ஈழத் தமிழர் இனச் சிக்கல் பன்னாட்டு அரங்கில் ஒரு முக்கியக் கட்டத்தை இப்போது அடைந்துள்ளது. நடந்து முடிந்த கொழும்பு காமென்வெல்த் மாநாட்டிற்குப் பிறகு இச் சிக்கல் உலக அரங்கில் முன் எப்போதும் இல்லாத கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக பிரித்தா னியப் பிரதமர் கேமரோன் யாழ்ப்பாணத் திற்கும், ஈழத்தமிழர் வாழ்விடங்களுக்கும் சென்று பார்த்த போது அவருடன் சென்ற முதன்மை உலக ஊடகங்கள் வழியாக அங்கு தொடரும் இன அழிப்பு அவலம் உலகின் பார்வைக்கு வந்தது.

இப் பின்னணியில் வரும் 2014 மார்ச்சில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமை மன்றக் கூட்டம் கூடுதல் முகாமைப் பெறுகிறது.

2008 - 2009 ல் நடைபெற்ற உச்சநிலை இன அழிப்புப் போரை மட்டுமே கவனத்தில் கொண்ட பன்னாட்டுச் சமூகம் அதையும் கூட போர் குற்றம் என்ற வரைய றுப்பின் கீழ் வைத்து விவாதித்து வருகிறது. 2012 லும் 2013 லும் அமெரிக்கா கொண்டுவந்தத் தீர்மானம் இந்த வரம்பிற்கு உட்பட்டதாகவே இருந்தது.

நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான முதன்மைக் குற்றவாளியான இராசபட்சேவே இலங்கையில் ஓர் உள்நாட்டு விசாரணையில் குற்றம் செய்தவர் களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதே அமெரிக்கத் தீர்மானங்களின் நிலைப்பாடாக உள்ளது.

இதை நோக்கிய விவாதங்களாகவும் போராட்டங்களாகவும் இச்சிக்கலை குறுக்கி விடுவதே அமெரிக்காவின் நோக்கம்.

இத் தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைக்கு இந்தியாவை வலியுறுத்துவதே இங்குள்ள பெரியக் கட்சிகளின் முயற்சியாக இருந்து வருகிறது.

இலங்கையில் நடைபெற்றது, இப்போதும் தொடர்வது ஈழத்தமிழர் இன அழிப்புதான். அங்கு நடந்துள்ள குற்றம் இனப்படுகொலைதான் என்று வரையறுப்பதிலிருந்து திசை மாற்றும் உள்நோக்கம் இதில் முதன்மையானது. 

இன்னொரு ஆபத்தும் இதில் இருகிறது. நடந்தது இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் மட்டும் என்று வரையறுத்து அதில் இலங்கை அரசு போர்க்குற்றச்செயலில் ஈடுபட்டது மட்டுமின்றி விடுதலைப் புலிகளும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று வரையறுப்பதே அந்த ஆபத்து. இவ்வாறான நிலைப்பாட்டை விவாதப் பொருளாக மாற்றுவதன் மூலம் விடுதலைப்புலிகளை விசாரிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளிகளாக வகைப்படுத்தி விட்டால் இன்று விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகவும், இனப் படுகொலைக் குறித்த விசாரணை வேண்டும் என்றக் கோரிக்கையை முன்வைத்தும் இயங்குகிற அனைவரையும் விடுதலைப் புலிகளின் போர் குற்றத்தை மறைப்பவர்கள் என்று குற்றம் சாட்டி வாயடைத்து விடலாம் என்ற சதிகார நோக்கம் இதில் உள்ளது.

