திலகபாமா, கவிஞர். எழுத்தாளர். எல்லாருக்கும் தெரியும். திலகபாமாவின் மகன் நிதர்ச பிரகாஷ§ம் ஓர் எழுத்தாளர். 11 வது படிக்கும் நிதர்ச பிரகாஷ் எழுதிய ஆங்கிலச் சிறுகதைகளின் தொகுப்பு 'Changes' என்ற பெயரில் அண்மையில் வெளியிடப்பட்டது.

சிறிய வயதுக்கேயுரிய கற்பனைத் திறனுடன், நல்ல செறிவான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தக் கதைகளைப் படிக்கும்போது நமக்கு வியப்பே மேலிடுகிறது. இந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள நிதர்ச பிரகாஷ் என்ன செய்தார்? அவருக்கான சூழ்நிலை என்ன? இந்தத் திறமை எல்லாக் குழந்தைகளுக்கும் சாத்தியமா? என்பதையறிய நிதர்ச பிரகாஷ§டன் பேசினோம்.

கதை எழுத வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

நான் ஏற்காட்டில் உள்ள மாண்ட்ஃபோர்ட் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கிறேன். நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது. விடுதி அறையில் கீழே கிடந்த ஒரு காகிதத்தில் இருந்த கதையைப் படித்துப் பார்த்தேன். அந்தக் கதை சொல்லப்பட்ட முறை சரியில்லை என்று எனக்குப்பட்டது. அந்தக் கதையின் அவுட்லைனை மட்டும் எடுத்தக் கொண்டு நானே அந்தக் கதையைத் திரும்பவும் எழுதிப் பார்த்தேன்.. அதை நண்பர்களுக்குப் படித்துக் காட்டினேன். மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். அதோடு மட்டுமல்ல, அந்தக் கதையை நான்தான் எழுதினேன் என்றும் நினைத்துக் கொண்டார்கள்.

அதற்குப் பின்பு நான் சொந்தமாக என்னுடைய முதல் கதையை அப்போது எழுதினேன், எனக்கு நல்ல கற்பனை சக்தி இருப்பதால் எழுத முடிந்தது. பூமிக்கு வெளியே இருந்து வரும் மிருகத்தைப் பற்றிய கதை அது.

அம்மா எழுத்தாளர் என்பதால் உங்களுக்கும் கதை எழுதத் தோன்றியதா?

இல்லை. அம்மா அப்போது கவிதை மட்டும்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். கதை எழுதவில்லை. நான் 11 வயதிலேயே கவிதை எழுதியிருக்கிறேன்.

உங்களுடைய கதைகளை நல்ல ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர் உங்களை தரமான பள்ளியில் படிக்க வைத்ததால்தானே எழுத முடிந்ததா?

அதுவும் ஒரு காரணம். ஆனால் அதுவே முழுக் காரணமாகிவிட முடியாது.. என்னைப் போல நிறையப் பேர் எங்கள் பள்ளியில் படிக்கிறார்கள். எல்லாரும் கதை எழுதவில்லையே? நான் மட்டும்தானே எழுதுகிறேன்? ஒன்றைச் சொல்லலாம். நான் கதை எழுதத் தூண்டுகோலாக இருந்தவர்கள் என் நண்பர்கள்தாம்.

வகுப்பில் ஆசிரியர் வராத பாட வேளைகளில் நாங்கள் எங்களுக்குப் பிடித்தமானதைச் செய்வோம். அதிகச் சத்தமில்லாமல் பாட்டுப் பாடுவோம். கதை சொல்வோம். அந்தச் சமயங்களில் என் வகுப்பு நண்பர்கள் என்னைக் கதை சொல்லச் சொல்லி வற்புறுத்துவார்கள். அப்படி அவர்களுக்குக் கதை சொல்வதற்காக நான் எழுதிய கதைகள் நிறைய. அவற்றில் சிலவற்றைத் தொகுத்துத்தான் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறோம்.

நீங்கள் எழுதிய கதைகளில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் வெளிநாட்டில் நடப்பதுபோல வருகிறதே? வெளிநாடுகளில் நடப்பதைப் போல எழுதுவது சிரமம் இல்லையா?

