ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், பிற மதங்களைச் சேர்ந்தவர்களை இந்து மதத்திற்குப் பெருமெடுப்பில் மாற்றிக் கொண்டு வர வகுத்துள்ள திட்டங்கள் குறித்து இந்தியா முழுவதும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் தனக்கே உரிய பாணியில் கலாட்டா கச்சேரி நடத்திக் கலைந்துள்ளது. பொறுப்பற்ற கும்பல்களின் பொழுதுபோக்கு மன்றம் போல் நாடாளுமன்றம் ஆகிவிட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளைப் பிரிவுகளான தரும சாக்ரான் சமிதியும் பச்ரங் தளமும் ஓர் ஆண்டில் ஒரு இலட்சம் முசுலிம்களையும் கிறித்தவர்களையும் இந்து மதத்திற்கு மாற்றிக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளன. இந்த மதமாற்றத்திற்கு “வீட்டுக்குத் திரும்புதல்” என்று பெயர் வைத்துள்ளார்கள்.

கடந்த திசம்பர் மாதத்தில் ஆக்ராவில் 200 முசுலிம்களை இந்து மதத்திற்கு மாற்றியதாக ஒரு செய்தி வெளியானது. அவ்வாறு மதம் மாறிய முன்னாள் முசுலிம் பெண் ஒருவரை செய்தியாளர்கள் நேர்கண்டபோது, “வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்று தங்களுக்குக் குடும்ப அட்டை வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். அதனால் மதம் மாறினோம்” என்று கூறினார். வருகிற 2015 பிப்ரவரி 6ஆம் நாள் விசுவ இந்து பரிசத்தின் 50ஆம் ஆண்டு விழா வருவதாகவும் அப்போது, உ.பி. பைசாபாத்தில் பெரும் எண்ணிக்கையில் முசுலிம்களை இந்து மதத்திற்கு மாற்றப் போவதாகவும் வி.இ.ப. தலைவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும், “வீட்டுக்குத் திரும்புதல்” என்ற பெயரில், சிறுபான்மை மதங்களிலிருந்து பெரும்பான்மை மதத்திற்கு மதம் மாற்றும் செயலைக் கண்டித்துப் பலர் பேசினார்கள். சமூகப் பதற்றமும் - சட்டம் ஒழுங்குச் சிக்கல்களும் வெடிக்கும் என்றனர். இப்போக்கைத் தடுக்கத் தலைமை அமைச்சர் அவையில் உறுதியளிக்க வேண்டும் என்றும் கேட்டனர்.

தமது சொற்பெருக்கில் தாமே சொக்கி சுகம் காணும் உளவியல் சிக்கலுக்கு உள்ளாகி, பேசிக் கொண்டே இருக்கும் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் மதமாற்றம் குறித்துப் பேச மறுத்துவிட்டார். “எங்கும் பேச்சு எதிலும் சொற்பெருக்கு” என்று பழகிப்போன தலைமை அமைச்சர்க்கு நாடாளுமன்றத்தில் மட்டும் பேச்சு வருவதில்லை.

“மோடி பேச வேண்டும்” என்று எதிர்க்கட்சிகளும் “நாங்கள் பேசுவது போதாதா” என்று ஆளுங்கட்சியினரும் கயிறிழுக்கும் போட்டி நடத்தினர். கடைசியாக ஆளுங்கட்சியினர் “மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர நாங்கள் தயார், நீங்கள் தயாரா?” என்று கேட்டார்கள்.

“புதிய சட்டம் தேவையில்லை. ஏற்கெனவே இருக்கிற சட்டங்கள் போதும்; தலைமை அமைச்சரைப் பேசச் சொல்லுங்கள்” என்றனர் எதிர்க்கட்சியினர் மறுபடியும். அவைக்கூட்டம் முடிந்துவிட்டது.

மதமாற்றம் பற்றிய நடுநிலையான தெளிவான முடிவுகள் தேவை! ஒரு மதத்தில் இருப்பவர் வேறொரு மதத்தின் கருத்தியலால் ஈர்க்கப்பட்டு அம்மதத்திற்கு மாறினால் அது தவறில்லை. அந்த உரிமை ஒருவர்க்கு எப்போதும் இருக்க வேண்டும். ஆனால், தங்கள் மதத்தின் மக்கள் தொகையை அதிகரித்து, அதன்வழி நாட்டின் அரசியலில், சமூகத்தில், அரசில் அழுத்தம்தர வேண்டும் என்றோ, அல்லது தங்கள் மத நாடாக நாட்டை மாற்றிவிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடனோ மதமாற்றம் செய்யும் வேலைகளில் எந்த மதத்தினர் ஈடுபட்டாலும் அந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிவது இன்றியமையாத் தேவையாகும்.