இந்த உலக நிலையில் அண்மையில் நடந்து முடிந்துள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மிக முக்கியமானது.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples Tribunal) என்ற அமைப்பு எந்த அரசும் சாராமல் ஐ.நா மன்றத்தையும் சாராமல் தனித்து செயல்படும் ஓர் மன்ற மாகும். இத்தாலியின் ரோம் நகரை தலைமையிடமாகக் கொண்டு 1979 ஆம் ஆண்டு முதல் இது செயல் பட்டு வருகிறது. உலக அளவில் மதிக்கப்படுகிற நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், மனித உரிமை செயல் பாட்டாளர்கள் பல் துறை அறிஞர்கள் ஆகியோரைக் கொண்டு வெளிப்படையாக நடைபெறும் இத் தீர்ப்பாயம் மனித உரிமை மீறல்கள் நடைபெற்ற பல இடங் களில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஓர் சுதந்திர நிறுவனமாக செயல்படுகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிப்புக்குப் பிறகு அதுவும் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் 2009 ஜூனில் ‘உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பை ஒழித்துக் கட்டியச் சாதனையாளர்’ என்று இனக் கொலைக் குற்றவாளி இராசபட்சே பாராட்டப்பட்டச் சூழலில் இந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தலையீடு மிக முக்கியச் செயலாக அமைந்தது. 2010சனவரியில் பொங்கல் நாட்களில் அயர்லாந்து தலை நகர் டப்ளினில் ஈழத்தமிழர் தொடர்பாக நடைபெற்ற சர்வதேச மனித உரிமை சட்டமீறல்கள் குறித்து இத் தீர்ப்பாயம் விசாரித் தது.

மிக விரிவான, ஆழமான ஆய்வுக்குப் பிறகு ”இலங்கையில் நடந்திருப்பது போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் இதில் மிகப்பெருமளவில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதித் தமிழர்கள் பலியாகி இருக்கிறார்கள். 2009 மே 19ல் போர் முடிந்ததற்குப் பிறகும் இந்தக் குற்றம் தொடர்கிறது’’ என்று இத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.

நடந்தது (Genocied) இனப்படு கொலைதான் என்று தமிழர்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதற்கு இன்னும் விரிவான ஆதாரங்களின் அடிப்படையிலான விசாரணை தேவை என்று இத்தீர்ப்பாயம் கூறியது.

இந்த டப்ளின் தீர்ப்புதான் பன்னாட்டு மனித உரிமை அரங்கில் நாம் போராடுவதற்குக் கிடைத்த பேராயுதமாக விளங்கியது.

உலகம் முழுவதும் பரவி இருக்கிற ஈழத்தமிழர்களும், தங்களது மனித உரிமச் செயல்பாடுகளால் இலங்கை அரசால் வேட்டையாடப்பட்ட பிறப்பால் சிங்களர்களான விரஜ்மிண்டிஸ், ஜூட் லால் பெர்னாண்டோ ஆகியோரும் மேற்கொண்ட பெரும் முயற்சிகளும், தமிழ்நாட்டில் நடைபெற்ற தொடர் போராட்டங்களும் உலக சமூகத்திற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது.

இதன் விளைவாக ஐ.நா பொதுச் செயலாளர் 2008--2009ல் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை சட்ட மீறல்கள் குறித்து விசாரித்து அறிவிக்குமாறு மூவர் குழுவை நியமித்தார். மாருஸ்கி தருஸ்மான், யாஸ்மின் சூகா அம்மையார், ஸ்டீ வன் ரத்னா ஆகிய மூன்று வல்லுனர்கள் கொண்ட அந்த விசாரணைக் குழு இலங்கை அரசின் ஒத் துழையாமையையும் மீறி பல்வேறு ஆவணங்கள், சாட்சியங்களை ஆய்வு செய்து 2011 ஏப்ரல் 12 அன்று தனது அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளரிடம் அளித்தது.