வெளிநாடுகளில் நடப்பதைப் போல கதைகள் எழுதுவது சிரமம்தான். ஆனால் எனக்கு இதனால் அறிவு வளர்கிறது. உதாரணமாக அமெரிக்காவைப் பற்றி எழுதியிருக்கிறேன். ரஷ்யாவைப் பற்றி எழுதியிருக்கிறேன். வெளிநாட்டைப் பற்றி எழுதும்போது அந்த நாட்டின் புவியியல் தெரிந்திருக்க வேண்டும். கதை எந்தக் காலத்தில் நடக்கிறதோ அந்தக் காலத்தின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அந்தக் கால மக்களின் குறிப்பான பழக்க, வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு நிறையப் படிக்க வேண்டும். அமெரிக்காவைப் பற்றித் தெரிந்து கொள்ள சோசியல் டீச்சரிடமிருந்து அமெரிக்க வரலாற்றுப் புத்தகக்தை வாங்கிப் படித்தேன். அமெரிக்கா நிறைய வளம் உள்ள நாடு. அதனால்தான் அங்கே தொழில்கள் வளர்ந்தன. அந்த நாட்டை ஆக்கிரமிக்க பல வெளிநாட்டினர் ஆரம்ப காலத்தில் போட்டி போட்டனர். இந்தத் தகவல்களை மட்டும் நான் தெரிந்து கொள்ளவில்லை, அக்காலத்தில் கப்பல் எப்படி இருந்தது என்பதைக் கூடத் தெரிந்து கொண்டேன். இந்த விவரங்களைத் திரட்டுவது எனது அறிவு வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது.

தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் கதைகள் எழுதுவது ஏன்? ஆங்கில வழியில் படித்ததனால் தமிழில் எழுதத் தெரியவில்லையா?

தமிழில் எழுதத் தெரியும். எழுத முடியும். நான் எதற்காகக் கதை எழுத ஆரம்பித்தேன்? நண்பர்களை மகிழ்விக்க. என்னுடன் படிக்கும் நண்பர்கள் அனைவரும் தமிழ் தெரிந்தவர்கள் அல்ல. பெரும்பான்மையானவர்கள் பிறமொழி பேசுபவர்கள். நமது நாட்டின் ஆந்திரா, கர்நாடகா மாநில மாணவர்கள் அதிகம். டெல்லியிலிருந்தும் இங்கு வந்து படிக்கிறார்கள். துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாட்டு மாணவர்களும் அதிகம். அவர்களை மகிழ்விக்கவே நான் கதைகள் சொல்லத் தொடங்கினேன். அவர்களுக்குத் தமிழ் புரியாது. அதனால் இயல்பாகவே என் கதைகள் ஆங்கிலத்தில் அமைந்துவிட்டன.

பள்ளியில் படிக்க வேண்டியது நிறைய இருக்கும். கதைகள் எழுத எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?

எங்கள் பள்ளியில் மாதிரி நேர நிர்வாகத்தை வேறு எங்கும் கடைப்பிடிக்க மாட்டார்கள். விளையாட்டு, படிப்பு என்று தனித்தனியாக நேரத்தை ஒதுக்கி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாகக் கடைப்பிடிப்பார்கள்.

ஏற்காட்டில் மாலை நேரங்களில் திடீர் திடீர் என்று மழை வந்துவிடும். மாலை நேரங்களில் விளையாட்டு நேரம் என்றால் மழை வந்தால் விளையாட முடியாது. அந்த நேரத்தை என்ன செய்வது? நான் கதை பற்றி யோசிக்கவும், கதை எழுதவும் அந்த நேரத்தைப் பயன்படுத்துவேன்.

வகுப்புகள் முடிந்த மாலை நேரங்களில் அன்றாடப் பாடங்களைப் படித்து முடிப்பேன். எழுத வேண்டிய பாடங்களை எழுதி முடிப்பேன். அதுமட்டுமல்ல, மறுநாள் என்ன பாடம் நடத்துவார்களோ அதை ஒருமுறை படித்துப் பார்த்து அது தொடர்பாகச் சிந்திப்பேன். அப்போதுதான் மறுநாள் பாடம் எனக்கு நன்கு புரியும். இதைப் பிற மாணவர்களும் கடைப்பிடிக்கலாம்.

அதுபோல தினமும் இரவு படுக்கப் போகும் முன் டைரி எழுதுவேன். பள்ளியிலும் டைரி எழுதுவதை ஊக்கப்படுத்துவார்கள். டைரி எழுதுவது மைன்டை ரொம்ப ஃபிரஷ்ஷாக வைத்திருக்க உதவும். டைரி எழுதும்போது அன்றைய தினம் நடந்த நல்ல விஷயங்களை மட்டும் நினைத்துப் பார்ப்பேன். அதுபோல எந்தச் சூழ்நிலையிலும் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுப்பேன்.

அன்றாடக் கடமைகள் முடிந்த பின்னால்தான் கதை எழுத உட்கார்வேன்.

உங்களுடைய அறிவையும் திறமையையும் வளர்க்க உங்களுடைய பெற்றோர் நல்ல தரமான பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். உங்களுடைய சிறுகதைகளைப் பணம் செலவு செய்து புத்தகமாக வெளியிடுகிறார்கள். ஆனால் புத்தகத்தில் நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்குத்தானே நன்றி சொல்லியிருக்கிறீர்கள்?