ஏனெனில் வரலாற்றில் மதங்கள் நடத்தியிருக்கும் போர்களும், செய்திருக்கும் கொலைகளும், ஓடவிட்டிருக்கும் குருதி வெள்ளமும் கொஞ்சநஞ்சமன்று. சிலுவைப் போரில் கிறித்தவர்களும் இசுலாமியர்களும் செய்திருக்கும் கொலைகள் கொஞ்ச நஞ்சமன்று. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்துக்களும் முசுலிம்களும் செய்து கொண்ட கொலைகள் கொஞ்ச நஞ்சமன்று. பாதிரியார்களின், முல்லாக்களின், இந்துச் சாமியார்களின் மதபீடங்கள் மனித எலும்புக் கூடுகளின் மேல்தான் எழுப்பப்பட்டிருக்கின்றன.

மனித சமூகத்தில் சகிப்புத்தன்மை குறைவாக உள்ளவர்கள், மதவாதிகள் தாம்! எனவேதான் அரசிலும் அரசியலிலும் மதம் தலையிடக் கூடாது. என்ற மதச் சார்பின்மைக் கொள்கை ஐரோப்பியா உருவானது.

மதமாற்றத் தடை பற்றிப் பேசும்போது, இந்து, முசுலீம், கிருத்துவம் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது எல்லா மதங்களுக்கும் பொதுவான அணுகுமுறையைத் தான் கைக் கொள்ள வேண்டும்.

மதம் பற்றி இந்திய அரமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

அரசமைப்புச் சட்ட உறுப்பு 25, பொது அமைதி, ஒழுக்கம், உடல் நலம் ஆகியவற்றிற்கு உட்பட்டும், இச்சட்டப்பிரிவில் உள்ள இதரக் கூறுகளுக்கு உட்பட்டும், மனச்சான்றுபடி நடந்துக் கொள்வதற்கும் சுதந்திரமாக மதத்தை நம்புவதற்கும், மதத்தின்படி நடந்து கொள்வதற்கும், மதத்தைப் பரப்புவதற்கும், எல்லோருக்கும் சம உரிமை உண்டு.

(2) இச்சட்டக்கூறு கீழ் வருவனவற்றிற்காக ஏற்கெனவே சட்டம் இருந்தாலோ அல்லது புதிதாக சட்டம் இயற்றுவதையோ தடுத்துவிடாது.

(அ). மதத்தோடு தொடர்புடைய பொருளாதாரம் நிதி, அரசியல் மதச்சார்பற்ற செய்திகளை ஒழுங்குபடுத்துதல் அல்லது கட்டுப்படுத்துதல்

இச்சட்டக்கூறு மனச்சான்று உரிமை பற்றிப் பேசுவதால் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைபிடிக்கவும் கடவுள் ஏற்புக் கொள்கையைக் கடைபிடிக்கவும் எல்லார்க்கும் உரிமை வழங்குகிறது. விரும்பிய மதத்தைக் கடைபிடிக்கவும் உரிமை வழங்குகிறது. மதமாற்றம் பற்றி என்ன சொல்கிறது? மதமாற்றம் பற்றி உட்பொருளாகத்தான் கட்டுப்பாடுகளை விதிக்கிறது இச்சட்டம்.

மதமாற்றம் பற்றி மத்தியப்பிரதேசமும் ஒடிசாவும் இயற்றிய சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் 1977ஆம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி ஏ.என்.ரே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு முகாமையான கவனத்திற்குரியது.

“உறுப்பு 25( 1 )-இல் உள்ள ‘பரப்புதல்’ என்ற சொல், இன்னொரு மதத்தில் இருப்பவரைத் தன் மதத்திற்கு மாற்றிடும் உரிமையை ஒருவர்க்கு வழங்கவில்லை. ஒரு மதத்தின் கொள்கைக் கூறுகளை இன்னொருவரிடம் கூறுவதற்கும் பரப்புவதற்கும் மட்டுமே உள்ள உரிமையாகும். மனச்சான்றின்படி நடப்பதற்கு ஒருவர்க்கு உரிமை இருக்கிறது என்று சட்டக்கூறு 25( 1 ) கூறுவது, ஒருவர் தாம் பின்பற்றும் கொள்கையை வெளிப்படுத்தும் உரிமையே தவிர, பிற மதத்தினரைத்தன் மதத்திற்கு மாற்றும் உரிமை அன்று” - தூய ஸ்டெயின்ஸ்லாஸ் எதிர் மத்தியப்பிரதேச அரசு மற்றும் மற்றவர்கள், 17.1.1977, 1977 AIR 908, 1977 SCR(2) 611.