இந்த விசாரணைக் குழுவும் டப் ளின் தீர்ப்பாயம் முடிவு செய்ததைப் போலவே இலங்கையில் நடை பெற்றது போர் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்று வரையறுத்தது. மேலும் இலங்கையில் நீதித்துறை உள்ளிட்டு அனைத்து நிறுவனங்களும் சிங்களப் பேரின வாதச் சிந்தனைக்கு ஆட்பட்டிருப்பதால் அங்கு இக்குற்றங்கள் குறித்து சர்வதேச தரத்திற்கான நேர்மையான விசாரணை நடைபெற வாய்ப்பில்லை என தெளிவுபடக் கூறியது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடை பெற்ற இக்குற்றங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தற்சார்பான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது.

இதன் தொடர்ச்சியாக 2008--2009 போர் நடந்து கொண்டிருந்த போது அதை தடுப்பதற்கு ஐ.நா மன்றம் எவ்வாறு தவறியது என்பது குறித்து ஐ.நா தலைமைச் செயலக அதிகாரிகளின் உள்ளக அறிக்கை விரிவாக எடுத்துக் கூறியது.

இச் சூழலில் குற்றவாளியையே நீதிபதியாக வைத்து கண்துடைப்பாக ஓர் விசாரணை நடத்தி இக் கொடுமையான இன அழிப்புக் குற்றத்தை மூடி மறைக்கும் முயற்சியாகத்தான் அமெரிக்காவின் ஐ. நா. தீர்மானம் முன் வைக்கப்பட்டது.

அமெரிக்கத் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு நடந்துகொண்டால் போதும் என்ற அளவில் பிரச்சினையை குறுக்குவதாக உலக அரங்கத்திலும் இந்திய நாடாளுமன்றத்திலும் விவாதங்கள் நடைபெற்று வந்தன.

இச் சூழலில் கடந்த 2013 மார்ச்- ஏப்ரலில் தமிழ்நாட்டில் பேரழுச்சியாக நடைபெற்ற மாணவர் போராட்டம் அமெரிக்கத் தீர்மான நகலைக் கொளுத்தி திசை வழிக் காட்டியது. ஆயினும் அமெரிக்கத் தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பாடுகள் நடந்தால் அதுவே முதல் கட்ட வெற்றியாக அமைந்து விடும் என்ற கருத்து இன்றளவிலும் தமிழ்நாட்டிலும், புலம்பெயர் ஈழத்தமிழர்களிடமும் கணிசமான அளவில் உள்ளது. இந்த சூழலை மனதில் நிறுத்தினால் தான் இப் போது நடந்து முடிந்துள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணை முடிவுகளின் முக்கியத்துவம் புரியும். அடுத்தக் கட்ட நமது செயல்பாடுகளை தீர்மானித்துக் கொள்ளவும் இந்தப் புரிதலே தெளிவான அடித்தளத்தை வழங்கும்.

“சிறீலங்கா குறித்த மக்கள் தீர்ப் பாயம்’’ என்றத் தலைப்பில் 2013 டிசம்பர் 7 ஆம் நாள் தொடங்கி 10 ஆம் நாள் முடிய ஜெர்மனியின் பிரேமன் நகரில் இந்த விசாரணை நடந்து முடிந்தது. பல்வேறு நாடுகளின் நீதிபதிகளா கவும் சட்ட வல்லுனர்களாகவும் மனித உரிமை செயல்பாட்டாளர் களாகவும் விளங்கிய 11 பேர் கொண்ட இத் தீர்ப்பாயத்தின் இணைத் தலைவர்களாக (Co - Chairs) ஐ.நா. வின் முன்னாள் துணைப் பொதுச்செயலாலர் டென்னிஸ் காலிடே மற்றும் அர் ஜெண்டினாவின் டேனியல் பியர்ஸ்டீன் ஆகியோர் செயல் பட்டனர்.

2010 டப்ளின் தீர்ப்பாயத்தின் தொடர்ச்சியாக இத் தீர்ப்பாயம் அமைந்தது. உலகின் பலப் பகுதிக ளிலிருந்தும் தமிழீழச் செயல்பாட்டாளர்கள் இவ் விசாரணையில் பங்குபெற்றார்கள். தமிழ்நாட்டிலிருந்து மே. 17 இயக்க சார்ப்பில் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் உமர் ஆகியோர் பங்கு பெற்றனர்.

