழங்குகின்றன.

இப்போது அது இந்திய அரசால் நேரடியாக வழங்கப்பட்டால் அது மாநில அதிகாரத்தை குறைப்பதாக அமையும்.

இந்திய அரசின் – குறிப்பாக இந்திய ஆளும் கட்சியின் பற்றாளர்களாக நன்றிக்கடன் பாராட்டுபவர்களாக மக்களை மாற்றும் உள் நோக்கம் இத்திட்டத்தில் உள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மானியங்கள் ஒரு ரூபாய் கூட இத்திட்டத்தின் மூலம் உயர்த்தப் படப் போவதில்லை. ஆயினும் பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களில் பொதிந்துள்ள மானியத்தின் ஒருபகுதியே என்றாலும் அதனைப் பணமாக மாற்றி நேரடியாக வழங்கும் போது அது கணிசமான தொகையாகத் தெரியும். ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ஏறத்தாழ 3000 ரூபாய் இவ்வாறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது இந்திய ஆட்சியாளர்கள் – ஆளும் கட்சியினர் வழங்கும் இலவசம் என்ற உளவியலை கணிசமான மக்களிடம் உருவாக்கும். அவசர அவசரமாக இந்த சனவரியிலிருந்து காங்கிரசு ஆட்சி இத்திட்டத்தைத் தொடங்கி நடத்துவதும் எதிர் வரும் 2014 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே ஆகும்.

உணவு தானியங்களின் சந்தை விலை நாள்தோறும் தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கும் போது அரசு வழங்கும் உணவு மானியத்தொகை அதற்கு ஏற்ப உயரப் போவது இல்லை. எடுத்துக்காட்டாக தமிழ் நாட்டில் ரேசன் கடைகளில் மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்திய உணவுக் கழகத்தின் சந்தை மதிப்பீட்டின் படி அதன் விலை கிலோவுக்கு 22 ரூபாய். இந்தத் தொகை முழுவதையும் இந்திய, தமிழக அரசுகள் பணமாக கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். இதைவைத்துக் கொண்டு வெளிச்சந்தையில் அரிசியை வாங்க முடியுமா என்பது கேள்விக்குறி. ஒருவேளை இந்த விலையில் அரிசி வெளிச்சந்தையில் கிடைப்பதாகவே கொண்டாலும் நாளைக்கு அந்த அரிசியின் விலை உயர்ந்தால் அரசு வழங்கும் மானியப் பணம் அதே அளவு உயராது. அவ்வாறான சூழலில் மக்கள் தங்கள் கையிலிருந்து கூடுதல் பணத்தை கொடுத்துதான் அரிசி வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

சுருக்கமாக பார்த்தால் இன்று விலையில்லா அரிசி பெறும் தமிழ் நாட்டு ஏழை மக்கள் நாளை விலை கொடுத்து தனியார் வணிகர்களிடம் சந்தையில் அரிசி வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இந்த வழியில் அரசின் பணம் மக்கள் மூலமாக மீண்டும் மீண்டும் முதலாளிகளுக்கே சேர்வதற்கு வகை செய்யப்படுகிறது. அரசின் பணம் மக்கள் பெயரால் முதலாளிகள் கைக்கு மாறுகிறது. விரைவான எதிர்காலத்தில் வால்மார்ட்டும், கார்கிலும் உணவுச்சந்தையில் கோலோச்ச உள்ளார்கள் என்ற உண்மையையும் இணைத்துப் பார்த்தால் இதன் ஆபத்து தெளிவாகும்.

இன்று நியாவிலைக் கடைகளில் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் இன்றியமையாப் பொருட்களை வாங்கும் மக்கள் நாளை சந்தை சூதாட்டச் சுழற்சியில் சிக்கவைக்கப்படுவார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் உணவு தானியங்களின் சில்லரை விலை சந்தையில் தாறுமாறாக உயர்ந்ததைக் கவனத்தில் கொண்டால் இச்சிக்கலின் ஆழம் புரியும்.

இந்திய அரசின் உண்மையான உள் நோக்கமே ரேசன் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக செயலற்றதாக்கி இறுதியில் கொல்வது தான்.

ரேசன் கடைகள் மூலமாக அரிசியோ கோதுமையோ வழங்கவில்லையென்றால் உழவர்களிட மிருந்து நெல்லையோ கோதுமையையோ அரசு கொள்முதல் செய்யவேண்டியத் தேவை எழாது. வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க வேண்டிய தேவையும் எழாது. விளைவிக்கும் வேளாண் பொருள்களை தனியார் வணிகர்களிடம் மட்டுமே உழவர்கள் விற்கமுடியும். சந்தை வேட்டையில் தாக்குப்பிடிக்க முடிந்த உழவர்கள் மட்டுமே வேளாண்மையில் நீடிக்க முடியும்.

உணவுப்பயிர் உழவர்கள் வேளாண்மையிலிருந்து மிக வேகமாக வெளியேறிவிடுவார்கள். அரசின் நோக்கமும் அதுதான். நாட்டின் உணவுத் தேவையை இறக்குமதி மூலம் நிறைவு செய்துகொள்ளலாம் என்பதும் ஆட்சியாளர்களின் திட்டம். அதற்கேற்ப இப்போதே ஆப்பிரிக்க நாடுகளிலும் பின் தங்கிய ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை இந்தியப் பெரு முதலாளிகள் வாங்கிக் குவித்துள்ளனர். அங்கு உற்பத்தியாகும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை இந்தியாவுக்குள் கொள்ளை இலாபத்திற்கு அவர்களே இறக்குமதி செய்வார்கள்.