எனது தாய், தந்தையருக்கு எனது நன்றியைக் காட்ட வாழ்க்கையில் எனக்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனால் நண்பர்களுக்கு இந்தப் புத்தகம் வரும்போதுதான் என் நன்றியைத் தெரிவிக்க முடியும்.

எழுத்துத்துறையில் அடுத்து என்ன உங்கள் திட்டம்?

ஒரு நாவல் எழுதப் போகிறேன். மனதில் கற்பனை சக்தி அதிகம் உள்ள ஒருவனுக்கு அதனால் என்ன என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன? என்பதுதான் நாவலின் மையமாக இருக்கும்.

 

எழுத்தாளர் திலகபாமாவிடம் நிதர்ச பிரகாஷ் பற்றிக் கேட்டோம்.

வித்தியாசமான சூழ்நிலை...வித்தியாசமான சிந்தனை!

“என் மகன் நிதர்ச பிரகாஷ் எழுதுவதற்காக நான் எதுவும் சொல்லிக் கொடுத்ததில்லை. அவர் எழுதுவதே எனக்கு முதலில் தெரியாது. ஒன்பதாம் வகுப்பு முடித்து விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோது தற்செயலாக அவர் நோட்டு புத்தகங்களுக்கிடையில் அவர் கதைகளை முதன்முதலாகப் பார்த்தேன். ஆனால் அவர் வித்தியாசமாகச் சிந்திக்கிறதுக்கு எங்கள் குடும்பச் சூழ்நிலையும் வளர்ப்பு முறைகளும் காரணமாக இருக்கலாம்.

சிறிய வயதில் பெண் பிள்ளைகள் போல பண்டம், பாத்திரம் வைத்து நிதர்ச பிரகாஷ் விளையாடுவதைப் பார்த்து,, “என்ன பொம்பளைப் பிள்ளை கணக்கா விளையாடுது?” என்று பிறர் சொல்வதை நான் காதில் வாங்கிக் கொண்டதேயில்லை. பிள்ளைகளுக்கு எதை வைத்து விளையாட வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை வைத்து விளையாடட்டும் என்று விட்டுவிடுவேன்.

எங்கள் குடும்பச் சூழ்நிலையில் நாங்கள் ஆண்-பெண் பேதம் பார்ப்பதில்லை. சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை. உறவுகளில் வித்தியாசம் பார்ப்பதில்லை. இந்தச் சூழ்நிலையில் நிதர்ச பிரகாஷ் வளர்ந்ததால் அவருடைய சிந்தனைகளும் வித்தியாசமாக இருக்கிறது.

கோயிலுக்குப் போனால் கூட எல்லாரையும் போல கோயிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம் என்று நாங்கள் வருவதில்லை. கோயிலை சமூக இடமாக நாங்கள் பார்க்கிறோம். கோயில் சிற்பங்கள், அதன் வரலாறு, பின்னணி எல்லாவற்றையும் பேசுவோம். சிறுவயதிலிருந்தே என்னோடு இலக்கியக் கூட்டங்களுக்கு விளையாட்டுத்தனமாக வந்ததும், அங்கு பேசுவதைக் கேட்பதும் அவருக்கு வழக்கம்.

அதுவுமில்லாமல் அவர் படிக்கிற பள்ளியில் உள்ள நூலகத்தில் நிறையப் புத்தகங்கள் உள்ளன. எல்லாப் பிள்ளைகளையும் போல ஹாரிபாட்டரை அவர் படித்தாலும், யாருமே தொடத் தயங்கும் ஆழமான புத்தகங்களையும் படிக்கிறார். வாசிக்கும் பழக்கம் அவருக்கு அதிகமாக இருப்பது அவரை எழுதத் தூண்டியிருக்கலாம். அவருடைய கதைகளைப் பார்த்ததும் இதழ்களுக்கு அனுப்பலாமா என்று கேட்டேன்,

“என்னுடைய சிறுகதையன்று 45 பக்கம் இருக்கிறது. பத்திரிகைகளில் நிச்சயமாக எடிட் பண்ணித்தான் போடுவார்கள். அதனால் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.

திடீரென்று ஒருநாள், “ என்னுடைய சிறுகதைகளைப் புத்தகமாக இந்த வருடமே போட வேண்டும். அடுத்த வருடம் 12 ஆம் வகுப்பு போய்விடுவேன். அப்போது படிப்பதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். எனவே இப்போதே போட வேண்டும். நான் படிக்கும் பள்ளிக்கும், என் நண்பர்களுக்கும் நான் ஏதாவது செய்தாக வேண்டும்” என்றார். அதனால் உடனே புத்தகத்தைக் கொண்டு வந்தோம். என் மகன் என்றில்லை. வேறு யாராவது இந்த இளம் வயதில் திறமையாக எழுதியிருந்தாலும் இதைச் செய்திருப்போம்” என்றார்.

Pin It