டப்ளின் தீர்ப்பாயம் 2010ல் வழங்கியத் தீர்ப்புரை ஈழத்தமிழர் களின் மனித உரிமைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியிருந்தாலும் நடந்தது இன அழிப்பு போர், அதன் பிறகு அங்கு தொடர்வதும் இன அழிப்பு நடவடிக்கைகள் என்பதை ஏற்றுக் கொண்டால் தான் நீடித்துவரும் இச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் தான் இத் தீர்ப்பாயமே அமைக்கப்பட்டது. குறிப்பாக ‘சிறீலங்காவில் அமைதிக்கான அயர்லாந்து மன்றம் ‘ (Irsh forum for peace in Srilanka) மற்றும் பிரேமன் பன்னாட்டு மனித உரிமை மன்றம் (International human rights forum Bremen) ஆகியவை தொடர்ந்து கொடுத்த அழுத்தம், அடுக்கடுக்காக அளித்த ஆதாரங்கள் ஆகியவை நிரந்தரத் தீர்ப்பாயத்தின் இந்த இரண்டாவது விசாரணைக்கு அடிகோலியது.

இவ்விசாரணை சர்வதேச சட்டங்களுக்கு இசையவே நடந்தது.

ஐ.நா மன்றம் இரண்டாவது உலகப் போரின் பேரழிவுப் பின்னணியில் இனப்படுகொலை (genocide) என்றால் என்ன என்பதற்கான தெளிவான வரையறைகளை முன் வைத்தது.

இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது மற்றும் இக் குற்றத்திற்கான தண்டனைக் குறித்த ஐ.நா மன்ற மாநாடு 1948 டிசம்பார் 9 அன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை ஜெனிவாவில் நிறை வேற்றியது. (தீர்மானம் 260(iii) ) இது 1951 இல் உலகச் சட்டமாக ஏற்கப்பட்டது. ஆயினும் உலக வல்லரசுகளின் அடாவடி காரணமாக 1994ல் தான் செயலுக்கு வந்தது.

இச் சட்டத்தின் விதி 2 ‘ இனப் படுகொலை’ (Genocide) என்பதற்கு கீழ்வரும் விளக்கத்தை அளிக்கிறது.

“ஒரு தேசிய இனத்தையோ, பண்பாட்டு இனத்தையோ மரபு இனத்தையோ அல்லது மதக்குழு வையோ முழுமையாகவோ, அல்லது அதன் ஒரு பகுதியையோ அழிக்கும் நோக்குடன் செய்யப்படும் கீழ்வரும் அனைத்து செயல்களும் இனப்படுகொலை ஆகும்.

 மேற்சொன்ன,

ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் ரீதியாகவோ மனரீதி யாகவோ கொடும் தீங்கை உருவாக்குவது,

ஒரு குழுவின் முழுமையையோ அதன் ஒரு பகுதியையோ உடல் ரீதியாக அழிப்பதற்குரிய வாழ் நிலைமை யைத் திட்டமிட்டு உருவாக்குவது.

ஒரு குழுவினரிடையே குழந்தை பிறப்பைத் தடுக்க திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொள்வது

ஒரு குழுவின் குழந்தைகளைக் வலுக்கட்டாயமாக வேறொரு குழுவுடன் இணைத்துவிடுவது”

 மேற்கண்ட வரையறுப்பின் அடிப்படையில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தானா என தீர்ப்பாயம் விசாரித்தது. இப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், இதற்கு சாட்சியமான ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரையும் இத் தீர்ப்பாயம் விசாரித்தது. இலங்கை அரசு தன் தரப்புக் கருத்தை முன் வைப்பதற்காக அழைப்பு அனுப்பப் பட்டது . ஆயி னும் இராசபட்சே அரசு இத் தீர்ப்பாயத்தை புறக்கணித்தது.