ஒருவர் தாம் நம்பும் மதக்கொள்கையை மற்றவர்களிடம் எடுத்துரைக்கலாம், அதை மற்றவர் ஏற்கும்படி விளக்கலாம். ஆனால் அவரை மதம் மாற்றும் உரிமை அவர்க்குக் கிடையாது. அவரின் விளக்கங்களைக் கேட்டு ஏற்றுக் கொண்டவர், தாமாக விரும்பி மதம் மாறலாம். ஆனால், ஒருவரை மதம் மாற்றும் உரிமை இன்னொருவருக்குக் கிடையாது. இக்கூற்றை இன்னும் துல்லியப்படுத்தினால், மதத்தலைமைகள் - மத குருமார்கள், புதிதாக ஒருவரைத் தங்கள் மதத்தில் சேர்க்கலாம் - ஆனால் மதமாற்றச் சடங்குகள், மதமாற்ற விழாக்கள் நடத்துவதற்கு உரிமை இல்லை. மேலும் இத்தீர்ப்பில், ஒருவரை ஏமாற்றியோ, ஒருவரைக் கட்டாயப்படுத்தியோ, ஒருவர்க்கு ஆசைகள் காட்டியோ அவருடைய மதத்திலிருந்து வெளியேறித் தன்னுடைய மதத்தில் சேருமாறுச் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது.

அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்குகள் தொடரலாம். அதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டால் செல்லும். இவ்வாறு இயற்றப்பட்ட மத்தியப்பிரதேச ஒரிசா சட்டங்கள் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பின் சாரம் சரி என்பதே நமது கருத்து. ஓர் ஆண்டுக்கு ஒரு இலட்சம்பேரை மதம் மாற்றப் போகிறோம் என ஒளிவு மறைவின்றி அறைகூவல் விட்டு அறிவித்துள்ள தரும சாக்ரான் சமிதி, பச்ரங் தளம் ஆகியவற்றின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதேபோல் மதமாற்றத்தை வீட்டுக்குத் திரும்புதல் என்ற பெயரில் நடத்தி வரும் விசுவ இந்து பரிசத் தலைவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

கடந்த 20.12.2014 அன்று கொல்கத்தாவில் விசுவ இந்து பரிசத் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதும் மேற்படி அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதே!

“இந்துக்களை யாரும் மதம் மாற்றக் கூடாது. நாம் மற்ற மதங்களில் உள்ளவர்களை இந்துவாக மாற்ற வேண்டும். அவர்களை அயல் மதங்கள் ஆசைகாட்டி இழுத்துக் கொண்டன. கொள்ளையடிக்கப்பட்ட நமது சொத்தை மீட்பதே, அயல் மதங்களில் உள்ளவர்களை இந்துக்களாக மாற்றும் திட்டம். வலிமைமிக்க இந்து சமூகத்தைக் கட்டமைக்கப் போகிறோம்” (Times of India, 21.12.2014).

மேற்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மோகன் பகவத் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து அவரைத் தளைப்படுத்தலாம். பா.ச.க. ஆட்சி நடக்கிறது என்ற துணிச்சலில், அத்துமீறிச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதுடன், அரசமைப்புச் சட்டப்படி ஆட்சி செய்வோம் என்ற ஓர் உறுதி மொழியை நாடாளுமன்றத்தில் தரக்கூட நரேந்திர மோடி மறுத்துவிட்டார். எங்கே போகிறது நாடு, எங்கே போய் முடியும் என்றெல்லாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய நேரம்.

கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்தோர் திட்டமிட்டு மதமாற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மை மதத்தினர்க்கு வழங்கப்பட்டுள்ள சில சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்த அவர்களை அனுமதிக்கக் கூடாது.

மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஒழுங்குபடுத்திட, இந்திய அளவில் புதிதாக நடுவண் ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரத் தேவை இருக்கிறது. பா.ச.க. அதற்கான சட்டம் கொண்டுவரத் தயார் என்பதுபோல் பாவனை செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஏன் ஒதுங்குகின்றன? எதிர்க்கட்சிகள் மதத்தேர்வு ஒழுங்குமுறை மாதிரி வரைவு ஒன்றை முன்வைக்கலாமே! பா.ச.க பெரும்பான்மை இந்துக்களை இழுத்துக் கொள்ளவும், எதிர்க்கட்சிகள் சிறுபான்மை மதங்களின் ஆதரவைப் பெறவும் உத்தி வகுத்தால் இச்சிக்கலில் உருப்படியான தீர்வு வராது. சிறுபான்மை பெரும்பான்மை என்று பாகுபாடில்லாமல் நடுநிலையான தீர்வு வேண்டும்.

மதமாற்றத் தடைச் சட்டம் கூடாது. மதமாற்ற ஒழுங்குமுறைச் சட்டமே வேண்டும்.

Pin It