உணவு தானிய வேளாண்மை இழப்பை ஏற்படுத்துவதால் பணப்பயிர் சாகுபடிக்கு மாறலாம் என்றுள்ள உழவர்களையும் இந்திய அரசு விடுவதாயில்லை. ஏற்கெனவே சில்லரை வணிகத்தில் பெருமுதலாளிகள் காலூன்றிவிட்டார்கள். இப்போது தங்கு தடையற்ற அயல் முதலீடும் அனுமதிக்கப்பட்டு விட்டது. இப்பேரங்காடிகள் ஒப்பந்த வேளாண்மை மூலம் உழவர்களிடம் பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பணப்பயிர்களை கொள்முதல் செய்கிறார்கள். இப் பெருமுதலாளிகள் கொடுக்கும் விலையை பெற்றுத்தீர வேண்டிய சிக்கலில் இந்த உழவர்கள் வைக்கப்படுவார்கள்.

ரேசன் கடைகளின் மூலம் உணவுதானியங்களை பெற்றுவந்த மக்களுக்கு அதற்கு பதிலாக பணமாக கொடுத்தால் அத்தொகை அரிசி,கோதுமை வாங்கதான் பயன்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் தமிழ் நாட்டில் இத் தொகையின் பெரும் பகுதி மதுவுக்கு செலவிடப்படும் ஆபத்து அதிகம்.

ஒரு குடும்பத்தின் கையில் அரிசி வழங்கப்பட்டால் அது சமைக்கப்பட்டு குடும்பத்தார் அனைவருக்கும் ஏறத்தாழ சமமாக வழங்கப்பட வாய்ப்பு உண்டு. அதற்கு பதில் பணமாக கொடுக்கப்பட்டால் அது குடும்பத்தில் வலுத்தவர் கைக்குதான் போய்ச் சேரும். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வாய்ப்புகள் அரிதிலும் அரிது. இச்சிக்கலில் பெரிதும் பாதிக்கப்படப் போவது ஏழை எளிய குடும்பத்துப் பெண்கள் தான்.

நேரடிப் பணமாற்றத் திட்டம் என்ற இத்திட்டத்தின் அடிப்படை ஆதாரமே “ஆதார்" அடையாள அட்டை தான். ஆதார் அடையாள அட்டையைக் காட்டி தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பவர்கள் தான் பணத்தைப் பெறமுடியும். இராஜஸ்தானிலும் வேறு பல மாநிலங்களிலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் கூலிபெறுபவர்கள் ஆதார் அடையாள அட்டையைக் கொண்டு பணம் பெற முடியாமல் தவிப்பதை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. ஏனெனில் உடல் உழைப்பாளர்களின் கைரேகை சில ஆண்டுகள் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை. கண் அடையாளமும் அது பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு கண் நோய் ஏற்படுபவர்களுக்கு மாறும். இது போன்ற அடையாளப் பதிவு முறைகளை பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளே பயனற்றவை என கைவிட்டு விட்டன. ஆதார் திட்டத்தின் சனநாயக விரோத தன்மைகள் வேறு. அதனை இதில் நாம் விவாதிக்கவில்லை.

இத்திட்டத்தின்படி பயனாளிகள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். இங்குள்ள தனியார்மயச் சூழலில் அரசு வங்கிகள் சிற்றூர் கிளைகளைக் குறைத்து வருவதை இதற்கு முன்னர் வேறு பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இந்நிலையில் அரசு வங்கிகளின் சார்பில் தனியார் முகவர் நிறுவனங்களே கிராமப்புற செயல்பாட்டுக்கு அமர்த்தப்படும். ஏற்கெனெவே சில மாநிலங்களில் செயல்பட்டு வரும் நிபந்தனைக்குட்பட்ட நேரடி பண மாற்றத் திட்டத்தில் (Conditional Cash Transfer) இவ்வாறான தனியார் முகவர்களே பணப்பட்டுவாடா செய்கின்றனர். இவர்களுக்கு வங்கித்தூதர்கள் (Banking Correspondents) என்று பெயர். இப்போதைய பணமாற்றத்திட்டத்திலும் இவ்வாறான வங்கித்தூதர்கள் 7 இலட்சம் பேர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், வங்கித்தூதர் திட்டம் ஏற்கெனவே தோற்றுப்போன ஒரு திட்டமாகும். இந்திய சேம வங்கி (ரிசர்வ் வங்கி)யே தனது 2009 ஆம் ஆண்டு அறிக்கையில் “ வங்கித்தூதர் திட்டம் புதிய வகை ஊழலுக்கு வழி திறந்து விட்டுள்ளது. இது செயல் திறனற்ற ( ineffective) முறை " என்று கூறிவிட்டது. இந்தத் திறனற்ற முறையை தான் இந்தியாவின் மூலை முடுக்கிற்கெல்லாம் விரிவாக்கப் போகிறோம் என பொருளியல் வல்லுனர் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருக்கிறார்.

இந்திய அரசு “உங்கள் பணம் உங்கள் கையில்" என்று கூறுவது மோசடி முழக்கமாகும். உண்மையில் நடக்கப்போவது “ உங்கள் பணம் முதலாளி கையில்" என்பது தான்.

எனவே எல்லா வகையிலும் மக்களுக்கு எதிரான - உலகமயச் சார்பான நேரடி பண மாற்றத் திட்டத்தை தமிழக மக்கள் எதிர்க்க வேண்டும்.

Pin It