இச் சூழலில் இத் தீர்ப்பாய விசாரணை வழிமுறைப்படி ஒரு நடுநிலையான அறிக்கை அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் இலங்கை அரசுத்தரப்பில் இலங்கை நாடாளு மன்றத்திலும், ஐ.நா மன்றத்திலும், ஊடகங்களிலும் முன்பும் வைக்கப் பட்டுள்ளகருத்துகளைத் தொகுத்து தீர்ப்பாயத் திற்கு வழங்கினார்.

இவை அனைத்தையும் ஆய்வு செய்த தீர்ப்பாயம் சில முக்கிய முடிவுகளை அறிவித்தது.

elamthamilar 600‘இனப்படுகொலை’, என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்த அடையாளம் உள்ள இனக் குழுவினர் அல்லது தேசிய இனக்குழுவினர் அல்லது மதக் குழுவினர் என்று தீர்மானிக்கப்படுவது அவசியமானது. நடந்திருப்பது மனித குலத்திற்கு எதிரான குற்றம் மட்டுமல்ல இனப்படுகொலை அல்லது இன அழிப்பு என வரையறுப்பதற்கு இது அடிப்படை தேவையான ஆதாரமாகும்.

ஏனெனில், போர் குற்றம் (war crime) மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் (crime against humanity ) இனப்படுகொலை (genocide)  ஆகியவை ஒன்றின் ஊடாக இன்னொன்று நடக்குமென்ற போதிலும் இவை ஒவ்வொன்றும் தெளிவான வரையறை கொண்டவை. இவற்றிக்கான தீர்வுகளும் வெவ்வேறானவை.

போரில் மோதிக்கொள்ளும் இரண்டு தரப்பினர்களுக்கிடையே நடைபெறும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் போர்க் குற்றம் எனப்படும்.

ஆயுதம் தரிக்காத அல்லது இப் போர் செயலுக்கு நேரடித் தொடர்பில்லாத பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்படும் சர்வதேச சட்டமீறல்கள் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் என வரையறுக்கப்படும். இவ்வாறு பாதிக்கப் படும் மனிதகுலம் (humanity) குறிப்பான அடையாளமும் வரலா றும் உள்ள இனக்குழுவினர், மதக் குழுவினராக இருந்தால் அக்குற்றச் செயல் இன அழிப்பு அல்லது இனப்படுகொலை (genocide) என வரையறை பெறும்.

போர் குற்றம் என்றால் அதில் ஈடுபட்டவர்கள் குறித்த சுதந்திர விசாரணை ஏற்பாட்டை தொடர்புடைய அரசாங்கமே செய்யவேண்டும் என்பது தீர்வாக முன் வைக்கப்படும். அவ்வாறு ஓர் விசாரணை மன நிறைவளிக்கும் படி நடைபெறாத சூழலில் தான் பன்னாட்டு விசாரணை வலியுறுத்தப்படும். மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றால் பன்னாட்டு விசாரணை என்றத் தீர்வு முதன்மைப் பெறும்.

இன அழிப்பு அல்லது இனப் படுகொலை என்றால், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை என்பதோடு தனி நாடு அமைத்துக் கொள்ள கருத்து வாக்கெடுப்பு என்றத் தீர்வும் முன் வரும். இத னால் தான் ஐ.நா சட்டங்களின் அடிப்படையில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆய்வு செய்தது.

2010 டப்ளின் தீர்ப்பில் அழிவிற்கு உள்ளான தமிழர்களை “இலங்கைத் தமிழர்கள்’’ (Srilankan Tamils) என்றே வரையறுத்தது. இப்போது பிரேமன் தீர்ப்பாயத்தின் முன்னால் இனப்படுகொலை என்றக் குற்றச்சாட்டு விசாரணைக்கு முன் வைக்கப்படும் போது இத்தமிழர்கள் தனித்த தேசிய இனத்தை சார்ந்தவர்கள் தான் என்று நிறுவுவது முதன்மைத் தேவையாகிறது.

 இதன் அடிப்படையில் மிக விரிவான ஆய்வுகள் முன் வைக்கப்பட்டு தனித்த மொழி இன அடையாளம் கொண்டு தனித்த பண்பாட்டுடன் வரலாறு நெடுகிலும் தனி அடையாளத்துடன் வாழ்ந்து வரும் ஒரு மக்கள் (a people) என்ற வரையறுப்புக்குத் தீர்ப்பாயம் வந்தது.

இதன் அடிப்படையில் தீர்ப்பா யத்தின் தீர்ப்புரைப் பத்தி 5.1.4.3 “ஈழத்தமிழர்கள் (eelam tamils)  இவர்கள் தனித்த தேசிய இன குழுவினர்’’ என்று முடிவு செய்தது.

அடுத்து இவர்கள் ஈழத் தமிழர்கள் என்ற தேசிய இனத்தவர் என்றக்காரணத்துக்காகவே இலங்கை அரசால் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்களா என்றச் சிக் கலை தீர்ப்பாயம் ஆய்வு செய்தது.

பிரித்தானிய அரசின் காலனியாக இலங்கைத் தீவு வந்ததிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் நிர்வாக முடிவுகள் ஆகியவற்றையும் குறிப்பாக 1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்த தற்குப் பிறகு நடந்தவற்றையும் ஆய்வு செய்தத் தீர்ப்பாயம் திட்டமிட்ட முறையில் இன அழிப்பை நோக்கிய இன ஒதுக்கல் நடவடிக் கைகள் நடைபெற்றதையும் அவற்றின் உச்சமாக 2008- -2009 ல் இனப் படுகொலை நடந்ததையும் குறிப்பிட்டது. போருக்குப் பிறகும் இது தொடர்வதை கவனத்தில் கொண்டது.

“இவற்றின் அடிப்படையில் தனித்த தேசிய இனக் குழுவினரான ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு இலங்கை அரசின் கைகளில் ஆளாகி இருக்கிறார்கள். இலங்கை அரசின் இந்த இன அழிப்பு இன்றும் தொடர்கிறது” என்று தீர்மானித்தது.

இத் தீர்ப்பாயத்தின் முன் அடுத்து ஒரு முக்கியப் பொருளும் முன் வைக்கப்பட்டது. பிரித்தன், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் இந்த இனப்படு கொலைக்கு துணை புரிந்துள்ளன என்றும்  இனப்படு கொலைக்கு எதி ரான ஐ.நா சட்ட விதி 3 (e) ன் படி “இனப்படு கொலையில் துணை செய்வது’’ (complicity) என்ற தண்டனைக்குரிய குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். என்றக் குற்றச் சாட்டும் விவாதிக்கப்பட்டது.

வரலாற்று வழியில் பல நட வடிக்கைகளை ஆய்வு செய்த தீர்ப்பாயம் பிரிட்டனும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் விதி 3 (e)ன் படி இனப்படுகொலையில் துணை செய்த தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்று தீர்மானித்தது.

இதே தண்டனைக்குரிய குற்றத்தில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது என்பதை பல்வேறு ஆவணங்கள், காட்சிப் பதிவுகள் உள்ளிட்ட சான்றுகளோடு மே 17 இயக்கத் தோழர் கள் முன்வைத்தனர். ஆயினும் இக் குற்றச்சாட்டு குறித்து விரிவான ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்று முடிவு செய்த தீர்ப்பாயம் இதன் மீதான தீர்மானத்தை ஒத்தி வைத்தது.

இதில் அமெரிக்காவின் பங்கு குறித்த தீர்ப்பாயத்தின் தீர்ப்பு கவனம் கொள்ளத்தக்கது. ஈழத் தமிழர் இனப்படுகொலையில் அமெரிக்க வல்லரசின் பங்கு எத்தகையதாக இருந்தது என்பதை அறிந்து கொண்டால் தான் ஐ.நா. வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஏன் இப்போதுள்ளது போல் அமைக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

மிக நீண்ட காலமாக அமெரிக்க வல்லரசு இலங்கைத் தீவின் புவிசார் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு சிங்கள அரசுக்கு எவ்வாறு துணை செய்து வந்தது என்பதை தீர்ப்பாயம் பட்டியலிடுகிறது.

இவற்றுள் புலிகளின் ஆனையிறவு வெற்றிக்குப் பிறகு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், அதைத் தொடர்ந்து நார்வே தலையீட்டில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை ஆகியக் காலத்தில் அமெரிக்க வல்லரசின் அணுகு முறை எவ்வாறு இருந்தது என்பது கவனம் கொள்ளத்தக்கது.

நார்வே ஐரோப்பிய ஒன்றியத் தின் ஓர் உறுப்பு நாடு. நார்வே தலையீட்டில் 2002 தொடங்கி அமைதிப் பேச்சு வார்த்தைகள் விடுதலைப் புலிகளுக்கும் - இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்று வந்தன.

இச் சூழலில் 2003 டிசம்பர் 8 அன்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச் சரின் பேச்சை தீர்ப்பாயம் குறிப்பிடு கிறது. ”பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் சிறீலங்கா அரசாங்கத்தையும் சம நிலையில் வைத்துப் பேசக் கூடாது. ஏனெனில் இந்த இருதரப்பில் ஒன்று தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு. மற்றொன்று சட்டப்பூர்வமான இலங்கை அரசாங்கம்’’ என்று அவர் கூறினார்.

எந்த அமைதிப் பேச்சுவார்த் தையிலும் தொடர்புடைய இரு தரப்பாரை சமத்தட்டில் வைத்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும் என்பது அமெரிக்க வல்லரசுக்கு தெரியாதது அல்ல. ஆனால், பேச்சு வார்த்தையில் தமிழர்களுக்கு சாதக மான முடிவேதும் வந்துவிடக் கூடாது என்ற உள் நோக்கம் இருந்ததால் தான் அமைதிப் பேச்சு வார்த்தையின் அடிப்படையையே தகர்க்கிற இவ்வாறான அழுத்தத்தை அமெரிக்கா தந்தது.

அமைதிப் பேச்சு ஒரு இக்கட்டான கட்டத்தில் இருந்த போது அமெரிக்க நிர்பந்தத்தின் காரண மாக 2006 மே 29 அன்று ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்தது. தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இதை ஏற்காத போதிலும் அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இந்தத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது என்ப தற்கான செய்திப் பரிமாற்ற ஆவணங்களை அசான்சே-யின் விக்கி லீக்ஸ் வெளியிட்டது.

 2007ல் இலங்கை அரசோடு அமெரிக்கா செய்து கொண்ட ரகசிய படை ஒப்பந்தம் விடுதலைப் புலிகளின் முதுகெலும்பாக இருந்த கடற்புலிப்படையை நொறுக்கும் உள் நோக்கத்துடனேயே உருவாக்கப் பட்டது.

போர் நடந்துகொண்டிருந்த 2008 ல் அமெரிக்க உளவு செயற்கை கோள்கள் வழியாகப் பெறப்பட்ட புலிகளின் நகர்வுகள் குறித்த படங்களும், மற்ற விவரங்களும் இடை விடாது இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்டு வந்தது. 2009 ல் போரின் இறுதிக்கட்ட நாட்களில் போரில் லாப் பகுதி என அறிவித்து தமிழ் மக்களை வரவழைத்து கொத்து கொத்தாக கொன்றொ ழித்த போதும் அந்தப் பதிவுகள் வினாடி தவறாமல் அமெரிக்கா விடம் இருந்தன.

இவ்வாறு மிக நெருக்கமாக இனப்படுகொலையில் பங்கு கொண்டதால் தான் இராசபட்சேயே விசாரித்து போர் குற்றவாளி களை தண்டிக்கட்டும் என்று மீண்டும் மீண்டும் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது.

இச் சூழலில் மார்ச் மாதம் நடை பெற உள்ள ஐ. நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தைச் சுற்றியே தமிழர்களின் கவனத்தைக் குவிப்பது ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு எந்த வகையிலும் உதவாது. இந் நிலையில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இந்த பிரேமன் தீர்ப்பும், காமென்வெல்த் மாநாட்டையொட்டி பிரித்தானியப் பிரதமர் கேமரோன் காலக்கெடு விதித்து அதற்குள் தீராதபோது சுதந்திரப் பன்னாட்டு விசார ணையை வலியுறுத்தப் போவதா கவும் சொல்லியிருப்பதும் ஓர் புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தமிழின உணர்வா ளர்களும், தமிழீழ ஆதரவாளர் களும், மனித உரிமை ஆர்வலர்களும் , உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர் அமைப்புகளும் தங்கள் கோரிக்கைகளை தெளிவான நிலையில் முன் வைக்க வேண்டியது மிகவும் அவசிய அவசரமான கடமையாகும்.

பிரேமன் தீர்ப்பாயம் அறிவித் துள்ள அடிப்படையில் இலங்கை யில் நடப்பது தமிழின அழிப்பு, இனப்படுகொலை (Genocide) என்பதை ஐ. நா மன்றம் ஏற்றுக் கொண்டு அதற்குரிய வகையில் சுதந்திரமான பன்னாட்டு குற்றவியல் விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும். அதே போல் தீர்ப்பாயம் ஆராய்ந்து வரையறுத்துக் கூறுவது போல் ஈழத் தமிழர்கள் தனித்த தேசிய இனத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொள்ளும் தன்னுரிமை ( சுய நிர்ணய உரிமை ) உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கு இசைய தமிழீழம் குறித்து தீர்மானிக்க ஐ.நா மேற்பார்வையில் ஈழத்தமிழர் களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றக் கோரிக்கையை யும் முன் வைக்க வேண்டும்.

தீர்ப்பாயம் கூறுவதுபோல் இவ்வாறான கருத்தறியும் நடவடிக்கை ஐ.நா. மேற்பார்வையில் நடைபெறும்போது அந்த மேற்பார்வைக் குழுவில் பிரிட்டன், அமெரிக்கா இந்தியா, சீனா, ஆகிய குற்றசாட்டுகளுக்குரிய நாடுகள் இடம் பெறக் கூடாது என வலியுறுத்துவதும் தேவையானது.

மேற்கண்ட தெளிவோடு இனக் கொலையாளி இராசபட்சே கும்பலை சுதந்திர பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்து; ஈழத் தமிழர்களிடையே தமிழீழம் குறித்த கருத்து வாக்கெடுப்பு நடத்து என்ற இரட்டை முழக்கங்கள் ஈழத்தமிழர் குறித்த நமது அடுத்தக் கட்ட நகர்வாக அமையட்டும். நாம் இந்தியாவில் கட்டுண்டு கிடப்பதால் இத்தி சையில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது நமது பணி ஆகிறது.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 2014 மார்ச் மாதக் கூட்டத்தில் இராசபட்சே அரசுக்கு எதிராக இனக்கொலை தொடர்பான சுதந்திர பன்னாட்டு விசாரணை வேண்டும் என்றத் தீர்மானத்தை இந்திய அரசு முன்வைக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கையாக அமைய வேண்டும்.

பன்னாட்டு விசாரணை, தமிழீழத்துக்கான கருத்து வாக்கெடுப்பு என்ற இந்த இரட்டை கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களில் அனைவரும் அணிதிரள்வோம்!

Pin It